நாணயச் சேகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாணயத்தை அதன் பெறுமானம் கருதிச் சேமிக்கும் வழக்கம் நாணயம் உருவான காலத்திலேயே தோன்றிவிட்டதாகக் கருதலாம். ஆனால், நாணயச் சேகரிப்பு என்பதை ஒரு கலையாகக் கருதிச் சேகரிக்கத் தொடங்கியது பிற்காலத்திலேயே ஆகும். அரசர்களின் பொழுதுபோக்கு எனப்பட்ட நாணயச் சேகரிப்பின் புதிய வடிவம் 14 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. ரோமப் பேரரசர்களின் நாணயச் சேகரிப்புப் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டாலும், அவர்கள் இவை பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தனரா அல்லது வெறுமனே சேமித்து வைத்தார்களா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.

நாணயச் சேகரிப்பின் சிறப்பியல்புகள்[தொகு]

பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாணயங்கள்.

நாணயச் சேகரிப்பு பெரும்பாலும், நடப்பில் உள்ள நாணயங்கள் கிடைக்கும் போது சேமித்து வைப்பதுடன் தொடங்குகின்றது. இவை, வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் மீந்தவையாகவோ, சுற்றோட்டத்தில் இருந்த பழைய நாணயம் ஒன்றாகவோ இருக்கக்கூடும். பொதுவாக இத்தகைய பல சந்தர்ப்பங்கள் நாணயங்கள் மீது ஆர்வத்தை உண்டாக்குகின்றன. இவ்வார்வம் காலப்போக்கில் அதிகரிக்கும்போது, வெறுமனே புதிய நாணய மாதிரிகளுக்காகக் காத்திருப்பது மட்டும் போதாது. புதுப்புது நாணயங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டியிருக்கும்.

பொதுவாக, கிடைக்கக்கூடிய எல்லா வகையான நாணயங்களிலும் சிலவற்றை மட்டும் சேகரிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான நாணயங்களில் வெளியிடப்பட்ட எல்லாவற்றையுமே சேகரிக்க முயலலாம். முதல் வகைச் சேகரிப்பில் முழுமையான சேகரிப்பு என்பது அடைய முடியாத ஒன்று எனலாம். ஆனால், இரண்டாவது வகையில் சேகரிப்புக்காக எல்லையை வரையறை செய்வதன் மூலம் சேகரிப்பை முழுமை ஆக்குவதற்கான சாத்தியங்கள் கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக, லூயிஸ் எலியாஸ்பர்க் (Louis Eliasberg) அமெரிக்க ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட எல்லா நாணயங்களையும் சேகரிப்பதில் வெற்றி பெற்றார். ஆனால், உலகில் இவர் மட்டுமே இவ்வாறான ஒரு முழுமையான சேகரிப்பைச் செய்ய முடிந்துள்ளது.

இவ்வாறு நோக்கை வரையறை செய்வதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு நாட்டில் வெளியிடப்பட்ட முழு நாணயங்களையும் சேகரித்தல், ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலப்பகுதியைச் சேர்ந்த நாணயங்களைச் சேகரித்தல், தவறுள்ள நாணயங்களைச் சேகரித்தல், எனப் பல வழிகளில் சேகரிப்புப் பரப்பை வரையறுக்க முடியும். சேகரிப்பாளர்கள் தங்களுடைய ஆர்வம், பொருள் வசதி என்பவற்றைக் கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

நாணயச் சேகரிப்பின் வகைகள்[தொகு]

நாடுசார் சேகரிப்பு[தொகு]

உலகில் நாணயங்களை வெளியிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நாட்டுக்கு ஒன்றாக நாணயங்களைச் சேகரிக்க முடியும் சிலர் இவ்வாறான சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் சேகரிப்பைக் குறிப்பிட்ட ஒரு நாடு வெளியிட்ட எல்லா நாணயங்களையுமே சேகரிப்பது என்ற நோக்கத்துள் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.

ஆண்டுசார் சேகரிப்பு[தொகு]

நாணய சேகரிப்பு வகைகளில் ஆண்டுசார் சேகரிப்பு என்பது பிரபலமான ஒரு வகையாகும். ஒரு குறிப்பிட்ட நாணயத்தினை அச்சிடப்பட்ட ஆண்டுகள் வாரியாக சேகரித்து வைப்பது இவ்வகையாகும். உதாரணமாக இந்திய மூன்று பைசா நாணயம் கி.பி 1964 - 1971 வரை அச்சடப்பட்டுள்ளது.[1] நாணய சேகரிப்பாளர் 1964 இல் அச்சிடப்பட்ட 3 பைசா நாணயம், 1965 இல் அச்சிடப்பட்ட 3 பைசா நாணயம் என 1971 வரை தன்னுடைய சேகரிப்பில் வைத்திருப்பார்.

அச்சக வாரியாக சேகரிப்பு[தொகு]

ஆண்டுசார் நாணய சேகரிப்பில் ஆண்டு வாரியாக மட்டுமல் அல்லாமல் அச்சக வாரியாகவும் நாணயத்தினை சேகரித்து வைப்பார்கள். உதாரணமாக 3 பைசா நாணயத்தினை 1964 இல் கல்கத்தா அச்சகத்தில் வெளியிடப்பட்ட நாணயம், மும்பை அச்சகத்தில் வெளியிடப்பட்ட நாணயம் என ஒரே ஆண்டில் வெளியிட்டப்பட்ட அச்சகத்தின் வாரியாகவும் சேகரித்து வைத்திருப்பார்கள். ஆண்டுசார் சேகரிப்பில் இந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகின்றன. இந்த வகை சேகரிப்பு முறை முழுமையான சேகரிப்பு முறையாக கருதப்படுகிறது. இவற்றில் சில அச்சகத்தில் குறைந்தளவு நாணயங்களை மட்டுமே அச்சிட்டு மக்கள் புழக்கத்திற்கு விட்டிருப்பார்கள். அவ்வகை நாணயங்கள் நாணயச் சந்தையில் அதிக மதிப்புடையதாக உள்ளன.

வகைசார் சேகரிப்பு[தொகு]

லிங்கன் செண்ட்.

சில நாணயங்கள் குறிப்பிட்ட ஒரு வடிவமைப்பை நீண்ட காலத்துக்கு மாறாமல் வைத்திருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொரு முறை மீள வெளியிடும்போதும், அதிலுள்ள தேதிகள் மட்டும் மாற்றம் அடைகின்றன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவின் லிங்கன் செண்ட் நாணயத்தைக் குறிப்பிடலாம். எனவே வகைசார் சேகரிப்பில் ஈடுபடுபவர்கள், குறிப்பிட்ட வடிவமைப்பில் அமைந்த, ஒரு நாணயத்தை மட்டுமே தமது சேகரிப்பில் சேர்த்துக்கொள்வர். தேதி வேறுபாடுகளையோ, வார்ப்பிடக் குறி வேறுபாடுகளையோ அவர்கள் கவனிப்பதில்லை.

புவி-அரசியல் வாரியான நாணயச் சேகரிப்பு[தொகு]

புவி அரசியல் வாரியான நாணயச் சேகரிப்பு ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த நாடுகள், அரசியல் காரணமாக இரண்டாகவோ, மூன்றாவோ தனித்தனி நாடுகளாக மாறியிருக்க கூடும். அவ்வாறான புவி அரசியல் சார்ந்த நாடுகளின் நாணயங்களை சேகரிப்பது இவ்வகையாகும். உதாரணமாக பிரித்தானிய பேரரசின் ஆக்கிரப்பில் இருந்த இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க நாணயங்களை நாடுகள் வாரியாக சேகரிப்பதாகும்.

இயற்கை அழகுசார் நாணயச் சேகரிப்பு[தொகு]

நாணயங்கள் ஈரப்பதம், வெப்பம் போன்ற காரணிகளால் காலப்போக்கில் பாதிப்படைந்து விடுகின்றன. நாணயச் சேகரிப்பாளர்களின் கவனக்குறைவு இதற்கு பெரிய காரணமாக இருந்தாலும், இயற்கையாக பாதிப்படைந்த நாணயங்களின் அழகிற்காக சில நாணயச் சேகரிப்பாளர்கள் இவ்விதமான நாணயங்களை சேகரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பிழையான நாணயங்களை சேகரித்தல்[தொகு]

நாணயங்கள் சிலவற்றை அச்சிடுகையில் அச்சங்களில் பிழை ஏற்படுகிறது. இவ்வாறான பிழை நாணயங்கள் புழக்கத்திற்கு உகந்தவையாக அல்லாமல் இருப்பதால் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. ஆனால் நாணயச் சேகரிப்பாளர்களில் சிலர் இவ்வாறான பிழை நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நினைவு நாணயங்கள் சேகரிப்பு[தொகு]

இந்திய ஒருங்கினைப்பின் நினைவாக வெளியிடப்பட்ட 50 பைசா நாணயம்

நாணயங்களை வெளியிடும் நாடுகள் தலைவர்களின் நினைவாகவோ, திட்டம், இயக்கம் போன்றவற்றின் நினைவாகவோ நாணயங்களை வெளியிடுகின்றன. இவ்வைகை நாணயங்கள் நினைவு நாணயங்கள் எனப்படுகின்றன. சில நாணயச் சேகரிப்பாளர்கள் இவ்வகை நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறான நினைவு நாணயங்கள் சேகரிப்பில் சில அரிதான நாணயங்கள் அதிக விலை மதிப்புடையவையாக சந்தையில் உள்ளன. தங்களின் நினைவு நாணயச் சேகரிப்பினை முழுமையாக நிறைவு செய்வதற்காக இந்நாணயங்களை அதிக விலை கொடுத்தும் நாணயச் சேகரிப்பாளர்கள் வாங்குகிறார்கள்.

தரம் மற்றும் மதிப்பு[தொகு]

நாணயச் சேகரிப்பில் நாணயங்களின் தரம் மிக முக்கியமான ஒன்றாகும். நாணயங்களின் அச்சிடப்பட்ட ஆண்டு, அதில் பொறிக்கப்பட்ட தகவல்கள், உருவங்கள் ஆகியவை நன்முறையில் தெளிவாக தெரிகின்ற வகையிலும், நாணயங்கள் அச்சிடப்பட்ட பொழுது இருந்த எடையின் அளவே இருப்பதும் தரத்தினை மதிப்பிடக் கூடிய வழியாகும்.

புழக்கத்தில் விடப்படாத நாணயங்கள் (UNC) முதல் தரமானவை. இந்த நாணயங்கள் அச்சிடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டவையாக உள்ளன. நாணயச் சேகரிப்பாளர்கள் இந்த புழக்க்த்தில் விடப்படாத நாணயங்களை பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாணயங்களில் அனைத்து தகவல்களும் அப்படியே இருக்கின்றன என்பதோடு கீறல்கள், தேய்மானம் ஆகியவையும் இல்லாமல் இருப்பதால் பல ஆண்டுகள் பாதுகாப்பாக சேகரித்து வைக்க ஏதுவான ஒன்றாக உள்ள.

புழக்த்தில் விடப்பட்ட நாணயங்கள் அந்நாணயங்களின் தரத்திற்கு ஏற்றவாறு, நன்நிலையில் உள்ளவை, மோசமான நிலையில் உள்ளவை என்பவையாக தரம் பிரிக்கப்படுகின்றன. இவ்வாறான தரத்தின் அடிப்படையில் நாணயத்தின் சந்தை மதிப்பு அமைகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://en.numista.com/catalogue/pieces1847.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயச்_சேகரிப்பு&oldid=3177628" இலிருந்து மீள்விக்கப்பட்டது