காட்டாம்பூண்டி ஊராட்சி
காட்டாம் பூண்டி மோட்டாம் பாறை
காடு + பூண்டி = காட்டாம் பூண்டி
"பூண்டி" என்ற சொல்லுக்கு "குடியிருப்பிடம்" என்ற பொருள் உண்டு, "சூழ்ந்து கொள்ளுதல்" என்னும் வினை அடிப்படையில் இச்சொல் தோன்றியுள்ளதால் காடு கூட்டல் பூண்டி காட்டாம் பூண்டி, அதாவது காடுகளால் சூழப்பட்ட குடியிருப்பிடம் என்று கொள்ளலாம். இங்கு காடு என்பது நில தோற்றத்தை ஒட்டிய குடியிருப்பினை குறிக்கும் முன்னொட்டாகும். சிற்றூர்களை குறிக்கும் பல சொற்களில் பூண்டியும் ஒன்றென சேந்தன் திவாகரமும், சூடாமணி நிகண்டும் குறிப்பிடுவதால் இந்த நிலம் மருதத்திணையில் அமைந்த பகுதி என்பதை உணரலாம். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பூண்டி என்ற சொல்லாடல் வழக்கில் இருப்பதால் காட்டாம் பூண்டியின் காலத்தை குறைந்தபட்சம் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். ஆனால் காட்டாம் பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் தரவுகளையும் கல்வெட்டுகளையும் கொண்டு நாம் ஆயும் பொழுது இந்த கிராமத்தின் வயதினை 2000 ஆண்டுகள் வரை முன்னோக்கி வரையறுக்க இயலும்.
இதுவரை காட்டாம் பூண்டியின் எந்த ஒரு தொல்லியல் எச்சங்களும், கல்வெட்டுகளும் வரலாற்றுச் சான்றுகளும் பதிவு செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஆகையால் கல்வெட்டுச் சான்றுகளை பொருத்தவரை காட்டாம் பூண்டியின் அருகில் அமைந்த அரடாபட்டு (அரவப்பட்டு) அனவரதாண்டேஸ்வரர் திருக்கோயிலின் கோபுரத்தில் அமைந்த கல்வெட்டுகளின் காலம் கிபி பதினான்காம் நூற்றாண்டு என்பதிலிருந்து காட்டாம் பூண்டியில் இருக்கும் சிதிலமடைந்த சிவன் கோவிலும் ஏறக்குறைய பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும், காட்டாம் பூண்டியில் உள்ள கல்வெட்டுகளையும் பதினான்காம் நூற்றாண்டு என்றும் கொள்ளலாம்.
காட்டாம் பூண்டியானது வேளாண்மையிலும், நீர் மேலாண்மையிலும், வழிபாட்டிலும், கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய நிலப்பகுதி என்பதினை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட காட்டாம் பூண்டி ஏரியும், ஏரிக்கரையில் அமைந்த கல்வெட்டுகளும் மற்றும் ஏரிக் கரையின் மேல் அமைந்த முருகன் கோவிலும், தற்கால இடுகாட்டிற்கு அருகில் அமைந்த சிவன் கோயிலும், கோயிலுக்கு அருகில் காணப்படும் சிதைந்த கல்வெட்டும், சிவன் கோயிலில் இருந்து சற்று தொலைவில் நிலத்தில் புதையுண்டு கிடக்கும் தானமாக வழங்கப்பட்டதை குறிக்கும் கல்வெட்டும், சிதிலமடைந்த கோயிலின் உதிரிபாகங்களும், அந்த கோயிலின் அருகில் அமைந்துள்ள மோர் குளம் என்று அழைக்கப்பட்ட மிகப்பெரிய நீர் நிலையும், வீடு கட்ட தோண்டினால் கிடைக்கும் பழைய அம்மிக்கல்லும், உரலும், தற்போதைய வேளாண் நிலங்களில் காணப்படும் சிதைந்த ஓடுகளும், முன்னோர்கள் கண்ட முதுமக்கள் தாழிகளும், புகைப்பிடிப்பானின் அழகிய கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய சிதிலமடைந்த துண்டுகளும், பல்வேறு நீர்நிலைகளும் இன்னும் பல்வேறு காரணிகளும் நமக்கு உணர்த்துகின்றன. ஏரிக்கரையில் காணப்படும் கல்வெட்டுகளின் எழுத்துக்களின் பல்வேறு நிலைகளைக் கொண்டு காட்டாம்பூண்டி கிராமமானது ஆயிரக்கணக்கான வருடங்களாக அரசியல் முக்கியத்துவம் பெற்று தொடர்ந்து இயங்கி வருவது [1].
திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் வழியில் திருவண்ணாமலையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் காட்டாம் பூண்டி கிராமம் அமைந்துள்ளது. ஒரு முறை நான் காட்டாம் பூண்டி சிவன் கோவிலுக்கு இந்தக் கல்வெட்டுகள் தொடர்பாக காணச் சென்ற பொழுது அங்கே முதியவர் ஒருவர் இருந்தார், அவர் என்னைக் குறித்து விசாரித்து முடித்த பின்பு தான் அறிந்த ஒரு செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் ஏரிக் கரையின் மேல் அமைந்த முருகன் கோவிலின் சுற்று சுவருக்குள் காணப்படும் பாறையில் காட்டாம் பூண்டி மோட்டாம் பாறை என்ற கல்வெட்டினை சிறுவயதில் படித்ததாக நினைவு கூறினார். தற்போது காட்டாம் பூண்டி முருகன் கோவிலுக்கு உள்ளே தரையானது காரை போடப்பட்டு பாறை மறைக்கப்பட்டுள்ளது. அவரது மோட்டாம் பாறை என்ற இந்த தகவலை உள்வாங்கியதின் நோக்கம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதர்களின் வாழ்விடங்கள் பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்தாலும் மேட்டுப்பாங்கான நிலங்களிலும் அதிலும் குறிப்பாக செம்மண் நிலங்களில் அமைந்துள்ளது. முந்தைய பதிவில் காட்டாம் பூண்டி ஊரானது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான மூவாயிரம் ஆண்டுகள் வரையும் இன்று தொல்லியல் அறிஞர்களால் வரையறுக்கப்படும் பெருங்கற்கால சான்றான கற்குவியல் களும் ஏராளமான அளவில் காட்டாம் பூண்டி காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இது தவிர காட்டாம் பூண்டி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வந்ததற்கான பல்வேறு தடயங்களும் கிடைத்துள்ளன இவற்றுள் குறிப்பாக காட்டுக்குள் அமைந்திருக்கும் கண்ணமடை (கொன்னமடை) அய்யனார் கோயிலும் அங்கு ஆடி மாதங்களில் செய்யப்படும் முன்னோர் வழிபாடும், ஆடி மாதத்தில் அங்கு வரும் ஆயிரக்கணக்கான அந்த மண்ணின் மக்களும், அந்த இடம் தொன்று தொட்டு மக்களின் பூர்வீக பகுதியாக விளங்குவதை உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகிறது. கண்ணமடை அய்யனார் கோயிலுக்கு முன்பாகவே திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் சிவன் கோயில் 1 சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது அதனை ஒட்டி கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர காட்டுக்குள் இருந்து பாவுப்பட்டு செல்லும் வழியில் வலது பக்கமாக சிறிது தூரம் சென்றாள் காட்டுக்குள் ஒரு குளம் அமைந்துள்ளது அந்த குளத்தின் கரையில் இடிபாடுடன் சிதைந்த செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டிடம் காணப்படுகிறது. இது தவிர்த்து வள்ளி மலையிலிருந்து காட்டுக்குள் பிரியும் பாவுப்பட்டு கூட்டு சாலைக்கு சற்று முன்பாகவே சாலையை ஒட்டி அமைந்துள்ள உரல் போன்ற அமைப்பு ஒன்றும், அதன் அருகிலேயே காட்டுக்குள்ளே சிறிது தூரம் சென்றால் காணப்படும் மிகப் பெரிய பாறையும், அந்த பாறையில் 2 உரல் போன்ற அமைப்பு தெளிவாகவும் ஒரு உரல் சிதைவுற்றும் காணப்படுகிறது. இந்த பாறையை ஒட்டி அடுக்கப்பட்டுள்ள கற்குவையும், சிறிது தொலைவில் காணப்படும் மற்றொரு கற்குவையும் செதுக்கப்பட்ட கற்களால் வைக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் உடைந்து பானைகளின் ஓடுகளும் சிறுசிறு செங்கல் துண்டுகளும் காணப்படுகின்றன. இங்கே செதுக்கப்பட்ட அல்லது மனிதனால் உடைக்கப்பட்ட கற்கள், உடைந்த பானை ஓடுகள் மற்றும் உரல் போன்ற அமைப்புகளை கொண்டு இந்த இடத்தினை ஒப்பீட்டு காலக் கணக்கெடுப்பின் படி கி-மு இரண்டாம் நூற்றாண்டு முதல் வரலாற்றுக் காலத்தில் சித்தர்கள் அல்லது மருத்துவர்களோ இங்கு வசித்திருக்கலாம் என்று உணர்கிறோம்.
சுக்காம் பாளையம்
சுக்கம்பாளையம் திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் காட்டாம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
[2] ஊர் பெயர் சுக்காம்பாளையம். ஒரு சிலர் எங்கள் ஊர் பெயர் காரணமாக சுக்கம் பழம் அதிகமாக விளைவதுதான் என்று கூறுவர். எங்களூரில் களைச்செடியாக மிகுதியான அளவில் சுக்கன் செடி பரவிக் கிடப்பதால் எங்கள் ஊருக்கு சுக்காம்பாளையம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். இந்த சுக்கம் பழமானது மானாவாரி மேட்டுப்பாங்கான நிலங்களில் அதிகப்படியாக இயற்கையாக விளைகிறது. இவற்றின் வளரியல்பு பொதுவாக ஆடி மாதம் தொடங்கி மானாவாரி பயிரிடும் புரட்டாசி ஐப்பசி மாதங்களில் அதிகப்படியாக இனப்பெருக்கம் அடைகின்றன. இந்த பழத்தை நாங்கள் சிறுவயது முதல் இன்று வரையும் விரும்பி உண்ணுவோம்.
பாளையம் என்ற ஊருக்கான பின் ஓட்டின் பொருள் ஆனது படைகள் சூழ்ந்து பாடி தங்குமிடம் என்பதால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த விஜயநகர தெலுங்கர்கள் தங்களது படை தளத்தினை காட்டாம் பூண்டியில் நிறுவ எத்தனித்து இருக்க வேண்டும், ஆனால் முன்பு செல்வ செழிப்பாக வாழும் ஒரு பூர்வீக இன குழுவிற்க்குள் தங்களது இனக்குழுவினை நிறுவுவது கடினமான செயல் என்பதனால் காட்டாம் பூண்டியின் தற்போதைய ஊருக்கு வெளியில் அமைந்த பகுதியினை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அதெப்படி நீங்கள் படையெடுத்து தங்கி பாடி வாழ்ந்த கூட்டத்தினரை தெலுங்கர்கள் என்று கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலாக தற்சமயம் சுக்கம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட சில குடும்பங்களே சான்றாக விளங்குகின்றனர். இந்த ஒரு சான்று போதுமா என்று கேட்போருக்காகவே இன்றைய சுக்கம்பாளையம் கிராமத்தின் ஊர் பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான வீட்டு மனைகளும் நிலங்களும் அவர்களது முன்னோர்களிடமிருந்து வாங்கப்பட்டதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. அப்படி என்றால் சுக்காம்பாளையம் கிராமத்தின் வரலாறு கிபி 14 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்குகிறதா என்ற கேள்விக்கு விடையாக அதற்கு முன்பே தற்போதைய சுக்கம்பாளையம் கிராமத்தின் வடக்கு மேட்டு பகுதியில் அமைந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த தடையங்கள் குறித்து மறைந்த மு அய்யாக்கண்ணு அவர்களிடம் கேட்ட போது அவர் சுக்கம்பாளையம் வடக்கு மேட்டு பகுதியில் தமது நிலங்களில் சிதிலமடைந்த பானை ஓடுகளும், முதுமக்கள் தாழிகளும், புகைப்பான்களும் கிடைத்ததை விவரிக்கிறார். மானாவாரி நிலமான வடக்கு மேட்டு பகுதியானது மேற்கிலிருந்து கிழக்கிற்கு பள்ளமாகவும், வடக்கில் இருந்து தெற்கிற்கு பள்ளமாகவும் இருந்ததாக பதிவு செய்கிறார். மேலும் அனைத்து நிலங்களும் ஒஞ்சரிவு என்று அழைக்கப்படும் ஒரு பக்கம் மேடாகவும் மறுபக்கம் ஒரே சீரான பள்ளமாகவும் இருந்ததையும் மேலும் தமது நிலத்தில் ஓடை ஒன்று ஓடியதையும் நினைவு கூறுகிறார். இந்த நிலங்கள் ஆனது மானாவரி பயிர் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சாத்தனூர் அணையிலிருந்து காட்டாம் பூண்டி கிராமத்திற்கும் நீர் பாசனத்திற்கு வந்ததால் நெல் பயிரிடும் பொருட்டு இந்த நிலங்கள் அனைத்தும் சமன் செய்யப்பட்டது. அப்படி சமன் செய்யும் பொழுது அதற்கு முன்பு தாம் கண்ட சிதிலமடைந்த பானை ஓடுகள் மற்றும் சில பொருட்களைத் தவிர மேலும் சிதிலமடையாத முதுமக்கள் தாழிகளை நிறைய கண்டதாகவும் அவற்றை முன்னோர்களின் மேலுள்ள பற்றினாலும், இயந்திரங்களின்மையினாலும் பெரிய அளவிலான சேதாரங்கள் இன்றி அவற்றில் மண்ணிற்குள் இருப்பவற்றை அப்படியேயும் மேட்டுப்பாங்கான நிலங்களை வெட்டி சமன் செய்யும் பொழுது மண்ணிற்கு வெளியே தட்டுப்படும் முதுமக்கள் தாழிகளை பள்ளங்களில் வைத்து மண்களால் நிரப்பியும் சமன் செய்யப்பட்டதை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இவருடைய வார்த்தையின் நம்பகத் தன்மையானது இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றிருந்தாலும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பே முதுமக்கள் தாழி என்பது முந்தைய காலத்தில் வாழ்ந்த வயது முதிர்ந்த தமது தேவைகளான உணவு உண்ணுதல் கழிவு வெளியேற்றுதல் போன்ற தேவைகளுக்கு கூட பிறரை நம்பி வாழும் சூழ்நிலையில் இருந்தவர்களையும், இம் மண்ணுலக வாழ்வில் தத்தமது கடமைகளை முடித்துவிட்டதாக கருதி உணவு முதலானவற்றை கைவிட்ட முதியவர்களையும், எலும்பைத் தவிர தசை நரம்பு தோல் போன்றவை சுருங்கி மெலிந்து ஒரு குழந்தையாகவே மாறிய வாழ்வில் பற்றற்ற முதியோர்களையும் மிகப்பெரிய பானையில் அடிபாகத்தில் சிறிது தவிடினை கொட்டி (தவிடு ஆனது தட்பவெப்ப சூழ்நிலையை ஒரே சீராக நிலை நிறுத்தவும் ஈரப்பதத்தை உறிஞ்சவும் கதகதப்பாக வைத்திருக்கவும் கொட்டப்படுகிறது) முதியவரை அந்தப் பானைக்குள் வைத்து அவர்களுக்கு தேவையான நீர் ஆகாரம் போன்றவற்றையும் வைத்துவிட்டு தினமும் பராமரித்து வருவார்கள், எப்பொழுது அவர் உயிர் பிரிகிறதோ அதன்பின்பு அவர் பயன்படுத்திய பொருட்களையும் மறுபிறவியில் அவருக்கு தேவையென கருதும் பொருட்களையும் உடன் வைத்து மண்ணுக்குள் புதைப்பார்கள் என்று கூறினார். மேலும் உடைந்த கலைநயமிக்க புகைப்பிடிப்பான்களின் துண்டுகளை அவரிடம் காட்டி என்னவென்று கேட்ட பொழுது சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தொல்லியல் அறிவில்லாத அவர் புகை பிடிப்பான் என்று சரியாக கூறினார். இது தவிர வடக்கு மேட்டு நிலத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கு சான்றாக ஒரு உரலும், தானியங்களை உடைக்கும் ஒரு எந்திரமும் கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரால் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர சிதிலமடைந்த ஒரு உரலும் குழவியும் வடக்கு மேட்டு நிலப்பகுதியில் காணப்படுகிறது. அப்படி என்றால் பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்பு இந்த ஊர் எப்படி அடைக்கப்பட்டிருக்கும் என்ற கேள்விக்கும் விடை கிடைத்தது. அந்தப் பெயர்தான் "சுக்கான் பாறை"
தண்ணீரை நிலத்தில் ஊடுருவவிடாமல் நீர் வற்றிய பாறைகளுக்கு சுக்கான் பாறை என்று பெயர், சுக்கான் பாறை நிறைந்த பகுதி என்பதால் எங்கள் ஊரின் பெயர் சுக்கான் பாறையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது. இந்த சுக்கம் பழமானது நீர் வற்றிய உலர்ந்த நிலப்பகுதிகளில் அல்லது சுக்கன் பாறைகளில் விளைவதால் சுக்கம் பழம் என்ற பெயர் பெற்றிருக்கலாம். சுக்கான் பாறையை கொண்டிருப்பதால் எங்கள் ஊரில் மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழிந்து செல்வதையும் மேல் ஊற்று அதிகப்படியாக இருப்பதையும் காணலாம். இந்த மேலூற்றானது நீர் வற்றும் பொழுது அந்த நிலப்பகுதியில் காணப்படும் சுக்கான் பாறையின் அடிமட்ட அளவு வரை பொதுவாக நீர் இன்றியே காணப்படுகிறது. இதன் காரணமாகவே மானாவாரி பயிரிடப்படும் விவசாய நிலங்களில் அமைந்துள்ள கிணறுகள் சில நேரங்களில் முற்றிலுமாக வறண்டும் விடுகின்றன. வறட்சியை தவிர்ப்பதற்காகவே அங்கு வாழ்ந்த மக்கள் ஏரிகளையும் குளங்களையும் சீராக பராமரித்து வாழ்ந்து வந்தனர். ஏனெனில் ஏரிகள் நிரம்பி இருக்கும் வரை கிணறுகளில் மேல் ஊற்றானது எளிதில் வடிவதில்லை. சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்புவரை காட்டாம் பூண்டி மற்றும் சுக்காம்பாளையம் கிராமப் பகுதிகளில் 10 முதல் 15 அடி ஆழம் வரை மட்டுமே உள்ள கிணறுகளும் குட்டைகளும், ஓடைகளும் ஏராளமாக பராமரிக்கப்பட்டு உழவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. காட்டாம் பூண்டி ஏரியின் நீர்ப்பாசனம் ஆனது பெருமளவில் இன்றைய சுக்காம் பாளையம் நிலப்பரப்பினை வருடத்திற்கு இரண்டு முறையாவது நெல் பயிரிடும் அளவிற்கு செழிப்புடன் வைத்திருந்தது. பேராசை கொண்ட மனித இனம் தன் ஒற்றுமையின்மையாளும், யார் பெரியவர் என்ற போட்டியினாலும், சுயலாப நோக்கத்திற்காகவும் ஏரியிலிருந்து கிடைக்கும் நீரினை படிப்படியாக உழவுத் தொழிலுக்கு வாய்க்கால் வழியாக பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டனர், அதற்கு பதிலாக நீர்மூழ்கி மின்னியக்கி மூலம் நீரினை எடுத்து பயன்படுத்துகின்றனர். ஏரியிலிருந்து நீரினை மீன் வளர்ப்பதாக கூறி வறண்ட காலத்திற்க்கு முன்பே (தை, மாசி) முழுவதுமாக வெளியேற்றி விடுவார்கள். இதனால் வறண்ட காலங்களில் ஏரி காய்ந்து விடுவதால் செயற்கையான நீர் பற்றாக் குறைக்கு தள்ளப்பட்டு விவசாயிகளும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.
சுக்கான் பாறை கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்த அரசமரம் ஆனது சுமார் 100 வருடங்களுக்கு மேலாக 200 வருடங்கள் வரை பழமையானவையாக இருக்கலாம். சுக்கான் பாறை மாரியம்மன் கோயில் ஆனது காட்டாம் பூண்டி மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பு வரை காட்டாம் பூண்டி கிராம மக்களும் இங்கேயே வந்து வணங்கியதாக சிலர் கூறுகின்றனர் அவற்றின் உண்மைத் தன்மையும் வரலாற்றினையும் அடுத்து வரும் கட்டுரைகளில் நாம் காணலாம்.
சுக்கான் பாறையில் எழில் மிகுந்த அழகு புகைப்படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம். https://maps.google.com/?q=Sukkam+Palayam%2C+Tamil+Nadu+606808&ftid=0x3bacbc3d5bee7f71:0xf2279d99ac36f3d2
காட்டாம்பூண்டி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | திருவண்ணாமலை |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 3,224 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
காட்டாம்பூண்டி ஊராட்சி (Kattampoondi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3224 ஆகும். இவர்களில் பெண்கள் 1597 பேரும் ஆண்கள் 1627 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 135 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 3 |
கைக்குழாய்கள் | 14 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 9 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 60 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 12 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 2 |
விளையாட்டு மையங்கள் | |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 71 |
ஊராட்சிச் சாலைகள் | 7 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 6 |
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- அயில்ரெட்டிபாளையம்
- புதூர்
- சுக்காம்பாளையம்
- வள்ளிமலை
- வள்ளிமலை புதிய காலனி
- காட்டாம்பூண்டி
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "திருவண்ணாமலை வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.