உலோகவியல்
-
உலோகவியல் (metallurgy) என்பது உலோகங்கள், இடையுலோகச் சேர்மங்கள் மற்றும் கலப்புலோகம் எனப்படும் உலோகக் கலவைகள் போன்றவற்றின் பொருளறிவியல், பொறியியல், இயற்பியல், வேதியியல் பண்புகள் முதலியனவற்றை ஆய்வு செய்கின்ற அறிவியல் களமாகும். இத்துறை பொதுவாக, தனிமங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான ஒரு நுட்பவியலாகும். தனிமங்களை உற்பத்தி செய்வதற்கு அறிவியல் துறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதும் நுகர்வோருக்கும் பெருமளவில் தயாரிப்பவர்களுக்கும் இத்தனிமங்களை உற்பத்தி செய்வதற்கான பொறியியல் முறைகளையும் உலோகவியல் உள்ளடக்கியுள்ளது. தனிமங்களை உற்பத்தி செய்வது என்பது உலோகத் தாதுக்களைப் பதப்படுத்தி அவற்றில் இருந்து தனிமங்களைத் தனித்துப் பிரித்தெடுத்தலைக் குறிக்கிறது. மேலும், கலப்புலோகங்களாக ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும் உலோகக் கலவையிலிருந்து உலோகத்தை தனித்துப் பிரித்தெடுத்தலையும் உலோகவியல் உள்ளடக்கியுள்ளது. உலோகவியல் என்ற சொற்றொடர் உலோகங்களைப் பயன்படுத்தி கைவினைஞர்கள் மேற்கொள்ளும் கைவினை தொழிலில் இருந்து வேறுபட்டதாகும். மருந்துகள் எவ்வாறு மருத்துவ அறிவியலுடன் தொடர்பு கொண்டுள்ளனவோ அதே போல ஒரு தொடர்பைக் கொண்டவைதான் உலோகவியலும் கைவினைஞர்களின் உலோகத் தொழிலும் என்பதை பிரித்தறிய வேண்டும்.
இரும்புசார் உலோகவியல், இரும்புசாரா உலோகவியல் என்று உலோகவியல் மேலும் இரு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இச்சொற்றொடர் கருப்பு உலோகவியல் மற்றும் வண்ண உலோகவியல் என்ற சொற்களாலும் அழைக்கப்படுகிறது. இரும்புசார் உலோகவியல் என்பது இரும்பு என்ற உலோகத்துடன் தொடர்பு கொண்ட தாதுக்கள், தயாரிப்புமுறைகள், இவற்றின் இயற்பியல் வேதியியல் பண்புகள், உலோகக் கலவைகள் முதலியனவற்றை உள்ளடக்கியதாகும். இரும்புசாரா உலோகவியல் என்பது இரும்பை தவிர்த்த ஏனைய உலோகங்களின் தயாரிப்புச் செயல்முறைகள், கலப்புலோகங்கள் முதலியனவற்றை உள்ளடக்கியதாகும். இரும்புசார் உலோகவியலுடன் தொடர்புடைய உலோகங்களின் தயாரிப்புச் செயல்முறைகள் உலகத்தின் தனிமங்கள் உற்பத்தியில் 95 சதவீதம் செயல்பாட்டைக் கொண்டது என்பது கவனிக்கத்தக்கதாகும் [1].
சொற்பிறப்பியல்
[தொகு]உலோகவியல் என்ற வேர்ச்சொல் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். உலோக வேலையாள் மற்றும் உலோக வேலை என்ற பொருளின் அடிப்படையில் கிரேக்கமொழிச் சொல் ஆக்கப்பட்டிருந்தது. கனிமங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும், குறிப்பாக பெருமளவில் தயாரிக்கும் செயல்முறையிலுள்ள இரசவாதி என்ற தொழிற்பெயர் உலோகவியல் என்ற சொல்லுக்கு அடிப்படையாகும். இப்பொருளின் அடிப்படையிலேயே என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் 1797 ஆம் ஆண்டு உலோகவியலின் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது [2]. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலோகவியல் என்ற சொல்லின் பொருள் உலோகங்கள், உலோகக் கலவைகள் மற்றும் அவற்றின் செயல்முறைகள் முதலியவற்றை ஆய்வு செய்யும் துறை என்று விரிவான பொருளைப் பெற்றது. உலோகவியல் என்ற சொல்லின் பொருள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் காமன்வெல்த் நாடுகள் போன்ற உலகின் பெரும்பாலான இடங்களிலும் ஒரே வகையான உச்சரிப்பும் பொருள் கொள்ளலும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளன.
வரலாறு
[தொகு]மனித வரலாற்றில் மிகவும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தங்கம் ஆகும். இது சூழ்நிலைகளால் பாதிக்கப்படாததும், வேறு வேதிப் பொருட்களுடன் வினைபுரியாத தன்மையையும் கொண்டிருப்பதால் இயற்கையில் தனித்த தனிம நிலையிலேயே கிடைக்கின்றது. பழைய கற்காலத்தில் கிமு 40000 ஆண்டுகளுக்கு முன் எசுப்பானியாவின் கற்குகைகளில் இயற்கை தங்கம் சிறிய அளவில் கிடைத்ததாக அறியப்படுகிறது[3]. வெள்ளி, தாமிரம், வெள்ளீயம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் ஆரம்பகால கலாச்சாரங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது [4]. கிமு 3000 இல் விண்கல்லில் இருந்து பெறப்பட்ட இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எகிப்திய ஆயுதங்கள், "வானத்திலிருந்து வந்த கத்திகள்" எனக் கொண்டாடப்பட்டன [5].ஈயம், வெள்ளீயம், தாமிரம் போன்ற சில குறிப்பிட்ட உலோகங்கள் உயர் வெப்பநிலையில் தாதுக்களை ஊது உலையில் சுடுபடுத்தி உருக்கிப் பிரித்தல் முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன.
கிமு 5 , 6 ஆம் நூற்றாண்டு காலத்தில் முதன்முதலாக பிரித்தெடுத்தல் முறையில் உலோகம் தயாரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கின்றன [6]. செர்பியாவிலுள்ள மைதான்பெக், யர்மொவாக், புளொக்னிக் போன்ற தொல்லியல் தளங்களில் இச்சான்றுகள் கிடைத்தன.
தற்காலத்தில் செப்பு பிரித்தெடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெலோவோத் தளத்தில் கிடைத்திருக்கிறது [7]. இங்கு கிடத்த செப்புக் கோடாலி விங்கா நாகரிகத்தைச் சேர்ந்த கிமு 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியப்படுகிறது. போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள பால்மெலா, எசுப்பானியாவில் உள்ள இலாசு மில்லேரெசு, ஐக்கிய இராச்சியத்திலுள்ள சுடோன்யெங் போன்ற தளங்களிலும் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொடக்கக் கால உலோகங்கள் பயன்பாடு குறித்த தகவல்கள் அறியப்படுகின்றன [8]. எனினும் உலோகங்களின் தொடக்கக்கால பய்ன்பாடுகள் குறித்த உறுதியான காலம் உறுதி செய்யப்படவில்லை. இப்பொருள் தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தனித்த உலோகங்கள் கிமு 3500 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டதாக அறியப்படுகிறது. செப்பு மற்ரும் வெள்ளீயத்தைக் கலந்து வெண்கலம் கலப்புலோகம் உருவாக்கப்பட்டது மிகப்பெரிய நாகரிக மாற்றத்திற்கு வித்திட்டது. இக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.
இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தல் செப்பு அல்லது வெள்ளீயத்தின் தாதுவிலிருந்து செப்பு அல்லது தகரத்தைப் பிரித்தெடுப்பதைக் காட்டிலும் கடினமானதாகும். இரும்பு பிர்த்தெடுத்தல் செயல்முறை கிமு 1200 இல் இரும்பு காலத்தில் இத்தியர் நாகரிகத்தினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இரும்பு பிரித்தெடுத்தல் மற்றும் இரும்பு வேலை செயல்முறைகள் இரகசியமாக காக்கப்பட்டு பெலிசுதரின் இன மக்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது என நம்பப்படுகிறது [5][9].
இரும்புசார் உலோகவியல் வளர்ந்த வரலாற்றை பல்வேறு கடந்தகால கலாச்சார நாகரீகங்களில் காணமுடிகிறது. பண்டைய இடைக்கால பேரரசுகள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கு அருகிலிருந்த பேரரசுகள், பண்டைய ஈரான், பண்டைய எகிப்து, பண்டைய நூபியா, மற்றும் அனடோலியா (துருக்கி), பண்டைய நாக், கார்த்தேச்சு, கிரேக்கர்கள் மற்றும் பண்டைய ஐரோப்பா ரோமர், மத்திய ஐரோப்பா, பண்டைய மற்றும் இடைக்கால சீனா, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா, பழங்கால மற்றும் இடைக்கால ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாகரிகங்களில் இரும்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது. ஊது உலையின் பயன்பாடு, வார்ப்பு இரும்பு பயன்படுத்தப்பட்டது, நீரியல் சாய்வுச் சம்மட்டி, துருத்தியின் பயன்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் சீனாவில் கிடைத்துள்ளன [10][11].
உலோக தாதுக்களை சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுத்தல், உலோகங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் உலோகம் பிரித்தெடுத்தல் செயல்முறை வளர்ச்சி மற்றும் சிக்கலான செயல்முறைகள் முதலியவற்றை கியார்ச்சு அகரிகாலா மூலம் எழுதப்பட்ட 16 ஆம் நூற்றாண்ட்டைச் சேர்ந்த தெ ரெ மெட்டாலிகா என்ற புத்தகம் விவரிக்கிறது. அகரிகாலா "உலோகவியலின் தந்தை" எனக் கருதப்படுகிறார் [12].
பிரித்தெடுத்தல்
[தொகு]உலோகங்களைப் பிரித்தெடுத்தல் என்பது உலோகத் தாதுவிலிருந்து மதிப்புமிக்க உலோகங்களைத் தனியாக நீக்குவது மற்றும் சுத்திகரிப்பது எனப் பொருள்படும். உலோக ஆக்சைடு அல்லது சல்பைடு தாதுவிலிருந்து தூய உலோகத்தைப் பிரித்தெடுக்க இயற்பியல் முறை, வேதியியல் முறை அல்லது மின்முறையில் ஒடுக்கம் செய்யப்பட வேண்டும்.
உலோகப் பிரித்தெடுப்பாளர்கள் செலுத்துதல், அடர்ப்பித்தல், கழிவுகளை நீக்குதல் முதலிய மூன்று முதன்மையான செயல்களைப் பின்பற்றுகின்றனர். சுரங்கத்திலிருந்து வெட்டி எடுத்தபிறகு, பெரிய துண்டுகளாக காணப்படும் தாது அனைத்தையும் துகளாக அல்லது தூளாக நசுக்கி, அரைத்து சிறியசிறிய துகள்களாக மாற்றுகின்றனர், பிரிக்கப்பட வேண்டிய தனிமத்தை தெவையற்ற கழிவுப்பொருட்களில் இருந்து பொருத்தமான முறையில் நீக்கி அடர்த்தியாக்குகின்றனர்.
தாதுவை அரைப்பது உகந்தது என்றால் அரைத்தலுக்கு அனுப்பப்படுகிறது. கரைப்பதால் கழிவுப்பொருட்களை நீக்க முடியுமென்றால் தாதுவைக் கரைத்து தேவையற்ற மாசுக்களை நீக்கி, தனிமத்தைப் பிரித்துத் தயாரிப்புக்குத் தேவையான கரைசலை தயாரித்துக் கொள்ளலாம்.
சிலவகை தாதுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இம்மாதிரியான நிகழ்வுகளில் தொடக்கநிலை பிரித்தெடுப்பு முறையில் நீக்கப்படும் கழிவு அடுத்த நிலையில் மற்றொரு தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்குத் தேவையான தொடக்கநிலை தாதுவாக அமைகிறது. மேலும், சில நிகழ்வுகளில் அடர்ப்பிக்கப்பட்ட தாதுவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளில் அடர்ப்பிக்கப்பட்ட தாது மீண்டும் பொருத்தமான செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனித்தனியான தனிமங்களைப் பிரித்தெடுக்க திட்டமிடப்படுகிறது.
கலப்புலோகங்கங்கள்
[தொகு]பொதுவாக அலுமினியம், குரோமியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், நிக்கல், தைட்டானியம், துத்தநாகம் உள்ளிட்ட உலோகங்கள் பொறியியல் உலோகங்கள் எனப்படுகின்றன. இவையே பெரும்பாலும் கலப்புலோகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரும்பு- கார்பன் கலப்புலோகங்கள் தொடர்பான வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு போன்றவற்றின் பண்புகளைப் புரிதலுக்கு அதிகமான முனைப்பு காட்ட வேண்டியுள்ளது. வெறும் கார்பனை மட்டுமே கலப்புலோகமாகப் பயன்படுத்தி குறைந்த செலவும் அதிக வலிமையும் மிக்க கலப்புலோகங்களை தயாரிக்க முடிகிறது. வார்ப்பு இரும்பு, தேனிரும்பு போன்றனவும் இவ்வகையான கலப்புலோகங்களேயாகும். மின்தடையும் அரித்தல் பண்பும் முக்கியத்துவம் பெறும் இடங்களில் தூய எஃகும், துத்தநாக முலாமிட்ட எஃகும் பயன்படுத்தப்படுகின்றன. வலிமையும் எடை குறைவும் தேவையான இடங்களில் அலுமினியம் மற்றும் மக்னீசியம் கலப்புலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மோனெல் போன்ற தாமிர-நிக்கல் கலப்புலோகங்கள் அதிக அரிப்புத்தன்மையும் காந்தத் தன்மையும் இல்லாத சுழல் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல் அடிப்படையில் உருவான இங்கோனெல் போன்ற கலப்புலோகங்கள் வாயுச் சுழலிகள், சுழலிமின்னேற்றிகள், அழுத்தக்கலன்கள், வெப்பபரிமாற்றிகள் போன்ற உயர் வெப்பநிலை சுழல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மிகைவெப்ப சூழல்களில் ஒற்றைப்படிக கலப்புலோகங்கள் உபயோகமாகின்றன.
உற்பத்தி
[தொகு]நுகர்வோருக்கான பொறியியல் பொருட்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான உலோகங்களை உற்பத்தி செய்யும் செயல்முறையில் உற்பத்தி பொறியியல் துறை கவனம் செலுத்துகிறது. கலப்புலோகங்களை உற்பத்தி செய்தல், வடிவமைத்தல், வெப்பப்படுத்துதல், மேற்பரப்பு வடிவமைப்பு முதலியன இப்பிரிவில் முக்கியத்துவம் பெறுகின்றன. வெப்பநிலை செலவு, எடை, வலிமை, கெட்டித்தன்மை, கடினத்தன்மை, அரிப்பு, சோர்வு எதிர்ப்பு, மற்றும் செயல்திறன் உள்ளிட பொருளியற் பண்புகளை சமநிலை அடையச் செய்யும் பொறுப்பு உலோகவியல் பணியாளர்களின் கடமையாகின. இதற்காக சூழ்நிலையை அவர்கள் ஆராய்கின்றனர். உப்புநீர் சூழலில் இரும்பு, அலுமினியம் கலப்புலோகங்கள் விரைவில் அரிக்கப்பட்டுவிடுகின்றன என்பது அறியப்பட்டது, குளிர் மற்றும் கடுங்குளிர் சூழல்களில் கலப்புலோகங்கள் நொறுங்கும் தன்மையையும் இழுவை தன்மையையும் இழந்து விடுகின்றன. சில கலப்புலோகங்கள் அதிக நொறுங்கு தன்மையும் நீள்தன்மையும் பெற்று விரைவில் உடைந்து போகின்றன. உயர் வெப்பநிலை, தொடர் சுழற்சி போன்ற காரணிகளும் கலப்புலோகங்களின் பண்புகளில் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
உலோகக் கைவினை செயல்முறைகள்
[தொகு]- வார்ப்படம்- உருகிய உலோகத்தை வார்ப்புகளில் இடுதல்.
- வடித்தல்- செஞ்சூடாக்கப்பட்ட உலோகத்தை தேவையான வடிவத்திற்கு சுத்தியலால் அடித்தல்
- உருட்டுதல் – அடுத்தடுத்து குறுகிய உருளைகள் வழியாகச் செலுத்தி தகடாக உருவாக்குதல்.
- சிரொளி உறைப்பூச்சு – இயங்கும் சீரொளிக் கற்றையின் மீது உலோகத்தூளை தூவி உலோக உருகல் மூலமாக முப்பரிமாண துண்டை உருவாக்குதல்
- பிதுக்கல் – தகடாக்கத்தக்க சூடான உலோகத்தை அழுத்தத்தில் ஓர் அச்சுக்குள் செலுத்தி குளிர்வித்து வடிவமைத்தல்.
- சூடாக்கிப் பிணைத்தல் – தூளாக்கப்பட்ட உலோகம் ஓர் அச்சுக்குள் செலுத்தப்பட்டு ஆக்சிசனேற்றமடையாத சூழலில் சூடுபடுத்துதல்.
- எந்திரவினை – கடைசல், அரைக்கும் இயந்திரங்கள், மற்றும் வடிவமைத்தலுக்காக குளிர் உலோகங்களை வெட்டுதல்.
- புனைதல் - உலோக தாள்களை கொலைக்கத்திகளால் அல்லது எரிவாயு வெட்டிகள் பயன்படுத்தி கட்டுமான வடிவத்தை உருவாக்கல்.
- முப்பரிமாண அச்சிடல் – நகரும் ஒரு மிக சிறிய புள்ளியில் வெப்பப்படுத்தப்பட்ட அல்லது உருகிய உலோகத்தூளை நகரும் அச்சு முனையால் முப்பரிமாணாகப் பதித்தல் முதலியன உலோகக் கைவினை செயல்முறைகளுடன் தொடர்பு கொண்ட செயல்களாகும்.
குளிரூட்டப்பட்டு வடிவமைத்தல் முறையில் உறைவு நிலையில் உள்ள உலோகத்தை புனைதல் அல்லது வேறு முறைகள் மூலம் தயாரிப்பு வடிவத்தை மாற்றமுடியும். இச் செயல்முறையில் கெட்டியாக்குவதன் மூலம் வலிமையை அதிகரிக்க முடியும். வடிவ மாற்றங்கள் ஏற்படும் போது உலோகத்தில் நுண்ணிய குறைபாடுகள் தோன்றுகின்றன.
பல்வேறு வடிவங்களில் வார்ப்புருக்கள் தொழிற்துறை மற்றும் கல்வித்துறைகளில் உள்ளன. மணல் வார்ப்படம், மெழுகு வார்ப்படம் என்பன் சில வகைகளாகும்.
வெப்பச் சிகிச்சைகள்
[தொகு]உலோகங்களின் வலிமையை, நீள்தன்மையை, கெட்டித்தன்மையை, கடினத்தன்மையை மற்றும் எதிர்ப்புப் பண்புகளை வெப்ப சிகிச்சையின் மூலம் மாற்ற முடியும்.பதனாக்கல், வீழ்படிவாக்கல், கெட்டியாக்கல், தணித்தல், உரனூட்டல் முதலியன பொதுவான வெப்பச் சிகிச்சை முறைகளாகும் [13]. சூடுபடுத்துவதன் மூலம் உலோகத்தை மென்மையாக்கி பின்னர் படிப்படியாக குளிரவைத்தல் பதனாற்றுதல் முறை வெப்ப சிகிச்சையாகும். இம்முறையில் கூராக்குதல், வளைத்தல், போன்ற வடிவமாற்றங்களை ஏற்படுத்த முடியும். உலோகத்தை மிக விரைவாக வெப்பமூட்டிய பின்னர் குளிரவைப்பது தணித்தல் என்னும் வெப்ப சிகிச்சை முறையாகும். உயர் கார்பன் எஃகு தணித்தல் முறையில் கடினப்படுத்தப்படுகிறது. வெப்பநிலை மாற்றம் மூலம் உலோகத்தை உடையாமல் கெட்டியாக்கும் செயல்முறை உரனூட்டல் எனப்படுகிறது.
பெரும்பாலும், இயந்திர மற்றும் வெப்ப சிகிச்சைகள் இரண்டையும் இணைத்து நல்ல பண்புகள் மிக்க பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வெப்ப-இயந்திர சிகிச்சை எனப்படும் பெயரால் இம்முறை அழைக்கப்படுகிறது. மிகை கலப்புலோகங்களும் தைட்டானியக் கலப்புலோகங்களும் இம்முறையில் உருவாக்கப்படுகின்றன.
மின்முலாம் பூசுதல்
[தொகு]மின்முலாம் பூசுதல் எனப்படுவது மேற்பரப்பில் ஒரு இராசாயணப்பூச்சை பூசும் சிகிச்சை நுட்பமாகும். மற்றொரு உலோகத்தின் மெல்லிய அடுக்கு தயாரிப்பு மேற்பரப்பில் பூசப்படுகிறது. தங்கம், வெள்ளி, குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்கள் இத்தகைய பிணைப்பை உண்டாக்குகின்றன. அரிப்பை குறைக்கவும் அழகியல் தோற்றத்தை மேம்படுத்தவும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
வெப்பத் தெளித்தல்
[தொகு]வெப்பத் தெளிப்பு முறையில் உலோகத்தின் பண்புகளை மாற்றுதல் மற்றொரு நுட்பமான முறையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Металлургия". in The Great Soviet Encyclopedia. 1979.
- ↑ Oxford English Dictionary, accessed 29 January 2011
- ↑ "History of Gold". Gold Digest. பார்க்கப்பட்ட நாள் 2007-02-04.
- ↑ E. Photos, E. (2010). "The Question of Meteoritic versus Smelted Nickel-Rich Iron: Archaeological Evidence and Experimental Results". World Archaeology 20 (3): 403. doi:10.1080/00438243.1989.9980081. http://img2.tapuz.co.il/forums/1_132972987.pdf. பார்த்த நாள்: 2017-05-09.
- ↑ 5.0 5.1 W. Keller (1963) The Bible as History. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-00312-X
- ↑ H.I. Haiko, V.S. Biletskyi. First metals discovery and development the sacral component phenomenon. // Theoretical and Practical Solutions of Mineral Resources Mining // A Balkema Book, London, 2015, р. 227-233..
- ↑ Radivojević, Miljana; Rehren, Thilo; Pernicka, Ernst; Šljivar, Dušan; Brauns, Michael; Borić, Dušan (2010). "On the origins of extractive metallurgy: New evidence from Europe". Journal of Archaeological Science 37 (11): 2775. doi:10.1016/j.jas.2010.06.012.
- ↑ Neolithic Vinca was a metallurgical culture Stonepages from news sources November 2007
- ↑ B. W. Anderson (1975) The Living World of the Old Testament, p. 154, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-48598-3
- ↑ R. F. Tylecote (1992) A History of Metallurgy பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-901462-88-8
- ↑ Robert K.G. Temple (2007). The Genius of China: 3,000 Years of Science, Discovery, and Invention (3rd edition). London: André Deutsch. pp. 44–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-233-00202-6.
- ↑ Karl Alfred von Zittel (1901). History of Geology and Palaeontology. p. 15. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.33301.
- ↑ Arthur Reardon (2011), Metallurgy for the Non-Metallurgist (2nd edition), ASM International, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61503-821-3