உள்ளடக்கத்துக்குச் செல்

நாணயவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாணயவியல் (Numismatics) என்பது, எல்லா வகைகளிலுமான நாணயம், அதன் வரலாறு முதலியன தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும். இது பெரும்பாலும், நாணயம் பற்றிய ஆய்வு, நாணயச் சேகரிப்புப் போன்றவை தொடர்பிலேயே பரவலாக அறியப்பட்டிருந்தாலும், பணக் கொடுக்கல் வாங்கல் ஊடகங்கள் சம்பந்தமான விரிவான ஆய்வுகளையும் இத்துறை உள்ளடக்குகிறது. அமைப்பு சார்ந்த பண முறைமை இல்லாத நிலையில், பழைய காலத்திலும், சில இடங்களில் இன்றும்கூட மக்கள் பண்டமாற்று முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக, உள்ளூரில் காணப்படும், உள்ளார்ந்த பெறுமதியைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். கிர்கிஸ் மக்கள், குதிரைகளைப் பொருட்கள் வாங்குவதற்கான நாணய அலகாகப் பயன்படுத்தினார்கள். சிறிய நாணய அலகுகளுக்கு ஆட்டுத்தோல் பயன்பட்டது. ஆட்டுத்தோல் நாணவியல் ஆய்வுக்குச் சிலவேளை பயன்படக்கூடும். ஆனால், குதிரைகள் நாணயவியலில் ஆராயப்படுவதில்லை. பல விதமான பொருட்கள், நாணயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. சிப்பிகள், விலையுயர்ந்த உலோகங்கள், பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள் என்பவை இவற்றுட் சில.

தற்காலத்தில், பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளார்ந்த, சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது கடன் பெறுமானங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. நாணயவியல் பெறுமானம் என்பது, சட்டமுறையிலான பெறுமானத்திலும் கூடுதலாக இருக்கக்கூடிய பணப் பெறுமானம் எனலாம். இது சேகரிப்பாளர் பெறுமானம் என்றும் வழங்கப்படுவதுண்டு.

பணத்தின் பயன்பாடு மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பான ஆய்வு அதன் பௌதீக உள்ளடக்கம் தொடர்பான நாணயவியலிலிருந்து வேறுபட்டது. ஆனாலும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை ஆகும்.

நாணயவியலின் வரலாறு

[தொகு]

நாணயச் சேகரிப்பு, பண்டைக் காலம் முதலே இருந்து வருகின்ற ஒன்றாகும். ரோமப் பேரரசர்களும், நாணயச் சேகரிப்பாளராக இருந்திருக்கிறார்கள். இது அரசர்களின் பொழுதுபோக்கு எனவும் அழைக்கப்பட்டது. நாணயவியல், மத்தியகால இறுதியிலும், மறுமலர்ச்சிக் காலத் தொடக்கத்திலும், உச்ச நிலையில் இருந்தது. இக் காலத்தில் பண்டைக்கால நாணயங்கள் சேகரிப்பது, ஐரோப்பிய அரச குடும்பத்தவர் மத்தியிலும், பிரபுக்கள் மத்தியிலும் காணப்பட்டது. ரோமப் பேரரசர்களான அகஸ்ட்டஸ், ஜூலியஸ் போன்றோர் கிரேக்க நாணயங்களைச் சேகரித்து வந்ததாகத் தெரிகின்றது. மேலும், இத்தாலியக் கவிஞன் பெட்ராக் (Petrarch), ரோமப் பேரரசன் மாக்சிமிலியன், பிரான்சின் லூயிஸ் XIV, ஹென்றி IV ஆகியோர் குறிப்பிடத்தக்க நாணயச் சேகரிப்பாளர்கள் ஆவர்.

19 ஆம் நூற்றாண்டு நாடுகள் வாரியான சேகரிப்புக்களின் வளர்ச்சி, விபரப்பட்டியல்களின் வெளியீடு என்பவற்றுக்குச் சிறப்பான காலமாக இருந்தது.

வரலாற்றில் முக்கியத்துவம்

[தொகு]

ஒரு பிரதேசத்தின் வரலாறு தொடர்பான தகவல்களைக் கண்டறிவதில் நாணயங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன[1] . நாணயத்தை ஆக்கும் உலோகம், நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு, அதனை வெளியிட்ட அரசு மற்றும் நாணயத்தில் காணப்படும் கலையம்சங்கள் போன்றவை நாணயவியலிலும் வரலாற்றுத் துறையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவன. உதாரனமாக நாணயத்தை ஆக்கிய உலோகத்தின் மூலம் நாணயத்தை வெளியிட்ட அரசின் பொருளாதார நிலமையைக் கண்டறிய முடியும். சந்திரகுப்தன் காலத்தில் வெளிவந்த தங்க நாணயங்கள் அக்காலத்தின் பொருளாதார இஸ்திரத்தன்மையையும் ஸ்கந்தகுப்தனின் காலத்தில் வெளிவந்த தங்க முலாமிடப்பட்ட செப்பு நாணயங்கள் அக்காலத்தின் பொருளாதார வீழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றன.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தரம் 10 வரலாறு - இலங்கை அரசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயவியல்&oldid=3286167" இலிருந்து மீள்விக்கப்பட்டது