திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் (Tiruvannamalai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவண்ணாமலை ஆகும். திருவண்ணாமலை மாவட்டம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
வரலாறு
[தொகு]இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீக சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும்கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று. பண்டைய காலத்தில் அண்ணாமலை என்பது அடையமுடியாத மலை என்று பொருள்கொள்ளத்தக்கதாய் இருந்தது. பின்பு இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடை மொழி முன்னொட்டாக சேர்த்து திருவண்ணாமலை என்று வழங்கப்படுகிறது.அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. கட்டக்கலையிலும், பெருவிழாக்களினாலும் திருவண்ணாமலை கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் தீபத்திருவிழா தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இவை தவிர்த்து ஆரணி, தேவிகாபுரம், வந்தவாசி போன்ற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கிய கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. சோழர்களின் கீழ் குறுநில மன்னராக விளங்கிய சம்புவராயர்கள் பின்பு படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசாட்சி அமைத்து ஆண்டுவந்துள்ளார். ஆரணியின் உள்ள கோட்டை கைலாசநாதர் கோயிலும் கோட்டை பகுதிகளும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து 1989 ஆம் அண்டு செப்டம்பர் 30 தேதி முதல் இயங்கிவருகிறது.1989 ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் வன்னிய மன்னன் சம்புராயர் என்று இருந்த பெயரை 1989 வட ஆற்காடு மாற்றியது தமிழக அரசு. பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது. இந்த திருவண்ணாமலை மாவட்டம் அப்போது திருவண்ணாமலை வட்டம், செங்கம் வட்டம், போளூர் வட்டம், ஆரணி வட்டம், வந்தவாசி வட்டம், செய்யார் வட்டம் ஆகிய ஏழு வருவாய் வட்டங்களை உள்ளடக்கி 1989 ஆம் ஆண்டு மாவட்டமாக உருவானது.[1] ஆனால் தற்போது கீழ்பெண்ணாத்தூர் வட்டம், தண்டராம்பட்டு வட்டம், சேத்துப்பட்டு வட்டம், கலசப்பாக்கம் வட்டம், சமுனாமரத்தூர் வட்டம், வெம்பாக்கம் வட்டம் ஆகிய வட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு தற்போது 12 வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை வருவாய் கோட்டம், செய்யார் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்தன.தற்போது கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரணி வருவாய் கோட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் மூன்று வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது.
புவியியல்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தினாலும், தெற்கே கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6188 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 28 வது மாவட்டமாகும்.
இம்மாவட்டத்தில் செய்யாறு, தென்பெண்ணை ஆறு, நாகநதி ஆறு மற்றும் கமண்டல ஆறுகள் பாய்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]6,188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின், 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 24,64,875 ஆகும். அதில் ஆண்கள் 1,235,889 ஆகவும்; பெண்கள் 1,228,986 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 12.75% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 930 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 398 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 74.21 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 272,569 ஆகவுள்ளனர்.[2] இம்மாவட்ட மக்கள் தொகையில் இந்துக்கள் 93.08%, இசுலாமியர்கள் 3.72%, கிறித்துவர்கள் 2.72% மற்றவர்கள் 0.48% ஆக உள்ளனர்.
2011 கணக்கெடுப்பின் படி திருவண்ணாமலை மாவட்ட நகரங்களின் மக்கள்தொகை:[3]
நகரம் | மக்கள்தொகை | நகரம் | மக்கள்தொகை | ||
---|---|---|---|---|---|
1 | திருவண்ணாமலை | 3,80,543 | 11 | காந்திநகர் | 45,571 |
2 | ஆரணி | 1,43,783 | 12 | களம்பூர் | 31,751 |
3 | வந்தவாசி | 1,16,452 | 13 | வேட்டவலம் | 28,059 |
4 | போளூர் | 1,01,420 | 14 | தேவிகாபுரம் | 27,786 |
5 | திருவத்திபுரம் | 87,901 | 15 | புதுப்பாளையம் | 25,374 |
6 | செங்கம் | 74,901 | 16 | அனக்காவூர் | 24,329 |
7 | சேத்துப்பட்டு | 59,580 | 17 | கண்ணமங்கலம் | 22,870 |
8 | கலசப்பாக்கம் | 46,910 | 18 | பெரணமல்லூர் | 22,619 |
9 | ஆதமங்கலம் புதூர் | 21750 | 19 | கீழ்பெண்ணாத்தூர் | 21308 |
10 | ஜமுனாமரத்தூர் | 16768 | 20 | படவேடு | 16454 |
மாவட்ட நிர்வாகம்
[தொகு]திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் திருவண்ணாமலையின் புறநகர் பகுதியான வேங்கிக்கால் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 54 உள்வட்டங்களும், 1064 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4]
வருவாய் கோட்டங்கள்
[தொகு]இவற்றில் ஆரணி வருவாய் கோட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள கோட்டமாக விளங்குகிறது.[5]
வருவாய் வட்டங்கள்
[தொகு]திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
[தொகு]ஆரணி வருவாய் கோட்டம்
[தொகு]செய்யார் வருவாய் கோட்டம்
[தொகு]ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
[தொகு]இம்மாவட்டம் 34 உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 18 ஊராட்சி ஒன்றியங்களையும்[6], 850 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[7]. மேலும் இம்மாவட்டம் நான்கு நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.[8]
ஊராட்சி ஒன்றியம்
[தொகு]- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்
- துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம்
- கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- ஆரணி ஊராட்சி ஒன்றியம்
- ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்
- போளூர் ஊராட்சி ஒன்றியம்
- சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
- சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம்
- செங்கம் ஊராட்சி ஒன்றியம்
- தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம்
- புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
- கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
- செய்யார் ஊராட்சி ஒன்றியம்
- வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
- அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம்
- வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்
- பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம்
- தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்
நகராட்சிகள்
[தொகு]பேரூராட்சிகள்
[தொகு]- போளூர்
- சேத்துப்பட்டு
- செங்கம்
- கண்ணமங்கலம்
- களம்பூர்
- தேசூர்
- கீழ்பெண்ணாத்தூர்
- பெரணமல்லூர்
- புதுப்பாளையம்
- வேட்டவலம்
காவல்துறை அமைப்புகள்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் திருவண்ணாமலை, ஆரணி, போளூர், செங்கம், செய்யார், வந்தவாசி ஆகிய 6 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 30 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியல்
[தொகு]இம்மாவட்டம் இரண்டு மக்களவைத் தொகுதிகளும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.[9]
மக்களவைத் தொகுதிகள்
[தொகு]தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் இந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யார் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் சேர்த்து இந்த ஆரணி மக்களவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
18வது மக்களவைத் தொகுதி(2024-2029) | |||
11 | திருவண்ணாமலை | திரு.சி.என்.அண்ணாதுரை | திமுக |
12 | ஆரணி | திரு.எம். எஸ். தரணிவேந்தன் | திமுக |
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தொகுதி மறுசீரமைப்பு காரணமாக இந்த மாவட்டத்தில் 8சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.திருவண்ணாமலை, ஆரணி, செய்யார், போளூர், வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய சட்டமன்றத்தொகுதிகள் ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் | ||||
---|---|---|---|---|
16வது சட்டமன்றத் தொகுதி(2021-2026) | ||||
62. | செங்கம் | திரு.மு. பெ. கிரி | திமுக | |
63. | திருவண்ணாமலை | திரு.எ. வ. வேலு | திமுக | |
64. | கீழ்பெண்ணாத்தூர் | திரு.கு. பிச்சாண்டி | திமுக | |
65. | கலசப்பாக்கம் | திரு.பெ. சு. தி. சரவணன் | திமுக | |
66. | போளூர் | திரு.அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | |
67. | ஆரணி | திரு.சேவூர்.இராமச்சந்திரன் | அதிமுக | |
68. | செய்யார் | திரு.ஓ. ஜோதி | திமுக | |
69. | வந்தவாசி | திரு.ச. அம்பேத்குமார் | திமுக |
போக்குவரத்து
[தொகு]சாலை வசதிகள்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக சில முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கிறது.
பேருந்து சேவைகள்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து வசதிக்காக 10 பேருந்து பணிமனைகள் உள்ளன.
எண் வரிசை | பணிமனை | குறியீடு | அமைந்துள்ள இடம் |
---|---|---|---|
1 | திருவண்ணாமலை | TVM1 | காஞ்சி சாலை, திருவண்ணாமலை |
2 | திருவண்ணாமலை-2 | TVM2 | புறவழிச்சாலை, திருவண்ணாமலை |
3 | திருவண்ணாமலை-3 | TVM3 | தேனிமலை,
தண்டராம்பட்டு சாலை,திருவண்ணாமலை |
4 | ஆரணி | ARN | ஆற்காடு - விழுப்புரம் சாலை, ஆரணி |
5 | வந்தவாசி | WWH1 | ஆரணி - திண்டிவனம் சாலை, வந்தவாசி |
6 | வந்தவாசி-2 | WWH2 | ஆரணி - திண்டிவனம் சாலை, வந்தவாசி |
7 | செய்யாறு | CHR | ஆரணி - காஞ்சிபுரம் சாலை, செய்யாறு |
8 | சேத்துப்பட்டு | CET | ஆற்காடு - விழுப்புரம் சாலை, சேத்துப்பட்டு |
9 | செங்கம் | CGM | செங்கம் - ஆரணி சாலை, செங்கம் |
10 | போளூர் | PLR | சித்தூர் - கடலூர் சாலை, போளூர் |
11 | திருவண்ணாமலை, ஆரணி மற்றும் வெளி மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் | KBD | கோயம்பேடு, சென்னை |
ஆகிய பேருந்து பணிமனைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]
நீர்வளம்
[தொகு]சாத்தனூர் அணை, செண்பகத் தோப்பு அணை மூலம் அதிகம் பாசண வசதிப் பெறுகிறது.
ஆறுகள்
[தொகு]இதில் ஒரு ஆறு ஜவ்வாது மலையின் தெற்கு பகுதியில் இருந்து தட்டங்கொல்லை வழியாக புதுப்பேட்டை எரி வழியாக செங்கம் சென்று செய்யாற்றில் கலக்கிறது
வேளாண்மை
[தொகு]நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112,013 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271,411 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இங்கு ஆரணி அரிசி இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றாகும். ஆரணி நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் அதிகம் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். இந்த ஆரணி அரிசி உற்பத்தியில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னயில் உள்ள மாவட்டமாகும். இங்கு உருவாகும் முதல்தரமான ரகம் என்பதால் மாநிலத்தின் பிற பகுதிக்கும் பிறமாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நெற் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும் சிறந்து விளங்குகிறது. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்று ஆகும். நெற்பயிர் தவிர்த்து கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களும் வேர்கடலை, சோளம், கம்பு போன்ற புன்செய் பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஜவ்வாதுமலையில் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு பலா, சீத்தா போன்ற பழவகைகளும் பயிரிடப்படுகின்றன. படவேடு பகுதியில் அதிக அளவு வாழை பயிரிடப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 56 சதவீதம் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர்.
மண் வகைமை
[தொகு]பெரும்பாலன மாவட்ட மண்ணானது, சிவப்பு அல்லாத சுண்ணாம்பு வகை மண் வகையாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 261,040 எக்டேர் ஆகும். அத்தோடு,வண்டல் கருப்பு நிறத்திலும், சுண்ணாம்பு மண் 19,196 எக்டேர் பரப்பளவில்காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரமாக குளங்கள், தோண்டப்பட்ட கிணறுகள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். மொத்த மற்றும் நிகர சாகுபடி பகுதி முறையே 304,929 மற்றும் 230,282 எக்டேர் ஆகும்.[10] நெல், நிலக்கடலை, பருப்பு வகைகள், தினை, மற்றும் கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மரவள்ளிக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவை முக்கிய பயிர்கள். இது தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பயனடைகிறது. பொதுவான காலநிலை வெப்பமண்டலமாகும். பால் மற்றும் பட்டு வளர்ப்பு என்பது மாவட்டத்தில் வருமானம் ஈட்டும் மற்ற நடவடிக்கைகளாகும். 356 எக்டேர்கள் மல்பெரி சாகுபடியின் கீழ் உள்ளன. வேளாண் வணிகங்கள் மற்றும் விவசாய பொருட்களின் ஏற்றுமதிக்கு, இந்த மாவட்டம் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
தொழில்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டம் தொழிற்சாலைகள் குறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் வேளாண்மைச் சார்ந்த கரும்பு சர்க்கரை ஆலைகள், செய்யார், போளூர் மற்றும் ஆரணி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஆரணி சேவூரில் லட்சுமி சரஸ்வதி பஞ்சாலை அமைந்துள்ளது மற்றும் ஆரணி பகுதியில் அரிசி பதனிடும் தொழிற்சாலைகள் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. செய்யார் சிப்காட் தொழில் வளாகத்தில் காலணிகள், மோட்டார் உதிரி பாகங்கள் ஆகியன உற்பத்திசெய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் கருப்பு கற்கள், வண்னக்கற்கள், மென்கற்கள் அதிக அதிக அளவில் கிடைக்கின்றன. இதனைக்கொண்டு கிரானைட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
நெசவுத் தொழில்
[தொகு]இம்மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும்.ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும். கைத்தறி பட்டு நெசவு தவிர விசைத்தறி பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன. ஆரணி சேலை உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது.[சான்று தேவை] ஆரணி சேலை புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
அரிசி சார்ந்த வேளாண்மை தொழில்
[தொகு]மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் சார்ந்த வேளாண்மை சார்ந்த தொழிலாக உள்ளது. பொன்னி எனும் ஒரு வகை ரகம் கொண்ட அரிசி ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும். ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் 350க்கும் அதிகமான அரிசி ஆலைகள் உள்ளன. மேலும் இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மற்றும் அண்டை நாடுகளுக்கும் இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது. இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது. [11]
செய்யாறு சிப்காட்
[தொகு]தமிழ்நாடு அரசின் மூலம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் மாங்காய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகம் சார்பில் தொழிற்பேட்டை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது. செய்யாறு சிப்காட் டில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள், மஹேந்திரா மற்றும் ஸ்விங்ஷட்டர் ஆகிய பெருங் நிறுவனங்கள் மற்றும் Voltas switch ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. [12]
பாய் நெசவு தொழில்
[தொகு]இம்மாவட்டத்தின் அடுத்த முக்கியத் தொழிலாக பாய் நெசவு ஆகும். வந்தவாசி பாய் மிகவும் பிரசித்தி பெற்றது. வந்தவாசி, தேசூர், பெரணமல்லூர் மற்றும் தெள்ளாறு ஆகிய பகுதிகளில் பாய் நெசவு மிக சிறப்பாக செய்யப்படுகிறது. [13]
நாமக்கட்டி தொழில்
[தொகு]இம்மாவட்டத்தின் அடுத்த முக்கிய தொழிலாக நாமக்கட்டி செய்யும் தொழில் ஆகும். ஜடேரி நாமக்கட்டி என்று அழைக்கப்படும் நாமக்கட்டி செய்யாறு அடுத்த ஜடேரி எனும் கிராமத்தில் செய்யப்படுகிறது. இங்கு ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக இந்த கிராம் மக்கள் பரம்பரைத் தொழிலாக நாமக்கட்டிகளைச் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி, ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு கொடுத்தும் அரசு அங்கிகரித்துள்ளது. [14]
சுற்றுலாத் தலங்கள்
[தொகு]- மாவட்டத்தின் தலைநகரான திருவண்ணாமலை நகரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று. இந்நகரில் உள்ள அருள் மிகு அண்ணாமலையார் கோவிலும், இரமண மகரிஷி ஆசிரமமும் உலகப் புகழ் பெற்றவை. திரு அண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் ஒன்று. இங்கு இறைவர் நெருப்பின் வடிவில் வணங்கப் பெறுகிறார். பௌர்ணமி கிரிவலம் தமிழ்நாட்டில் புகழ் பெற்று வருகிறது
- சவ்வாது மலை தொடர் மற்றும் அதைச் சுற்றி உள்ள நிர்வீழ்ச்சிகள் மற்றும் வனம் சுற்றுலா மற்றும் கோடைஸ்தலமாக உள்ளது.
- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணை மற்றும் சவ்வாது மலை மலை அடிவாரத்தில் கமண்டல நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செண்பகத்தோப்பு அணை ஆகியவை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
- செய்யார் நகரில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலமான வேதபுரிஸ்வரர் ஆலயம்
- வந்தவாசிக்கு அருகில் தென்னாங்குரிலுள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலயம்
- தூசிக்கு அருகில் குரங்கணில்முட்டம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாலீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி (தூசி மாமண்டூர் ஏரி),
- ஆரணி நகரில் அமைந்துள்ள ஆரணி கோட்டை, தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு கனககிரிஸ்வர் மலைக்கோயில், ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில், முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில், ஆரணி நகரிலுள்ள புத்திர காமேட்டீஷ்வரர் கோவில், ஆரணிக்கு அருகில் விஜய நகரில் உள்ள கோட்டை, ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோவில், எந்திர சனீஸ்வர பகவான் கோவில், நடுக்காட்டில் அமைந்துள்ள ஜாகிர்தார் தன் காதலிக்காக கட்டிய ஆரணி அரண்மனை மற்றும் சத்தியவிஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ஆரணி அரண்மனை மாளிகை ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.
கல்வி
[தொகு]இந்த மாவட்டத்தில் மொத்தம் 1798 ஆரம்ப பள்ளிகளும், 219 உயர்நிலைப் பள்ளிகளும், 160 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவை தவிர ஜவ்வாதுமலையில வனத்துறை பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி, ஆகியனவும் நகரங்களில் மத்திய அரசின் கண்காணிப்பில் வரும் CBSE பள்ளிகளும் மாணவர்களுக்கு கல்வி அளித்து அறிவு புகட்டி வருகின்றன. நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை, செய்யார், ஆரணி, செங்கம், போளூர் என 5 கல்வி மாவட்டங்கள் உள்ளது.[15]>
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்
[தொகு]உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
[தொகு]கல்லூரிகள்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் 1 மருத்துவக் கல்லூரியும் மற்றும் 1 அரசு கலைக்கல்லூரியும், ஆரணியில் 1 அரசு பொறியியல் கல்லூரியும், செய்யார் மற்றும் வந்தவாசியில் 1 கலைக்கல்லூரியும் அமைந்துள்ளது
தொழிற்பயிற்சி நிலையங்கள்
[தொகு]மாவட்ட பிரிப்பு கோரிக்கை
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய வருவாய் தரும் கோட்டமாகவும், தற்போதைய மாவட்டத்தில் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமாகவும், பட்டு மற்றும் அரிசிக்கு பெயர் பெற்றுள்ள நகரமாக உள்ளதால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணி, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி ஆரணி தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு 30.8.2019 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.[16][17][18][19]
ஆரணி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 22.03.2021 ஆம் தேதி ஆரணியில் நடந்த தேர்தல் பரப்புரையில் திரு.எடப்பாடி க. பழனிசாமி அவர்கள் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.[20].
புதிய வருவாய் வட்டம் கோரிக்கை
[தொகு]வந்தவாசி வட்டத்தில் இருந்து பெரணமல்லூர் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டமும், ஆரணி மற்றும் போளூர் வட்டத்தில் இருந்து கண்ணமங்கலம் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டமும், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் ஆகிய வட்டங்களில் இருந்து துரிஞ்சாபுரம் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டமும், செங்கம் மற்றும் கலசப்பாக்கம் ஆகிய வட்டங்களில் இருந்து புதுப்பாளையம் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டங்கள் உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே நீண்ட நாள் கோரிக்கை உள்ளது.[21]
சுகாதாரம்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் வாழும் மக்களுக்கு சுகாதாரம் பேண 417 சுகாதார துணை மையங்களும் 99 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 20 அரசு மருத்துவமனைகளும் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையும் அமைந்து நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடை பராமரிப்பிற்கென 5 மருத்துமனைகளும் 113 மருந்தகங்களும் உள்ளன.
அரசு மருத்துவமனைகள்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்காக திருவண்ணாமலை, செய்யார் என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் செய்யாரில் மாவட்ட தலைமை மருத்துவமனையும் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆரணி, வந்தவாசி, போளூர், செங்கம், தானிப்பாடி, கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, வெம்பாக்கம், தண்டராம்பட்டு ஆகிய 10 அரசு மருத்துவமனைகள், 99 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் 417 துணைச் சுகாதார மையங்கள் மற்றும் ஒரு மாவட்டக் காச நோய் மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.[22]
கோயில் சொத்துகள்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோயில் சொத்தின் பரப்பளவு 1967.05 ஹெக்டேர் ஆகும்.[23][24]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://tiruvannamalai.nic.in/about-district/
- ↑ Tiruvannamalai District : Census 2011 data
- ↑ Census of India 2011: Provisional Population Totals. Cities having population 1 lakh and above.
- ↑ திருவண்ணாமலை மாவட்ட வருவாய் நிர்வாகம்
- ↑ [1]
- ↑ "திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
- ↑ ஊரக வளர்ச்சி அமைப்புகள்
- ↑ உள்ளாட்சி அமைப்புகள்
- ↑ Elected Representatives
- ↑ http://agritech.tnau.ac.in/govt_schemes_services/pdf/govt_schemes_nadp_dap_Tiruvannamalai.pdf
- ↑ ஆரணி... அரிசி ஆலைகளின் களஞ்சியம்!
- ↑ சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
- ↑ வந்தவாசி பாய் நெசவு தொழில்
- ↑ ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு.
- ↑ திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி
- ↑ "Minister visits villages to receive grievance applications" (in en-IN). The Hindu. 31 August 2019. https://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-visits-villages-to-receive-grievance-applications/article29303360.ece. பார்த்த நாள்: 1 April 2020.
- ↑ "ஆரணி புதிய மாவட்டம் ஆக்கப்படும்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்". Archived from the original on 2019-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-18.
- ↑ ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: அமைச்சர் ராமச்சந்திரன்
- ↑ புதிய மாவட்டமாக ஆரணி உருவாகும் - அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் உறுதி
- ↑ ஆரணி தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என இபிஎஸ் உறுதி
- ↑ பெரணமல்லூர் தனி தாலுகாவாக உருவாக்க கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு
- ↑ திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-17. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.