பணம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும்.
பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக பரிமாற்றத்திற்கான ஊடகம், கணக்கிற்கான அலகு மற்றும் சேமிப்பு மதிப்பு என வரையறுக்கப்படுகிறது. அரிதாக இது எதிர்கால பெறுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது இந்த செயற்பாடுகளை நிறைவேற்றும் எந்தவொரு பொருளும் அல்லது சரிபார்க்கக்கூடிய பதிவும் பணமாக கருதப்படுகிறது. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
வரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.[4]
ஒரு நாட்டின் பண வழங்கல் நாணயங்களும் (வங்கித்தாள்கள் மற்றும் காசுகள்) வங்கிப் பணமும் (வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மீதத்தொகை) சேர்ந்ததாகும். பெரும்பாலும் பதிவுகளில் உள்ள வங்கிப் பணம் (பெரும்பான்மையான வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன), வளர்ந்த நாடுகளின் பண வழங்கலில் பெரும்பங்காக உள்ளன.
வரலாறு
[தொகு]பண்டமாற்று முறையில் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெறுமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் சம்பளமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)
பண்டமாற்று போன்ற செயற்பாடுகள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளபோதிலும், எந்தவொரு சமூகமோ பொருளியல் அமைப்போ பண்டமாற்றை மட்டும் பயன்படுத்தியதற்கு சான்று எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மாற்றாக, நாணயங்கள் ஏற்படாத சமூகங்களில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கொடையாகவோ அல்லது கடனாகவோ தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
பண்டமாற்று முறைகள் பெரும்பாலும் முழுவதும் தெரியாதவர்களிடமோ எதிரிகளிடமோதான் மேற்கொள்ளப்பட்டன.
பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாறப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. பல பண்பாடுகளிலும் பண்டமாற்றிற்கு மாற்றாக பண்டமதிப்பு பணம் செயற்பாட்டிற்கு வந்தது. வாற்கோதுமையை எடையிட பயன்படுத்தப்பட்ட செகல் என்ற அலகு பணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த அலகு முதன்முதலாக கிமு 3000 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காக்கள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய சமூகங்கள் சோழிகளைப் பணமாகப் பயன்படுத்தினர்.
தற்கால அறிஞர்கள் முதல் உலோக நாணயம் கிமு 650–600களில் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.
சங்ககாலத் தமிழ்நாடு
[தொகு]-
செவ்வக நந்தி தேவர் நாணயம், இலங்கை
-
யானையும் மீனும் உள்ள நாணயம், இலங்கை
-
இரு குன்றுகளுக்கிடையே கோவிலும் யானையும் பதித்த பாண்டியக் காசு, 1வது நூற்றாண்டு, இலங்கை, பிரித்தானிய அருங்காட்சியகம்
சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் கண்டறியப்படவில்லை. சங்க காலம் தொடங்கி கிடைத்துள்ள நாணயங்களில் சில பழம் பாண்டிய மன்னர்களுடையவை. அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. அவற்றின் ஒரு புறம் மீன் சின்னத்தையும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னத்தையும் பொறித்துள்ளனர். அவை கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையவை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவலன் பொட்டல் எனுமிடத்தில் சங்க காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.
பணத்தின் வகைகள்
[தொகு]முதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெறுமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெறுமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.
தாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.
உற்பத்தி
[தொகு]1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்யப்படும் பணத்திற்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு தங்க மாற்று என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே. பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.
இதனால் பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பாலான பணம் வெளியிட படுவது பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை (Money As Debt.) ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.
உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன் ஆகும். அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன். வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன்கள் ஆகும்.
பண வளர்ச்சி
[தொகு]நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கப்படும் முதலீட்டு வங்கிகள் (investment bank),(Shadow banking System) ஹெட்ஜ் முத்லீடு, வங்கி சாரா பொருளாதார அமைப்புகள் (Non banking financial institutions) மூலமும் பணத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் பணத்திற்கும் அதன் மூலம் ஏற்படும் அபாயத்திற்காகவும் வைப்பு தொகை எதுவும் வைக்க தேவையில்லை. கடன் கொடுத்தபின்னர் இவர்கள் சந்திக்கும் அபாயம் அதிகம் ஆகும். ஆனால் வங்கியானது கடன் கொடுக்கும்போது இந்த நிழல் வங்கி அமைப்புகளிடமே பணம் வசூலித்துக்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கி கடன்பெறுபவரின் தரம் பற்றி கவலைப்படாமல் கடன் கொடுக்கும்.
தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க -முயற்சி செய்வது போல் உள்ளது.
பிஷ்சரின் சமன்பாடு
[தொகு]MV=PQ
Money M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது. P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.
ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.
பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.
உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.
மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை. இதை கீழ்க்காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.
Money இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது. இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.
மேலே சொன்ன சமன்பாட்டில் (MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.
பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது இழப்பு உண்டாகிறது. விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் பின்னர் நட்டம் அடைவது இயற்கை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mishkin, Frederic S. (2007). The Economics of Money, Banking, and Financial Markets (Alternate Edition). Boston: Addison Wesley. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-321-42177-9.
- ↑ What Is Money? By John N. Smithin. Retrieved July-17-09.
- ↑ "money : The New Palgrave Dictionary of Economics". The New Palgrave Dictionary of Economics. பார்க்கப்பட்ட நாள் 18 December 2010.
- ↑ "The Etymology of Money". Thewallstreetpsychologist.com. பார்க்கப்பட்ட நாள் 24 February 2015.