அல்-உக்சுர்
லக்சர் (Luxor) பண்டைய எகிப்து நாட்டின் ஒரு நகரம். இது அந்நாட்டின் மேல் எகிப்து பகுதியின் அல் உக்சூர் ஆட்சிப்பகுதியின் தலைநகரமும் ஆகும். இது தற்போது அண்ணளவாக 150,000 மக்கட் தொகையைக் கொண்டுள்ளது. இந்த நகரம், தீபை (Thebes) என்னும் பண்டைய எகிப்திய நகரம் இருந்த இடத்தில் அமைந்துள்ளதாலும், புகழ் பெற்ற பண்டைய எகிப்தியக் கோயில்கள் இந் நகர எல்லைகளுக்குள் உள்ளதாலும், இந்த நகரம் உலகின் சிறப்புமிக்க திறந்தவெளி அருங்காட்சியகம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு.[1]
இதற்கு நேர் எதிரே, நைல் நதிக்கு அப்பால் மேற்குக் கரை நெக்ரோபோலிசில் அரசர்களின் பள்ளத்தாக்கு, அரசிகளின் பள்ளத்தாக்கு என்பவை உட்படப் பல கோயில்களும், சமாதிகளும் வேறு நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்காணக்கான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இவற்றைப் பார்ப்பதற்காக இங்கு வருகிறார்கள். இந் நகரத்தின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி, இச் சுற்றுலாத் துறையில் தங்கியுள்ளது.
பொருளாதாரம்
[தொகு]இந் நகரின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டிருந்த போதும், பெருமளவு மக்கள் வேளாண்மைத் துறையிலும் ஈடுபட்டுள்ளனர். சிறப்பாகக் கரும்புச் செய்கை முக்கியமான ஒரு பொருளாதார நடவடிக்கையாக விளங்குகிறது.
போக்குவரத்து
[தொகு]இங்கே அல்-உக்சுர் அனைத்துலக வானூர்தி நிலையம் எனப்படும் வானூர்தி நிலையம் ஒன்று உண்டு. இது இந் நகரத்தை உலகின் பிற பகுதிகளோடு இணைக்க உதவுகிறது. முன்னர் நைலின் கிழக்குக் கரைக்கும் மேற்குக் கரைக்குமான போக்குவரத்துத் தொடர்பு படகுச் சேவைகளினூடாகவே நடைபெற்று வந்தது. அண்மையில், நகரில் இருந்து சிறிது தொலைவில் புதிய பாலம் ஒன்று இந் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகள்
[தொகு]லக்சர் நகரத்தின் மன்னர்களின் சமவெளி பகுதியில், அக்டோபர் 2019-இல் மரத்தில் செய்யப்பட்ட மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த மம்மி வடிவிலான சவப்பெட்டிகளில் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மம்மிகள் ஆண்களுக்கானது. கைகள் திறந்த நிலையில் இருக்கும் மம்மிகள் பெண்களுக்கானது. மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன, என்று தெரிவித்துள்ளனர்.[2][3][4]
இங்குள்ள சுற்றுலாத் தலங்கள்
[தொகு]- கிழக்குக் கரை
- அல்-உக்சுர் கோயில்
- கர்னக் கோயில்
- அல்-உக்சுர் அருங்காட்சியகம்
- மம்மியாக்க அருங்காட்சியகம் (Mummification Museum)
- மேற்குக்கரை
- மன்னர்களின் சமவெளி
- அரசிகளின் சமவெளி
- மதீனத் ஹாபு (மூன்றாவது ராமேசஸின் நினைவுக் கோயில்)
- ராமேசியம் (இரண்டாவது ராமேசஸின் நினைவுக் கோயில்)
- தெர் ல்-பஹிர் ( ஹட்செப்சுட் கோவில் )
- மெம்மெனின் பெருஞ்சிலைகள்
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |