உள்ளடக்கத்துக்குச் செல்

உலகப் பாரம்பரியக் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலக பாரம்பரியக் களங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவிற்கான இலச்சினை
களம் #86: எகிப்து நாட்டில் மெம்பிசு பகுதியும், அங்கே உள்ள கிசா பிரமிடுத் தொகுதியும்
களம் #114: பெர்செபோலிசு, ஈரான்
களம் #174: பிளாரென்சின் வரலாற்று மையம், (இத்தாலி)
களம் #129: மாயன் கோபன் (ஹொண்டுராஸ்)
களம் #447: உலுரு-கடா தேசியப் பூங்கா, (ஆத்திரேலியா)
களம் #483: சிச்சென் இட்சா, (மெக்சிகோ)
களம் #540:சென் பீட்டர்ஸ்பேர்க் வரலாற்று மையமும் அதன் சுற்றுப்புறமும் (உருசியா)
களம் #705: ஊடங் மலைப்பகுதியில் உள்ள பண்டை கட்டிட வளாகம் (சீனா)
களம் #723: பெனா தேசிய அரண்மனை மற்றும் சின்ட்ரா (போர்த்துகல்)
களம் #800: கென்யா மலை தேசியப் பூங்கா (கென்யா)
களம் #944: இந்திய மலைப்பாதை தொடருந்துகள் (இந்தியா)
பரிந்துரைக்கப்பட்ட களத்திற்கான ஒரு காட்டு: தாதேவ் துறவியர் மடம் (ஆர்மீனியா)

உலகப் பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம்[1]. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படுவதுடன் 21 பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்[2][3]

மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். சில களங்களின் மேம்பாட்டுக்காக, சில நடைமுறைகளின் கீழ், உலக பாரம்பரிய நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்கப்படுவதும் உண்டு. இவ்வாறான களங்களைப் பாதுகாக்கும் நோக்குடன், 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் நடந்த யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் கொண்டு வரப்பட்ட சாசனத்தில்,[4] 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இது வரை 962 களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 157 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 745 பண்பாட்டுக் களங்களும், 188 இயற்கைசார் களங்களும், 29 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன.[5][6]. போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்[7].

இத்தாலியிலேயே அதிகளவு உலகப் பாரம்பரியக் களங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யுனெஸ்கோ ஒவ்வொரு பாரம்பரியக் களத்திற்கும் ஒவ்வொரு அடையாள இலக்கத்தை வழங்கி வருகின்றது. புதிதாக பட்டியலிடப்படும் களங்களில் சில பழைய பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதனால், அடையாள இலக்கங்களின் எண்ணிக்கை 1200 ஐ விட அதிகமாக இருப்பினும், களங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பிட்ட களங்கள் அந்தந்த நாட்டின் சட்டப்படியான எல்லைக்குள் இருப்பினும், இவை ஒவ்வொன்றையும் பாதுகாப்பது உலக சமூகத்தின் கடமை என யுனெஸ்கோ கருதுகின்றது.

வரலாறு

[தொகு]

உலக பாரம்பரிய மாநாடு 23 நவம்பர் 1972 இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது இயற்கை பாதுகாப்பு மற்றும் கலாச்சார பண்புகளை பாதுகாப்பதற்கான முதன்மை இலக்குகளுடன் உலக பாரம்பரிய தளங்களை உருவாக்கியது. மாநாடு, சர்வதேச ஒப்பந்தத்தின் கையொப்பமிடப்பட்ட ஆவணம், உலக பாரம்பரியக் குழுவின் பணிகளுக்கு வழிகாட்டுகிறது. இது ஏழு வருட காலப்பகுதியில் (1965-1972) உருவாக்கப்பட்டது. உலக பாரம்பரிய பட்டியலில் எந்தெந்த தளங்களை கருதலாம் என்பதை இந்த மாநாடு வரையறுக்கிறது, சாத்தியமான தளங்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களின் கடமைகளை அமைக்கிறது. கையொப்பமிட்ட நாடுகள் தங்கள் பிராந்தியத்தில் அமைந்துள்ள உலக பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கின்றன, மேலும் அவற்றின் பாதுகாப்பு நிலை குறித்து தொடர்ந்து அறிக்கை செய்கின்றன. உலக பாரம்பரிய நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் நிர்வகிக்க வேண்டும் என்பதையும் மாநாடு அமைக்கிறது.[8] இது 16 நவம்பர் 1972 இல் யுனெஸ்கோவின் பொது மாநாட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் தலைவர் டொரு ஹகுவாரா மற்றும் யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ரெனே மஹூ 23 நவம்பர் 1972 அன்று கையெழுத்திட்டார். இது யுனெஸ்கோவின் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1954ஆம் ஆண்டில் எகிப்திய அரசு அஸ்வான் அணை கட்ட முடிவெடுத்தபோது அதன் நீர்பிடிப்புப் பகுதியிலிருந்த பள்ளத்தாக்கில் அபு சிம்பெல் கோவில்கள் போன்ற பல பண்டைய எகிப்தின் பொக்கிசங்கள் மூழ்குவதாக இருந்தது. அப்போது இவற்றைக் காத்திட யுனெசுக்கோ உலகளவில் பெரும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டது. அபு சிம்பெல் மற்றும் பிலே கோவில்கள் கல், கல்லாக பெயர்க்கப்பட்டு உயரமான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மீண்டும் கட்டமைக்கப்பட்டது. தெண்டூர் கோவில் இதேபோல நியூ யார்க்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.[9] 1959 இல் எகிப்து மற்றும் சூடானின் முறையீடுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்ட நுபியாவின் நினைவுச்சின்னங்களைக் காப்பாற்றுவதற்கான சர்வதேச பிரச்சாரம் 22 நினைவுச்சின்னங்களை இடமாற்றம் செய்ய வழிவகுத்தது. திட்டத்தின் வெற்றி, குறிப்பாக திட்டத்தின் பின்னால் 50 நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது, யுனெஸ்கோ, நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச கவுன்சில் (ICOMOS) உடன் இணைந்து கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான வரைவு மாநாட்டைத் தயாரிக்க வழிவகுத்தது.[10]

1965 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகை மாநாட்டில், "உலகின் உன்னதமான இயற்கை மற்றும் இயற்கைப் பகுதிகள் மற்றும் வரலாற்றுத் தளங்களை ஒட்டுமொத்த உலக குடிமக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத்திற்காக" பாதுகாக்க "உலக பாரம்பரிய அறக்கட்டளை"க்கு அழைப்பு விடுத்தது. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் 1968 இல் இதேபோன்ற திட்டங்களை உருவாக்கியது, அவை 1972 இல் ஸ்டாக்ஹோமில் நடந்த மனித சுற்றுச்சூழலுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் வழங்கப்பட்டன.[11] உலக மரபுரிமைக் குழுவின் கீழ், கையொப்பமிட்ட நாடுகள், உலகப் பாரம்பரிய மாநாட்டை நடைமுறைப்படுத்துவது மற்றும் உலகப் பாரம்பரியச் சொத்துக்களில் தற்போதைய நிலைமை ஆகியவற்றின் மேலோட்டத்துடன் குழுவிற்கு அவ்வப்போது தரவு அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.[12]

விண்ணப்பிக்கும் நடைமுறை

[தொகு]

ஒவ்வொரு நாடும், தனது நாட்டிலுள்ள பண்பாட்டு, இயற்கை முக்கியத்துவம் உள்ள களங்களைக் கணக்கெடுக்க வேண்டும். இது ஆய்விற்கான ஒரு பட்டியலாகக் கொள்ளப்படும். இந்தப் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படும் களத்தை உலக பாரம்பரியக் களத்திற்காக குறிப்பிட்ட நாடு முன்மொழியலாம். இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு களத்தை உலக பாரம்பரியக் களத்திற்காக ஒரு நாடு முன்மொழியக் கூடாது.
அப்படி முன்மொழியப்பட்ட களங்களை நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமும் மதிப்பீடு செய்யும். பின்னர் குறிப்பிட்ட களமானது உலக பாரம்பரியக் களத்துக்கான தகுதியைப் பெற்றிருப்பின், அதனை உலகப் பாரம்பரியக் குழுவிற்குப் பரிந்துரை செய்யும். அந்தக் குழுவே ஆண்டுக்கொருமுறை ஒன்றுகூடி, குறிப்பிட்ட களத்தை உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்துக் கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும். சிலசமயம் இறுதி முடிவு எடுப்பதற்கு மேலதிக தகவல்கள் தேவை என குறிப்பிட்ட களத்தை முன்மொழிந்த நாட்டிடம் கேட்கப்படும்.

தேர்விற்கான விதிகள்

[தொகு]

2004 ஆம் ஆண்டுவரை பாரம்பரிய பண்பாட்டு களங்களுக்கு ஆறு தேர்வு அளவீடுகளும், பாரம்பரிய இயற்கைக் களங்களுக்கு நான்கு தேர்வு அளவீடுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் இந்த முறையில் சிறுமாற்றம் செய்யப்பட்டு, அனைத்து வகையான பாரம்பரியக் களங்களுக்கும் பொதுவாக பத்து தேர்வு அளவீடுகள் கொடுக்கப்பட்டன. முன்மொழியப்படும் பாரம்பரியக் களமானது உலகளாவிய நோக்கில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், குறிப்பிட்ட பத்து அளவீடுகளில் ஒன்றையாவது நிறைவு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.[13]

பண்பாட்டு களங்களுக்கான தேர்வு அளவீடுகள்

[தொகு]
  • (i) மனிதனின் மிகச் சிறந்த படைப்பாக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.
  • (ii) கட்டடக்கலை அல்லது தொழினுட்பம், நினைவுச்சின்னங்களைக் கொண்ட கலை, நகராக்க திட்டம் அல்லது நிலத்தோற்ற (landscape) வடிவமைப்பு போன்றவற்றின் அபிவிருத்தியினால், மனித மதிப்பீட்டில் முக்கியமான பரிமாற்றத்தை வெளிக்காட்டக் கூடியதாகவும், உலகின் பண்பாட்டு மையங்களில் அமைந்திருக்கும் ஒன்றாக அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மேலாக நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
  • (iii) தற்காலத்திலும் நிலைத்திருக்கின்ற அல்லது மறைந்துபோன ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்துக்கோ, அல்லது நாகரீகத்துக்கோ தனித்துவமான, அல்லது மிகச் சிறந்த சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • (iv) மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிலையை/காலத்தை விளக்கக் கூடிய, ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்கக் கூடிய ஒரு கட்டடம், கட்டக்கலை அல்லது தொழினுட்பம் சார் குழுமம் அல்லது நிலத்தோற்றமாக இருக்க வேண்டும்.
  • (v) மனிதருக்கும் சூழலுக்கும், முக்கியமாக தற்காப்புக்கு அப்பாற்பட்ட மீட்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும் சூழலுக்கும், இடையிலான இடைத்தாக்கத்தை அல்லது பண்பாட்டை விளக்கும் பாரம்பரிய மனித குடியேற்றம், நிலப் பாவனை, அல்லது கடல் பாவனை போன்றவற்றிற்கான ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
  • (vi) உலகளாவிய அதி முக்கியத்துவமுடைய நிகழ்வுகள் அல்லது வாழும் பாரம்பரியங்களுடன், எண்ணங்களுடன், அல்லது நம்பிக்கைகளுடன், கலைகளுடன், இலக்கியம்சார் விடயங்களுடன் நேரடியாக, அல்லது உறுதியான தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும்.

இயற்கை களங்களுக்கான தேர்வு அளவீடுகள்

[தொகு]

வரையறுக்கப்பட்ட களங்களுக்கான சட்டம்சார் நிலை

[தொகு]

பரம்பல்

[தொகு]

கீழுள்ள அட்டவணையில், உலகின் வெவ்வேறு வலயங்களில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் பரம்பலைக் காணலாம்:[14][15]

வலயம் இயற்கை பண்பாடு கலப்பு மொத்தம்
வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் 68 417 11 496[16]
ஆசியாவும் ஒசியானியாவும் 55 148 10 213[16]
ஆபிரிக்கா 39 48 4 91
அரபு நாடுகள் 5 67 2 74
லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் 36 91 3 130
Sub-Total 203 771 30 1004
இருமுறை பதிவானவற்றைக் கழிக்க* 15 26 1 42
Total 188 745 29 962
  • சில களங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமாக இருப்பதனால் வலயங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் இவ்வாறு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகின்றது.

நாடுகள் அடிப்படியிலான புள்ளிவிவரத்திற்கு உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலைப் பார்க்கவும்.

களங்களின் பட்டியல்

[தொகு]

இலங்கையிலுள்ள உலக பாரம்பரியக் களங்கள்

[தொகு]

தற்போது, இலங்கையில் எட்டு இடங்கள் யுனெசுகோவினால் உலக பாரம்பரியக் களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு பண்பாட்டுக் களங்களாகவும் இரண்டு இயற்கைக் களங்களாகவும் விளங்குகின்றன.[17]

  1. பண்டைய புனித நகரமான அனுராதபுரம்
  2. தங்கக் கோயில், தம்புள்ளை
  3. புனித நகரம் கண்டி
  4. பண்டைய நகரமான பொலன்னறுவை
  5. பண்டைய நகரமான சிகிரியா
  6. காலியின் பழைய நகரமும் அதன் கோட்டைகளும்
  7. சிங்கராஜ வனம்
  8. இலங்கையின் மத்திய உயர்நிலங்கள்

இன்னமும் அறிவிக்கப்படாது ஆய்நிலையிலுள்ளப் பட்டியல்:

  1. சேருவில மங்கள ரஜ மகாவிகாரை
  2. சேருவில முதல் ஸ்ரீ பாத வரை (புனித காலடி ஆலயம்), மகாவலி ஆற்றோர பண்டைய யாத்திரிகர் பாதை

தமிழகத்திலுள்ளவை

[தொகு]
  1. மாமல்லபுர மரபுக்கோயில்கள்பல்லவர்களால் கட்டப்பட்டது.
  2. அழியாத சோழர் பெருங்கோயில்கள்சோழர்களால் கட்டப்பட்டது.
  3. நீலகிரி மலை இரயில் பாதை – 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை(rack railway) ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Heritage".
  2. "The World Heritage Committee". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.
  3. According to the UNESCO World Heritage வலைத்தளம், States Parties are countries that signed and ratified The World Heritage Convention. As of January 2012, there are a total of 188 State Parties.
  4. Convention Concerning the Protection of World Cultural and Natural Heritage
  5. World Heritage List, UNESCO World Heritage Sites official sites.
  6. Twenty-seven new sites inscribed, UNESCO World Heritage Sites official sites.
  7. வல்லமை.காம்
  8. Centre, UNESCO World Heritage (16 November 1972). "The World Heritage Convention". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 12 October 2022.
  9. Brief History, UNESCO World Heritage Sites official sites.
  10. The World Heritage Convention: "The event that aroused particular international concern was the decision to build the Aswan High Dam in Egypt, which would have flooded the valley containing the Abu Simbel temples, a treasure of ancient Egyptian civilization. In 1959, after an appeal from the governments of Egypt and Sudan, UNESCO launched an international safeguarding campaign. Archaeological research in the areas to be flooded was accelerated. Above all, the Abu Simbel and Philae temples were dismantled, moved to dry ground and reassembled. The campaign cost about US$80 million, half of which was donated by some 50 countries, showing the importance of solidarity and nations' shared responsibility in conserving outstanding cultural sites. Its success led to other safeguarding campaigns, such as saving Venice and its Lagoon (Italy) and the Archaeological Ruins at Moenjodaro (Pakistan), and restoring the Borobodur Temple Compounds (Indonesia). Consequently, UNESCO initiated, with the help of the International Council on Monuments and Sites (ICOMOS), the preparation of a draft convention on the protection of cultural heritage."
  11. "The World Heritage Convention – Brief History / Section "Linking the protection of cultural and natural heritage"". UNESCO World Heritage Centre. Archived from the original on 26 May 2020. பார்க்கப்பட்ட நாள் 17 July 2019.
  12. Centre, UNESCO World Heritage (21 September 2022). "Periodic Reporting". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 4 November 2022.
  13. "Criteria for Selection". World Heritage. பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.
  14. Stats
  15. [1]
  16. 16.0 16.1 The Uvs Nuur basin located in மங்கோலியா and உருசியா is here included in ஆசிய-பசிபிக் zone.
  17. http://www.worldheritagesite.org/countries/srilanka.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_பாரம்பரியக்_களம்&oldid=3924129" இலிருந்து மீள்விக்கப்பட்டது