டி. கே. மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. கே. மூர்த்தி
பிறப்பு13 ஆகத்து 1924 (அகவை 99)
பணிஇசைக் கலைஞர்
பாணிகருநாடக இசை
இணையத்தளம்http://tkmurthy.com/

டி. கே. மூர்த்தி (T. K. Murthy) (பி: ஆகஸ்ட் 13, 1924) என பிரபலமாக அறியப்படும் டி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிருதங்கக் கலைஞர் ஆவார்.

இளமைக்காலம்[தொகு]

திருவனந்தபுரம், கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரை என்ற ஊரில் பிறந்தார்.[1] இவரது தகப்பனார் தாணு பாகவதர், தாயார் அன்னபூரணி. இவர்களது வீட்டிற்கு எதிரில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்ததால் இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்தார்கள். ஏழு வயதில் மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினார். 'எவ்வாறு வாசிக்கத் தொடங்கினேன் என்று தெரியவில்லை' என அவரே கூறியிருக்கிறார். திருவனந்தபுரம் அரண்மனையில் பல வித்துவான்கள் வாசித்ததை கேட்டிருக்கிறார். அவ்வாறு ஒரு தடவை வாசித்தபோது அரண்மனைக்கு வேறொரு கச்சேரிக்கு மிருதங்கம் வாசிக்க வந்த தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் இவரது வாசிப்பைக் கேட்டு தனது மாணவனாக ஏற்றுக் கொண்டு தன்னுடன் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று விட்டார். அப்போது இவருக்கு வயது ஒன்பது. இவருடன் கூட பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், டி. எம். தியாகராஜனின் சகோதரரான தம்புசுவாமி ஆகியோரும் வைத்தியநாத ஐயரிடம் மாணவர்களாக இருந்தனர். வைத்தியநாத ஐயரும் அவரது மனைவியும் இவரைத் தமது சொந்த மகனாக பாவித்து அன்பு செலுத்தி வந்தனர்.

இசையுலகப் பங்களிப்புகள்[தொகு]

இவரது முதலாவது கச்சேரி இவர் 10 வயதாக இருக்கும்போது இடம்பெற்றது. முசிரி சுப்பிரமணிய ஐயர் பாட்டுக்கு கரூர் சின்னசுவாமி ஐயர் வயலின் வாசிக்க இவரது குரு வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்தார்.

இவரது அடுத்த கச்சேரி மைசூர் அரண்மனையில் இடம் பெற்றது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டுக்கு மைசூர் சௌடையா வயலின் வாசிக்க வைத்தியநாத ஐயர் மிருதங்கம் வாசித்தார். அப்போது நவராத்திரி விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் கச்சேரிகள் நடக்கும்.

முத்தையா பாகவதர் தனது கச்சேரிக்கு வைத்தியநாத ஐயருடன் இவரையும் மிருதங்கம் வாசிக்க வைத்தார். இவரது வாசிப்பைக் கேட்ட மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் இவருக்கு 1000 ரூபா பரிசளித்தார். இது 1935 ஆம் ஆண்டில் நடந்தது. பணப்பரிசு கொடுத்தது மட்டுமன்றி மகாராஜா, அடுத்த நாள் இன்னொரு கச்சேரிக்கு இவரை தனியாக மிருதங்கம் வாசிக்க வைத்தார்.[1]

அதிலிருந்து 15,000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் இதுவரை வாசித்துள்ளார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி சீனிவாச ஐயர், எம். எஸ். சுப்புலட்சுமி, மதுரை எஸ். சோமசுந்தரம், டி. கே. ஜெயராமன், எம். பாலமுரளி கிருஷ்ணா, டி. என். சேஷகோபாலன், குன்னக்குடி வைத்தியநாதன், லால்குடி ஜெயராமன், டி. வி. சங்கரநாராயணன், நெய்வேலி சந்தானகோபாலன், மண்டலின் யு. ஸ்ரீநிவாஸ் மற்றும் பல பிரபல வித்துவான்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார்.

குரு-சிஷ்ய பரம்பரையில் ஐந்து தலைமுறை கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்துள்ளார். அவர்கள்: முத்தையா பாகவதர், இராமநாதபுரம் சி. எஸ். சங்கரசிவம், டி. என். சேஷகோபாலன், நெய்வேலி சந்தானகோபாலன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோராவர்.

40 வருடங்களுக்கு மேலாக எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, எடின்பேர்க் இசைவிழா என்பவற்றில் அவரது இசைக் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார்.

அத்துடன் இலங்கை, ரோம், அமெரிக்கா, ஜெர்மனி, பாரிஸ், ஜெனிவா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் எனப் பல இடங்களில் இவர் மிருதங்கம் வாசித்துள்ளார்.

வீதி நாடகங்கள், பொம்மலாட்டம், பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மிருதங்கம் வாசித்துள்ளார். மிருதங்கத்துடன் ஏனைய தாள வாத்தியங்களான கடம், கஞ்சிரா ஆகியவற்றையும் இலகுவாகக் கையாளுவார். அது மட்டுமின்றி இவர் கொன்னக்கோலிலும் திறமை படைத்தவராக இருந்தார்.

மாணாக்கர்கள்[தொகு]

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

பாராட்டு[தொகு]

இவர் 75 ஆண்டுகள் இசைப்பணி ஆற்றியதற்கு மதிப்பளிக்குமுகமாக மிருதங்க சக்கரவர்த்தி முனைவர் டி. கே. மூர்த்தி இசைப்பள்ளியும் அறக்கட்டளையும் என்ற அமைப்பு 2009 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதமியில் இவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அகாதமியின் தலைவர் என். முரளி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தபேலா வித்துவான் உஸ்தாத் ஜாகீர் ஹுசெய்ன், கடம் வித்துவான் 'விக்கு' விநாயக் ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.[5] விழாவின் உச்சக் கட்டமாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் இவரின் இளைய மாணவர்கள் தனித்தனியாக மிருதங்கம் வாசித்தனர். பின்னர் மூத்த மாணாக்கர்கள் பஞ்சநடையில் தனி ஆவர்த்தனம் வாசித்தனர். இறுதியாக டி. கே. மூர்த்தி, விநாயக் ராம், ஜாகீர் ஹுசெய்ன் மூவரும் கலந்து கொண்ட தாள வாத்திய கச்சேரி (ஜுகல் பந்தி) நடைபெற்றது.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._மூர்த்தி&oldid=3659189" இருந்து மீள்விக்கப்பட்டது