கேனோபிக் ஜாடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைய எகிப்தியர்களின் மம்மிகளின் உள்ளுறுப்புகளை வைத்த நான்கு சுண்ணாம்புக் கல் கேனோபிக் ஜாடிகள், காலம் கிமு 900 - 800
துட்டன்காமன் கேனோபிக் ஜாடிகள், காலம் கிமு 1333–1323
ஓரசு கடவுளின் நான்கு மகன்களின் உருவங்களுடன் வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்ட கெனொபிக் ஜாடிகள், காலம் கிமு 1504–1447

கேனோபிக் ஜாடிகள் (Canopic jars) பண்டைய எகிப்தியர்கள் இறந்த பார்வோன், அரசகுடும்பத்தினர் மற்றும் அரசவையினர் உடலை இறுதிச் சடங்கின் போது உடலை மம்மியாக்கம் செய்யும் போது, இதயம் தவிர்த்த நுரையீரல், கல்லீரல், இரைப்பை, குடல் போன்ற உள்ளுறுப்புகளை பதப்படுத்தி, சுண்ணாம்புக் கல், பீங்காண் அல்லது மட்பாண்டத்தால் செய்யப்பட்ட நான்கு தனித்தனி ஜாடிகளில் அடைத்து மம்மிக்கு அருகே கல்லறையில் சேமித்து வைத்தனர். பண்டைய எகிப்தியர்கள் இறப்புக்கு பிந்தைய வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டிருந்ததால், இறப்பிற்குப்பின் இந்த உள்ளுறுப்புகள் பயன்படும் என்பதால் இந்த வழக்கம் பழைய எகிப்து இராச்சிய (கிமு 2686 – கிமு 2181) காலம் முதல் பிந்தையகால எகிப்திய இராச்சிய (கிமு 664 - கிமு 332) காலம் வரை தொடர்ந்தது.[1]


பழைய எகிப்து இராச்சிய காலத்தில் கேனோபிக் ஜாடிகளின் மூடிகளில் குறைந்த அளவில் படவெழுத்துகளில் குறிப்புகள் காணப்பட்டது. ஆனால் எகிப்தின் மத்தியகால இராச்சிய (கிமு 2055 – கிமு 1650) காலத்தில் கேனோபிக் ஜாடிகளின் மூடிகளின் மனித உருவங்களுடன், படவெழுத்து குறிப்புகளும் கொண்டிருந்தது. புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன்களின் ஆட்சிக் காலத்தில் தான் (கிமு 1292 - கிமு 1189) கேனோபிக் ஜாடிகளின் மூடிகள், ஓரசு கடவுளின் நான்கு மகன்களின் உருவங்களைக் கொண்டதாக இருந்தது. [2] இந்த ஓரசு கடவுளின் நான்கு மகன்கள் ஜாடிகளில் உள்ள மம்மியின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது என்பது பண்டைய எகிப்தியர்கள் நம்பிக்கையாகும். [3]

படவெழுத்து குறிப்புகள் கொண்ட அழகிய மரத்தால் செய்யப்பட்ட கேனொபிக் ஜாடிகள், காலம் கிமு 744–656[4]

கேனோபிக் ஜாடிகள் எண்ணிக்கையில் நான்காக இருந்தன. மம்மியின் இரைப்பை, குடல், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளை பதப்ப்டுத்தி பாதுகாப்பதற்காக ஜாடிகளில் அடைத்து வைத்து சேமிக்கப்பட்டது. இவை அனைத்தும் மறுமையில் தேவைப்படும் என்று நம்பப்பட்டது. இதயத்திற்கு ஜாடி இல்லை: எகிப்தியர்கள் அதை ஆன்மாவின் இருக்கை என்று நம்பினர், அதனால் அது மம்மியின் உள்ளே விடப்பட்டது. கல்லறைகளை காக்கும் அனுபிஸ் கடவுளின் முன்னே இதயத்தை எடைபோட்டு பார்க்கும் வழக்கும் இருந்தது. [5]ஓரசின் மகன்கள் கேனோபிக் ஜாடிகளில் உள்ள உள்ளுறுப்புகளின் பாதுகாவலர்களாக இருந்தனர்.

2020-ஆம் ஆண்டில் சக்காரா நகரத்தில் அகழாய்வு மேற்கொண்ட போது, கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண் கல்லறையிலிருந்து 2,600 ஆண்டுகள் பழமையான 6 கேனோபிக் ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டது.[6][7]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேனோபிக்_ஜாடிகள்&oldid=3580824" இருந்து மீள்விக்கப்பட்டது