சி. ஆர். ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. ஆர். ராவ்
Calyampudi Radhakrishna Rao at ISI Chennai.JPG
சென்னை, இந்தியப் புள்ளியியல் கழகத்தில் 2012 ஏப்ரலில் பேராசிரியர் சி. ஆர் ராவ்
பிறப்பு10 செப்டம்பர் 1920 (1920-09-10) (அகவை 102)
பிரித்தானிய இந்தியா, மைசூர் இராச்சியம்
ஹடகள்ளி
வாழிடம்இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய மாகாணம்
குடியுரிமைஐக்கிய அமேரிக்கா[1]
துறைகணிதம் மற்றும் புள்ளியியல்
பணியிடங்கள்இந்தியப் புள்ளியியல் கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம்
பஃபலோ பல்கலைக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆந்திரப் பல்கலைக்கழகம்
கொல்கத்தா பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் மன்னர் கல்லூரி
ஆய்வேடுஉயிரியல் வகைப்பாடுகளின் புள்ளியியல் சிக்கல்கள் (1948)
ஆய்வு நெறியாளர்ரொனால்டு பிசர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அறியப்படுவதுCramér–Rao bound
ராவ் பிளாக்வெல் தியரேம்
Orthogonal arrays
Score test
விருதுகள்பத்ம விபூசண்
தேசிய அறிவியல் பதக்கம் (2001)
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
கய் தங்கப் பதக்கம் (Silver 1965, Gold 2011)

கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் (Calyampudi Radhakrishna Rao, பிறப்பு 1920 செப்டம்பர் 20) என்பவர் இந்தியாவில்-பிறந்த, அமெரிக்க, கணிதவியலாளர் மற்றும் புள்ளியியலாளர் ஆவார். அவர் தற்போது அமெரிக்காவின் பேன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பபெலோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியராகவும் இருக்கிறார். ராவ், கௌரவ பட்டங்கள், விருதுகள் ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டுள்ளார் 2002 ஆம் ஆண்டில் அமெரிக்க நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது.[2] அமெரிக்க புள்ளியியல் சங்கம், “சி.ஆர்.ராவ், புள்ளியியல் மேதை மட்டுமல்ல, பொருளாதாரம், மரபியல், மானுடவியல், நிலவியல், தேசிய திட்டமிடல், மக்கள்தொகையியல், மருந்தியல், உயிரிப் புள்ளியியல் உள்ளிட்ட பல துறைகளிலும் கரை கண்ட வித்தகர் அவர்”[2] என்று புகழ்ந்துரைக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா இந்தியாவின் முதல் 10 அறிவியலாளர்களில் ஒருவராக ராவை பட்டியலிட்டுள்ளது.[3]

தொடக்கக் கால வாழ்க்கை[தொகு]

சி. ஆர். ராவ். பழைய மைசூர் மாகாணத்தில், பெல்லாரி மாவட்டத்தின் ஹாடகல்லியில், சி. டி. நாயுடு- லட்சுமிகாந்தம்மா தம்பதியரின் பத்து குழந்தைகளில் எட்டாவதாக, 1920, செப். 10-இல் பிறந்தார். குடூர், நந்திகாமா, விசாகப்பட்டினத்தில் பள்ளிக்கல்வியை முடித்த ராவ், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில், மாநில அளவில் முதலிடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் (1941). பிறகு, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் எம்.எஸ்சி. பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றார் (1943).[2]

குடும்பம்[தொகு]

ராவின் மனைவி பார்கவி ஒரு கல்வியாளர். அவர் கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இத்தம்பதியரின் மகனும் மகளும் அமெரிக்காவில் விஞ்ஞானிகளாக உள்ளனர்.

கல்வி வாழ்க்கை[தொகு]

இதனிடையே 1941-இல் இந்தியப் புள்ளியியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராக ராவ் இணைந்தார். இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பிரசாந்த் சந்திர மகலனோபிஸால் நிறுவப்பட்ட அந்த அமைப்பில், அவரது வழிகாட்டுதலிலேயே ராவ் பணியாற்றினார். இந்நிலையில், பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் தொல்லியல் அருங்காட்சியகம், தனது மேம்பாட்டுத் திட்டப்பணிக்காக ராவை அழைத்தது. அதையேற்று 1946- 1948 காலத்தில் அங்கு சென்ற ராவ், மகலனோபிஸ் வடிவமைத்த புள்ளியியல் மாதிரியைக் கொண்டு அந்தத் திட்டப் பணியை வெற்றிகரமாக முடித்தார். அப்போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கிங்ஸ் கல்லூரியில், உலகப் புகழ்பெற்ற புள்ளியியல் மேதை ஆர்.ஏ.ஃபிஷ்ஷரின் மேற்பார்வையில் பி.எச்.டி. பட்டமும் பெற்றார் (1948). பிறகு இந்தியா திரும்பிய ராவ், 1980 வரை, சுமார் 40 ஆண்டுகாலம், இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (ஐஎஸ்ஐ) பல்வேறு பதவிகளை வகித்தார். ராவ் ஐஎஸ்ஐ இயக்குநராக இருந்தபோது, புள்ளியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி, பல்லாயிரக் கணக்கான மாணவர்களை அத்துறைக்குள் கொண்டுவந்தார். உலக அளவில் புள்ளியியல் துறையின் மையப்புள்ளியாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

புள்ளியியல் துறையை நாட்டில் மேம்படுத்த பல பயிற்சித் திட்டங்களை ராவ் உருவாக்கினார். தென்கிழக்காசியாவில் புள்ளியியல் துறை வளர அவரது முயற்சிகள் உறுதுணையாக இருந்தன. ஐ.நா.சபையின் புள்ளியியல் துறைக் குழுவின் தலைவராக ராவ் இருந்தபோது, ஆசிய அளவில் புள்ளியியல் கல்வி மையம் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் விளைவாக, ஆசிய பசிபிக் புள்ளியியல் கல்வி நிறுவனம் (Statistical Institute for Asia and Pacific) டோக்கியோவில் 1970-இல் தோற்றுவிக்கப்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாடு முழுதுவதும் புள்ளியியல் துறை வளர வேண்டும் என்ற மகலனோபிஸின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில புள்ளியியல் மையங்களை ராவ் தொடங்கினார். அவற்றுக்கிடையே நெருக்கமான தகவல் தொடர்பையும் உறுதிப்படுத்தினார். அவை மத்திய, மாநில அரசுகளின் திட்டமிடலில் இன்று பெரும் பங்காற்றுகின்றன. மத்திய புள்ளியியல் நிறுவனம் (Central Statistical Organisation -CSO), தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Sample Survey- NSS) ஆகியவற்றின் பணிகளிலும், ஆராய்ச்சிகளிலும் ராவ் துணை புரிந்தார். ராவின் தனிப்பட்ட முயற்சியால் இந்திய எகனோமெட்ரிக் சங்கம் (Indian Econometric Society) 1960-இல் துவங்கப்பட்டது. திட்டமிடலுக்கான பொருளாதாரத்தைப் பயிற்றுவிக்கும் படிப்புகளை இந்த அமைப்பு முன்னெடுத்தது. இந்திய மருத்துவப் புள்ளிவிவரங்களுக்கான சங்கத்தையும் (Indian Society for Medical Statistics) ராவ் 1983-இல் நிறுவினார். பணி ஓய்வுக்குப் பிறகு, தனது 60-வது வயதில் அமெரிக்கா சென்ற ராவ், அங்கு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதன்பிறகு, பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராகச் சேர்ந்த அவர், இன்றும் அங்கு தனது 86 வயதிலும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள மாறிகளின் பகுப்பாய்வு மையத்தின் (Center for Multivariate Analysis- CMA) இயக்குநராக தற்போது ராவ் உள்ளார். மேலும் நியூயார்க்கிலுள்ள பஃபல்லோ பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சியாளராகச் செயல்படுகிறார்.

புள்ளியியல் சாதனைகள்[தொகு]

புள்ளியியலில் பல அரிய சாதனைகளை ராவ் செய்திருக்கிறார். கிராமர்-ராவ் இன்ஈகுவாலிட்டி (Cramer-Rao inequality), ராவ் பிளாக்வெலைசேஷன் (Rao-Blackwellization), ராவின் ஸ்கோர் சோதனை (Rao’s Score Test), ஃபிஷ்ஷர்-ராவ் தேற்றம் (Fisher-Rao Theorem), ராவ்-ரூபின் தேற்றம் (Rao-Rubin), லூ-ராவ் தேற்றம் (Lau-Rao), காகன்-லின்னிக்-ராவ் தேற்றம் (Kagan-Linnik-Rao) உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை ராவ் நிகழ்த்தியிருக்கிறார். புள்ளியியலில் 14 நூல்களை எழுதியுள்ள சி.ஆர்.ராவ், பல துறைகளில் பயன்படும் புள்ளியியல் குறித்த 27 கையேடுகளைத் தயாரித்துள்ளார். அவர் ஐஎஸ்ஐயில் பணிபுரிந்தபோது 201 ஆய்வேடுகளையும், அமெரிக்கா சென்றபின் 274 ஆய்வேடுகளையும் வெளியிட்டுள்ளார். ராவின் சாதனைகள் புள்ளியியலில் புதிய தேற்றங்களும் கண்டுபிடிப்புகளும் மட்டுமல்ல. நூற்றுக் கணக்கான புள்ளியியல் விஞ்ஞானிகளை, ஆராய்ச்சியாளர்களை அவர் உருவாக்கியிருக்கிறார். அதுவே தனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் விஷயம் என்று அவர் குறிப்பிடுவது வழக்கம். அதனால்தான், உலகளாவிய புள்ளியியல் மாமேதையாக அவர் போற்றப்படுகிறார்.

விருதுகள்[தொகு]

 • சிஎஸ்ஐஆரின் பட்நாகர் விருது (1963),
 • பிரிட்டனின் ராயல் புள்ளியியல் சங்கத்தின் கய் வெள்ளிப் பதக்கம் (1968),
 • கய் தங்கப் பதக்கம் (2011),
 • இந்திய அறிவியல் கழகத்தின் மேகநாத் சஹா விருது (1969),
 • இந்திய அரசின் பத்மபூஷண் (1968),
 • பத்மவிபூஷண் (2001),
 • அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் வில்க்ஸ் நினைவு விருது (1989),
 • இந்திய அறிவியல் காங்கிரஸின் மகலனோபிஸ் நூற்றாண்டு பதக்கம் (1996),
 • அமெரிக்க அரசு விஞ்ஞானிகளுக்கு வழங்கும் உயரிய விருதான தேசிய அறிவியல் பதக்கம் (2002) உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களை ராவ் பெற்றுள்ளார்.
 • புள்ளியியலுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக 1974-இல் எஸ்சி.டி. என்ற அறிவியல் முனைவர் பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கியது.
 • உலகம் முழுவதும் ஆறு கண்டங்களிலுள்ள 18 நாடுகளின் பல்கலைக்கழகங்கள், 31 கௌரவ டாக்டர் பட்டங்களை ராவுக்கு வழங்கியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Numberdars". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 October 2011. Archived from the original on 23 March 2016. https://web.archive.org/web/20160323041225/http://www.timescrest.com/coverstory/the-numberdars-6380. 
 2. 2.0 2.1 2.2 "Statisticians in History: Calyampudi R. Rao". American Statistical Association. 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-29 அன்று பார்க்கப்பட்டது.
 3. "C.R.Rao in News". C.R.Rao Advanced Institute of Mathematics, Statistics and Computer Science. 2015-07-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-29 அன்று பார்க்கப்பட்டது.
 • தினமணி – இளைஞர்மணி (26.04.2016)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._ராவ்&oldid=3553647" இருந்து மீள்விக்கப்பட்டது