நிர்மலா தேஷ்பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மலா தேஷ்பாண்டே
நிர்மலா தேஷ்பாண்டே
பிறப்பு(1929-10-19)19 அக்டோபர் 1929
நாக்பூர், மகாராஷ்டிரா, இந்தியா
இறப்பு1 மே 2008(2008-05-01) (அகவை 78)
அறியப்படுவதுசமூக சேவை

நிர்மலா தேஷ்பாண்டே (Nirmala Deshpande: 17 அக்டோபர் 1929 – 1 மே 2008) ஓர் இந்தியச் சமூகச் செயல்பாட்டாளரும், காந்தியத் தத்துவங்களைத் தழுவிய காந்தியவாதியுமாவார்.[1] தன் வாழ்நாளில் சமூக நல்லிணக்கத்திற்காகவும், பெண்களுக்கான சேவைக்காகவும், பழங்குடியின மக்கள் மற்றும் வாழிடமிழந்தோருக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவராவார்.[2]

நிர்மலா தேஷ்பாண்டே இந்தியாவின் மிக உயரிய இரண்டாவது விருதான பத்ம விபூஷன் விருதினை 2006 இல் பெற்றுள்ளார்.[3] இவருடைய இறப்புக்குப் பின் 2010இல் பாக்கிஸ்தான் அரசு இவருக்கு சித்தாரா இம்தியாஸ் என்ற விருது வழங்கியது.[4]

இளமை மற்றும் குடும்பம்[தொகு]

நிர்மலா 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் விமலா-புருஷோத்தம் யஸ்வந்த் தேஷ்பாண்டே இணையருக்கு மகளாய் மகாராஷ்டிராவில் உள்ல நாக்பூரில் பிறந்தார். இவருடைய தந்தை 1962 இல் மராத்திய மொழியில் எழுதிய அனாமிகாச்சி சிந்தானிக்கா என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவராவார்.[5]

பூனாவில் ஃபெர்குசன் கல்லூரியில் படித்த நிர்மலா நாக்புரில் தனது அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாக்பூரில் மோரிஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[6]

சமூகச் செயல்பாடுகள்[தொகு]

2007-இல் நிர்மலா தேஷ்பாண்டே

நிர்மலா 1952 இல் வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் கிராம இராச்சியம் என்ற செய்தியை இந்தியா முழுவதும் கொண்டு சேர்ப்பிப்பதற்காக இந்தியாவெங்கும் 40,000 கி.மீ பாத யாத்திரை மேற்கொண்டார். காந்தியக் கொள்கைகளைக் கடைபிடிப்பது என்பது மிகக்கடினம் என நிர்மலா உணர்ந்திருந்த போதும் உண்மையான ஜனநாயகத்திற்கான ஒரே வழி காந்தீயக் கொள்கைகள் தான் என இவர் நம்பினார்.[7] பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் இருந்த பொழுது அந்த மாநிலங்களில் நிர்மலா தேஷ்பாண்டே மேற்கொண்ட அமைதிக்கான யாத்திரையால் நாடெங்கிலும் அறியப்பட்டார். 1994 இல் மேற்கொண்ட இவரது அமைதிக்கான நடவடிக்கைகளின் தொடக்க முயற்சியாக, 1996 இல் இந்தியா-பாக்கிஸ்தான் சந்திப்பை ஏற்பாடு செய்தார். இது இவரின் சமூக சேவையின் மிகப்பெரிய சாதனையாகும்.[8] சீனாவின் அடக்குமுறைக்கெதிரான திபெத்தியர்களின் கோபமும் அதை நீக்குவதற்கான அமைதி நடவடிக்கையும் மேற்கொள்ள எண்ணினார். 1983-இல் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஹரிஜன் சேவா சங்கத்தில் தலைவராக சேவையாற்றினார். இது அவரின் இறப்புவரை தொடர்ந்தது.பிற சமூக சேவை நிறுவனங்களுடன் இவர் இணைந்து சேவை செய்தார். மேலும் அகிலபாரத ராச்னாட்மக் சமாஜம் என்ற அமைப்பையும் நிறுவினார். 2004 இல் மனித நல்லிணக்கத்திற்கான தேசிய விருதினைப் பெற்றார்.[9]

2001 இல் பாராளுமன்றத்தைல் தாக்குதல் நடத்திய அப்சல் குரு என்பவருக்காக 2006 இல் நிர்மலா தேஷ்பாண்டே கருணை மணு வழங்கினார். இத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா தேஷ்பாண்டே தன் வாழ்நாளின் இறுதியில் , ஓர் அமெரிக்க இந்தியரால் ஏற்பாடுசெய்யபட்ட, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணத்தில், ஐக்கிய அமெரிக்காவின் லான்சிங், மிச்சிகன் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.இவர் தொடர்ந்து இந்தியா பாக்கிஸ்தான் நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டார்.[4] நிர்மலா தேஷ்பாண்டே இந்திய அரசின் மேலவை உறுப்பினர் ஆவார். இவர் மே 2008 இல் டில்லியில் தனது 79 ஆம் வயதில் உறக்கத்திலேயே இறந்தார்..[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nirmala Deshpande - a gutsy Gandhian". DNA. 1 May 2008. http://www.dnaindia.com/india/report_nirmala-deshpande-a-gutsy-gandhian_1162223. 
  2. "Veteran Gandhian Nirmala Deshpande is no more". Indian Express. 1 May 2008 இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121011200333/http://www.expressindia.com/latest-news/Veteran-Gandhian-Nirmala-Deshpande-is-no-more/304110/. 
  3. "Padma Awards". Ministry of Communications and Information Technology.
  4. 4.0 4.1 "Next Nirmala Deshpande award ceremony to be held in Pakistan - Times of India".
  5. Anamika Chinthanika (1954) (2007). Encyclopeadic Dictioanary of Marathi litrature. Global Vishion Publishing House. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-8220-221-3(set). 
  6. 6.0 6.1 "Veteran Gandhian Nirmala Deshpande dead". CNN-IBN. 1 May 2008 இம் மூலத்தில் இருந்து 20 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320030309/http://ibnlive.in.com/news/veteran-gandhian-nirmala-deshpande-dead/64305-19.html. 
  7. "The never-say-die crusader". The Tribune. 2 January 2005. http://www.tribuneindia.com/2005/20050102/society.htm#2. 
  8. "DAWN - Opinion; May 03, 2008". 3 May 2008.
  9. "Awards - NFCH". nfch.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_தேஷ்பாண்டே&oldid=3248424" இலிருந்து மீள்விக்கப்பட்டது