அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை அருங்காட்சியகத்தின் வெளிப்புறம்

அருங்காட்சியகம் என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும்.[1] இவை, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. இது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாகும்.

தொடக்ககால அருங்காட்சியகங்கள், பழம் பொருட்களின்மேல் ஆர்வம் கொண்ட வசதி படைத்த தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் போன்றவர்களால் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகின. இன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலோட்டம்[தொகு]

அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தறகாலிகமானவையாகவோ இருக்கலாம். பெரிய அருங்காட்சியகங்கள், உலகின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன.

லூவர் அருங்காட்சியகத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி.

பல அருங்காட்சியகங்கள், சிறுவர்கள், பெரியவர்கள், குடும்பங்கள், குறிப்பிட்ட தொழில்துறைகளைச் சேந்தவர்கள் எனப் பல வகைப்பட்ட பார்வையாளர்களுக்காக நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் ஒழுங்கு செய்கின்றன. பொது மக்களுக்கான நிகழ்ச்சிகள், அருங்காட்சியகத்தைச் சேர்ந்தவர்களாலோ அல்லது துறைசார் நிபுணர்களாலும் நிகழ்த்தப்படும் விரிவுரைகளாகவோ, திரைப்படங்களாகவோ, கலைநிகழ்ச்சிகளாகவோ, தொழில்நுட்ப விளக்கங்களாகவோ இருக்கலாம். பல அருங்காட்சியகங்கள் அவை அமைந்துள்ள பகுதிகளின் பண்பாடுகளின் மீது குறிப்பான கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருட்களைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பதில்லை எனினும் சில அருங்காட்சியகங்களில் சில பொருட்களைத் தொட்டுத் தொடர்பாடுதல் ஊக்குவிக்கப்படுகின்றது.

வகைகள்[தொகு]

அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல முக்கியமான நகரங்களில், நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழினுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும். இந்த வகைகளுக்கு உள்ளேயே பல சிறப்புப் பிரிவுகளுக்கும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, நவீன ஓவியங்கள், உள்ளூர் வரலாறு, வானூர்திப் பயண வரலாறு, போன்றவற்றுக்கான அருங்காட்சியகங்களைக் குறிப்பிடலாம்.

தொல்லியல் அருங்காட்சியகங்கள்[தொகு]

தொல்லியல் அருங்காட்சியகங்கள், தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைக்கும் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. தொல்லியல் அருங்காட்சியகங்களிற் பல திறந்தவெளி அருங்காட்சியகங்களாக உள்ளன. திறந்தவெளி அருங்காட்சியகங்கள் பொதுவாகத் தொன்மையான கட்டிடங்கள்; சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகளைக் காட்டும் நாட்டுப்புற வாழ்விடக் காட்சிகள்; தொழில்நுட்ப வரலாறு, நாட்டுப்புற மக்களின் கலை, வரலாறு போன்றவற்றைக் காட்டும் விடயங்கள் போன்றவற்றைப் பற்றியனவாக இருக்கின்றன.[2]. பிற தொல்லியல் அருங்காட்சியகங்கள் தொல்லியல் ஆய்வுக் களங்களில் எடுக்கப்பட்ட பொருட்களைச் சேகரித்துப் பாதுகாப்பான முறையில் கட்டிடங்களுக்குள் காட்சிக்கு வைக்கின்றன.

கலை அருங்காட்சியகங்கள்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள நவீன ஓவிய அருங்காட்சியகம்

கலை அருங்காட்சியகங்களைக் கலைக் கூடங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை கலை தொடர்பான பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை காட்சிக்கலைகள் சார்ந்த, ஓவியங்கள், வரைபடங்கள், சிற்பங்கள் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களில், வெண்களிப்பாண்டங்கள், உலோகவேலைப் பொருட்கள், தளவாடங்கள் போன்ற பயன்படு கலைப் பொருட்களும் இடம்பெறுவதுண்டு. நிகழ்படக்கலைப் படங்கள் பொதுவாகத் திரையிடப்படுகின்றன.

வரலாற்று அருங்காட்சியகங்கள்[தொகு]

வரலாற்று அருங்காட்சியகங்கள், வரலாறு, வரலாற்றோடு நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உள்ள பொருத்தப்பாடு போன்றவற்றோடு தொடர்புடைய விடயங்களைக் கையாளுகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களுட் சில வரலாறு தொடர்பான பொதுவான விடயங்களைக் கையாள, வேறு சில வரலாறு தொடர்பான சிறப்பு அம்சங்கள் அல்லது ஒரு குறித்த இடம் தொடர்பான அம்சங்கள் மீது கவனம் செலுத்துகின்றன. வரலாற்று அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், பலவகை அரும்பொருட்கள், கலைப்பொருட்கள், தொல்பொருட்கள் போன்ற பல்வகைப்பட்ட பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன.

கடல்சார் அருங்காட்சியகங்கள்[தொகு]

கடல்சார் அருங்காட்சியகங்கள் கடல், கடற்பயணம் என்பவற்றோடு தொடர்புடைய அரும்பொருட்களைக் சேகரித்துக் காட்சிக்கு வைக்கும் சிறப்பு அருங்காட்சியகங்கள் ஆகும். இவற்றில், கப்பல்கள், கடல்களிலும் ஏரிகளிலும் நடைபெறும் பயணங்கள் தொடர்பான பொருட்கள் என்பன இடம்பெறும். சில வேளைகளில் வரலாற்றுக் கப்பல்கள் அல்லது அவை போல் உருவாக்கப்பட்ட கப்பல்களையே அருங்காட்சியகமாக ஆக்குவதுண்டு. இவை அருங்காட்சியகக் கப்பல்கள் எனப்படுகின்றன.

படைத்துறை, போர் அருங்காட்சியகங்கள்[தொகு]

படைத்துறை அருங்காட்சியகங்கள் படைத்துறையின் வரலாற்றை எடுத்துக் காட்டுவதற்காக உருவாக்கப்படுகின்றன. இவை பொதுவாக ஒரு நாட்டை மையப்படுத்தியே அமைவது வழக்கம். இத்தகைய அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாடு ஈடுபட்ட போர்கள் தொடர்பான காட்சிப் பொருட்கள் இடம்பெறும். இக் காட்சிப் பொருட்களில், ஆயுதங்கள், பிற படைத்துறைச் சாதனங்கள், சீருடைகள், போர்க்காலப் பரப்புரைகள், போர்க்காலங்களில் மக்களின் வாழ்க்கை என்பன தொடர்பானவை அடங்கும். படைத்துறை அருங்காட்சியகங்கள் ஒரு குறித்த இடப்பகுதியை அல்லது ஒரு குறித்த படைத்துறைப் பிரிவை மட்டும் மையப்படுத்தி அமைவதும் உண்டு. படைத்துறை வானூர்திகள், போர்த்தாங்கிகள் என்பவற்றுக்கான அருங்காட்சியகங்கள் இவற்றுள் அடங்குவன.

இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள்[தொகு]

வாசிங்டன் டி.சி.யிலுள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்

இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள், இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்கள் என்பன இயற்கை உலகு தொடர்பான அம்சங்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை இயற்கை பண்பாடு என்பவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துகின்றன. தொன்மாக்கள், பண்டைக்கால வரலாறு, மானிடவியல் போன்றவை தொடர்பான காட்சிப்பொருட்களை இத்தகைய அருங்காட்சியகங்களில் காண முடியும். கூர்ப்பு, சூழலியல் தொடர்பான விடயங்கள், உயிரிப்பல்வகைமை போன்றவை இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்களில் சிறப்பான கவனத்தைப் பெறும் விடயங்களாக இருக்கும். இத்தகைய அருங்காட்சியகங்களுக்கு இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இயற்கை வரலாற்றுக்கான ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகம், சிமித்சோனிய நிறுவனத்தின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம், நியூ யார்க் நகரில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம் என்பவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

குறிப்புகள்[தொகு]

  1. Edward Porter Alexander, Mary Alexander; "Museums in motion: an introduction to the history and functions of museums". Rowman & Littlefield, 2008 ISBN 0-7591-0509-X. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06. {{cite web}}: line feed character in |publisher= at position 27 (help)
  2. பவுன்துரை, இராசு., (2001), அருங்காட்சியகவியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருங்காட்சியகம்&oldid=3924124" இலிருந்து மீள்விக்கப்பட்டது