உள்ளடக்கத்துக்குச் செல்

சதீஷ் குஜ்ரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதீஷ் குஜ்ரால்
பிறப்புசதீஷ் குஜ்ரால்
25 டிசம்பர் 1925 (வயது 91)
ஜீலம், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமும்பை
அறியப்படுவதுஓவியக் கலை, சிற்பக்கலை, கட்டடக் கலைஞர் & எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
கிரண்
விருதுகள்பத்ம விபூஷன், 1999

 

சதீஷ் குஜ்ரால் (Satish Gujral) (25 டிசம்பர் 1925) ஒரு இந்திய ஓவியர், சிற்பி, சுவர் ஓவியர் மற்றும் விடுதலைக்குப் பிறகான காலகட்டத்தின் எழுத்தாளரும் ஆவார். 1999 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. இவரது மூத்த சகோதரர் இந்தர் குமார் குஜரால் இந்திய முன்னாள் பிரதமர் ஆவார்.

 ஆரம்ப வாழ்க்கை[தொகு]

குஜ்ரால் பிரித்தானிய இந்தியாவின் பிரிக்கப்படாத பஞ்சாப் மாகாணத்தில் ஜீலம் நகரில் பிறந்தார்.[1] இவர் காஷ்மீரில் ஒரு சிதிலமடைந்த நிலையிலிருந்த பாலத்தைக் கடந்து கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து நீர்ச்சுழல்களில் சிக்கினார். இந்த விபத்தின் காரணமாக இவருக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டது. இந்நிகழ்வு நடந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகு 1998 ஆம் ஆண்டில் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பான செவித்திறன் இவருக்கு மீண்டும் கிடைத்தது.[2]

கல்வி[தொகு]

இவருக்கிருந்த செவித்திறன் குறைபாட்டின் காரணமாக பல பள்ளிகள் இவரை பள்ளியில் சேர்க்க மறுத்தன. ஒரு நாள் மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பறவை ஒன்றினைப் படமாக வரைந்தார். இந்த நிகழ்வே வரைதல் மற்றும் வண்ணமிடுதலில் இவருக்கிருந்த ஆர்வத்தின் முதல் வெளிப்பாடாகும். பிற்காலத்தில் 1939 ஆம் ஆண்டில் இவர் இலாகூரில் உள்ள மாயா கலைப் பள்ளியில் பயன்பாட்டுக் கலை தொடர்பான படிப்பில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டில் இவர் மும்பைக்குச் சென்று சர் ஜே. ஜே கலைப்பள்ளியில் சேர்ந்தார். 1947 ஆம் ஆண்டில் நீடித்த மற்றும் அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக இவர் பள்ளியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும், இவர் மும்பையை விட்டும் வெளியேற நேரிட்டது.

1952 ஆம் ஆண்டில், குஜ்ரால் மெக்சிக்கோ நகரத்தின் பேலேசியோ டி பெல்லாசில் படிப்பதற்கு கல்வி உதவித்தொகை கிடைக்கப் பெற்றார். இங்கு இவர் புகழ் பெற்ற டியகோ ரிவேரா மற்றும் டேவிட் ஆல்பரோ சிக்யூரோசு ஆகியோரிடம் தொழிற்பயிற்சி பெற்றார்.[3]

பஞ்சாப் பகுதி, லூதியானா, பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சதீஷ் குஜ்ராலால் வரையப்பட்ட சுவரோவியம்

 படைப்புகள்[தொகு]

இந்தியா பாக்கித்தான் பிரிக்கப்பட்ட நிகழ்வும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட புலம் பெயர்ந்தோரின் சோகமும் இளைய வயதிலேயே சதீஷ் குஜ்ராலை பாதித்தது. இந்த வலியும் வேதனையும் இவரது படைப்புகளில் வெளிப்பட்டது. 1952 முதல் 1974 ஆம் ஆண்டு வரை, குஜ்ரால் தனது வரைபடங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்ட கலைப்படைப்புகளைக் கொண்டு உலகெங்கிலும் நியூயார்க்கு நகரம், புது தில்லி, மொண்ட்ரியால், பெர்லின், தோக்கியோ மற்றும் பல இடங்களிலும் கண்காட்சிகளை நடத்தினார்.[4]

குஜ்ரால் ஒரு கட்டிடக்கலைஞரும் கூட. புது தில்லியிலுள்ள பெல்ஜியம் தூதரகத்தின் வடிவமைப்பு 20 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றாக கவின்கட்டிடக்கலையாளர்களின் பன்னாட்டு அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

குஜ்ரால் தனது மனைவி கிரணுடன் புது தில்லியில் வசித்து வந்தார். இவரது மகன் மோகித் குஜ்ரால் ஒரு கவின் கட்டிடக்கலை வல்லுநர் ஆவார். மோகித் குஜ்ரால் பெரோஸ் குஜ்ராலை மணந்தார். குஜ்ரால் கிரண் தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். ஆல்பனா ஒரு நகை வடிவமைப்பாளர் ஆவார். ராசேல் குஜ்ரால் அன்சால் ஒரு உள் வடிவமைப்பு நிபுணர் ஆவார். இவர் நவீன் அன்சாலை மணந்துள்ளார்.[5]

சதீஷ் குஜ்ரால் இந்தியாவின் 12 ஆம் பிரதமாரான ஐ. கே. குஜ்ராலின் சகோதரர் ஆவார்.[6]

விருதுகள்[தொகு]

இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த கௌரவமான பத்ம விபூசண் விருது 1999 ஆம் ஆண்டில் சதீஷ் குஜ்ராலுக்கு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என்டிடிவி நிறுவனத்தால் சிறந்த இந்தியருக்கான விருது பெற்றார்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "Satish Gujral, an invaluable pearl of the Indian art world". Newstrackindia.com. 2008-01-01. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "'When the first wave of sound hit me, I screamed out: I hear firecrackers!'". Rediff.com. 9 September 1998. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
  3. "Memories of partition and more from ace artist Satish Gujral". Sify.com. Archived from the original on 2016-09-16. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  4. "Satish Gujral". famouspunjabi.com. Archived from the original on 29 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Rashmi Hemrajani (2013-03-13). "Art-inspired jewellery | Latest News & Updates at Daily News & Analysis". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  6. Hebbar, Nistula (2020-03-27). "Satish Gujral passes away at 94" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/satish-gujral-passes-away-at-94/article31178795.ece. 
  7. "Amjad Ali Khan, Satish Gujral honoured with NDTV Indian of the Year Award". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஷ்_குஜ்ரால்&oldid=3775602" இலிருந்து மீள்விக்கப்பட்டது