நூலகவியல்
நூலகவியல் என்பது, நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களின் ஒழுங்கமைப்பு, மேலாண்மை ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். நூலக வளங்கள் பயன்படுத்தப்படும் விதம், நூலக முறைமைகளுடன் மக்கள் தொடர்பாடுகின்ற விதம் போன்றவை தொடர்பான கல்விசார் ஆய்வுகளையும், நடைமுறைசார்ந்த நூலகத் தகவல் முறைமைகளின் இயக்கம் முதலியன தொடர்பான ஆய்வுகளையும் இது உள்ளடக்குகின்றது. பொருத்தமான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அறிவை ஒழுங்குபடுத்துவது என்பது, ஆய்வு நோக்கிலும், நடைமுறை தொடர்பிலும், முக்கிய விடயமாக அமைகின்றது. நூலகவியலில் முக்கியமான விடயங்களாக, பெற்றுக்கொள்ளல் (acquisition), விபரப்பட்டியலாக்கம் (cataloging), வகைப்படுத்தல், நூல்களைப் பேணிக்காத்தல் என்பன உள்ளன. வரலாற்று ரீதியாக நூலகவியலானது ஆவணப்படுத்தல் அறிவியலையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.[1] நூலகவியலில் பெருமளவான செயற்பாடுகள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. அவற்றுட் சில தகவல் மூலங்கள் ஒழுங்கமைப்பு, பயனர்களின் தேவைக்கான தகவல் மூலங்களின் உபயோகம், பகுப்பாக்கத் தொகுதிகள், தொழினுட்பங்கள் என்பவற்றுடன் மக்களின் இடைத்தொடர்பு, நூலகங்கட்கு உள்ளும் வெளியும் தகவல் பெறப்படுதலும் செயற்படுத்தப்படுதலும், நூலகத் தொழிலிற்கான பயிற்சி, கல்வி என்பன, நூலகச் சேவைகளும் அமைப்பு ரீதியான நெறிமுறைகளும், நூலக சேவையில் கணினி மயமாக்கல் முதலியன.
நூலகவியல் என்னும் துறை இன்று நூலகமும் தகவல் விஞ்ஞானமும் என்று அழைக்கப்படுகின்றது.[2] இது, நூலகவியலானது தகவல்களைத் திரட்டாக கொண்ட ஆவணங்களுடன் தொடர்புபட்டது என்பதையும் தகவல் மூலங்கள், தகவல் ஒழுங்கமைப்பு, பரிமாற்றம் என்பவற்றுடன் தொடர்புபட்டது என்பதையும் விளக்குவதாக அமைகின்றது.
வரலாறு
[தொகு]1627 ஆம் ஆண்டில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த கபிரியேல் நோடே (Gabriel Naudé) என்பவர் நூலக அறிவியல் தொடர்பான முதல் பாடநூலான நூலகம் அமைப்பதற்கான ஆலோசனைகள் (Advice on Establishing a Library) என்னும் நூலை எழுதினார்.[3] ஒரு நூலகரும் அறிஞருமான இவர் அரசியல், சமயம், வரலாறு, மீவியற்கை போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். கார்தினல் யூல்சு மாசரின் நூலகத்தை அமைத்து நடத்துவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது, தனது நூலில் உள்ளடக்கிய எண்ணங்களைச் செயல்படுத்தினார்.
19 ஆம் நூற்றாண்டில் 1808 - 1829 காலப்பகுதியில், மார்ட்டின் சிரெட்டிங்கர் (Martin Schrettinger) என்பவர் எழுதிய, இத்துறை சார்ந்த இரண்டாவது பாடநூல் வெளியானது. இதே நூற்றாண்டில், தாமசு செபர்சன் (Thomas Jefferson) ஆயிரக் கணக்கான நூல்களைக் கொண்டிருந்த தனது நூலகத்துக்காகப் புதிய வகைப்பாட்டு முறை ஒன்றை உருவாக்கினார். இது, துறைவாரி ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட பேக்கோனிய முறையைத் தழுவியது. இதற்கு முன்னர் அகர வரிசை அடிப்படையிலேயே நூல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. செபர்சனின் சேகரிப்புக்களே தற்போது காங்கிரசு நூலகம் எனப்படுவதன் தொடக்கம் ஆகும். 1887 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் அமெரிக்காவின் முதல் நூலகவியலுக்கான கல்வி நிறுவனம், நூலகப் பொருளியலுக்கான பள்ளி என்னும் பெயரில் தொடக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டில், 1930 ஆம் ஆண்டு எஸ். ஆர். ரங்கநாதன் எழுதிய நூலக அறிவியலின் ஐந்து விதிகள் என்னும் நூலுக்கான தலைப்பில் நூலக அறிவியல் என்ற பெயர் பயன்பட்டது. பின்னர், 1933 ஆம் ஆண்டில் லீ பியரே பட்லர் எழுதிய நூலக அறிவியல் ஓர் அறிமுகம் என்ற நூலிலும் இப்பெயர் பயன்பட்டது. பட்லரின், புதிய அணுகுமுறை, நூலகவியலை சமூகத்தின் தகவல் தேவைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் நோக்கத்துடன், கணிய முறைகளையும், சமூக அறிவியலின் எண்ணக்கருக்களையும் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதை வலியுறுத்தியது. இது, பெரும்பாலும் நூலக நிர்வாகத்தில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு இருந்த நூலகப் பொருளியலின், வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைக்கு எதிரானதாக அமைந்திருந்தது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Harris, Michael H. History of Libraries in the Western World. 4th ed. Lanham, Maryland: Scarecrow, 1995. 3 - "நூலகத்துக்கும், ஆவணக் காப்பகத்துக்கும் இடையேயான வேறுபாடு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தது ஆகும்."
- ↑ தூவி பதின்ம வகைப்பாடு (DDC) 1876ல் வெளியிடப்பட்ட அதன் முதலாவது பதிப்பில் அதன் 19 ஆவது வகுப்பிற்கு "நூலகப் பொருளியல்" என்று பெயரிட்டிருந்தது. 2வது பதிப்பில் அது வகுப்பு 20க்கு நகர்த்தப்பட்டது. எனினும் "நூலகப் பொருளியல்" என்னும் பெயர் 14வது பதிப்புவரை (1942) மாறாமல் இருந்தது. 15வது பதிப்பில் (1951) இப்பெயர் "நூலக அறிவியல்" என மாற்றப்பட்டு 17வது பதிப்புவரை (1965) பயன்படுத்தப்பட்டது. 18வது பதிப்பில் (1971)இவ்வகுப்பு "நூலகமும் தகவல் அறிவியலும்" எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- ↑ Lemke, Antje Bultmann, "Gabriel Naude and the Ideal Library" (1991). Library Associates. Paper 280. பக்.29