நாணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலகின் சில நாணயங்கள்.

நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன. இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. நாணயங்கள் அவை பயன்படுத்தும் நாணய மாற்றுவிகித முறையைப் பொறுத்து இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, மிதக்கும் நாணயங்கள், நிலைத்த நாணயங்கள் என்பனவாகும். தமது நாணயங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகள் அதனை மத்திய வங்கிகள் மூலமாகவோ அல்லது நிதி அமைச்சகங்கள் மூலமாகவோ செயற்படுத்துகின்றன.

அரச மரபினர் பயன்படுத்திய நாணயங்கள்[தொகு]

தமிழகத்தில் பல்வேறு அரச மரபினர்கள் பயன்படுத்திய நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டன. அவ்வகை நாணயங்கள் அக்கம், மாடை, கழஞ்சு, அன்றாடு நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என அழைக்கப்பட்டன.

தமிழ் இலக்கியங்களில்[தொகு]

தமிழக மன்னர்கள் புலவர்களையும், பாணர்களையும் ஆதரித்தனர் என இலக்கியங்கள் வாயிலாகவும், ஆற்றுப்படை நூல்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு புலவர்களும், பாணர்களும் அரசனை வாழ்த்திக் கூறும்போது அவர்களுக்கு மன்னர்களால் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள்களுடன் பொற்காசுகளும் வழங்கப்பட்டுள்ளன. [1]

சங்க காலம்[தொகு]

காசுகள் சங்க காலம் தொடங்கி பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் காணப்பட்டு வந்துள்ளன. சங்க கால அரசர் காலத்தில் வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன. இந்நாணயங்களில் கழஞ்சு என்பது சங்க காலத்தில் எடுத்தலளவையாகப் பயன்படுத்தப்பட்டன. சங்க கால அரசர் காலத்தில்வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன. பிற்காலத்தில் நாணயங்கள் அளவான கழஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதை கல்வெட்டினால் அறியலாம். சங்க காலத்தில் ரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான வியாபாரம் நடைபெற்றதற்குச்சான்றாக ரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. [2]. தமிழகத்தில் கிடைத்த காசுகளில் திண்ணன், எதிரான் சேந்தன் என்ற பிராமி எழுத்துக்களோடு கிடைத்துள்ளன. இது திண்ணன், சேந்தன் என்ற சங்க காலப் பெயர்களைத் தாங்கியுள்ளன. சேந்தன் என்பவர் பற்றி அகநானூற்றுப் பாடலில் அறியமுடிகிறது[1].

வடிவம்[தொகு]

சதுரமாக வெளியிடப்பட்ட காசுகளில் மரம் (தரு), யானை, திருமறு (ஸ்ரீவத்சம்) முதலிய வடிவங்கள் பொறிக்கப்பட்டன. இக்காசு வட இந்தியாவில் புராணா எனவும், தென்னிந்தியாவில் காணம் எனவும் வழங்கப்பட்டன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 நாணயங்கள், தஞ்சைப்பெரிய கோயில் எடுப்பித்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் 2010, தொடக்கக்கல்வித்துறை, தஞ்சாவூர் மாவட்டம்
  2. நாணயங்கள், தஞ்சைப்பெரிய கோயில் எடுப்பித்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் 2010, தொடக்கக்கல்வித்துறை, தஞ்சாவூர் மாவட்டம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயம்&oldid=1783942" இருந்து மீள்விக்கப்பட்டது