உள்ளடக்கத்துக்குச் செல்

நெல்லி சென்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்லியும், ஜதிந்திர மோகன் சென்குப்தாவும் 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில்

நெல்லி சென்குப்தா (Nellie Sengupta) (எடித் எலன் கிரே ; 12 சனவரி 1886– 23 அக்டோபர் 1973) இவர் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ஒரு ஆங்கில பெண்ணாவார். 1933 இல் கொல்கத்தாவில் நடந்த 47 வது ஆண்டு அமர்வில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்பம்[தொகு]

இவர், பிரடெரிக், எடித் ஹென்றிட்டா கிரே ஆகியோரின் மகளாக எடித் எலன் கிரே என்ற பெயரில் பிறந்தார். இவர் கேம்பிரிட்சில் பிறந்து வளர்ந்தார். அங்கு இவரது தந்தை ஒரு விடுதியில் பணிபுரிந்தார். ஒரு இளம் பெண்ணாக, டவுனிங் கல்லூரியின் இளம் பெங்காலி மாணவனாரன ஜதிந்திர மோகன் சென்குப்தாவை காதலித்தார். மோகன் இவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். பெற்றோரின் எதிர்ப்பு இருந்தபோதிலும், இவர் ஜதிந்திர மோகனை மணந்து அவருடன் கொல்கத்தா திரும்பினார். இவர்களுக்கு சிசீர், அனில் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

ஒத்துழையாமை இயக்கம்[தொகு]

இந்தியா திரும்பியதும், இவரது கணவர் ஜதிந்திர மோகன் கொல்கத்தாவில் வழக்கறிஞராக மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்கினார். 1921 ஆம் ஆண்டில் ஜதிந்திர மோகன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்தார், வங்காளத்தில் மகாத்மா காந்தி வலது கையாகவும், கொல்கத்தா மேயராக மூன்று தடவைகளும், சட்டமன்றத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் தனது கணவருடன் 1921 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அசாம்-வங்காள இரயில்வே வேலைநிறுத்தத்தின் போது இவரது கணவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், மாவட்ட அதிகாரிகள் சட்டசபைக்கு தடை விதித்ததை எதிர்த்து இவர் பலமாக எதிர்ப்பு தெரிவித்தார். பொதுமக்களிடையே உரையாற்றினார். மேலும், கைது செய்யப்பட்டார். காதியை நூற்று வீட்டுக்கு வீடு விற்று சட்டத்தை மீறினார். 1931 ஆம் ஆண்டில் சட்டவிரோத சட்டசபையில் உரையாற்றியதற்காக தில்லியில் நான்கு மாத சிறைவாசம் அனுபவித்தார். ஜதின் ராஞ்சியில் சிறையில் அடைக்கப்பட்டு 1933 இல் இறந்தார்.

காங்கிரசு தலைவர்[தொகு]

உப்பு சத்தியாக்கிரகத்தின் கொந்தளிப்பின் போது பல மூத்த காங்கிரசு தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டிட் மதன் மோகன் மாளவியா 1933 கொல்கத்தா அமர்வுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்லி சென்குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மூன்றாவது பெண்மணியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஐரோப்பிய வம்சாவளியாகவும் ஆனார். கட்சிக்கும் நாட்டிற்கும் இவர் செய்த பங்களிப்புக்காக இவர் கட்சியால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

இவர் 1933 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1940 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் வங்காள சட்டமன்றத்திற்கு காங்கிரசு சார்பில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது வெளிநாட்டு துருப்புக்களின் தவறான நடத்தை குறித்து இவர் கவனத்தை ஈர்த்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு[தொகு]

சுதந்திரத்திற்குப் பிறகு, கிழக்கு பாக்கித்தானில், தனது கணவரின் சொந்த ஊரான சிட்டகொங்கில், அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு பாக்கித்தானில் இந்து சிறுபான்மையினரின் நலன்களைக் கவனிக்கும்படி கேட்டுக் கொண்டார். 1954 இல் கிழக்கு பாக்கித்தான் சட்டமன்றத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிறுபான்மை வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்தார். மேலும், ஒரு தீவிர சமூக ஆர்வலராக இருந்தார். 1971 ஆம் ஆண்டில் வங்காளதேசம் உருவானபோது, இவர் தொடர்ந்து சிட்டகாங்கில் வசித்து வந்தார், வங்காளதேச பிரதமர் சேக் முஜிபுர் ரஹ்மான் இவரை நன்கு கவனித்துக் கொண்டார். 1972 ஆம் ஆண்டில் இவர் இடுப்பை உடைத்துக் கொண்டார். இந்திரா காந்தியின் தலையீட்டின் மூலம் சிகிச்சைக்காக இவர் கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், அனைத்து மருத்துவ செலவுகளும் இந்திய அரசாங்கத்தால் செலுத்தப்பட்டன. கொல்கத்தாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இவரது கணவருடன் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் பங்களிப்புக்காகவும், வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்காக இவர் செய்த பணிகளுக்காகவும் அரசாங்கத்தாலும், மக்களாலும், கௌரவிக்கப்பட்டனர். இவர் கொல்கத்தாவில் 1973 இல் இறந்தார்.

விருதுகள்[தொகு]

1973இல் இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mrs. Nellie Sengupta, Past Presidents, Indian National Congress". Indian National Congress. Archived from the original on 4 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nellie Sengupta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லி_சென்குப்தா&oldid=3777364" இலிருந்து மீள்விக்கப்பட்டது