ஈலமைட்டு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈலமைட்டு மொழி (Elamite language), ஈலமைட்டு மக்களால் பேசப்பட்டு இன்று அழிந்துவிட்ட ஒரு மொழியாகும். இது கிமு 6ம் - 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரசீகப் பேரரசின் அரச மொழியாக இருந்தது. இம் மொழியிலான கடைசிப் பதிவுகள் ஏறத்தாழ பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றிய காலப்பகுதியைச் சேர்ந்தவை.

ஈலமைட்டு வரிவடிவம்[தொகு]

களிமண் தகட்டில் ஈலமைட்டு வரிவடிவம்

பல நூற்றாண்டுக் காலப்பகுதியில் மூன்று வகையான ஈலமட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை மூல-ஈலமைட்டு, நீளுருவ-ஈலமைட்டு, ஈலமைட்டு ஆப்பெழுத்து என்பனவாகும்.[1] [2]

மூல-ஈலமைட்டு: ஈரானில் கண்டறியப்பட்ட வரிவடிவங்களுள் இதுவே மிகப் பழமையானது. இது கிமு 3100 க்கும் 2900 க்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்தது. மூல-ஈலமைட்டு வரிவடிவங்களைக் கொண்ட களிமண் தகடுகள் ஈரானின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வரி வடிவம், மூல-ஆப்பெழுத்துக்களில் இருந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது. மூல-ஈலமைட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள் ஒரு பகுதி படவெழுத்துக்களாக (logographic) இருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இது இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படாததால், இது ஈலமட்டுக்குரியதா அல்லது வேறு மொழிக்கு உரியதா என்பதும் இன்னும் தெரியவில்லை. மூல-ஈலமைட்டு உட்படப் பல பண்டைய வரிவடிவங்கள், பேச்சு மொழிகளுடன் தற்கால மொழிகள் கொண்டிருப்பது போன்ற தொடர்புகளைக் கொண்டிராமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
நீளுருவ ஈலமைட்டு மூல-ஈலமைட்டு வரிவடிவத்திலிருந்து பெறப்பட்ட அசையெழுத்து முறையாக இருக்கலாம் எனக் கருதப்படினும் இது ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. இந்த எழுத்து முறை கிமு மூன்றாம் ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியிலேயே புழங்கியதாகத் தெரிகிறது. இதுவும் இன்னும் வாசித்து அறிந்து கொள்ளப்படவில்லை.
ஈலமைட்டு ஆப்பெழுத்து கி.மு 2500 க்கும் 331 க்கும் இடைப்பட காலப்பகுதியில் புழங்கிய ஒரு வரிவடிவம். இது அக்காடிய ஆப்பெழுத்தின் இசைவாக்கம் ஆகும். இது 130 குறியீடுகளைக் கொண்டுள்ளது. இது பிற ஆப்பெழுத்துகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும்.

பிற மொழிக் குடும்பங்களுடனான தொடர்புகள்[தொகு]

ஈலமைட்டு மொழி, சுமேரிய அசையெழுத்து முறையைக் கைக்கொண்ட போதும்; அயலிலுள்ள செமிட்டிய மொழிகளுடனோ, இந்திய-ஐரோப்பிய மொழிகளுடனோ, சுமேரிய மொழியுடனோ நெருங்கிய தொடர்பு எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஈலமைட்டு-திராவிடமும், ஆபிரிக்க-ஆசிய மொழிகளும்[தொகு]

ஈலமைட்டு மொழியை வகைப்படுத்துவதில் இரண்டு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றில் ஈலமைட்டையும் திராவிட மொழிகளையும் ஈலமைட்-திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்துவதற்கான முன்மொழிவு. இது டேவிட் மக் அல்ப்பின் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது வாக்லாவ் பிலாசெக் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஈலமைட்டு மொழி ஆபிரிக்க-ஆசிய மொழிகளுடன் நெருங்கியது என்றும் அக் குடும்பத்துள் ஈலமைட்டு ஒரு முக்கிய துணைக்குடும்பமாக அமையக் கூடும் என்றும் அவர் காட்ட முயன்றார். எனினும் இவை ஒரு எதிர்பார்ப்பே அல்லாது உறுதியான முடிவுகள் அல்ல.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Elamite". 2011-05-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Elamite language

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈலமைட்டு_மொழி&oldid=3402059" இருந்து மீள்விக்கப்பட்டது