தீஜான் பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டவனி கதைப்பாடல் நிழச்சியை நடத்தும் தீஜான் பாய்.

தீஜான் பாய் (Teejan Bai, பிறப்பு: ஏப்ரல் 24, 1956) என்பவர் இந்திய மாநிலமான சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான பாண்டவணி என்ற கலை நிகழ்ச்சியை நிகழ்த்துபவர் ஆவார். இதில் இவர் மகாபாரதத்திலிருந்து கதைகளை இசைக்கருவிகளுடன் பாடுவார்.

இவருக்கு இந்திய அரசால் 1987 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது, 2003 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது, 2019 இல் பத்ம விபூசண் விருது போன்றவை வழங்கப்பட்டன. மேலும் இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாதமியால் 1995 ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.

வாழ்கை வரலாறு[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தீஜான் பாய் பிலாய்க்கு வடக்கே 14 கிலோமீட்டர் (8.7 மைல்) தொலைவில் உள்ள கனியாரி கிராமத்தில் சுனுக் லால் பர்தி மற்றும் சுக்வதி ஆகிய இணையருக்கு மகளாக பிறந்தார். [1] இவர் சத்தீசுகர் மாநிலத்தின் பார்தி என்ற பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

இவரது ஐந்து உடன்பிறப்புகளில் இவரே மூத்தவர், இவர் தன் தாய்வழி தாத்தா பிரிஜ்லால் பிரதியிடம் சத்தீஸ்கரி எழுத்தாளர் சபல் சிங் சவுகான் சத்தீஸ்கரி இந்தியில் எழுதிய மகாபாரதத்தை படித்துக்காட்டினார். அப்போது அதை வெகுவாக விரும்பினார். அதன்பிறகு இவர் விரைவில் அதன் பெரும்பகுதியை மனப்பாடம் செய்துவிட்டார், பின்னர் உமேத் சிங் தேஷ்முக்கிடம் முறைசாரா கல்வி முறையில் பயிற்சி பெற்றார்.

தொழில்[தொகு]

இவர் தன் 13 வயதில், தனது முதல் பொது நிகழ்ச்சியை அண்டை கிராமமான சந்திரகுரியில் (துர்க்) ரூ .10 க்கு நடத்தினார். பாரம்பரியமாக பெண்கள் பாடுவதைப் போல, ஒரு பெண்ணாக முதல் முறையாக 'பாண்டவானி' கதைப் பாடலை கபாலிக் ஷைலியில் (பாணி) வேதமதியில், உட்கார்ந்த பாணியில் பாடினார். பாரம்பரியத்திற்கு மாறாக, திஜான் பாய் தனது வழக்கமான குரலில் உரக்க பாடி நிகழ்சியை நடத்தினார். அதுவரை ஆண்களின் கோட்டையாக இருந்த இந்த 'பாண்டவானி' கதைப் பாடல் நிகழ்சியில் இவர் நுழைந்தார். [2]

குறுகிய காலத்திற்குள்ளாகவே, இவர் அண்டை கிராமங்களில் நன்கு அறியப்பட்டவரானார். மேலும் வீட்டு விழாக்களிலும் பண்டிகைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்த இவர் அழைக்கப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடக ஆளுமையான ஹபீப் தன்வீர் இவரது திறமையைக் கவனித்த நிலையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்காக நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இவர் தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். 1988 இல் பத்மசிறீ, [3] 1995 இல் இசை சங்கீத நாடக அகாதமி விருது, 2003 இல் பத்ம பூசண் ஆகிய விருதுகளைப் பெற்றார்.

1980 களில் தொடங்கி, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, துருக்கி, துனிசியா, மால்டா, சைப்ரஸ், ருமேனியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு கலாச்சார தூதராக உலகம் முழுவதும் பயணம் செய்தார். [4] ஜவகர்லால் நேருவின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட சியாம் பெனகலின் புகழ்பெற்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடரான பாரத் ஏக் கோஜில் நிகழ்ச்சியியல் மகாபாரதத்திலிருந்து காட்சிகளை இவர் நிகழ்த்தினார். [5]

இன்றைய நிலையில் இவர் தனது தனித்துவமான நாட்டுப்புற பாடல் மற்றும் தனது சக்திவாய்ந்த குரலால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 12 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பாண்டவணி பாடியதற்காக, 'பர்தி' பழங்குடியினரால் சமுதாய புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் கணவனையும் பிரியவேண்டி இருந்தது. இதனால் இவர் ஒரு சிறிய குடிசையை கட்டிக்கொண்டு, தனியாக வாழத் தொடங்கினார், அண்டை வீட்டுக்காரர்களிடமிருந்து பாத்திரங்களையும் உணவையும் கடன் வாங்கினார். என்றாலும் தான் பாடுவதை ஒருபோதும் கைவிடவில்லை. இத்தொழில் இறுதியில் இவருக்கு பணத்தையும் பகழையும் கொடுத்தது. [6] இதன் பிறகு இவர் தனது முதல் கணவரின் வீட்டிற்குச் செல்லவில்லை. அவரைவிட்டு நிரந்தரமாக பிரிந்த பின்னர் (விவாகரத்தால்). அடுத்த ஆண்டுகளில், இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், பின்னர் பாட்டியும் ஆனார்.

2019 மார்ச் 16 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி, திரு ராம்நாத் கோவிந்த் அவர்களிடம், பத்ம விபூஷன் விருதை பெறும் திருமதி. திஜான் பாய்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீஜான்_பாய்&oldid=3558691" இருந்து மீள்விக்கப்பட்டது