செம்பை வைத்தியநாத பாகவதர்
செம்பை வைத்தியநாத பாகவதர் | |
---|---|
![]() 1935 இல் செம்பை வைத்தியநாத பாகவதர் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | வைத்தியநாதன் |
பிறப்பு | செப்டம்பர் 1, 1895
செம்பை, பாலக்காடு, கேரளம் |
இறப்பு | அக்டோபர் 16, 1974 ஒத்தப்பாலம், கேரளம் | (அகவை 79)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 1904–1974 |
செம்பை வைத்தியநாத பாகவதர் (மலையாளம்: ചെമ്പൈ വൈദ്യനാഥ ഭാഗവതര്, செப்டம்பர் 1, 1895 - அக்டோபர் 16, 1974) பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் தோன்றிய பிரபலமான ஒரு கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் தம் கிராமப் பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் என்ற தம்பதி இவரின் பெற்றோராவர். இவரின் தந்தை, பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் எல்லோரும் இசை பாடகர்களாக திகழ்ந்தனர், ஆக பாகவதருக்கு கருநாடக இசை, பாரம்பரியதொரு கலையாக விளங்கியது. இவரின் முப்பாட்டனார் சுப்பையர் என்பவர் சக்ரதானம் என்ற அரிய தானவகையில் பாடுவதில் தேர்ச்சி பெற்றதால் சக்ரதானம் சுப்பையர் என்றே அழைக்கப்பட்டார்.
மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. இவருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.
3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8 ஆம் பிராயத்தில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.
மற்ற கலைஞர்களை ஊக்குவித்து உயர்வடைய செய்வதில் செம்பை மிகுந்த ஈடுபாடு கொண்டவர். "ரக்ஷ மாம்", "வாதாபி கணபதிம்", "பாவன குரு" போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். ஜய-விஜயன், யேசுதாஸ், டி. வி. கோபாலகிருஷ்ணன், பி. லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் கருநாடக இசையில் இவரின் சீடர்கள். இவரின் மறைவிற்கு பிறகு இவரின் பெயரில் பல இசை விழாக்கள் நடைபெறுகின்றன (உதாரணமாக குருவாயூரில் ஒவ்வொரு ஆண்டும் செம்பை சங்கீத உற்சவம் நடைபெறுகிறது)
விருதுகள்[தொகு]
- சங்கீத கலாநிதி விருது ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1958[1]
- சன்கீத கலாசிகாமணி விருது, 1964, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.