உள்ளடக்கத்துக்குச் செல்

அபு சிம்பெல் கோயில்கள்

ஆள்கூறுகள்: 22°20′13″N 31°37′32″E / 22.33694°N 31.62556°E / 22.33694; 31.62556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபு சிம்பெல் கோயில்கள்
இரண்டாம் ராமேசசுவின் பெருங்கோயில் இடப் பக்கத்திலும், அரசி நெபெராத்திக்கான சிறிய கோயில் வலப் பக்கத்திலும் காணப்படுகின்றன.
அபு சிம்பெல் கோயில்கள் is located in Egypt
அபு சிம்பெல் கோயில்கள்
Shown within Egypt
இருப்பிடம்அபு சிம்பெல், அசுவான் ஆளுனரகம், எகிப்து
பகுதிநூபியா
ஆயத்தொலைகள்22°20′13″N 31°37′32″E / 22.33694°N 31.62556°E / 22.33694; 31.62556
வகைகோயில்
வரலாறு
கட்டுநர்இரண்டாம் ராமேசஸ்
கட்டப்பட்டதுஏறத்தாழ பொகாமு 1264
காலம்புது எகிப்து இராச்சியம்
அதிகாரபூர்வ பெயர்: அபு சிம்பெல் தொடக்கம் பிலே வரையான நூபிய நினைவுச் சின்னங்கள்
வகைபண்பாடு
அளவுகோல்i, iii, vi
வரையறுப்பு1979 (3 ஆவது அமர்வு)
சுட்டெண்88
பிரதேசம்அரேபிய நாடுகள்

அபு சிம்பெல் கோயில்கள் தெற்கு எகிப்தில், சூடானின் எல்லையை ஒட்டிக் காணப்படும் நூபியா பிரதேசத்தில் அபு சிம்பெல் என்னும் இடத்தில் உள்ள இரண்டு பாரிய பாறைக் கோயில்களைக் குறிக்கும். இக்கோயில்கள், அஸ்வான் நகரத்திற்கு தென்மேற்கே 230 கிலோமீட்டர் தொலைவில் (சாலை வழியாக 300 கிலோமீட்டர்) நாசர் ஏரியின் மேற்குக் கரையில் அபு சிம்பெல் எனுமிடத்தில் அமைந்துள்ளன. இக்கோயில் தொகுதி, நூபிய நினைவுச் சின்னங்கள் என அறியப்படும் யுனெசுக்கோ பாரம்பரியக் களத்தின் ஒரு பகுதியாகும்.[1] மேற்படி பாரம்பரியக் களம் அபு சிம்பலில் இருந்து அசுவானுக்கு அருகில் உள்ள பிலே வரையுள்ள பகுதிகளை உள்ளடக்குகிறது.

கிமு 13 ஆம் நூற்றாண்டில், புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசசுவின் ஆட்சிக் காலத்தில், மலை முகப்புப் பாறைகளில் இந்த இரட்டைக் கோயில்கள் முதன் முதலாகக் குடையப்பட்டன. இக்கோயில்கள், அரசருக்கும், அரசி நெபர்தரிக்கும் அழியா நினைவுச் சின்னமாக அமைவதுடன், அரசர், காடேசுச் சண்டையில் பெற்ற வெற்றியையும் நினைவு கூர்கின்றன. இங்குள்ள அரசரினதும், அரசியினதும் பாரிய சிற்பங்கள் அடையாளச் சின்னங்களாக ஆகியுள்ளன.

இக்கோயில்கள் 1968 ஆம் ஆண்டில் அவற்றின் இடத்திலிருந்து, அசுவான் உயர் அணை நீர்நிலைக்கு மேலாக இருக்கும்படி செயற்கையாக அமைக்கப்பட்ட குன்று ஒன்றுக்கு முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டது. நைல் ஆற்றுக்குக் குறுக்காகப் பாரிய அசுவான் உயர் அணை கட்டப்பட்டு நாசர் ஏரி உருவாக்கப்பட்டபோது கோயில்கள் ஏரிக்குள் அமிழ்வதைத் தடுப்பதற்காகவே இந்த இடமாற்றம் தேவைப்பட்டது.

வரலாறு

[தொகு]

இக்கோயில் தொகுதியின் கட்டுமானம் ஏறத்தாழ கிமு 1264 இல் தொடங்கியது. இக்கட்டுமான வேலைகள் கிமு 1244 வரை 20 ஆண்டுகள் நீடித்தது. "அமுனால் விரும்பப்படும் ராமேசஸ் கோயில் என அறியப்பட்ட இக்கோயில் தொகுதி, இரண்டாம் ராமேசசுவின் நீண்ட ஆட்சிக் காலத்தில் நூபியாவில் கட்டப்பட்ட ஆறு கோயில்களுள் ஒன்று. இவற்றின் நோக்கம் எகிப்தின் தெற்கில் இருந்த அயல் நாடுகளுக்கு எகிப்தின் மேன்மையை எடுத்துக்காட்டுவதும், அப்பகுதியில், எகிப்திய மதத்தின் நிலையை வலுப்படுத்துவதும் ஆகும்.

காலப்போக்கில் இக்கோயில்கள் அவற்றின் பயன்பாட்டை இழந்து மணலால் மூடப்பட்டன. கிமு ஆறாம் நூற்றாண்டளவில், முதன்மைக் கோயிலில் இருந்த சிலைகளின் முழங்கால் அளவுக்கு மணல் மூடியிருந்தது. 1813 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டவரான கீழைத்தேய ஆய்வாளர் யோன்-லூயிசு புர்க்கார்ட் என்பவர் கோயிலின் மேற்பகுதி அலங்காரப் பட்டைகளைக் கண்டுபிடிக்கும் வரை கோயில்களை எல்லோரும் மறந்துவிட்டிருந்தனர். புர்க்கார்ட் இதுபற்றி இத்தாலிய ஆய்வாளரான கியோவன்னி பெல்சோனி என்பவருடன் பேசினார். கியோவன்னி அவ்விடத்துக்குச் சென்றும் அவரால், கோயிலுக்குச் செல்லும் நுழைவழியை அகழ்ந்து அறிய முடியவில்லை. 1817 இல் மீண்டும் அப்பகுதிக்கு வந்த பெல்சோனி கோயிலுக்குள் நுழைவதில் வெற்றி கண்டார். அக்காலத்திய கோட்டுரு வரைபடங்களுடன் கூடிய இக்கோயில்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை எட்வார்டு வில்லியம் லேன் என்பவரின் எகிப்து பற்றிய விளக்கம் (Description of Egypt) (1825-1828) என்னும் நூலில் காணலாம்.[2]

இவ்விடத்துக்கு "அபு சிம்பெல்" என்னும் பெயர் வந்த வரலாறு குறித்துச் சுற்றுலா வழிகாட்டிகளில் காணப்படும் கதையின் படி, "அபு சிம்பெல்" என்னும் சிறுவன் மணல் இடன் பெயரும் காலங்களில் இக்கோயில் கட்டிடப் பகுதிகளைக் கண்டிருப்பதாகவும், அவனே தொடக்ககால ஆய்வாளருக்கு வழி காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இச்சிறுவனின் பெயரையே அவர்கள் இவ்விடத்துக்கு வைத்தனர்.

படக்காட்சிகள்

[தொகு]

இரண்டாம் ராமேசஸ் கோயில்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Centre, UNESCO World Heritage. "Nubian Monuments from Abu Simbel to Philae". whc.unesco.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
  2. Lane E, "Descriptions of Egypt," American University in Cairo Press. pp.493-502.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_சிம்பெல்_கோயில்கள்&oldid=3074429" இலிருந்து மீள்விக்கப்பட்டது