உள்ளடக்கத்துக்குச் செல்

நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடனம்
தோன்றிய பண்பாடுபல்வேறு
தோன்றிய காலம்தெரியாது
தென்னிந்தியப் நாட்டார் நடனங்களில் ஒன்றான பொய்க்கால் குதிரையாட்டம்
இந்தோனீசியாவின் சுமாத்திராவைச் சேர்ந்த கோயோ மக்கள் ஆடும் சமன் நடனம்

நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு. தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி (Gymnastics), ஒத்திசை நீச்சல் (synchronized swimming), நடனப் பனிச்சறுக்கு (figure skating) போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. கட்டா எனப்படும் தற்காப்புக் கலையும் நடனங்களுடன் ஒப்பிடப்படுவது உண்டு. உயிரற்ற பொருட்களின் அசைவுகள் நடனம் எனக் குறிப்பிடப்படுவது இல்லை.

நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டு, அழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்கமுடியும். சில நாட்டுப்புற நடனங்கள் பயன்பாட்டுத்தன்மை கொண்ட அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பலே, பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக உள்ளன. நடனங்கள் எல்லோரும் பங்குகொண்டு ஆடுபவையாக, சமூக நடனங்களாக அல்லது பார்வையாளருக்கு நிகழ்த்திக் காட்டுவனவாக இருக்கலாம். சில வேளைகளில் சடங்குகள் தொடர்பிலும், போட்டியாகவும், பாலுணர்வுத் தூண்டலுக்காகவும் கூட நடனங்கள் ஆடப்படுவது உண்டு. நடன அசைவுகளில் எவ்வித பொருட்பொதிவும் இல்லாமல் இருக்கக்கூடும். சில மேற்கத்திய நாட்டார் நடன அசைவுகளும், பலே போன்ற நடனங்களில் உள்ள அசைவுகளும் இத்தகையவை. ஆனால், பல்வேறு இந்திய நடனங்களிலும், வேறு பல கீழைத்தேச நடனங்களிலும் அசைவுகள் பொருள் பொதிந்தவையாகவும், குறியீட்டுத் தன்மைகளுடன் கூடியவையாகவும் காணப்படுகின்றன. நடனங்களில் எண்ணங்களும் உணர்வுகளும் பொதிந்திருக்கலாம் அல்லது நடனங்களில் அவை வெளிப்படலாம். அத்துடன், பலவகை நடனங்கள் கதை கூறும் பாங்கிலும் அமைவது உண்டு.

நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். நடனங்களை உருவாக்கும் கலை நடன அமைப்பு எனப்படுகிறது.

தோற்றமும் வரலாறும்

[தொகு]

நடனத்தின் தோற்றத்தை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவான தொல்பொருட் சான்றுகள் இல்லை. இதனால், எப்போது நடனம் மனிதப் பண்பாட்டின் ஒரு பகுதியானது என்று சொல்ல முடியாது. எனினும், நடனங்கள் போன்ற செயற்பாடுகள் இருந்தமையைக் காட்டும் சான்றுகள் பல்வேறு இடங்களிலும் கிடைத்துள்ளன. மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருக்கக்கூடும். வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கும் வகையிலான சான்றுகளைத் தொல்லியல் வழங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை வாழிடங்களில் காணப்படும் ஓவியங்களில் காணப்படும் உருவங்கள் சில நடனமாடுவதைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. கிமு 3300 காலப்பகுதியைச் சேர்ந்த எகிப்தியக் கல்லறை ஓவியங்களிலும் இத்தகைய உருவங்கள் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.

தொன்மங்களைக் கூறுவதற்கும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவுமே முதன்முதலாக முறையான நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எதிர்ப் பாலாருக்குத் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும் மனிதர்கள் நடனத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். காதல் புரிவதோடும் நடனங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன. எழுத்து மொழி உருவாவதற்கு முன்னர் கதைகளைப் பிந்திய தலைமுறைகளுக்குக் கடத்துவதில் நடனங்களும் பயன்பட்டன.[1] நோய்களைக் குணப்படுத்துவதற்காச் சாமியாடுதல், வெறியாட்டு போன்றவற்றுக்கு முன்னோடியாகவும் நடனங்கள் விளங்கின. இது நடனத்தின் முதல் பயன்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பிரேசிலின் மழைக்காடுகள் முதல் கலகாரிப் பாலைவனம் வரை உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான தேவைகளுக்கு நடனங்கள் இன்றும் பயன்படுவதைக் காணமுடியும்.[2]

தொழிலாக

[தொகு]

நடனம் ஆடுபவர் கலைஞன் எனவும் நடனத்தை கற்றுத்தருபவர் நடன ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றனர். இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவையில் நடனக் காட்சிகள் திரைப்படப் பாடல்களுடன் ஆடப்படுவது வழக்கமாகும்.

தோற்றம்

[தொகு]

இந்திய நடனக் கலை

[தொகு]
சிவாவின் நடனம்

நடனக்கலையை தோற்றுவித்தவன் சிவன் என கருதப்படுகிறது. பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். பரத முனிவர் எழுதியதாக கருதப்படும் நாட்டிய சாத்திரம் பரத நாட்டியம் என்னும் நடனக் கலையை தோற்றுவித்தது எனவும் கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் நடனமான ஒட்டர மாகிதி என்னும் நடனவகையும் இந்தியாவில் ஒரு பண்டைய நடனக்கலையாகும்.[3]

சிவாவின் நடனம்

Cosmic Dance என்று அறிஞர்களால் விவரிக்கப்படும் தில்லை நடராசப் பெருமானின் ஆனந்த நடனமும், ருத்ர தாண்டவமும் குறிப்பிடத்தக்கவை. நடனத்திற்கென தமிழகத்தில் பொன்னம்பலம் சபை, வெள்ளி சபை, தாமிர சபை முதலான சபைகள் இருந்துள்ளன. அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்கள் விவரித்துக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் இந்த பரந்து விரிந்த இந்திய நாட்டில் பலவகையான நடனங்கள் ஆடப்பட்டு வருகின்றன.[4]

வேலூர் கோட்டையில்லுள்ள காட்சியகத்தில் இருக்கும் நடராசர்

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் இந்து மதத்தைப் பின்பற்றுவோரிடையே காணப்படும் பண்பாடு வேறுபட்ட தன்மையினை உள்ளடக்கியது. இப் பண்பாடானது உருவில், அமைப்பில் மாறுபாடுகள் பல காணப்பட்டாலும் அவை அனைத்தும் ஒரே நோக்கத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால்,இங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ள எல்லாவித கலைகளும் இறைத்தன்மையோடு கடவுளை மையமாகக் கொண்டு, அர்ப்பணிக்கப்படுகின்றன. குறிப்பாக,இந்திய இசைக்கலையும் ஆடற்கலையும் இறைவனோடு சம்மந்தப்பட்டவை என்பது கண்கூடு. இந்துக் கடவுளர்களில் காணப்படும் பெரும்தெய்வங்களான சிவபெருமான், காளி, கிருட்டிணன், நடன விநாயகர் என்று இறைவனை நடனக்கலையுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நடனம் ஆடப்பட்டு வருகிறது. அதில் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், மொழி, பண்பாடு, தெய்வ வழிபாட்டு முறைகள் ஆகியவை உள்ளீடாக அமையப்பெற்று வெளிப்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் பிற பகுதிகளின் செல்வாக்குகள் காரணமாக நடனக் கலை செம்மைப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் சங்கீத நாடக அகாதெமியானது இந்திய நடனத்தை எண்வகைப் பிரிவாக அறிவித்துள்ளது. அவை இந்திய சாத்திரிய நாட்டிய வகைகள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வகை நடனமும் அந்தந்தப் பகுதியின் மத வழிபாட்டு முறைகளுக்கேற்ப இங்கு வகைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாரம்பரிய நடனங்கள்

[தொகு]

நடன வரலாற்றை அறிய உதவும் அடிப்படைச் சான்றுகள்

[தொகு]

தமிழ் மொழியில் நடன வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் அடிப்படைச் சான்றாதாரங்கள் பின்வருமாறு:

1. அகழ்வாராய்ச்சிகள் 2. இலக்கண நூல்கள் 3. இலக்கியங்கள் 4. கோயில்கள் 5. கல்வெட்டுகள் 6. நடன ஆசிரியர் வரலாறுகள்[5]

தொல்காப்பியர் உணர்த்தும் நடன கூறுகள்

[தொகு]

1. தொல்காப்பியம் எடுத்துக்காட்டும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு எனும் இரு வழக்குளை நடனமானது, நாடக தர்மி, லோக தர்மி என்று எடுத்துரைக்கின்றது.

2. ஐந்திணைகளில் பயின்று வரும் முதற்பொருள், கருபொருள், உரிபொருள் ஆகிய மூன்றை தொல்காப்பியம் விளக்கியுரைக்கின்றது. இவற்றை நடனம் விபாவம், சஞ்சாரி பாவம், சுதாயி பாவம் மற்றும் சாத்வீக பாவம் என விவரிக்கிறது.

3. தொல்காப்பியம் கருத்துப் பொருள்களைக் காட்சிப் பொருள்களாக மாற்ற கூற்று, கேட்போர், முன்னம் ஆகியவற்றை இன்றியமையாத கூறுகளாகக் கொண்டுள்ளது. இம்மூன்றும் நடனத்தில் நடனம் புரிவோருக்கும் காண்போருக்கும் இடையில் நிகழும், ஊடாட்டத்தினுக்கும் ரசம் எனும் சுவைக்கும் கையாளப்பட்டு வருகின்றன.

4. தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலுக்கென தனி இயல் வைத்துத் தக்க இலக்கணம் வகுத்துள்ளார். இம மெய்ப்பாடுகள் நடனத்தில் ரசம், பாவம் என குறிப்பிடப் பெற்றுள்ளன.

5. கள்ளினை உண்டு ஆடுதல், வெறியாடல், கூத்திடுதல், வல்லபம் செய்தல் முதலானவற்றைத் தொல்காப்பியம் நடன வகைகளாகச் சுட்டியுள்ளது.[5]

படக்காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Nathalie Comte. "Europe, 1450 to 1789: Encyclopedia of the Early Modern World". Ed. Jonathan Dewald. Vol. 2. New York: Charles Scribner's Sons, 2004. pp 94–108.
  2. Guenther, Mathias Georg. 'The San Trance Dance: Ritual and Revitalization Among the Farm Bushmen of the Ghanzi District, Republic of Botswana.' Journal, South West Africa Scientific Society, v30, 1975–76.
  3. Exoticindiaart.com, Dance: The Living Spirit of Indian Arts, by Prof. P. C. Jain and Dr. Daljeet.
  4. "இந்தியாவின் பெருமைமிகு நடன வகைகள்". பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2017.
  5. 5.0 5.1 "தமிழர் நடன வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2017.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடனம்&oldid=4081021" இலிருந்து மீள்விக்கப்பட்டது