தொழினுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொழில்நுட்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மனிதன் புவியைவிட்டுக் கிளம்பி வான்வெளியில் உலாவரும் அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்றான்.

தொழினுட்பம் அல்லது தொழில் நுட்பம் என்பது, பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. தொழினுட்பம் கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழினுட்பம் பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆள்வதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழினுட்பம், மருத்துவத் தொழினுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும்.

மனித இனத்தின் தொழினுட்பப் பயன்பாடு, இயற்கை வளங்களை எளிமையான கருவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தியதுடன் தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்திய கண்டுபிடிப்புக்களான, தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தல், உணவு வளங்களைப் பெருக்கிக் கொள்ளவும், சில்லின் கண்டுபிடிப்பு போக்குவரத்துச் செய்வதற்கும், சூழலைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவின. பிந்திய காலக் கண்டுபிடிப்புக்களான, அச்சியந்திரம், தொலைபேசி, இணையம் என்பன தொடர்புகளுக்கான இயற்பியற் தடைகளை இல்லாமலாக்கியதுடன், மனிதர்கள் உலக அளவில் தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் வழி வகுத்தன. எனினும் எல்லாத் தொழில் நுட்பங்களுமே ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனுக்காகவோ அல்லது உலக அமைதிக்காகவோ பயன்படுகின்றன என்பதில்லை. கொலை ஆயுதங்களின் வளர்ச்சிக்கு வரலாறு முழுவதும் தொழினுட்பம் பயன்பட்டிருக்கிறது. எளிமையாக கத்தி முதல், அணுவாயுதங்கள் வரை அதிகரித்துவரும் அழிப்பு ஆற்றலுடன் கூடிய ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழினுட்பம் சமூகத்தையும், அதன் சுற்றாடலையும் பல வழிகளில் பாதித்துள்ளது. பல சமுதாயங்களில், உயர்ந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்குத் தொழினுட்பம் உதவியுள்ளது. பல தொழில்நுட்பச் செயல்முறைகள், மாசுறுதல் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்குவதுடன், இயற்கை வளங்களையும் அளவு மீறிச் சுரண்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழினுட்பம்&oldid=2095798" இருந்து மீள்விக்கப்பட்டது