வாற்கோதுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாற்கோதுமை
Barley.jpg
பார்லி வயல்
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு: இலிலியோப்சிடா
வரிசை: போலெசு
குடும்பம்: போவோசியே
பேரினம்: ஓர்டியம்
இனம்: ஓர்டியம் வல்கரே
இருசொற் பெயரீடு
ஓர்டியம் வல்கரே
வாற்கோதுமை

வாற்கோதுமை (Barley, Hordeum vulgare) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 2007ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி உலகில் அதிகமாக பயிர்விக்கப்படும் ஐந்தாவது தானியமாக வாற்கோதுமை இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இதன் பயிர்க்கொள்ளளவு பதிமூன்று கோடியே அறுபது இலட்சம் தொன்களாகும்.[1]


வரலாறு[தொகு]

பயிரிடப்படும் வாற்கோதுமை தற்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் காட்டின வாற்கோதுமையிலிருந்து வழி வந்தது. இவ்விரு வகைகளுமே இருபடை மரபுத்தாங்கிகள் (2n=14 chromosomes; diploid) கொண்டவை. கலப்பினம் செய்யின் எல்லா வகை வாற்கோதுமை தாவரங்களுமே வளரும் விதை கொடுக்கும் தன்மை உள்ளனவாய் இருப்பதால், இவ்வெல்லா வகைகளும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன. பயிரடப்படும் வாற்கோதுமைக்கும் காட்டின வாற்கோதுமைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் பூங்கொத்துக்காம்பு தான். காட்டின வாற்கோதுமையின் பூங்கொத்துக்காம்பு எளிதில் உடையக்கூடியது அதன் சுய விருத்திக்கு உதவும் வகையில் அமைகிறது. வாற்கோதுமை பற்றிய முதல் ஆதாரங்கள் பழங்கற்கால லெவான்ட் பகுதியின் நட்டுஃபியன் கலாசார எச்சங்களில் கானப்படுகின்றன. பயிரடப்பட்ட வாற்கோதுமையின் எச்சப்படிமங்கள் சிரியாவிலுள்ள பழங்கற்காலத்தின் டெல் அபு குரெஇராவில் காணப்பட்டன. வாற்கோதுமையும் கோதுமையும் சம காலகட்டத்தில் பயிர் செய்யத் துவங்கப்பட்டதாகத் தெரிகிறது.

பூமியின் பண்டைய மற்றும் முக்கிய அரும்பரிசாகக் கருதப்பட்டதால் வாற்கோதுமைக்கு, எலூசீனிய மர்மங்களின் ஆரம்ப நிலைகளிலிருந்து மதக்கலாசார முக்கியத்துவம் காணப்பட்டிருந்தது. இம்மர்மங்களின் கடவுளான டெமெட்டரின் வழிபாட்டு பாடல்களில் காணப்படும் கைகியான் எனப்படும் பானகம், வாற்கோதுமை மற்றும் மூலிகைகள் கலந்து செய்யப் பட்டதாகும். குறிப்பாக டெமெட்டெர் "வாற்கோதுமைத்தாய்" என்றும் அழைக்கப்பட்டார்.

வாற்கோதுமை மணிகளை வறுத்து கூழ் காய்ச்சுவது கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டதாக கையஸ் ப்லினியுஸ் செகுன்டஸின் "இயற்கை வரலாறு" தெரிவிக்கிறது. இம்முளைக்கூழ் நுண்ணுயிர் பகுப்பு மூலமாக சற்றே சாராயமுள்ள பானமாகிறது.

இரகங்கள்[தொகு]

மேற்கு ஆசியாவிலும் வடகிழக்கு ஆப்ரிக்காவிலும் காட்டு வாற்கோதுமை வகை அதிகமாக விளைகிறது. உலகின் மற்ற பகுதிகளில் இந்த வாற்கோதுமை அதிகமாக விளைவதில்லை.[2] திபெத்து நாட்டில் வாற்கோதுமை வீட்டுத் தானியமாக விளைவிக்கப்படுகிறது.[3] மேலும் பயிரிடப்படும் வாற்கோதுமை இரகங்களை முன்பனிக்கால வகைகள், வசந்தகால வகைகள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றுடன் கரடி என்றழைக்கப்படும் ஒரு மூலமறியப்படாத இரகத்தையும் சேர்க்கலாம். இந்த இரகம் மற்ற இரு இரகங்கள் அளவே மகசூல் கொடுப்பினும் குறைவான குண நலங்களே பெற்றுள்ளது. முன்பனிக்கால இரகம் கோதுமை போலவும், வசந்த கால இரகம் ஓட் போலவும் பயிரிடப்படுகின்றன. பிரிட்டனில் முன் காலத்தில் வாற்கோதுமை கோடைத்தரிசு நிலங்களில் பல்வேறு பெயர்களுடன் பயிரடப் பட்டு வந்தது.

வசந்தகால வாற்கோதுமை பயிரிட சிறந்த பருவம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களாகும் (பின் மாசி முதல் முன் சித்திரை வரை). இருப்பினும், மிகத்தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களும் நல்ல மகசூல் தந்துள்ளன.

வாற்கோதுமை சிற்றினங்கள் பூங்கொத்தின் மணி வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் பிரிக்கப் பட்டுள்ளன. இரு வரிசை வாற்கோதுமை (Hordeum distichum), நால் வரிசை வாற்கோதுமை (Hordeum tetrastichum) மற்றும் அறு வரிசை வாற்கோதுமை (Hordeum vulgare) என இவை தொன்றுதொட்டு அறியப்பட்டுள்ளன. இவ்வெல்லா சிற்றினஙளிலும் பாதி எண்ணிக்கை மலர்களே விருத்தி செய்யும் தகுதி படைத்தவையாய் உள்ளன. தற்கால வாற்கோதுமை பெரும்பாலும் Hordeum vulgare சிற்றினமாகும்.

இவற்றுள் இரு வரிசை வாற்கோதுமை மிகப் பழமையானது; காட்டின வாற்கோதுமை வகைகள் இருவரிசை வாற்கோதுமையாகவே காணப்படுகின்றன. இரு வரிசை வாற்கோதுமை அறுவரிசை வாற்கோதுமையை விடக் குறைவான புரதமும், அதிக உருமாற்றப்புரதக்காரணியும் (enzyme) கொண்டுள்ளது. அறுவரிசை வாற்கோதுமை தீவனமாகவும், பிற பொருள் கலந்த முளைக்கூழ் உருவாக்கவும் உகந்ததாகும். இரு வரிசை வாற்கோதுமை தூய முளைக்கூழ் உருவாக்க உகந்ததாகும். நால் வரிசை வாற்கோதுமை நுண்ணுயிர் பகுப்புக்கு உகந்ததல்ல.[4] தற்கால மரபின ஆய்வு இருவரிசை வாற்கோதுமையில் மியூட்டேசன் நடப்பதால் அவை ஆறு வரிசை வாற்கோதுமையாக மாறுவதாக காட்டுகின்றன.[5]

மேலும், தீட்டப்பட வேண்டிய (கூடுள்ள) மற்றும் கூடற்ற வாற்கோதுமை எனவும் பார்லியை வகைப்படுத்தலாம். இவற்றுள் கூடுள்ள வகைகள் தொன்மையானவை.

உற்பத்தி[தொகு]

அதிக அளவில் வாற்கோதுமை விளைவிக்கும் நாடுகள்

 1. ரஷ்யா - 72,000 ச.கி.மீ
 2. கனடா - 45,000 ச.கி.மீ
 3. உக்ரைன் - 37,000 ச.கி.மீ
 4. துருக்கி - 36,000 ச.கி.மீ
 5. ஸ்பெயின் - 33,000 ச.கி.மி
 6. ஆஸ்திரேலியா - 30,000 ச.கி.மீ
 7. மொரோக்கோ - 23,000 ச.கி.மீ
 8. யு. எஸ். ஏ - 21,000 ச.கி.மீ
 9. ஈராக் - 12,000 ச.கி.மீ
 10. ஈரான் - 10,000 ச.கி.மீ

பயன்கள்[தொகு]

வாற்கோதுமை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான உணவு தானியமாகும். வாற்கோதுமை உவர்மண்ணில் கோதுமையைக் காட்டிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இதனாலேயே கி.மு இரண்டாயிரத்தில் மெசபடோமியாவில் வாற்கோதுமை பயிரிடுதல் அதிகரித்திருக்கலாம். அதே போல ரை பயிரைக்கட்டிலும் அதிக குளிர் தாங்கும் சக்தியும் வாற்கோதுமைக்கு உண்டு.

வாற்கோதுமை முளைக்கூழ் பியர் மற்றும் விஸ்கி தயாரிப்பில் ஒரு முக்கிய இடுபொருளாகும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. "FAOSTAT". Food and Agriculture Organization of the United Nations. மூல முகவரியிலிருந்து 8 May 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-18.
 2. Zohary, Daniel; Maria Hopf (2000). Domestication of Plants in the Old World: The Origin and Spread of Cultivated Plants in West Asia, Europe, and the Nile Valley (3rd ed.). Oxford University Press. பக். 59–69. ISBN 0-19-850357-1. http://books.google.com/?id=C1H6_XWJS_gC&pg=PA59&vq=barley&dq=Domestication+of+Plants+in+the+Old+World:+The+Origin+and+Spread+of+Cultivated+Plants+in+West+Asia,+Europe,+and+the+Nile+Valley. 
 3. Dai, F.; Nevo, E.; Wu, D.; Comadran, J.; Zhou, M.; Qiu, L.; Chen, Z.; Beiles, A. et al. (2012). "Tibet is one of the centers of domestication of cultivated barley". Proceedings of the National Academy of Sciences 109 (42): 16969. doi:10.1073/pnas.1215265109. http://www.pnas.org/content/early/2012/10/01/1215265109.abstract.html?etoc. 
 4. Adrian Johnston, Scott Murrell, and Cynthia Grant. "Nitrogen Fertilizer Management of Malting Barley: Impacts of Crop and Fertilizer Nitrogen Prices (Prairie Provinces and Northern Great Plains States)". International Plant Nutrition Institute. பார்த்த நாள் 2009-05-28.
 5. Komatsuda, T.; Pourkheirandish, M; He, C; Azhaguvel, P; Kanamori, H; Perovic, D; Stein, N; Graner, A et al. (2006). "Six-rowed barley originated from a mutation in a homeodomain-leucine zipper I-class homeobox gene". Proceedings of the National Academy of Sciences of the United States of America 104 (4): 1424–1429. doi:10.1073/pnas.0608580104. பப்மெட் 17220272. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாற்கோதுமை&oldid=2035295" இருந்து மீள்விக்கப்பட்டது