எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்
கிமு 2181–கிமு 2055 | |||||||||
தலைநகரம் |
| ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பார்வோன் | |||||||||
• கிமு 2181 | மெங்கரே (முதல்) | ||||||||
• கிமு 2069 – கிமு 2061 | மூன்றாம் இண்டெப் (இறுதி) | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிமு 2181 | ||||||||
• முடிவு | கிமு 2055 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் (First Intermediate Period of Egypt ), பழைய எகிப்திய இராச்சியத்தின் முடிவில் கிமு 2181 முதல் கிமு 2055 வரையான 125 ஆண்டுகளை பண்டைய எகிப்தின் இருண்ட காலம் என்றும் எகிப்தியவில் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த 125 ஆண்டுகளே எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் ஆகும். [1] எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை ஏழாம் வம்சம், எட்டாம் வம்சம், ஒன்பதாம் வம்சம், பத்தாம் வம்சம் மற்றும் எகிப்தின் பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன்கள் சில ஆண்டுகள் ஆண்டனர்.
எகிப்தின் முதல் இடைநிலக் காலத்தில் பண்டைய எகிப்தை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து என இரண்டாகப் பிரித்து இரண்டு பார்வோன்கள் ஆண்டனர்.
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு கீழ் எகிப்தை ஒரு பார்வோனும், தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு மேல் எகிப்தை ஒரு பார்வோனும் ஆண்டனர். [2] முதல் இடைநிலைக் காலத்தில் எகிப்தில் நிலையற்ற அரசியல் காரணமாக கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள், சித்திரங்கள், சிலைகள் மற்றும் மம்மிகள் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.[3] மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் கொண்ட பிணக்குகளால் எகிப்தின் வலிமை குன்றி இருந்தது. மேல் எகிப்தின் பதினொன்றாம் வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் கீழ் எகிப்தை வெற்றி கொண்டு, மற்றும் மேல் எகிப்து இராச்சியங்களை ஒன்றிணைத்து கிமு 2055-இல் மத்திய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவினார்.
வரலாறு
[தொகு]எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
முதல் இடைநிலைக் காலத்தின் நிகழ்வுகள்
[தொகு]பழைய எகிப்திய இராச்சியத்தின் (கிமு 2686 – கிமு 2181) இறுதிக் காலத்தில் எகிப்திய ஆட்சியாளர்களுக்கிடையே நிலையான அரசியல் உறவுகள் இன்றி, பகைமைகளும், கலவரங்களும், சட்ட ஒழுங்கு சீர் இன்மையும் தலைவிரித்தாடியது. இதனால் பழைய எகிப்திய இராச்சியம் வீழ்ச்சி கண்டது. சில எகிப்தியவியல் அறிஞர் எகிப்தின் ஆறாம் வம்சத்தின் இறுதிப் பார்வோன் இரண்டாம் பெப்பி தனது 90 வயது வரையான ஆட்சிக் காலத்தில் தனது அரச குடும்ப வாரிசுகளால் ஏற்பட்ட பிணக்குகளால் பழைய எகிப்திய இராச்சியம் வீழ்ச்சியடைந்து, இதனால் எகிப்தில் முதல் இடைநிலைக் காலம் தோன்றியதாக கருதுகிறார்.[4][5][6]
பழைய எகிப்திய இராச்சியத்தின் இறுதியில் பிரதேச ஆட்சியாளர்கள் பரம்பரையாக மிகுந்த அதிகராங்கள் கொண்டிருந்தனர். இதனால் எகிப்திய இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து பிரதேச ஆட்சியாளர்கள் விலகி இருந்தனர். இறுதியாக இப்பிரதேச ஆட்சியாளர்கள், எகிப்திய இராச்சியத்திலிருந்து விடுபட்டு, தன்னாட்சியுடன் தங்கள் பிரதேசங்களை ஆளத்துவங்கினர். [7] இப்பிரதேச ஆட்சியாளர்கள் தங்களுக்கென தனி கல்லறைகளும், இராணுவப் படைகளும் அமைத்துக் கொண்டனர்.மேலும் எகிப்திய பிரதேசம் ஆட்சியாளர்கள் தங்களுக்குள் போட்டி மனப்பான்மையுடன் போரிட்டுக் கொண்டனர்.
எகிப்தின் ஏழாம் & எட்டாம் வம்சங்கள், மெம்பிசு
[தொகு]எகிப்தின் ஏழாம் வம்சம் மற்றும் எட்டாம் வம்ச மன்னர்கள் குறித்தான செய்திகள் மிகக்குறைந்த அளவே கிடைத்துள்ளது.
கிமு 313-இல் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமைக் பேரரசு காலத்திய வரலாற்று அறிஞரும், கோயில் தலைமைப் பூசாரியுமான மனெத்தோ என்பரின் கூற்றுப்படி, எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, எழுபது நாட்களில் எழுபது மன்னர்கள் பண்டைய எகிப்தை ஆண்டதாக குறிப்பிடுகிறார்.[8]
எகிப்தின் ஏழாம் வம்ச ஆட்சியானது மெம்பிசு நகரத்தை தலைநகராகக் கொண்டு, ஆறாம் வம்சத்தின் அதிகாரம் வாய்ந்த அதிகார வர்க்கத்தவர்களால் ஆளப்பட்டது. இக்குழுவினர் பின்னர் ஏழாம் வம்ச ஆட்சியை கைப்பற்ற முயன்றனர். [9]
மெம்பிசு நகரத்திலிருந்து ஆண்ட எகிப்தின் எட்டாம் வம்ச ஆட்சியாளர்கள், தங்களை ஆறாம் வம்சத்தவர்களின் வழிதோன்றல்கள் எனக் கூறிகொண்டனர். [10]
ஹெராக்லியாபோலிட்டன் மன்னர்களின் எழுச்சி
[தொகு]ஏழாம் மற்றும் எட்டாம் வம்ச மன்னர்களின் ஆட்சியின் இறுதியில், கீழ் எகிப்தின் ஹெராக்லியோபோலிஸ் நகரத்தின் புதிய குழு ஒன்று, மெம்பிசு ஆட்சியாளர்களை வென்று எகிப்தில் தங்கள் ஆட்சியை நிறுவியது. [8]இந்த ஆட்சியாளர்களே தங்களை எகிப்தின் ஒன்பது மற்றும் பத்தாம் வம்சத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர்.
அன்க்திபி
[தொகு]கீழ் எகிப்தில் போர்ப் படைத் தலைவர்கள் நிறைந்து காணப்பட்டனர். அவர்களில் புகழ்பெற்றவர் அன்க்திபி ஆவார். இவர் கீழ் எகிப்து முழுவதையும் மற்றும் மேல் எகிப்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி நெக்ரலியோபோலிஸ் நகரத்திலிருந்து ஆட்சி செய்தவர். அவரது கல்லறை 1928-இல் அல்-உக்சுர் நகரத்திற்கு தெற்கே இருபத்தி எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொல்லா எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தீபை மன்னர்களின் எழுச்சி
[தொகு]மேல் எகிப்தின் தீபை நகரத்தின் ஆட்சியாளர்கள் எகிப்தின் பதினோறாவது மற்றும் பனிரெண்டாம் வம்சங்களை நிறுவி எகிப்தை ஆண்டனர்.[11] எகிப்தின் பதினோறாம் வம்சத்தவர்கள், எகிப்தை மத்தியகால இராச்சியத்திற்கு இட்டுச் சென்றனர். [12]
எகிப்தின் முதல் இடைநிலக் காலத்தின் முடிவு
[தொகு]எகிப்தின் பதினொன்றாம் வம்ச ஹெராக்கிலியோபோலிஸ் நகர பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை ஒன்றிணைத்து எகிப்தை ஒரு குடையின் கீழ் ஆண்டார். இத்துடன் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் முடிவுற்றது.
எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திய வம்சங்கள்
[தொகு]- எகிப்தின் ஏழாம் வம்சம் - கிமு 2181 - கிமு 2160
- எகிப்தின் எட்டாம் வம்சம் - கிமு 2181 - கிமு 2160
- எகிப்தின் ஒன்பதாம் வம்சம் - கிமு 2160 – கிமு 2130
- எகிப்தின் பத்தாம் வம்சம் - கிமு 2130 – கிமு 2040
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
[தொகு]- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kathryn A. Bard, An Introduction to the Archaeology of Ancient Egypt (Malden: Blackwell Publishing, 2008), 41.
- ↑ Gardiner, Alan (1961) Egypt of the Pharaohs (Oxford University Press), 107-109.
- ↑ Breasted, James Henry. (1923) A History of the Ancient Egyptians Charles Scribner's Sons, 133.
- ↑ Kinnaer, Jacques. "The First Intermediate Period" (PDF). The Ancient Egypt Site. பார்க்கப்பட்ட நாள் 4 April 2012.
- ↑ Gardiner, Alan (1961) Egypt of the Pharaohs (Oxford University Press), 110.
- ↑ Rothe, et al., (2008) Pharaonic Inscriptions From the Southern Eastern Desert of Egypt, Eisenbrauns
- ↑ Breasted, James Henry. (1923) A History of the Ancient Egyptians Charles Scribner's Sons, 117-118.
- ↑ 8.0 8.1 Sir Alan Gardiner, Egypt of the Pharaohs (Oxford: Oxford University Press, 1961), 107.
- ↑ Hayes, William C. The Scepter of Egypt: A Background for the Study of the Egyptian Antiquities in The Metropolitan Museum of Art. Vol. 1, From the Earliest Times to the End of the Middle Kingdom, p. 136, available online
- ↑ Breasted, James Henry. (1923) A History of the Ancient Egyptians Charles Scribner's Sons, 133-134.
- ↑ Baikie, James (1929) A History of Egypt: From the Earliest Times to the End of the XVIIIth Dynasty (New York: The Macmillan Company), 221.
- ↑ James Henry Breasted, Ph.D., A History of the Ancient Egyptians (New York: Charles Scribner's Sons, 1923), 136.