உள்ளடக்கத்துக்குச் செல்

பண்பாட்டு வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்பாட்டு வரலாறு என்பது, மானிடவியல், வரலாறு ஆகியவற்றின் அணுகுமுறைகளை ஒன்றுசேர்த்து, மக்கள் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் வரலாற்று அனுபவங்களின் பண்பாட்டு விளக்கங்களையும் அறிந்துகொள்ள முயலும் துறை ஆகும். இது, கடந்தகால விடயங்களின் பதிவுகள், விளக்கமுறையிலான விபரிப்புகள் ஆகியவற்றைப் பண்பாடு தொடர்பான தொடர் நிகழ்வுகளின் சூழமைவில் ஆராய்கிறது.

சமூக, பண்பாட்டு, அரசியல் சூழல்கள் ஊடாக மனித குலம் ஈடுபட்ட கடந்தகால நிகழ்வுகளை, அல்லது ஒரு குழுவினர் விரும்புகின்ற கலைகள், பழக்க வழக்கங்கள் என்பன தொடர்பானவற்றைப் பண்பாட்டு வரலாறு பதிவு செய்வதுடன் விளக்கவும் முயல்கிறது. யேக்கப் பர்க்கார்ட் (1818 - 1897) என்பவர் பண்பாட்டு வரலாற்றை ஒரு துறையாக நிறுவ உதவினார். கருத்தில் எடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்றால் உருவாக்கப்பட்ட பல்வேறுபட்ட தனித்துவமான வாழ்க்கை முறைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மனித சமுதாயத்தின் பதிவுகளைப் பண்பாட்டு வரலாறு ஆய்வு செய்து விளக்குகிறது. பண்பாட்டு வரலாறானது சடங்குகள், நிகழ்விடத்துடனான தொடர்புகள் போன்ற கடந்தகாலப் பண்பாட்டுச் செயற்பாடுகள் முழுவதையும் கருத்தில் எடுக்கிறது.

பண்பாட்டு வரலாறு, அதன் அணுகுமுறையைப் பொறுத்தவரை பிரெஞ்சு இயக்கமான மனப்பாங்கின் வரலாறு, புதிய வரலாறு ஆகியவற்றுடன் பல்வேறு பொது விடயங்களைக் கொண்டுள்ளன. அத்துடன் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்க ஆய்வுகளோடு என்னும் துறையோடு இதற்கு நெருக்கமான தொடர்புகள் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் யேக்கப் பர்க்கார்ட்டால், இத்தாலிய மறுமலர்ச்சி தொடர்பில் உருவாக்கிச் செயற்படுத்தியபடி பண்பாட்டு வரலாறு, ஒரு குறித்த வரலாற்றுக் காலத்தை முழுமையாக ஆய்வு செய்வதாக இருந்தது. அக்காலத்தின் ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை போன்றவை மட்டுமன்றி, சமூகத்தின் பொருளாதார அடிப்படைகள், அதன் அன்றாட வாழ்க்கைக்கான சமூக நிறுவனங்கள் போன்றவறையும் இந்த ஆய்வு உள்ளடக்கியதாக இருந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Siegfried Giedion, Space, Time and Architecture (6th ed.), p 3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டு_வரலாறு&oldid=2748195" இலிருந்து மீள்விக்கப்பட்டது