உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய்
2014இல் விஜய்
தலைவர், தமிழக வெற்றிக் கழகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதமிழக வெற்றிக் கழகம்
துணைவர்சங்கீதா சொர்ணலிங்கம் (1999-தற்போது)
பிள்ளைகள்ஜேசன் சஞ்சய்
திவ்யா சாஷா
பெற்றோர்
வேலைதிரைப்பட நடிகர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பின்னணிப் பாடகர்
கையெழுத்து

விஜய் (ஆங்கில மொழி: Vijay, பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்[1]) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் இவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா,[2] சப்பான்[3], ஐக்கிய இராச்சியம்[4] மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.[5] இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.[6][7]

விஜய் தனது 10ஆவது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.[8][9] இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விசய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கியப் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.[10]

ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த ஆடல் கலைஞர்.[11] இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா[12], ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா[13] மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.[14]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

விஜய் 1974-ஆம் ஆண்டு சூன் 22 அன்று சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் கிறிஸ்துவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடகப் பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனம் மிக்கவராகவும் இருந்துள்ளார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார்.[15] இவரது தங்கை வித்யாவின் கதை 2005ஆம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். இப்படத்தில் விஜய் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.[16]

விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார்.[17] பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.[18] லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல் (விசுவல் கம்யூனிகேசன்சில்) படிப்பில் சேர்ந்த விஜய், நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே கல்லூரி படிப்பிலிருந்து வெளியேறினார்.[15]

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆகத்து 25 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.[19][20] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000 ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன்[21] மற்றும் 2005 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள்.[22] ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் இளமைக் காலத்திற்கு முந்தைய அகவையுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படத்துறை

விஜய் குழந்தைக் காலத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் முதன்மை நடிகராக நடிக்கத் தொடங்கினார். முதன்மை நடிகராக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் முதன்மை நடிகராகப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிடத் தீர்மானித்து இருக்கிறார்.[23]

1984–1988 குழந்தை நட்சத்திரமாக

பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம்' (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1992–1996 தொடக்கம்

விஜயின் தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார்.[24] விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூல் செய்தது.[25] 1994-ல், இவர் ரசிகன் படத்தில் தோன்றினார். இதுவும் நல்ல வசூல் செய்தது.[26] இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்ட முதல் படம் இதுதான். இந்த அடைமொழி பிற்காலத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியது.[27] இவர் தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். மேற்குறிப்பிட்ட இரண்டாவது படத்தில் இவர் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஷ்ணு மற்றும் சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தார். 1995ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.

1996–2003 திருப்புமுனை

1996-ல், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரிப்படத்தில் விஜய் நடித்தார். இது இவரது முதல் வெற்றிகரமான படமாக மாறியது. விஜயின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது.[8] விஜயின் பத்தாவது படம் வசந்த வாசல் ஆகும். அதன்பின் இவர் மாண்புமிகு மாணவன் மற்றும் செல்வா ஆகிய சண்டைப் படங்களிலும், காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்திலும் நடித்தார். 1997இல், லவ் டுடே மற்றும் ஒன்ஸ்மோர் ஆகிய படங்களில் விஜய் நடித்தார். இதில் ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடித்தார். பின்னர் மணிரத்னம் தயாரிக்க வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் நடித்தார். பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. 1998-ல் விஜய் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன் மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 1999ஆம் ஆண்டில் விஜய், சிம்ரனுடன் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்தார். இப்படதிற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.[28] இதன்பின் விஜய் என்றென்றும் காதல், நெஞ்சினிலே மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.

2000 ஆவது ஆண்டுத் தொடக்கத்திலிருந்து, இவரது போக்கில் ஒரு மாற்றமாக, பொழுதுபோக்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2000ஆம் ஆண்டில், இவர் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே ஆகிய படங்களில் நடித்தார். இவரது 2001ஆம் ஆண்டு திரைப்படமான ப்ரண்ட்ஸ் சித்திக்கால் இயக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் விஜய் பத்ரி என்ற அதிரடித் திரைப்படம் மற்றும் ஷாஜஹான் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பத்ரி தெலுங்குப் படமான தம்முடுவின் மறு ஆக்கம் ஆகும். 2002 இல், விஜய் தமிழன் படத்தில் நடித்தார். இப்படத்தில் தான் நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகம் ஆனார்.[29][30] பின்னர், இவர் யூத் மற்றும் பகவதி ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை வசீகரா மற்றும் புதிய கீதை ஆகிய படங்களுடன் தொடங்கினார்.

2003–2010 பரவலான வெற்றி

2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விஜய் திருமலை என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனர் ரமணாவால் இயக்கப்பட்டது. இப்படம் இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. விஜயின் வாழ்க்கையில் திருமலை ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.[31] 2002 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட உதயா, தாமதமாகி, 2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறுதியாக வெளியிடப்பட்டது. தெலுங்கு படமான ஒக்கடுவின் மறு ஆக்கமான கில்லி 2004 இல் வெளியானது. தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது. எஸ். தரணி இயக்கிய இப்படத்தை ஏ. எம். ரத்னம் தயாரித்தார். இப்படத்தில் இவருடன் த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்தனர்.[32] தமிழகத்தின் உள்மாநிலத் திரைப்படச் சந்தை வரலாற்றில் 50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும்.[33]

இதன்பின்னர் இவர் ரமணா மாதேஷ் இயக்கிய மதுர திரைப்படத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில், இவர் பேரரசு இயக்கிய திருப்பாச்சியில் நடித்தார். பின் சுக்ரன் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ஜான் மகேந்திரன் இயக்கிய சச்சின் படத்தில் ஜெனிலியா டிசோசாவுடன் நடித்தார். பின்னர் மீண்டும் பேரரசின் இயக்கத்தில் அசினுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்தார். விஜயின் அடுத்த படமான ஆதி இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தயாரித்து ரமணா இயக்கத்தில் 2006 இல் வெளியானது. 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில், விஜய் போக்கிரி படத்தில் நடித்தார். இது தெலுங்குப் படமான போக்கிரியின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தை பிரபுதேவா இயக்கினார். இது 2007 ஆம் ஆண்டின் மூன்றாவது மிக அதிகமான வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். இந்தப் படத்தில் விஜயின் கதாபாத்திரம், விமர்சகர்களால் நன்றாகப் பாராட்டப்பட்டது.[34][35]

2009இல் விஜய்

2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பரதன் இயக்கிய அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் நடித்தார். இதில் இவர் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் நடித்தார். இந்த படம் மிதமான வசூல் செய்தது. 2008 ஆம் ஆண்டு விஜய் டி.வி. விருது விழாவில் மக்களின் விருப்பமான சூப்பர் ஸ்டார் என்ற விருதுடன் விஜய் கௌரவிக்கப்பட்டார்.[36] 2008 இல், இவர் மீண்டும் தரணியின் இயக்கத்தில் குருவி படத்தில் நடித்தார். 2009 இல், மீண்டும் பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார். அடுத்து இவர் ஏ.வி.எம். தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 இல், இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார்.

2011–2016 சர்வதேச புகழ்

2011இல் விஜய்

2011 இன் ஆரம்பத்தில் விஜய் மீண்டும் இயக்குனர் சித்திக் உடன் காவலன் படத்தில் இணைந்தார். இது பாடிகார்ட் என்ற மலையாள திரைப்படத்தின் ஒரு தமிழ் மறு ஆக்கம் ஆகும். இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான பாராட்டைப் பெற்றது. நல்ல வசூலும் செய்தது.[37] சீனாவில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் காவலன் திரையிடப்பட்டது.[38] அதே வருட தீபாவளியின் போது, எம். ராஜா இயக்கிய இவரது அடுத்த படமான வேலாயுதம் வெளியானது.[39] வேலாயுதம் 2011 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஆனது .[40]

விஜயின் அடுத்த படம் நண்பன் ஆகும். இது 3 இடியட்ஸ் என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். அமீர்கான் இந்தியில் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடித்தார். இப்படத்தை எஸ். ஷங்கர் இயக்கினார். இது 2012 பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. வசூலில் பெரிய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் நண்பன் திரையிடப்பட்டது.[41] படத்தில் விஜயின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. முன்னணி இந்திய நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டினர்.[42] நண்பன் 100 நாட்கள் ஓடியது.[43][44] பின்னர் பிரபுதேவா இயக்க அக்‌ஷய் குமார் நடித்த 2012 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமான ரவுடி ரத்தோர் இல் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.[45]

2013இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் நடத்திய உலக சுற்றுச்சூழல் விழாவில் விளம்பரத் தூதராக விஜய்

எஸ். தாணுவின் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய விஜயின் அடுத்த திரைப்படமான துப்பாக்கி 2012ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[46] சிவாஜி (2007) மற்றும் எந்திரனுக்குப் (2010) பிறகு 100 கோடி வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படம் ஆனது.[47] விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாகத் துப்பாக்கி ஆனது. 180 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த விஜயின் முதல் படமும் ஆனது.[33][48] ஏ. எல். விஜய் இயக்கிய இவரது அடுத்த படம் தலைவா, உலகளாவிய அளவில் 2013 ஆம் ஆண்டு ஆகத்து 9 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் தாமதமாக வெளியிடப்பட்டது.[49] காஜல் அகர்வால் மற்றும் மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்த படமான ஜில்லா, ஆர். டி. நீசன் இயக்கத்தில் 2014ல் ஒரு பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. வசூலில் வெற்றி பெற்றது.[50][51][52]

விஜய் மீண்டும் கத்தியில் முருகதாஸ் உடன் பணியாற்றினார். சமந்தா ருத் பிரபு மற்றும் நீல் நிதின் முகேஷ் உடன் இணைந்து நடித்தார். இது 2014ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[53] இது 2014ம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும்.[54] 2015 ஆம் ஆண்டில், புலி படம் வெளியிடப்பட்டது. சமந்தா ருத் பிரபு மற்றும் எமி ஜாக்சனுடன் இணைந்து நடித்து, அட்லீ இயக்க எஸ். தாணுவால் தயாரிக்கப்பட்ட இவரது அடுத்த படமான தெறி ஏப்ரல் 2016ல் வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[55] தெறி 2016ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் ஆனது. 172 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த இவரது இரண்டாவது படமும் ஆனது.[33]

2017–தற்போது

இவரது அடுத்த படமான பைரவா பரதனால் இயக்கப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்தார். இப்படம் ஜனவரி 2017 இல் வெளியிடப்பட்டது.[56] இவரது அடுத்த படம் மெர்சல், அட்லீயால் இயக்கப்பட்டது. சமந்தா ருத் பிரபு, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட்டது.[57] விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாக மெர்சல் ஆனது. இவரது படங்களில் 250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் படமானது.[58] மெர்சல் திரைப்பட கதாபாத்திரத்திற்காக விஜய் 2018ல் ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[10] காவலனுக்குப் (2011) பிறகு சீனாவில் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது படம் மெர்சல் ஆகும்.[59] மெர்சல் தென் கொரியாவின் புச்சியான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[14] இவரது அடுத்த படமான சர்கார் ஏ. ஆர். முருகதாஸால் இயக்கப்பட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த படமாகும். இது 2018 தீபாவளிக்கு வெளியானது.[60]

இந்தித் திரைப்படங்களில்

ரவுடி ரத்தோர் (2012) படத்தில் சிந்தா சிந்தா பாடலில் விஜய் தன் முதல் இந்திப்படக் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். இப்படத்தை பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நடித்திருந்தார். விஜயின் கௌரவத் தோற்றம் இந்தி இரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது.[61] விஜய் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் உலக அளவில் திரைச் சந்தையில் ஐந்து முறை மோதியுள்ளனர்.[62] அஜய் தேவ்கானின் இந்திப் படமான கோல்மால் எகைனில் (2017) ஒரு சண்டைக் காட்சியில் விஜய்க்கு ஒரு மரியாதையாக தெறி பட சுவரொட்டியுடன் விஜய் பாடலான வரலாம் வா பைரவா பின்னணியில் இசைக்கப்படும்.[63] இவருடைய தமிழ் படங்களில் பெரும்பாலானவை இந்திக்கு கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் மூலமாக டப்பிங் செய்யப்படுகின்றன. இப்படங்கள் சோனி மேக்ஸ் இந்தி தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.[64] விஜயின் திரைப்படமான மெர்சல் அக்டோபர் 2017ல் இந்தித் திரைப்படங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தது. சர்வதேச திரைச்சந்தைகளில் கோல்மால் எகைன் மற்றும் சீக்ரெட் சூப்பர்ஸ்டாரை விட அதிகமாக வசூல் செய்தது.[65] ஜூலை 2017ல் டேஞ்சரஸ் கிலாடி 3 (வேட்டைக்காரன்) மற்றும் போலிஸ்வாலா குண்டா 2 (ஜில்லா) பட ஒளிபரப்புகளின்போது ரிஷ்தே சினிபிலக்ஸ் இந்தித் தொலைக்காட்சிச் சேனல் முறையே #1 மற்றும் #3 ஆகிய இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளித் தரவரிசைகளைப் பிடித்தது. சோனி மேக்ஸ் இந்தித் தொலைக்காட்சிச் சேனல் இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளியில் #5 இடத்தைத் தெறி இந்தித் திரைப்பட ஒளிபரப்பின்போது பிடித்தது.[66] 2017ம் ஆண்டின் பிற்பகுதியில், கத்தியின் இந்திப் பதிப்பான காக்கி அவுர் கிலாடி வெளியாகி ஜீ சினிமா இந்தி தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.[67]

தெலுங்கு அங்கீகாரம் மற்றும் வெற்றி

விஜயின் திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன. உதாரணமாக ஸ்னேஹிதுடு, துப்பாக்கி, ஜில்லா, போலிசோடு, ஏஜெண்ட் பைரவா மற்றும் அதிரிந்தி ஆகியவை ஆகும். நடிகர் சிரஞ்சீவி தெலுங்குத் திரையுலகிற்கு திரும்பிவந்து படம் ஒன்றில் நடிக்க விரும்பினார். அவருக்கு வெற்றி பெற்ற தமிழ் திரைப்படமான கத்தி திரைப்படத்தின் மறு ஆக்க உரிமைகளைப் பெற விஜய் உதவினார். தெலுங்கில் சிரஞ்சீவி கைதி நம்பர் 150 என்ற பெயரில் இதை மறு ஆக்கம் செய்து கதாநாயகனாக நடித்தார். இதற்கு நடிகர் சிரஞ்சீவி விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.[68] நடிகர் ஜூனியர் என். டி. ஆர். விஜயை தனது விருப்பமான நடனமாடுபவராக பாராட்டியுள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தனக்குப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். தனது கன்ட்ரி படத்திற்காக விஜயின் வசந்த முல்லை பாடல் நடன அசைவுகளைப் பின்பற்றியதையும் கூறியுள்ளார்.[69] ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் பொறுத்த வரையில் விஜயின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திரைப்படத் தொடக்கமாக அதிரிந்தி அமைந்தது. ஒரு பெரிய வெற்றிப்படமாக மாறியது.[70]

ஊடகங்களிலும் மற்றவைகளிலும்

2006இல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து தன் படத்தைக் கொண்ட அஞ்சல் தலை செருகேட்டைப் பெறும் விஜய்

இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் செலிபிரிட்டி 100 பட்டியலின் இந்திய பதிப்பில் பல முறை விஜய் இடம்பெற்றுள்ளார். 2012ல் #28,[71] 2013ல் #49,[72] 2014ல் #41,[73] 2016ல் #61[74] மற்றும் 2017ல் #31 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளார்.[75] 2017ல், தென்னிந்திய பொங்கல் திருவிழாவில், தமிழ் ஆண்மகன்கள் பாரம்பரிய உடை அணிவதை விளக்க நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகம் வேட்டி மற்றும் சட்டையுடன் விஜயின் படத்தைக் காட்டியது.[76][77]

விளம்பர ஒப்புதல்கள்

2002இல், விஜய் கோக கோலா விளம்பரங்களில் தோன்றினார்.[78][79] 2005ல் ஒரு சன்ஃபீஸ்ட் விளம்பரத்தில் தோன்றினார். 2008ல், இந்திய பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[80] சனவரி 2009ல், விஜய் கோக கோலா விளம்பரத்தில் தோன்றினார்.[81] ஆகத்து 2010ல், தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான விளம்பரத் தூதராக ஜோஸ் ஆலுக்காஸ் விஜயை ஒப்பந்தம் செய்தது.[82] டாடா டொகோமோ விளம்பரத்திலும் விஜய் தோன்றியுள்ளார்.[83]

அறப்பணி

2013இல் உலக சுற்றுச்சூழல் நாளின் போது அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் விஜய்

விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். இது ஜூலை 26, 2009 அன்று புதுக்கோட்டையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம்தான் பொறுப்பாக உள்ளது. தானே புயலுக்குப் பிறகு, கடலூரில் உள்ள கம்மியம்பேட்டையில் ஒரு நிவாரண முகாமுக்கு இவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் அரிசி வழங்கினார். அந்நேரத்தில் கடலூர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. சில உதவிகளை வழங்கியதன் மூலம் மக்களுக்கு விஜய் உதவினார். முகாம் அமைக்கப்பட்ட பகுதி, தங்களது விருப்பத்திற்குரிய நட்சத்திரத்தை ஒரு தடவை பார்ப்பதற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் காரணமாக சீக்கிரமே ஒரு பண்டிகை தோற்றத்திற்கு மாறியது.[84] மே 2008ல், பள்ளியிலிருந்து படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் குழந்தைகளை தடுக்கும் முயற்சியில் விஜய் ஹீரோவா? ஜீரோவா? என்ற ஒரு சிறிய பொது சேவை வீடியோவில் தோன்றினார்.[85] 2012ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்காக விஜய் கல்வி விருதுகள் 2012 ஆனது ஜூலை 8 ஆம் தேதி, 2012 அன்று விஜய் மக்கள் இயக்கத்தால் சென்னை ஜே. எஸ். கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டது. விருதுகளை விஜயே நேரில் வழங்கினார். தன் பிறந்த நாளில், 22 சூன் 2007இல் விஜய் எழும்பூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.[86] நவம்பர் 2014ல், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளான ஃபாத்திமாவுக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்க விஜய் உதவினார்.[87] செப்டம்பர் 2017ல், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களால் விஜய் மக்கள் இயக்க அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலி உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்களை ஒன்றிணைக்கத் தொடங்கப்பட்டது.[88] 26 திசம்பர் 2017ல், பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள், நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ போன்ற இலவச தேவைகளை வழங்கி உதவியளித்தனர்.[89] 11 செப்டம்பர் 2017ல், நீட் தேர்வில் மருத்துவ சீட் பெறாமல் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு விஜய் நிதி உதவி வழங்கினார்.[90] 7 சூன் 2018ல், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதி உதவி வழங்கினார்.[91] 22 ஆகத்து 2018ல், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70 லட்சம் மதிப்புள்ள பொருட்களை விஜய் அனுப்பி வைத்தார்.[92] நவம்பர் 2018ல் விஜய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க தன் ஒவ்வொரு விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைமை நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளில் 4.5 இலட்சம் செலுத்தினார்.[93]

சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக 2007இல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.[94]

அரசியல்

2009 ஆம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.[95]

விஜய் 02.02.2024 அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்தார்.[96][97]

திரைப்பட விபரம்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம் வேடம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
2024 "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" பிரசாந்த் ,பிரபுதேவா வெங்கட் பிரபு இரட்டை வேடம்
2023 லியோ பார்த்திபன்/லியோ தாஸ் திரிசா கிருஷ்ணன்,அர்ஜுன்,மிஷ்கின்,மன்சூர் அலி கான்,சஞ்சய் தத் லோகேஷ் கனகராஜ்
2023 வாரிசு விஜய் ராஜேந்திரன் ராஷ்மிகா மந்தண்ணா, பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு வம்சி பைடிபைலி [98]
2022 பீஸ்ட் வீர ராகவன் பூஜா ஹெக்டே, யோகி பாபு நெல்சன் திலீப்குமார்
2021 மாஸ்டர் ஜான் துரைராஜ் (ஜே. டி)
2019 பிகில் மைக்கேல் (பிகில்), ராயப்பன் நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபு அட்லீ தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியீடப்பட்டது.இரட்டைவேடம்
2018 சர்கார் சுந்தர் ராமசாமி கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ஏ. ஆர். முருகதாஸ் தீபாவளி வெளியீடு
2017 மெர்சல் வெற்றிமாறன், வெற்றி, மாறன் எஸ். ஜே. சூர்யா, வடிவேலு, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் அட்லீ விஜய் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம்.
2017 பைரவா பைரவா கீர்த்தி சுரேஷ் பரதன் கல்வி நிலையங்கள் செய்யும் அநியாயங் களைத் தட்டிக்கேட்கிறான் `பைரவா'.[99]
2016 தெறி விஜய் குமார் (விஜய்) / ஜோசெப் குருவில்லா / தர்மேஸ்வர் சமந்தா, எமி ஜாக்சன் அட்லீ இயக்குநர் திரு. மகேந்திரன் அவர்கள் ( உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும் ) நடிகராக அறிமுகம்
2015 புலி மருதீரன், புலிவேந்தன் ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன், ஸ்ரீதேவி சிம்புதேவன்
2014 கத்தி கதிரேசன், ஜீவானந்தம் சமந்தா ஏ. ஆர். முருகதாஸ் இரட்டை வேடம்
2014 ஜில்லா ஷக்தி மோகன்லால், காஜல் அகர்வால் ஆர். டி. நேசன்
2013 தலைவா விஷ்வா அமலா பால், சத்யராஜ் விஜய் (இயக்குனர்) தமிழகம், புதுவை தவிர அனைத்து இடங்களிலும் ஆகத்து 9 அன்று வெளியானது[100]
2012 ரவுடி ரதோர் பிரபு தேவா இந்தி திரைப்படத்தில் சிறப்புத் தோற்றம்
2012 துப்பாக்கி ஜெகதீஸ் காஜல் அகர்வால் ஏ. ஆர். முருகதாஸ் மாபெரும் வசூல் சாதனை
2012 நண்பன் பஞ்சவன் பாரிவேந்தன் (பாரி) / கொசக்சி பசப்புகழ் ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா, சத்யராஜ் ஷங்கர் திரீ இடியட்ஸ்(2009) இந்தி படத்தின் மீளுருவாக்கம்.[101]
2011 வேலாயுதம் வேலு (எ) வேலாயுதம் ஹன்சிகா மோட்வானி, ஜெனிலியா மோ. ராஜா ஆசாத் (2000) என்ற தெலுங்கு படத்தின் தழுவல்.[102]
2011 காவலன் பூமிநாதன் அசின், வடிவேல் சித்திக் 14வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா திரையிடப்பட்டது [103]
2010 சுறா சுறா தமன்னா எஸ்.பி. ராஜ்குமார் விஜயின் 50வது படம்.
2009 வேட்டைக்காரன் போலிஸ் ரவி அனுஷ்கா பாபு சிவன் புலி வேட்டை என்னும் பெயரில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2009 வில்லு புகழ், மேஜர் சரவணன் நயன்தாரா பிரபு தேவா இந்தியில் மொழி பெயர்க்கபட்டது
2008 பந்தயம் விஜய் எஸ். ஏ. சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
2008 குருவி வெற்றிவேல் திரிஷா, விவேக் தரணி உதயாநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸின் முதல் தயாரிப்பு.
2007 அழகிய தமிழ் மகன் குரு, பிரசாத் சிரேயா சரன், நமிதா பரதன் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம், தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2007 போக்கிரி சத்தியமூர்த்தி / தமிழ் அசின் பிரபு தேவா இதே பெயரில் 2006ல் வெளிவந்த தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்.
2006 ஆதி ஆதி திரிஷா ரமணா
2005 சிவகாசி முத்தப்பா / சிவகாசி அசின், நயன்தாரா, பேரரசு
2005 சுக்ரன் சுக்ரன் ரவி கிருஷ்ணா, நதீஷா, ரம்பா எஸ். ஏ. சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
2005 சச்சின் சச்சின் ஜெனிலியா, பிபாசா பாசு, ஜான் மகேந்திரன் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2005 திருப்பாச்சி சிவகிரி திரிஷா, மல்லிகா பேரரசு அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது.
2004 மதுர மதுரைவேல் சோனியா அகர்வால், ரக்‌ஷிதா, தேஜாஸ்ரீ ஆர். மாதேஷ்
2004 கில்லி சரவணவேலு / கில்லி திரிஷா தரணி ஒக்கடு (2003) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்.
2004 உதயா உதயக்குமரன் சிம்ரன் அழகம் பெருமாள்
2003 திருமலை திருமலை ஜோதிகா ரமணா
2003 புதிய கீதை சாரதி மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் கே. பி. ஜெகன்
2003 வசீகரா பூபதி சினேகா கே. செல்வபாரதி
2002 பகவதி பகவதி ரீமா சென் ஏ. வெங்கடேஷ்
2002 யூத் சிவா சந்தியா, சிம்ரன் வின்சென்ட் செல்வா
2002 தமிழன் சூர்யா பிரியங்கா சோப்ரா ஏ. மஜீத்
2001 ஷாஜகான் அசோக் ரிச்சா பலோட், மீனா ரவி
2001 பத்ரி பத்ரி பூமிகா, மோனல் அருண் பிரசாத்
2001 பிரெண்ட்ஸ் அரவிந்த் தேவயானி, சூர்யா சித்திக்
2000 பிரியமானவளே விஜய் சிம்ரன் கே. செல்வபாரதி பவித்ர பந்தம் (1996) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்
2000 குஷி சிவா ஜோதிகா, ஷில்பா ஷெட்டி எஸ். ஜே. சூர்யா
2000 கண்ணுக்குள் நிலவு கௌதம் சாலினி ஃபாசில்
1999 மின்சாரக் கண்ணா கண்ணன்/காசி ரம்பா கே. எஸ். ரவிக்குமார்
1999 நெஞ்சினிலே கருணாகரன் இசா கோபிகர் எஸ். ஏ. சந்திரசேகர்
1999 என்றென்றும் காதல் விஜய் ரம்பா மனோஜ் பட்னாகர்
1999 துள்ளாத மனமும் துள்ளும் குட்டி சிம்ரன் எஸ். எழில்
1998 நிலாவே வா சிலுவை சுவலட்சுமி ஏ. வெங்கடேசன்
1998 பிரியமுடன் வசந்த் கௌசல்யா வின்சென்ட் செல்வா
1998 நினைத்தேன் வந்தாய் கோகுல கிருஷ்ணன் தேவயானி, ரம்பா கே. செல்வபாரதி
1997 காதலுக்கு மரியாதை ஜீவானந்தம் சாலினி ஃபாசில் அனியத்திப்ராவு (1997) என்ற மலையாள படத்தின் மீளுருவாக்கம்.
1997 நேருக்கு நேர் விஜய் சூர்யா, சிம்ரன், கௌசல்யா வசந்த் நடிகர் சூர்யா வின் முதல் படம்
1997 ஒன்ஸ்மோர் விஜய் சிம்ரன், சிவாஜி கணேசன்,சரோஜாதேவி எஸ். ஏ. சந்திரசேகர்
1997 லவ் டுடே கணேஷ் சுவலட்சுமி பாலசேகரன்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணன் டிம்ப்பல் ஆர். சுந்தர்ராஜன்
1996 செல்வா செல்வா சுவாதி ஏ. வெங்கடேசன்
1996 மாண்புமிகு மாணவன் சிவா கீர்த்தனா எஸ். ஏ. சந்திரசேகர்
1996 வசந்த வாசல் விஜய் சுவாதி எம். ஆர். சச்சுதேவன்
1996 பூவே உனக்காக ராஜா சங்கீதா, அஞ்சு அரவிந்த் விக்ரமன்
1996 கோயமுத்தூர் மாப்ளே பாலு சங்கவி சி. ரெங்கநாதன்
1995 சந்திரலேகா ரகீம் வனிதா, விஜயகுமார் நம்பிராஜன்
1995 விஷ்ணு விஷ்ணு சங்கவி எஸ். ஏ. சந்திரசேகர்
1995 ராஜாவின் பார்வையிலே விஜய் இந்திரா அஜித் ஜானகி சௌந்தர் விஜயும் அஜீத்தும் இணைந்து நடித்த ஓரே படம்
1994 தேவா தேவா சுவாதி எஸ். ஏ. சந்திரசேகர்
1994 ரசிகன் விஜய் சங்கவி எஸ். ஏ. சந்திரசேகர்
1993 செந்தூரப் பாண்டி' விஜய் யுவராணி, விஜயகாந்த் எஸ். ஏ. சந்திரசேகர்
1992 நாளைய தீர்ப்பு விஜய் கீர்த்தனா எஸ். ஏ. சந்திரசேகர் அறிமுகம்
1987 சட்டம் ஒரு விளையாட்டு விஜய் எஸ். ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம், சிறப்புத் தோற்றம்
1985 நான் சிகப்பு மனிதன் விஜய் எஸ். ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம், சிறப்புத் தோற்றம்
1984 வெற்றி விஜய் விஜயகாந்த் எஸ். ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம், சிறப்புத் தோற்றம்

பாடிய பாடல்கள்

இவர் சில திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். அவை,

ஆண்டு பாடல் படம் குறிப்புகள்
2023 ஆல்டர் ஈகோ நா ரெடி லியோ
2022 ஜாலி ஓ ஜிம்கானா பீஸ்ட்
2021 லிட்டில் ஸ்டோரி மாஸ்டர்
2019 நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும் பிகில்
2016 செல்ல குட்டி தெறி
2015 ஏன்டி ஏன்டி புலி
2014 லெட்ஸ் டெக் ய செல்ஃபி புல்ல கத்தி
2014 கண்டாங்கி கண்டாங்கி ஜில்லா டி. இமான்
2013 வாங்கண்ணா வணக்கங்கண்ணா தலைவா அழ. விஜய்
2012 கூகுள் கூகுள் துப்பாக்கி ஏ. ஆர். முருகதாஸ் தோன்றும் காட்சி இடம்பெறும் பாடல்
2005 வாடி வாடி சச்சின்
2002 கொக்கா கோலா பகவதி
உள்ளத்தைக் கிள்ளாதே தமிழன்
2001 என்னோட லைலா பத்ரி
2000 மிசிச்சிப்பி நதி குலுங்க பிரியமானவளே
சின்னஞ்சிறு கண்ணுக்குள் நிலவு
இரவு பகலை கண்ணுக்குள் நிலவு
1999 தங்கநிறத்துக்கு நெஞ்சினிலே
1998 டிக் டிக் டிக் துள்ளி திரிந்த காலம்
ரோட்டுல ஒரு பெரியண்ணா இந்த பாடலை நடிகர் விஜய் நடிகர் சூர்யாக்காக பாடினார்.
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பெரியண்ணா இந்த பாடலை நடிகர் விஜய் நடிகர் சூர்யாக்காக பாடினார்.
காலத்துக்கு ஒரு கனா வேலை
சந்திர மண்டலத்தை நிலாவே வா
நிலவே.. நிலவே நிலாவே வா
மௌரிய மௌரிய ப்ரியமுடன்
1997 ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா காதலுக்கு மரியாதை
ஊர்மிளா ஊர்மிளா ஒன்ஸ் மோர்
1996 சிக்கன் கரே செல்வா
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி காலமெல்லாம் காத்திருப்பேன்
திருப்பதி போனா மொட்ட மாண்புமிகு மாணவன்
1995 பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி கோயம்புத்தூர் மாப்ளே
1994 தொட்டபெட்டா விஷ்ணு
1994 அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு தேவா
1994 கோத்தகிரி குப்பம்மா தேவா

விருதுகள்

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்

விஜய் தொலைக்காட்சி

விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்:

விருது திரைப்படங்கள் ஆண்டு மூலம்
நாளைய சூப்பர் ஸ்டார் திருப்பாச்சி, சிவகாசி 2006 [104]
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் போக்கிரி, அழகிய தமிழ் மகன் 2007 [105]
விருப்பமான நாயகன் வேட்டைக்காரன் 2009 [106]
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் நண்பன்,துப்பாக்கி 2012 [107]
விருப்பமான நாயகன் துப்பாக்கி 2012 [107]

பிற விருதுகள்

  • கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
  • கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
  • கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
  • பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
  • போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
  • போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
  • வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
  • துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது [108]

மேற்கோள்கள்

  1. "Joseph Vijay", IMDb, பார்க்கப்பட்ட நாள் 2018-06-24
  2. "Mersal Vijay was celebrated as the Jackie Chan of India". Behindwoods. 23 October 2017. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/mersal-vijay-was-celebrated-as-the-jackie-chan-of-india.html. பார்த்த நாள்: 8 September 2018. 
  3. "Thalapathy Vijay’s Mersal creates a big record even before its release; find out what it is". The Financial Express. 11 October 2017. https://www.financialexpress.com/entertainment/mersal-thalapathy-vijay-movie-becomes-1st-ever-tamil-film-to-create-this-big-record-find-out-what-it-is/889875/. பார்த்த நாள்: 8 September 2018. 
  4. "Mersal box office collection: Vijay-starrer grosses over $11 mn from international markets in 12 days". Firstpost. https://www.firstpost.com/entertainment/mersal-box-office-collection-vijay-starrer-grosses-over-11-mn-from-international-markets-in-12-days-4186649.html. பார்த்த நாள்: 1 October 2018. 
  5. "Mersal fever in France". Behindwoods. 13 October 2017. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/mersal-fever-in-france.html. பார்த்த நாள்: 9 September 2018. 
  6. "'Sarkar' creates history - releasing in 80 countries simultaneously - Tamil Movie News - IndiaGlitz.com". IndiaGlitz.com. https://www.indiaglitz.com/sarkar-creates-history-releasing-in-80-countries-simultaneously-tamil-news-223270. 
  7. "Sarkar: Here are some interesting facts about Vijay's Diwali release | Entertainment News" (in en-GB). https://www.timesnownews.com/entertainment/south-gossip/article/sarkar-here-are-some-interesting-facts-about-vijays-diwali-release/309460. 
  8. 8.0 8.1 "Vijay blockbusters". Sify.com. 20 January 2007. Archived from the original on 13 ஜனவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Poove Unakkaga - The First Blockbuster of Vijay's Career - #22YearsOfVijayism: The 11 Big Box Office Comebacks of Ilayathalapathy Vijay". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
  10. 10.0 10.1 Awards, National Film (15 January 2018). "Congratulations to @actorvijay nominated for #BestSupportingActor at the #NationalFilmAwardsUK for his role on the film @MersalFilm". @NATFilmAwards. பார்க்கப்பட்ட நாள் 16 January 2018.
  11. "Five reasons why we love Vijay | The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 3 September 2018.
  12. "Vijay's Kaavalan at the Shanghai film festival". Rediff. http://www.rediff.com/movies/report/south-kaavalan-at-the-shanghai-film-festival/20110509.htm. பார்த்த நாள்: 10 September 2018. 
  13. "Priyanka, Vijay & other stars at Indian Film Festival of Melbourne". Sify இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150814184816/http://www.sify.com/movies/priyanka-vijay-other-stars-at-indian-film-festival-of-melbourne-news-bollywood-mgor5dfjgcgsi.html. பார்த்த நாள்: 10 September 2018. 
  14. 14.0 14.1 "Vijay's Mersal screened at BIFAN Film Festival". Behindwoods. 30 July 2018. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijays-mersal-screened-at-bifan-film-festival.html. பார்த்த நாள்: 10 September 2018. 
  15. 15.0 15.1 "Mothers Day special Interview with Illayathalapathy Vijay mother Shobha Chandrasekhar – Tamil Movie News – IndiaGlitz".
  16. "Vijay". starsbiography.
  17. "Vijay speaks about his childhood schooling in fathima matriculation school chennai".
  18. "Vijay | Which Celebrity belongs to your school/college?". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 2017-12-28.
  19. "Vijay Marriage: When The Tamil Superstar Fell For His Fan" (in en-US). The Bridal Box. 2016-07-28. https://www.thebridalbox.com/articles/vijay-marriage_0051187/. 
  20. "Rediff On The Net, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 17 August 1998. பார்க்கப்பட்ட நாள் 18 July 2010.
  21. "rediff.com, Movies: Vijay meets his son on the Net!". Rediff.com. 26 August 2000. பார்க்கப்பட்ட நாள் 18 July 2010.
  22. "Great Pillai Gallery -A list of PILLAI WHO'S WHO". www.saivaneri.org. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
  23. "விஜய்க்காக ' தளபதி ANTHEM ' !". Vikatan. 10 January 2012. http://cinema.vikatan.com/?option=com_content&view=article&id=1736&cid=903&Itemid=63. பார்த்த நாள்: 10 January 2012. 
  24. "Style of his own".
  25. "SAC recalled how Vijayakanth did Sendhoorapandi free of cost to help his son Vijay's career". www.behindwoods.com.
  26. "Poove Unakkaaga". Bbthots.com. Archived from the original on 2018-05-07. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
  27. Lee, Dharmik (22 June 2017). "'மெர்சல்' ஃபர்ஸ்ட்லுக்கில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா..?". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  28. "Tracing the journey of Thalapathy". The Indian Express (in Indian English). 2019-06-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
  29. "'Thamizhan' was hit because of Vijay: Imman". CNN-IBN. 2 November 2012. http://ibnlive.com/news/thamizhan-was-hit-because-of-vijay-imman/303460-71.html. பார்த்த நாள்: 10 December 2012. 
  30. "April brings cheer to Tamil film industry". The Times of India. 3 மே 2002. Archived from the original on 22 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2012.
  31. "Thirumalai Tamil Movie Review – cinema preview stills gallery trailer video clips showtimes". Indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  32. "Ghilli's record break". Indiaglitz.com. 24 July 2004. பார்க்கப்பட்ட நாள் 10 May 2013.
  33. 33.0 33.1 33.2 "From Ghilli to Theri: 10 Ilayathalapathy Vijay action blockbusters one should know!" (in en). CatchNews.com. http://www.catchnews.com/regional-cinema/list-of-ilayathalapathy-vijay-action-packed-films-actor-vijay-filmography-theri-movie-box-office-records-top-south-indian-action-films-from-ghilli-to-theri-movie-news-1463648578.html. 
  34. "Movie Review : Pokkiri". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  35. "Tamil movie : Pokkiri Review". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  36. "A star-studded awards ceremony" (in en-IN). The Hindu. 2006-12-26. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-starstudded-awards-ceremony/article3039011.ece. 
  37. Kaavalan is a Hit பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம். Sify.com. Retrieved 6 June 2011.
  38. Vijay's Kavalan to be screened at Shanghai Film Festival. Southdreamz.com (8 May 2011). Retrieved 21 July 2014.
  39. Vijay's Velayudham completes 100 days பரணிடப்பட்டது 2018-07-10 at the வந்தவழி இயந்திரம். Kolly Talk. Retrieved 21 July 2014.
  40. Top 10 Tamil Movies 2011 Box-Office Collections | Kollywood Top 10 of 2011 | Tamil Cinema News › KollyInsider. Kollyinsider.com (29 December 2011). Retrieved 21 July 2014.
  41. "Priyanka, Vijay & other stars at Indian Film Festival of Melbourne" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2015-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150814184816/http://www.sify.com/movies/priyanka-vijay-other-stars-at-indian-film-festival-of-melbourne-news-bollywood-mgor5dfjgcgsi.html. 
  42. "Kamal Haasan's verdict on Nanban". The Times of India. 23 January 2012 இம் மூலத்தில் இருந்து 20 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130520111634/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-23/news-interviews/30655364_1_kamal-haasan-ulaganayagan-verdict. பார்த்த நாள்: 13 August 2012. 
  43. "Movie Review:Nanban". Sify.com. Archived from the original on 25 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  44. Srinivasan, Pavithra. "Review: Nanban is worth a watch". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  45. IndiaGlitz (1 June 2012). "Actor Vijay shakes a leg in 'Rowdy Rathore". CNN-IBN இம் மூலத்தில் இருந்து 3 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120603234112/http://ibnlive.in.com/news/actor-vijay-shakes-a-leg--in-rowdy-rathore/263598-71-210.html. பார்த்த நாள்: 1 June 2012. 
  46. "Vijay's Thupakki starts! –". Behindwoods.com. 5 December 2011. பார்க்கப்பட்ட நாள் 28 June 2012.
  47. "Ilayathalapathy Vijay joins the Rs 100 crore club!". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130417193911/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-10/news-interviews/36257239_1_crore-club-thuppakki-vijay-film. பார்த்த நாள்: 10 January 2013. 
  48. "Vijay's Theri crosses Rs 150 crore mark at Box Office, all set to break records of Thuppakki" (in en). CatchNews.com. http://www.catchnews.com/regional-cinema/theri-crosses-the-rs-150-crore-mark-at-the-box-office-all-set-to-break-vijay-s-highest-grosser-thuppakki-1461844410.html. 
  49. Thalaiva Tamil Movie Review – cinema preview stills gallery trailer video clips showtimes. Indiaglitz.com (9 August 2013). Retrieved 21 July 2014.
  50. Vijay's 'Jilla' set to roll from May! – TOI Mobile | The Times of India Mobile Site. The Times of India. (20 February 2013). Retrieved 25 April 2013.
  51. Jilla 100 Day Box Office Collection பரணிடப்பட்டது 15 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம். InReporter. 10 April 2014.
  52. Box Office Collection: Vijay's 'Jilla' Outperforms Ajith's 'Veeram' at Worldwide BO. International Business Times. (18 January 2014). Retrieved 21 July 2014.
  53. Sangeetha Seshagiri (22 October 2014) 'Kaththi' Review Roundup: Vijay Gives Sharp Performance; Worth a Watch. International Business Times
  54. "'Kaththi' Box Office: Vijay Starrer Becomes Biggest Tamil Hit of 2014". International Business Times. 10 November 2014.
  55. Upadhyaya, Prakash. "'Theri' box office collection: Vijay-starrer strikes gold in Chennai, set to complete 75 days in theatres".
  56. Upadhyaya, Prakash. "Bairavaa (Bhairava) 3 weeks box office collection: Vijay's film earns around Rs 110 crore in 22 days".
  57. "Mersal box office collection". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  58. Upadhyaya, Prakash. "Ilayathalapathy Vijay's Mersal creates history; breaches Rs 250-crore mark" (in en). International Business Times, India Edition. http://www.ibtimes.co.in/ilayathalapathy-vijays-mersal-creates-history-breaches-rs-250-crore-mark-750449. 
  59. "Thalapathy Vijay's Mersal to release in China". Behindwoods. 2018-08-10. https://m.behindwoods.com/tamil-movies-cinema-news-16/thalapathy-vijays-mersal-to-release-in-china.html. 
  60. Upadhyaya, Prakash. "Vijay 62: Sun Pictures to produce AR Murugadoss' next film?". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  61. Hungama, Bollywood (7 May 2012). "Tamil star Vijay does cameo in Rowdy Rathore - Bollywood Hungama". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  62. Wirally, Team (12 April 2016). "5 Times When Vijay & SRK Clashed At The Box-Office - Wirally.com". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  63. Sharma, Smrity (18 October 2017). "After Mersal, Witness Thalapathy Vijay's Magic In Ajay Devgn's Golmaal Again". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  64. "Sony MAX to air actor Vijay's action blockbuster 'Bairavaa' on 29th July". tvnews4u.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
  65. "Mersal box office: Vijay starrer unstoppable, gives tough competition to Golmaal Again, Secret Superstar in international markets". 22 October 2017. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  66. "Rishtey Cineplex climbs to No. 2 in Week 27 | TelevisionPost.com". www.televisionpost.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2017-12-17.
  67. "Zee Cinema to premiere Khaki Aur Khiladi on 13th December at 8PM". tvnews4u.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-17.
  68. "Chiranjeevi thanks Ilayathalapathy Vijay for Khaidi No 150". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  69. "Jr. NTR admits to copying Vijay". Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  70. "Vijay registers career biggest Telugu opening - Malayalam Movie News - IndiaGlitz". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  71. "2012 Celebrity 100 - Forbes India Magazine". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  72. "2013 Celebrity 100 - Forbes India Magazine". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  73. "2014 Celebrity 100 - Forbes India Magazine". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  74. "2016 Celebrity 100 - Forbes India Magazine". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  75. "2017 Celebrity 100 - Forbes India Magazine". Forbes India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-22.
  76. "Thalapathy Vijay in text books now! - Tamil Movie News - IndiaGlitz". IndiaGlitz.com. https://www.indiaglitz.com/thalapathy-vijay-in-cbse-school-text-book-reference-for-cultural-attire-tamil-news-202815. 
  77. "Actor Vijay in CBSE 3rd grade Book" (in en-US). Cover365. 2017-12-14. http://www.cover365.in/thalapathy-vijay-in-cbse-text-books-3761/. 
  78. "Interview – Coca Cola India". chennaibest.com. Archived from the original on 3 April 2014. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  79. Kamath, Sudhish (20 April 2001). "Things go better for Coke with Vijay". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050114211954/http://www.hindu.com/2001/04/20/stories/0420401y.htm. 
  80. "Vijay in IPL "Chennai Super Kings" brand ambassadors". Extramirchi.com. 19 March 2008. பார்க்கப்பட்ட நாள் 28 June 2012.
  81. "Coke signs up Vijay as brand ambassador – Tamil Movie News". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 18 July 2010.
  82. "South Indian actor Vijay brand ambassador of Jos Alukkas – Chennaionline News". News.chennaionline.com. Archived from the original on 5 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2011.
  83. "Vijay to endorse Docomo". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 25 October 2011.
  84. "Vijay draws huge crowds". Sify. Archived from the original on 26 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  85. "Events – Herova? Zerova? Educational Awareness Campaign". IndiaGlitz. 16 May 2008. Archived from the original on 17 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2011.
  86. "Vijay Gives Away Awards". Behindwoods. 9 July 2012. பார்க்கப்பட்ட நாள் 9 July 2012.
  87. "Vijay a real hero". behindwoods. பார்க்கப்பட்ட நாள் Nov 12, 2014.
  88. "Thalapathy Vijay regulates his fan clubs - Political entry soon? - Tamil Movie News - IndiaGlitz.com". IndiaGlitz.com. https://www.indiaglitz.com/thalapathy-vijay-starts-vijay-makkal-iyakkam-website-to-organise-fan-clubs-for-politics--tamil-news-206281. 
  89. "Vijay fans provide free autos and ambulances in Pollachi". Behindwoods. 2017-12-26. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijay-fans-provide-free-autos-and-ambulances-in-pollachi-after-mersal.html. 
  90. "Vijay visits Anitha’s house to pay condolence - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-visits-anithas-house-to-pay-condolence/articleshow/60458808.cms. 
  91. "Actor Vijay visits Thoothukudi police firing victims' houses, distributes one lakh as compensation to each family". The New Indian Express. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jun/06/actor-vijay-visits-thoothukudi-police-firing-victims-houses-distributes-one-lakh-as-compensation-t-1824471.html. 
  92. "Vijay donates Rs 70 lakh worth relief materials to Kerala flood victims - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-donates-rs-70-lakh-worth-relief-materials-to-kerala-flood-victims/articleshow/65499318.cms. 
  93. "Thalapathy Vijay's massive donation for all Gaja Cyclone affected districts - Tamil Movie News - IndiaGlitz.com". IndiaGlitz.com. https://www.indiaglitz.com/gaja-cyclone-thalapathy-vijay-donation-45-lakhs-vijay-makkal-iyakkam-tamil-news-224394. 
  94. "Vijay gets Doctorate". Archived from the original on 11 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  95. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19895040.ece
  96. https://www.hindutamil.in/news/tamilnadu/1192744-tamizhaga-vetri-kazhagam-actor-vijay-s-political-party-name-is-official-announcement.html
  97. "கட்சி பெயரில் மாற்றம் செய்யும் நடிகர் விஜய் - நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்". Zee News. https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-shifts-gears-actor-plans-new-name-for-tamil-nadu-vetri-kazhagam-party-488845. பார்த்த நாள்: 17 February 2024. 
  98. Desk, Online. "#Thalapathy66 planned for Pongal 2023 release". DT next (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  99. [1]
  100. "தலைவா' பட ரிலீஸ் எப்போது?
  101. Official: '3 Idiots' is 'Nanban'. Vijay is Aamir Khan
  102. "Makeovers take over!". Archived from the original on 2012-03-02. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
  103. http://www.indiaglitz.com/channels/tamil/article/66435.html
  104. Vijay Awards பரணிடப்பட்டது 2008-07-26 at the வந்தவழி இயந்திரம். Starboxoffice.com (2008-01-02). Retrieved on 2011-06-06.
  105. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-21.
  106. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-21.
  107. 107.0 107.1 http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/40913.html
  108. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202075700/http://www.vikatan.com/cinema/vikatanawards/2012.php. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
விஜய்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_(நடிகர்)&oldid=4020520" இலிருந்து மீள்விக்கப்பட்டது