கிசா பிரமிடுத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிசா பிரமிடுத் தொகுதி
மெம்பிசும் நெக்குரோபோலிசும்*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
The Giza Pyramids, part of the Giza Necropolis
நாடு  எகிப்து
வகை பண்பாடு
ஒப்பளவு i, iii, vi
மேற்கோள் 86
பகுதி எகிப்து
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1979  (3ஆவது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.
19 ஆம் நூற்றாண்டுச் சுற்றுப்பயணிகள் பெரிய இசுபிங்சுக்கு முன்னால் - வடகிழக்குத் திசையிலிருந்து பார்க்கும் தோற்றம், பெரிய பிரமிடு பின்னணியில் உள்ளது.

கிசா நெக்குரோப்போலிசு எனப்படும் கிசா பிரமிடுத் தொகுதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசா மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத் தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.

தொகுதி[தொகு]

இந்தப் பழங்கால எகிப்தின் நெக்குரோபோலிஸ் பல பிரமிடுகளை உள்ளடக்கியுள்ளது. பெரும் பிரமிடு எனப்படும் கூஃபுவின் பிரமிடு, இதைவிடச் சற்றுச் சிறிய காஃப்ரே பிரமிடு, இவற்றுக்குத் தென்மேற்கே 100 மீட்டர்கள் தொலைவில் ஒப்பீட்டளவில் இடைத்தர அளவுள்ள மென்காவுரேயின் பிரமிடு, மேலும் 100 மீட்டர்கள் தென்மேற்குத் திசையில் பல சிறிய பிரமிடுகள் என்பன இவற்றுள் அடங்கியுள்ளன. "பெரிய இசுபிங்சு" (Great Sphinx) எனப்படும் மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட சிலை இத் தொகுதியின் கிழக்குப் பகுதியில் கிழக்குத் திசையைப் பார்த்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. தற்கால எகிப்தியலாளர்கள், இந்த இசுபிங்சின் தலை காஃப்ரேயுடையது என நம்புகின்றனர். இந்த அரச குடும்பத்து நினைவுச் சின்னங்களுடன், பல உயர்நிலை அரச அதிகாரிகளினது சமாதிகளும், பிற்காலத்தைச் சேர்ந்த சமாதிகள் பலவும் காணப்படுகின்றன.

இங்கு காணப்படும் ஐந்து பிரமிடுகளுள் மென்கவுரேயின் பிரமிடு அதன் மினுக்கிய சுண்ணக்கற்களாலான மூடல்கள் எதுவும் இன்றி உள்ளது. காஃப்ரேயின் பிரமிடு அதன் உச்சிப்பகுதியிலும், கூஃபுவின் பிரமிடு அதன் அடிப் பகுதியிலும் மினுக்கிய சுண்ணக்கல் மூடல்களைக் கொண்டுள்ளன. காஃப்ரேயின் பிரமிடு அதைக் காட்டிலும் காலத்தால் முந்திய கூஃபுவின் பிரமிட்டிலும் உயரமாகக் காட்சிதருகிறது. இது முக்கியமாக அது அமைந்துள்ள இடம் உயரமாக இருப்பதனாலும், அப்பிரமிடின் பக்கங்கள் சரிவு கூடியதாக அமைந்திருப்பதனாலும் ஆகும். உண்மையில் இது உயரத்திலும், கனவளவிலும் சிறியதே. கிமு 25 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே இப்பகுதியில் கட்டுமான வேலைகள் முனைப்பாக இடம்பெற்றன. ஹெலெனியக் காலத்தில், சிடோனின் அன்டிப்பேட்டர், இங்குள்ள பெரிய பிரமிடை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகப் பட்டியலிட்ட பின்னர் இப்பகுதி மிகவும் புகழ் பெற்றது.

பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டில் பிடிக்கப்பட்ட படங்களைக் கொண்டு வெளிநாட்டினர் இது உட்பகுதியில் பாலைவனத்தில் அமைந்துள்ளதாகக் கருதிவருகின்றனர். ஆனால், இது ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை கூடிய நகரமான கெய்ரோவின் ஒரு பகுதியாகவேயுள்ளது. நகர வளர்ச்சி, இத் தொன்மையான களங்களினது எல்லைவரை வந்துவிட்டது. இதனால், கிசா, சக்காரா (Saqqara), தாசுர் (Dahshur), அபு ரூவேய்சு (Abu Ruwaysh), அபுசிர் (Abusir) ஆகியவற்றை உள்ளடக்கிய மெம்பிசுப் பகுதி 1979 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசா_பிரமிடுத்_தொகுதி&oldid=1351787" இருந்து மீள்விக்கப்பட்டது