தி. வே. சங்கரநாராயணன்
திருவலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | டி.வி.எஸ் |
பிறப்பு | மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா | 7 மார்ச்சு 1945
பிறப்பிடம் | இந்தியா |
இறப்பு | 2 செப்டம்பர் 2022 | (அகவை 77)
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | செம்மொழி பாடகர் |
இசைத்துறையில் | 1968 முதல் |
டி. வி. சங்கரநாராயணன் (திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன், 7 மார்ச் 1945 – 2 செப்டம்பர் 2022) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயரின் மருமகன் ஆவார் இவர்.[1]
இவரது இசை சீடர்களில் ஆர். சூரியபிரகாசு,அவரது மகள் அம்ருதா சங்கரநாராயணன் மற்றும் அவரது மகன் மகாதேவன் சங்கரநாராயணன் ஆகியோர் அடங்குவர்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 07 மார்ச் 1945 அன்று, டி. எஸ். வேம்பு ஐயர் - கோமதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். 9 ஆவது வயதில் இசைப் பயிற்சியை தனது மாமா மதுரை மணி ஐயரிடமிருந்து பெற ஆரம்பித்தார். சங்கரநாராயணன் மயிலாடுதுறையில் இசைச் சூழலில் வளர்ந்தார்.
வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற சங்கரநாராயணன், சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றார். வழக்கறிஞர் தொழிலைப் பார்த்துக்கொண்டே இசையிலும் சாதிக்க இயலாது என தீர்மானித்த சங்கரநாராயணன், வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]01 பிப்ரவரி 1968 அன்று முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். டி. என். கிருஷ்ணன் வயலினும், வேலூர் ராமபத்ரன் மிருதங்கமும் வாசிக்க இசை நிகழ்ச்சி நடந்தது. இவருடன் ஆலங்குடி ராமச்சந்திரன் இணைந்து பாடினார்.
அடுத்து வந்த நாட்களில் லால்குடி ஜெயராமன், எம். எஸ். கோபாலகிருஷ்ணன், டி. கே. மூர்த்தி, முருகபூபதி, பாலக்காடு ரகு, உமையாள்புரம் சிவராமன் ஆகியோர் இவரின் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கருவிகளை இசைத்தனர்.
1975 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவில் இசைப் பயணம் செய்தார். தமிழ்நாட்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கா சென்ற முதல் கருநாடக இசை ஆண் பாடகர் இவராவார். கனடா, சிங்கப்பூர், ஆசுத்திரேலியா, கொங்காங் ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் செய்தார். 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கின் லிங்கன் நடுவத்தில் நடந்த 'மில்லினியம் 2000' எனும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழிசை
[தொகு]தெலுங்கு கீர்த்தனைகளோடு தமிழிசைப் பாடல்களையும் தனது நிகழ்ச்சிகளில் இவர் பெருமளவில் பாடினார். இதன் காரணமாக 'சிவன் இசைச் செல்வர்', 'தமிழ் இசை வேந்தர்' எனும் பட்டங்களால் வழங்கப்பட்டார்.
விருதுகள்
[தொகு]- சங்கீத ரத்னகாரா, 1975; வழங்கியது: வசர் கல்லூரி
- காயக சிகாமணி விருது, 1981; வழங்கியது: பைரவி, அமெரிக்க ஐக்கிய நாடு
- இன்னிசை பேரரசு, 1981; பாரதி கலாமன்றம், டொரோண்டோ
- சுவர லயா ரத்னகாரா விருது, 1986; வழங்கியது: ராமகிருஷ்ணானந்த சரஸ்வதி, ஸ்ரீ வித்யாஷ்ரம், ரிஷிகேஷ்
- ஞானகலாரத்னம், 1987; வழங்கியவர்: செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர்
- நாதகனல், 1987; வழங்கியது: நாதகனல், சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1990[2]
- சங்கீத சூடாமணி விருது, 1996 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- சுவர யோக சிரோன்மணி, 1997 ; வழங்கியது: யோக ஜிவன சட்சங்கா (பன்னாட்டு அமைப்பு)
- பத்ம பூஷன் விருது, 2003
- சங்கீத கலாநிதி விருது, 2003[3] ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- சங்கீத கலாசிகாமணி விருது, 2005 ; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- வித்ய தபசுவி, 2012; வழங்கியது: தபஸ் (TAPAS) கல்சுரல் பவுண்டேசன்
- சங்கீத கலா ஜோதி, சங்கீத மாமணி, சிறீ ரஞ்சனி கலா சாகரம், சங்கீத கலா சாரதி
மறைவு
[தொகு]தி. வே. சங்கரநாராயணன் 2022 செப்டம்பர் 2 மாலை சென்னையில் அவரது 77-ஆவது அகவையில் காலமானார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகன் மகாதேவனும் ஒரு கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramakrishnan, H. (30 December 2021). "T.V. Sankaranarayan: As zestful as always" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/music/tv-sankaranarayan-as-zestful-as-always/article38071370.ece.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ Sangita Kalanidhi
- ↑ Carnatic music vidwan T. V. Sankaranarayanan passes away, மைலாப்பூர் டைம்சு, 3 செப்டம்பர் 2022
உசாத்துணை
[தொகு]- On a joyous musical journey பரணிடப்பட்டது 2004-04-22 at the வந்தவழி இயந்திரம் தி இந்து நாளிதழிலிருந்து
வெளி இணைப்புகள்
[தொகு]