அக்காடியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெசொப்பொத்தேமியாவில் அக்காடியப் பேரரசு
அக்காதியப் பேரரசை நிறுவிய சர்கோனின் வெண்கலத் தலைச்சிற்பம், 1931-இல் நினிவே நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது.[1]

அக்காடியப் பேரரசு (Akkadian Empire) (ஆட்சிக் காலம்):கிமு 2334 – 2154) என்பது மெசொப்பொத்தேமியாவின் முதலாவது செமிட்டிக் மொழி பேசும் பேரரசு ஆகும். இது அக்காத் நகரத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இப்பேரரசின் தலைநகரமாக அக்காத் நகரம் விளங்கியது. அக்காத் நகரத்தின் சுற்றுப்புறத்தில் இருந்த பகுதிகளும் விவிலியத்தில் அக்காத் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பேரரசு அக்காடிய மொழி பேசுவோரையும், சுமேரிய மொழி பேசுவோரையும் ஒரே ஆட்சியின் கீக் கொண்டுவந்தது. இப்பேரரசு மெசொப்பொத்தேமியா, லெவண்ட், அனதோலியா ஆகிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்தியதுடன், தெற்கே அரேபியத் தீபகற்பத்தில் உள்ள தில்முன், மாகன் (இன்றைய பகரைன் மற்றும் ஓமன்) ஆகிய இடங்கள் வரை படைகளை அனுப்பியது.[2]

கிமு 3 ஆவது ஆயிரவாண்டில் சுமேரியர்களுக்கும், அக்காடியர்களுக்கும் இடையில் நெருக்கமான பண்பாட்டு உறவு ஏற்பட்டது. இது பரவலான இரு மொழிப் பயன்பாட்டுக்குக் காரணமானது.[3] கிமு 3 ஆம் ஆயிரவண்டுக்கும், 2 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அக்காடிய மொழி, சுமேரிய மொழியைப் பேச்சு மொழி என்ற நிலையில் இருந்து நீக்கிவிட்டது (சரியான காலம் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது).[4]

அக்காடியப் பேரரசு, அதன் நிறுவனர் அக்காத் நகரத்தை நிறுவிய சர்கோனின் படையெடுப்பு வெற்றிகளைத் தொடர்ந்து, கிமு 24 ஆம் நூற்றாண்டுக்கும் 22 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அதன் அரசியல் உச்சத்தை எட்டியது. சர்கோனினதும் அவனது வாரிசுகளினதும் ஆட்சியின் கீழ், ஈலாம், குடியா போன்ற கைப்பற்றப்பட்ட அயல் நாடுகளில் குறுகிய காலம் அக்காடிய மொழி திணிக்கப்பட்டது. அக்காடியப் பேரரசே வரலாற்றின் முதல் பேரரசு எனச் சில வேளைகளில் கூறப்பட்டாலும், இதில் பேரரசு என்னும் சொல்லின் பொருள் துல்லியமாக இல்லை. பேரரசுத் தகுதியைக் கோரக்கூடிய முன்னைய சுமேரிய அரசுகளும் உள்ளன.

அக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மெசொப்பொத்தேமிய மக்கள் காலப் போக்கில் அக்காடிய மொழி பேசும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தனர். மேல் மெசொப்பொத்தேமியாவில் அசிரியாவும், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாபிலோனியாவும் உருவாகின.

வரலாறு[தொகு]

விவிலியம் ஆதியாகமம் 10:10 இல அக்காத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. நிம்ருத் இராச்சியத்தின் தொடக்கம் அக்காத் நிலப்பகுதியில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நிம்ரொட்டின் வரலாற்று அடையாளன் தெரியவில்லை எனினும், சிலர் இவரை உருக்கின் நிறுவனர் கில்கமேசுடன் பொருத்துகின்றனர்.[5][6] இன்று அறிஞர்கள் சுமேரிய மொழியிலும், அக்காடிய மொழியிலும் எழுதப்பட்ட அக்காடியக் காலத்துக்கு உரிய 7,000 நூல்களை ஆவணப்படுத்தியுள்ளனர். அக்காடியப் பேரரசுக்குப் பின் வந்த அசிரிய, பபிலோனிய அரசுகளின் காலத்தைச் சேர்ந்த நூல்கள் பலவும் கூட அக்காடியப் பேரரசு பற்றிக் குறிப்பிடுகின்றன.

காலமும் காலப் பகுதிகளும்[தொகு]

அக்காடியக் காலம் பொதுவாக கிமு 2334 - 2154 (பண்டைய அண்மைக் கிழக்கின் நடுக் காலவரிசைக் காலக்கோட்டின்படி) என்றோ கிமு 2270 - 2083 (பண்டைய அண்மைக் கிழக்கின் குறுகிய காலவரிசைக் காலக்கோட்டின்படி) என்றோ கணக்கிடப்படுகின்றது. இக்காலத்துக்கு முந்தியது மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் ஆகும். பின்னர் அக்காடியக் காலத்தைத் தொடர்ந்து வந்தது மூன்றாம் ஊர் வம்ச காலம் ஆகும். அக்காடியக் காலத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு மாற்றங்களின் காலங்களுமே தெளிவற்றவையாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, அக்காத்தின் சர்கோனின் எழுச்சி, மெசொப்பொத்தேமியாவின் தொடக்க வம்சக் காலத்தின் பிற்பகுதியுடன் பொருந்தி அமைந்திருக்கலாம் என்பதுடன், இறுதி அக்காடிய அரசர்கள் குட்டிய அரசர்களுடனும், உருக், லாகாசு ஆகிய நகர நாடுகளின் ஆட்சியாளர்களுடனும் சமகாலத்தில் ஆட்சி புரிந்திருக்கக்கூடும்.

அக்காதியப் பேரரசர்கள்[தொகு]

ஆட்சிக்காலம் பெயர்
சுமேரியா, அக்காத் மன்னர்கள்
கிமு 2334 அல்லது கிமு 2371 தொடக்கம் கிமு 2279 அல்லது கிமு 2315 சர்கோன்
2278 அல்லது 2315 தொடக்கம் கிமு 2270 அல்லது கிமு 2306 ரிமஷ்
கிமு 2269 அல்லது 2306 தொடக்கம் கிமு 2255 அல்லது கிமு 2291 மணிஷ்டூஷு (Manishtushu)
கிமு 2254 அல்லது கிமு 2291 தொடக்கம் கிமு 2218 அல்லது கிமு 2254 நரம்-சின் (Naram-Sin)
கிமு 2217 அல்லது கிமு 2254 தொடக்கம் கிமு 2193 அல்லது கிமு 2230 ஷார்-கலி-ஷாரி (Shar-Kali-Sharri)
கிமு 2192 அல்லது கிமு 2230 தொடக்கம் கிமு 2169 அல்லது கிமு 2226
கிமு 2189 தொடக்கம் கிமு 2189 இகிகி (Igigi)
கிமு 2189 தொடக்கம் கிமு 2189 நணும் (Nanum)
கிமு 2188 தொடக்கம் கிமு 2188 எமி (Emi)
கிமு 2187 தொடக்கம் கிமு 2187 யெலுலு (Elulu)
கிமு 2186 தொடக்கம் கிமு 2168 டுடு (Dudu)
கிமு 2168 தொடக்கம் கிமு 2154 ஷு-டருல் (Shu-Turul)
(ஷடுரல்; ஷு-டரல்)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. E. L. Mallowan, "The Bronze Head of the Akkadian Period from Nineveh", Iraq Vol. 3, No. 1 (1936), 104–110.
  2. Mish, Frederick C., Editor in Chief. "Akkad" Webster’s Ninth New Collegiate Dictionary. ninth ed. Springfield, MA: Merriam-Webster 1985. ISBN 0-87779-508-8).
  3. Guy Deutscher (linguist) (2007). Syntactic Change in Akkadian: The Evolution of Sentential Complementation. Oxford University Press US. பக். 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-953222-3. https://books.google.com/?id=XFwUxmCdG94C. 
  4. Woods, C. (2006). "Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian" (PDF). S.L. Sanders (ed) Margins of Writing, Origins of Culture: 91–120. Chicago. Archived from the original (PDF) on 2013-04-29. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)
  5. Stephanie Dalley (1997). The Legacy of Mesopotamia. New York: Oxford University Press. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780198149460. https://books.google.com/books?id=UhVfijsPxOMC&pg=PA116. 
  6. "The Encyclopedia of Ancient History".. (2013). Chicago: Blackwell. 6045–6047. DOI:10.1002/9781444338386.wbeah24182. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காடியப்_பேரரசு&oldid=3714877" இலிருந்து மீள்விக்கப்பட்டது