பாலு சங்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலு சங்கரன்
Balu Sankaran
பத்ம விபூசன் விருது நிகழ்வு
பிறப்பு(1926-09-04)4 செப்டம்பர் 1926
தமிழ்நாடு
இறப்பு20 சூன் 2012(2012-06-20) (அகவை 85)
பணிமருத்துவப் பேராசிரியர்
வாழ்க்கைத்
துணை
சுகன்யா

பாலு சங்கரன் (Balu Sankaran) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் மற்றும் விஞ்ஞானியாவார். இந்திய அரசு வழங்கும் பத்மசிறீ மற்றும் பத்ம விபூசன் விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு செயற்கை கால்கள் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஒரு மறுவாழ்வு நிறுவனம் ஆகியவற்றை நிறுவ உதவி செய்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 1926 ஆம் செப்டம்பர் மாதம் 4 அன்று சங்கரன் பிறந்தார். 1948 ஆம் ஆண்டு சென்னை இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவப் பட்டம் பெற்றார். 1951–1955 ஆம் ஆண்டு காலத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்குச் சென்று கொலம்பியா பிரசுபைடிரியன் மருத்துவ மையத்திலிருந்தும் 1955 ஆம் ஆண்டில் மான்செசுட்டர் ராயல் இன்ஃபர்மேரி மருத்துவமனையிலிருந்தும் பயிற்சி பெற்றார். [1][2][3]

தொழில்[தொகு]

இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு. பாலு சங்கரன் மணிப்பால் மருத்துவக் கல்லூரியில் சில மாதங்கள் உடற்கூற்றியல் துறையில் பேராசியராகக் கல்வி கற்பித்தார். பின்னர் புது தில்லியிலுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பணியில் சேர்ந்தார்.

1956 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சை உதவி பேராசிரியராக சங்கரன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். உதவி பேராசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் 1963 ஆம் ஆண்டு இணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு வரை அங்கு தனது பணியைத் தொடர்ந்தார். புதுதில்லி எய்ம்சில் பணிபுரிந்தபோது, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ராக்பெல்லர் அறக்கட்டளை உறுப்பினராக அடிப்படை மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

புதுதில்லி எய்ம்சுக்குப் பின்னர் சங்கரன் 1970 ஆம் ஆண்டு வரை மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் ஒரு பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். 1970 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை மத்திய எலும்பியல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். 1981 ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநராக பணியாற்றிய இவர் 1987 வரை அங்கு இருந்தார். 1992 -1994 ஆம் ஆண்டு காலத்தில் இந்திய மறுவாழ்வு கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

மத்திய எலும்பியல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிய போது, 1972 ஆம் ஆண்டில் கான்பூரில் இந்தியாவின் செயற்கை மூட்டு உற்பத்தி கழகத்தை அமைக்க உதவினார். 1975 ஆம் ஆண்டு புவனேசுவருக்கு அருகிலுள்ள ஒலத்பூரில் தேசிய புனர்வாழ்வு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவவும் உதவினார். 1981 வரை இக்கழகத்தின் தலைவராக இருந்தார். ஓய்வுக்குப் பின்னர் தில்லியின் செயிண்ட் சிடீபன் மருத்துவமனையில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றினார்[4].

இறப்பு[தொகு]

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதியன்று சங்கரன் இறந்தார். [5]

விருதுகள்[தொகு]

1971 வங்காளதேசப் போரில் காயமடைந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காக 1972 ஆம் ஆண்டு சங்கரனுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில் சப்தர்ஜங் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டார். இவருடைய மருத்துவப் பங்களிப்புகளுக்காக 2007 ஆம் ஆண்டு பத்ம விபூசன் விருதும் வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "An institution to help leprosy affected patients is his vision". தி இந்து (Chennai, India). 11 February 2007 இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104041144/http://www.hindu.com/2007/02/11/stories/2007021118100200.htm. 
  2. "Biography".
  3. "Padma Vibhushan for Khushwant, Nariman". தி இந்து (Chennai, India). 26 January 2007 இம் மூலத்தில் இருந்து 1 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070501050051/http://www.hindu.com/2007/01/26/stories/2007012623790100.htm. 
  4. "Biography". Springer. Archived from the original on 2013-02-03.
  5. "Noted orthopaedic surgeon Balu Sankaran passes away". The Hindu (Chennai, India). 21 June 2012. http://www.thehindu.com/news/national/tamil-nadu/noted-orthopaedic-surgeon-balu-sankaran-passes-away/article3551567.ece. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலு_சங்கரன்&oldid=3315262" இலிருந்து மீள்விக்கப்பட்டது