நிலத்தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நிலப்பகுதியில் காணப்படக்கூடிய அம்சங்கள் அனைத்தும் ஒருசேர அப்பகுதியின் நிலத்தோற்றம் எனப்படுகின்றது. இவற்றுள், இயற்பியல் சிறப்புகளான நில அமைப்பு, மலைகள், நீர்நிலைகள் போன்றனவும், உயிரியல் சிறப்புகளான விலங்குகள், தாவரங்கள் முதலியனவும் அடங்கும். இவற்றுடன் ஒளி, காலநிலை முதலியனவும், மனிதச் செயற்பாடுகளின் விளைவுகளான கட்டிடச் சூழல் போன்றனவும் இவற்றுள் அடங்குகின்றன.

இச்சிறப்புகளுட் பெரும்பாலானவை தம்முள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. நில அமைப்பு, அமைவிடம் போன்றன காலநிலையில் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் அப்பகுதியில் எத்தகைய உயிரினங்கள் வாழமுடியும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால், ஒரேசமயத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான சிறப்பியல்புகளுடன் கூடிய நிலத்தோற்றம் அமைகின்றன. கடல் சார்ந்த நிலப்பகுதிகள், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றிலும் வேறுபட்ட நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஒரே இடத்திலும்கூட காலத்துக்குக் காலம் நிலத்தோற்றம் மாறுபடுவதையும் காணமுடியும். மாரி காலத்தில், ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்வதும், நீர்நிலைகள் நிரம்பி வழிவதும், தாவரங்கள் பச்சைப்பசேலெனக் காட்சி தருவதும், கோடை காலத்தின் போது மாறிவிடும்.

பரந்த பகுதிகளில் இயற்கையின் செல்வாக்குக்கு எதிராக நிலத்தோற்ரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தற்போதைய நிலையில் மனிதனால் முடியக்கூடிய விடயம் அல்லவெனினும், பரந்து விரிந்த நகரங்கள், பெரும் நீர்த்தேக்கத் திட்டங்கள், போன்றவை நேரடியாகவும்,சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் மூலம் மறைமுகமாகவும் இயற்கை நிலத்தோற்றத்தில் பெருமளவில் மாறுபாடுகள் ஏற்படவே செய்கின்றது.

சிறிய அளவில் கட்டிடங்களைச் சூழவும், நகரங்களில் பொது இடங்களிலும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிலத்தோற்றங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். இதற்கான துறையை நிலத்தோற்றக் கலை எனப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தோற்றம்&oldid=2740437" இலிருந்து மீள்விக்கப்பட்டது