கன்சியாம் தாசு பிர்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜி.டி. பிர்லா
GDBIRLAUCOBANK.jpg
கன்ஷ்யாம் தாஸ் பிர்லா
பிறப்புஏப்ரல் 10, 1894(1894-04-10)
பிலானி கிராமம், இராசத்தான் மாநிலம்,  இந்தியா
இறப்புசூன் 11, 1983(1983-06-11) (அகவை 89)

ஜி. டி. பிர்லா என்றறியப்படும் கன்சியாம் தாசு பிர்லா (Ghanshyam Das Birla- G.D. Birla) (1894 ஏப்ரல் 10 - 1983 சூன் 11) இந்தியத் தொழில்துறையின் முக்கியத் தூண்களில் ஒருவரும், பிர்லா சாம்ராச்சியத்துக்கு அத்திவாரம் இட்டவருமாகவும், மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம விபூசண் (1957-ல்) விருது பெற்றவராகவும் அறியப்படுகிறார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜி. டி. பிர்லா, இந்தியாவின் இராசத்தான் மாநிலம் சூன்சூனு மாவட்டத்திலுள்ள (Jhunjhunu district) பிலானி எனும் சிறுநகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் 1894 ஏப்ரல் 10-ம் நாள் பிறந்தார். உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் இந்தியில் ஆரம்பக் கல்வியை கற்றார். தந்தையும் வியாபாரி என்பதால் அவரது உதவியுடன் கல்கத்தா சென்று வியாபார உலகில் அடியெடுத்து வைத்த ஜி. டி. பிர்லா, அவரது குடும்ப தொழிலான தரகு வியாபாரம் செய்தார், பின்னர் பிர்லா சணல் தொழிற்சாலையைத் தொடங்கினார். இவர் வர்த்தகத்தில் ஈடுபட்டது ஐரோப்பிய வியாபாரிகளுக்குப் பிடிக்கவில்லை. இவரது வளர்ச்சியைத் தடுக்கும் முனைப்பில் ஈடுபட்டனர். ஆனால் எல்லாத் தடைகளையும் தாக்குப்பிடித்தார். முதல் உலகப் போரின் தாக்கத்தால் பிரிட்டிஷ் சாம்ராச்சியம் வியாபாரத்தில் திணறிக்கொண்டிருந்தது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். வியாபாரம் அசுர வளர்ச்சி கண்டது. 1919-ல் உலகப் போர் முடிந்தவுடன் பிர்லா அண்டு பிரதர்சு லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் குவாலியரில் சவுளி ஆலை தொடங்கினார். இது ரயான் என்கிற சிந்தடிக் ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது.[2]

பிர்லாவின் பின்புலம்[தொகு]

18-ஆம் நூற்றாண்டில், பிற்காலத்தில் பிர்லா குழுமம் எனகிற தொழில் சாம்ராச்சியத்துக்குப் அடித்தளம் போட்டவர் ஷிவ் நாராயண பிர்லா (Shiv Narayan Birla) என்பவராவார். இவர், மார்வாரிகளின் பாரம்பரியமான வட்டிக்கடை வியாபாரத்திலிருந்து பருத்தி வியாபாரத்துக்கு மாறினார். புதிய தொழிலைச் செம்மையாகச் செய்வதற்காக, சொந்த ஊரான இராசத்தானிலுள்ள பிலானியிலிருந்து, மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குப் போய்த் தங்கி வியாபாரத்தில் நல்ல லாபம் கண்ட பிறகு, பிலானிக்குத் திரும்பிச் சென்று அங்கு ஒரு பெரிய வீடு கட்டினார். அந்தக் கட்டிடம் இன்றும் “பிர்லா பங்களா’ என்ற பெயரில் விளங்குகிறது.[3]

நாராயண பிர்லா குடும்பத்தினரால் தத்து எடுக்கப்பட்ட பல்தேவ் தாஸ் பிர்லா (Baldev Das Birla) என்பவரும் பூல் சந்த் சொடானி என்பவரும் கூட்டுச் சேர்ந்து அபின் எனும் போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் அல்லது போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இவ்விருவரும் கோடிக்கணக்கில் கொழுத்த லாபம் சம்பாதித்தனர் இருந்தபோதிலும், 1916-ல் பல்தேவ் தாசு பிர்லாவின் மூத்த சகோதரர் சூகல் கிசோர் பிர்லா (Jugal Kishore Birla) ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டதால், மூன்று மாத காலம் தலைமறைவானார். மற்றொரு புறம், பல்தேவ் தாசு பிர்லாவின் மகனாகிய ஜி.டி.பிர்லா என்கிற கன்சியம் தாசு பிர்லா தலையெடுத்து, வியாபாரத்தைப் பல புதிய தொழில்களை ஏற்படுத்தி விரிவுபடுத்தினார்.[4]

பொற்காலம்[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜி.டி.பிர்லாவால் தொடங்கப்பட்ட நவீன தொழில்கள்தான் இன்றும் பிர்லா குழுமங்களின் “பெருநிறுவன’ (Corporate) கழகங்களாக வளர்ந்துள்ளன. அவர்தான் வட்டிக் கடையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு முழுமையாக மாற்றம் பெற்று, கல்கத்தாவிலேயே நிரந்தரமாகத் தங்கி வங்காளத்தில் பெரிய அளவில் நடைபெற்றுவந்த சணல் தொழிலில் ஈடுபட்டார். அத்தொழில் ஜி.டி. பிர்லாவுக்குக் கை கொடுத்தது. பின்பு, முதல் உலகப் போர் மூண்டதன் தாக்கத்தால் பிரிட்டிசு சாம்ராச்சியம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதை தனக்குச் சாதகமாக்கிகொண்ட ஜி.டி.பிர்லா, சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அவரது தொழிலை அசுர வேகத்தில் வளர்த்தெடுத்தார். முதல் உலகப் போர் முடிந்த பிறகு, 1919-ல் ரூ.50 லட்சம் மூலதனத்துடன் பிர்லா சகோதரர்கள் லிமிடெட் என்கிற நிறுவனம் தொடங்கினார், அதே ஆண்டில் குவாலியரில் சவுளி ஆலையைத் தொடங்கியதோடு பிற்காலத்தில் “ரயான்’ என்கிற “கூட்டிணைவுக’ (Synthetic) ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது. மேலும், இந்தியாவில் நீண்டகாலம் பிரபலமாக இருந்த “அம்பாசிடர்சீருந்துகளை உற்பத்தி செய்த “இந்துஸ்தான் மோட்டர்ஸ்’ தொழிற்சாலையை 1952-இல் நிறுவினார் ஜி.டி.பிர்லா. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய கம்பெனிகளுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், சவுளி ஆலைகளையும் வாங்கியது. அது மட்டும் அல்லாமல் சிமெண்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள் என நவீன துறைகளில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது பிர்லா குழுமம்.[5]

வாய்ப்பும் வளர்ச்சியும்[தொகு]

பிர்லா இந்திய விடுதலை இயக்கத்தின் பெரும் ஆதரவாளராக விளங்கி, அதற்கான நிதி உதவியை வழங்கி பொருளாதார விடயங்களில் காந்தியடிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.[6] 1924-ல் கேசோரம் காட்டன் மில்லை விலைகொடுத்து வாங்கினார். மேலும், 1926-ம் ஆண்டு ஜி.டி.பிர்லா பிரிட்டிஷ் இந்தியாவில் நடுவம் சட்டசபையில் அங்கத்தினராகத் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் சில தொழிலதிபர்களுடன் இணைந்து 1927-ல் மத்திய வர்த்தக மற்றும் தொழில் கழகத்தைத் தொடங்கி, அதன் தலைவராகவும் பதவியேற்றார். 1932-ல் காந்தியடிகள் தொடங்கிய அரிசன் சேவக் சங் என்ற அமைப்பின் தலைவரானார்.[7]இந்துசுதான் டைம்சு’, ‘இந்துசுதான் மோட்டார்சு’ போன்ற தொழிற் சாலைகளை நிறுவினார். தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலேய நிறுவனங்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், சவுளி ஆலைகளையும் வாங்கியது. அது மட்டுமல்லாமல் சிமென்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள், தகவல் தொழில்நுட்பத் துறை என அனைத்து நவீன துறைகளிலும் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது. 1942-ல் இந்திய மூலதனம், இந்திய மேலாண்மையைக் கொண்டு ஒரு புதிய வங்கியைத் தொடங்கும் எண்ணம் கொண்டார். அடுத்த ஆண்டே யுனைடெட் கமர்சியல் வங்கி (United Commercial Bank) (தற்போதைய யு.கோ. வங்கி) இது 1943-ஆம் ஆண்டில் யுனைடெட் கமர்சியல் வங்கி என்னும் பெயரில் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட வங்கியாகும், 1969-இல் மற்ற பெரிய வஙகிகளைப் போல் இதுவும் தேசியமயமாக்கப்பட்டது. அதே ஆண்டில் சவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தைத் தொடங்கினார்.[8]

காந்தியுடன் பிர்லாவின் நட்பு[தொகு]

ஜி.டி.பிர்லா 1916லேயே காந்தியை நேரில் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பு காலப்போக்கில் மெல்ல, மெல்ல நட்பாகவும் தோழமையாகவும் மலர்ந்தது. பிற்காலத்தில், காந்தி எப்போது டெல்லிக்கு வருகை புரிந்தாலும், பிர்லா மாளிகையில் தங்குவதும், பஜனைகள் உள்ளிட்ட தனது காரியங்களை அங்கேயே மேற்கொள்வதும் வாடிக்கை ஆயிற்று. மகாத்மா காந்தி கோட்சேயின் குண்டுக்கு இரையாகி, தனதுயிர் பிரிந்தது பிர்லா மாளிகையில்தான். காந்தி தனது கடைசி 144 நாள்களை இந்த இல்லத்தில்தான் கழித்தார். 1948-ஆம் ஆண்டு சனவரி 30-ம் நாள் காந்தி நம்மைவிட்டுப் பிரிந்தார். அந்தக் கட்டிடம் அமைந்துள்ள சாலையின் பெயர் தீஸ் (30) ஜனவரி மார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு சாலை. ஒரு தேதியின் பெயரில் அழைக்கப்படுவது இதுவாகத்தான் இருக்கும்! மத்திய அரசு, இந்தக் கட்டிடத்தை 1971-ல் கையகப்படுத்தி, அதை காந்தியின் நினைவு இல்லமாக (காந்தி சமிதி) மாற்றியுள்ளது; பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவாலயம், தில்லிக்கு வருகை புரியும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளிடையேயும், தில்லி வாசிகளிடையேயும் மிகவும் பிரசித்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[5]

லோகோபகாரமும் கடைக்காலமும்[தொகு]

1964-ல் பிலானியில் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்[9] எனும் கல்வி நிறுவனம் தொடங்கபட்டு, இந்நிறுவனம் மூலம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடங்கி இலவசமாகக் கல்வி வழங்கியது. புதுதில்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோயில்களை பிர்லா குடும்பத்தினர் அமைத்துள்ளனர்.[10] ஏராளமான அறிவியல், ஆன்மிக, கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களையும் நிறுவினார். 1957-ல் பத்ம விபூஷண் விருது கிடைத்தது.[11] தன் சுய முயற்சியால் மகத்தான சாதனைகளை செய்து இந்தியாவின் தொழில் துறையை முன்னேறச் செய்த ஜி.டி.பிர்லா என்று அறியப்படும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா 1983-ம் ஆண்டு சூன் மாதம் 89-வது வயதில் காலமானார்.[12]

மேற்கோள்கள் சான்றுகள்[தொகு]