உள்ளடக்கத்துக்குச் செல்

எட்ஃபூ கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்ஃபூ கோயில்

எட்ஃபூ கோயிலின் முக்கிய வாயில். கோயிலின் முதல் கோபுர அமைப்பைக் காட்டுகிறது.
நினைவுச்சின்னத் தகவல்
வகை கோயில்
அமைவிடம் எட்ஃபூ, மேல் எகிப்து
நோம் வெட்ஜெஸ்-ஹோர்
படஎழுத்துப் பெயர்
F18
D46
t
O49

(Bḥd.t)

கடவுள்கள் ஓரசு (முதன்மை), ஆத்தோர், ஹார்சோம்டசு
வரலாற்றுத் தகவல்
காலம் எலனியக் காலம்
வம்சம் தாலமி வம்சம், மன்னர் மூன்றாம் தாலமி,
கட்டுமானத் தொடக்கம் கிமு 23 ஆகத்து 237
நிறைவுத் தேதி கிமு 57
கட்டிடக்கலை விபரங்கள்
கட்டுமானப் பொருட்கள் மணற்கல்
உயரம் 36 மீட்டர்கள்
அகலம் 3

76 மீட்டர்

நீளம் 79 மீட்டர்

எட்ஃபூ கோயில் (Temple of Edfu) என்பது கிரேக்கத் தாலமி வம்சத்து மன்னர் மூன்றாம் தாலமியால் நிறுவப்பட்ட பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும். இது மேல் எகிப்தில் உள்ள எட்ஃபூ என்னும் இடத்தில் நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. கிரேக்க-உரோமக் காலத்தில் இந்த நகரம் முதன்மைக் கடவுளான ஓரசு-அப்பல்லோவின் பெயரைத் தழுவி அப்பல்லோனோபோலிசு மக்னா என அழைக்கப்பட்டது.[1] இது எகிப்தில் உள்ள நன்கு பேணப்பட்ட கோயில்களுள் ஒன்று. வல்லூற்றுக் கடவுள் ஹோரசுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் தாலமியக் காலத்தில் கிமு 237க்கும் 57க்கும் இடையில் கட்டப்பட்டது. இக்கோயிலின் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் பண்டைய எகிப்தின் கிரேக்க-உரோமக் காலப்பகுதியில் மொழி, தொன்மம், சமயம் ஆகியவை குறித்த முக்கியமான தகவல்களைத் தருகின்றன. குறிப்பாக, கோயிலின் செதுக்கப்பட்ட கட்டிட உரைகள், கோயிலின் கட்டுமானம் தொடர்பான விபரங்களைத் தருவதுடன், இக்கோயிலினதும், பிற கோயில்களினதும் தொன்மம் சார்ந்த விளக்கங்களையும் பேணி வைத்துள்ளது.[2] அத்துடன் ஹோரசுக்கும், சேத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பான புனித நாடகம் குறித்த காட்சிகளும், கல்வெட்டுக்களும் இங்கே காணப்படுகின்றன.[3] இவை செருமன் எட்ஃபூ திட்டத்தினூடாக மொழிபெயர்க்கப்பட்டன.

வரலாறு

[தொகு]

எட்ஃபூ தாலமியக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களுள் ஒன்று. தென்தேரா, எசுனா, கொம் ஒம்போ, பிலே ஆகியவை இக்காலத்திய பிற கோயில்களுள் அடங்கும். இக்கோயிலின் அளவு ஒப்பீட்டளவில் அக்காலத்தின் வளத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.[4] கிமு 237 ஆகத்து 23 ஆம் தேதி தொடங்கப்பட்ட இன்றுள்ள கோயில் கட்டிடம், முதலில் தூண்களோடு கூடிய ஒரு மண்டபத்தையும், இரண்டு குறுக்கு மண்டபங்களையும், சிறிய கோவில்களால் சூழப்பட்ட கருவறையையும் கொண்டிருந்தது.[5] மூன்றாம் தாலமியின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட கட்டிட வேலைகள் பன்னிரண்டாம் தாலமியில் காலத்திலேயே முற்றுப்பெற்றது. இன்றைய கோயில் இருக்கும் இடத்தில் முன்னர் ஒரு சிறிய கோயில் இருந்துள்ளது. இதுவும் ஹோரசுக்கான கோயிலே ஆகும். பழைய கோயில் கிழக்கு-மேற்காக அமைக்கப்பட்டு இருந்த போதும் தற்போதைய கோயில் வடக்கு-தெற்காக உள்ளது. அழிந்த ஒரு வாயிற் கோபுர அமைப்பு, தற்போதைய கோயிலுக்குச் சற்று வடக்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதிய இராச்சிய மன்னர்களான முதலாம் ராமேசசு, முதலாம் சேத்தி, இரண்டாம் ராமேசசு ஆகியோர் காலத்தில் கட்டிட வேலைகள் இடம்பெற்றதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

391 ஆம் ஆண்டில், முதலாம் தியோடோசியசினால், உரோமப் பேரரசில் கிறித்தவம் அல்லாத வழிபாட்டு முறைகள் தடை செய்யப்பட்டபோது எட்ஃபூ கோயில் அதன் சமயக் கட்டிடம் என்னும் பயன்பாட்டை இழந்தது. பல இடங்களிலும் நடந்ததைப் போலவே, அக்கால எகிப்தில் முதன்மை பெற்று விளங்கிய கிறித்தவ மதத்தைப் பின்பற்றியவர்கள், எட்ஃபூ கோயிலில் காணப்பட்ட புடைப்புச் சிற்ப உருவங்களை உடைத்து அழித்துவிட்டனர். இன்று கறுப்பாகக் காணப்படும் தூண் மண்டபத்தின் கூரைப்பகுதி, அக்காலத்தில் அங்கிருந்த படிமங்களை அழிப்பதற்காகத் தீவைப்பு இடம்பெற்றிருப்பதைக் காட்டுகிறது.

பல நூற்றாண்டுக் காலத்தில் கோவில், பாலைவன மணலாலும், நைல் நதியின் வண்டல் படிவுகளாலும் 12 மீட்டர் ஆழத்தில் புதைந்துவிட்டது. உள்ளூர் மக்கள் பழைய கோயில் இருந்த இடத்துக்கு நேர் மேலே தமது வீடுகளைக் கட்டினர். பிரெஞ்சு ஆய்வாளர்கள் 1798 ஆம் ஆண்டில் இக்கோயிலை அடையாளம் கண்ட காலத்தில் கோயிலின் வாயிற் கோபுர அமைப்பின் மேற்பகுதி மட்டும் தெரியக்கூடியதாக இருந்தது. 1860 இல் ஒரு பிரெஞ்சு எகிப்தியலாளரான அகசுத்தே மரியெட் எட்ஃபூ கோயிலை மணலுக்குள் இருந்து விடுவிக்கும் பணியைத் தொடங்கினார்.

எட்ஃபூ கோயில், ஏறத்தாழப் பாதிப்படையாமல் உள்ளதுடன், பண்டைய எகிப்தியக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இக்கோயொலின் தொல்லியல் முக்கியத்துவமும், பெருமளவு பாதிப்படையாமல் இருப்பதும், அதை ஒரு முக்கியமான சுற்றுலா மையமாக ஆக்கியுள்ளது. அத்துடன் இது நைலில் பயணம் செய்யும் ஆற்றுப் படகுகள் அடிக்கடி நின்று செல்லும் இடமாகவும் இது உள்ளது.

lகோயிலின் வடக்கு பக்கம்
கோயில் கதவு
கோயில் கருவறை
கோயில் முன் மண்டபம்

எட்பு கோயிலின் படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. David, Rosalie. Discovering Ancient Egypt, Facts on File, 1993. p.99
  2. David, op. cit., p.99
  3. David, op. cit., p.99
  4. Agnese, Giorgio and Maurizio Re. Ancient Egypt: Art and archaeology of the land of the pharaohs, 2004. p.23 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7607-8380-2
  5. Dieter Arnold, Nigel Strudwick & Sabine Gardiner, The Encyclopaedia of Ancient Egyptian Architecture, I.B. Tauris Publishers, 2003. p.78
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்ஃபூ_கோயில்&oldid=3802670" இலிருந்து மீள்விக்கப்பட்டது