உள்ளடக்கத்துக்குச் செல்

வடிவேலு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடிவேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடிவேல்
2016இல் வடிவேலு
பிறப்புகுமாரவடிவேல்
செப்டம்பர் 12, 1960 (1960-09-12) (அகவை 64)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், நகைச்சுவை நடிகர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது வரை
பெற்றோர்தந்தை : நடராஜன் பிள்ளை
தாயார் : பாப்பா (எ) சரோஜினி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி
பிள்ளைகள்கன்னிகாபரமேஸ்வரி,
கார்த்திகா,
கலைவாணி,
சுப்ரமணியன்

வடிவேல் (Vadivelu, பிறப்பு: செப்டம்பர் 12, 1960) தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரையை சேர்ந்தவர். 1988 இல் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் செப்டம்பர் 12, 1960 ஆம் ஆண்டு நடராஜன் பிள்ளை மற்றும் பாப்பா என்னும் சரோஜினி [2] ஆகியோருக்கு மகனாக பிறந்தார் இவருக்கு விசாலாட்சி [3] என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.[4] திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு, சிவகங்கை அருகே உள்ள திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தில் புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.[5]

ஆரம்பகால வாழ்க்கை

பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். டி.ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். ராஜ்கிரண், தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை திரையில் அறிமுகப்படுத்தினார்.

திரை வாழ்க்கை

ராஜ்கிரனுடனான நட்பு

1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமாரால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

வடிவேலுவின் முதல் படமான என் ராசாவின் மனசிலே(1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான கவுண்டமணி-செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார்.

ரசிகர்களின் வரவேற்பு

‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக் கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, சுந்தர புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

அசாத்திய வளர்ச்சி

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

அசாத்திய திறமை

கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மழையில் நனையவைத்தார். கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாக்கிக் கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது.

காதலன்(1994) திரைப்படம் வெளியான பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் இவரும் ஒரு முக்கியமான நபராக வளர்ந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, வின்னர், மருதமலை, மற்றும் சந்திரமுகி போன்றவை குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்தாலும் அதன் பின்னர் வெளியான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் (2008) திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

நகைச்சுவை பாணி

வடிவேலு இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளவர். இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீண்வம்பு இழுத்து அடிவாங்குபவராகவும், யாரேனும் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு அதன்மூலமாக அடிவாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவராகவும் தோன்றுவார்.

நகைச்சுவை வசனங்கள்

திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்கள்தான் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்சுவையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச் டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப் போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும். இவரது நகைச்சுவை வசனங்களான "ஆகா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா", "வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா" மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற "மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு" போன்றவை மிகவும் பிரபலமானவை. இத்தகைய வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இவ்வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சில வசனங்கள்

கீழ்க்காண்பவை இவரது புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களில் சில மற்றும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும்.

வசனங்கள் இடம்பெற்ற திரைப்படம்
‘இப்பவே கண்ண கட்டுதே’ ஏய்
‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’ வின்னர்
‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ வின்னர்
‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’ வின்னர்
போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது வின்னர்
‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு சந்திரமுகி
‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’ சீனாதானா 001
‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க' ஏய்
‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன் கிரி
‘க க க போ…’ இம்சை அரசன் 23ம் புலிகேசி
‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’ கிரி
‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மென்டு வீக்கு’ தலைநகரம்
‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையப்பா’ வின்னர்
‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி' மருதமலை
‘ஒரு புறாவுக்கு போரா! பெரிய அக்கபோராக அல்லவா இருக்கிறது’ இம்சை அரசன் 23ம் புலிகேசி
‘சண்டையில கிழியாத சட்ட எங்கருக்கு’ வின்னர்
‘எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்’ போக்கிரி
‘வட போச்சே’ போக்கிரி
‘தம்பி டீ இன்னும் வரல’ போக்கிரி
'அந்த குரங்கு பொம்ம என்ன விலை' போக்கிரி
‘ஆணியே புடுங்க வேண்டாம்’ பிரண்ட்ஸ்
‘நானும் ரௌடி நானும் ரௌடி!; நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’ தலைநகரம்
பேச்சு பேச்சாதான் இருக்கணும்' வின்னர்
‘ரைட்டு விடு' வின்னர்
‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்' வின்னர்
'வழிய விடுங்கடி பீத்த சிரிக்கியலா' திமிரு
‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’' கிரி

உடல் அசைவு

நகைச்சுவை வசனங்கள் மட்டுமின்றி அந்த வசனங்களின் உச்சரிப்பு மற்றும் அவரது உடல் மொழி போன்றவை அவரை மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இத்தகைய நடிப்புத் திறமையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இவர் இதுவரை 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[6][7] அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பினால் பலதரப்பட்ட மக்களும் விரும்பக்கூடிய நடிகரானார். என். எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி. எஸ். பாலையா, வி. கே. ராமசாமி, நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.

கதாநாயகனாக

1988 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுப் பின்னணியை கதையாகக் கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

அரசியல்

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

மீண்டும் திரைப்படங்களில்

வடிவேலு திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்தார். தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். எஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு 2017 இல் ரெட் கார்டு போட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனத்திடம் பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டுவிட்டதால் இவர் மீதான தடை 2021 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.[8]

விருதுகள்

இவர் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை காலம் மாறிப்போச்சு (1996), வெற்றிக் கொடி கட்டு (2000), தவசி (2001), இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006), காத்தவராயன் (2008) திரைப்படங்களுக்காகவும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை 2005-ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். ‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருதினை’ வென்றுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

பின்வருவன வடிவேலு நடித்துள்ள சில திரைப்படங்கள்:[9][10][11]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1988 என் தங்கை கல்யாணி முதல் அறிமுகம்
1991 என் ராசாவின் மனசிலே வடிவேலு அதிகாரபூர்வ முதல் திரைப்படம்
1992 சின்ன கவுண்டர்
இளவரசன்
சிங்கார வேலன் சபா
தெய்வ வாக்கு கருவாடு
தேவர் மகன் இசக்கி
1993 கோயில் காளை வடிவேலு
ஏழை சாதி
மகராசன்
எங்க தம்பி
அரண்மனைக்கிளி
பொன்னுமணி
கோகுலம் ராஜு
மறவன் காவலர் வேலு
வள்ளி
கிழக்குச் சீமையிலே
காத்திருக்க நேரமில்லை
ரோஜாவை கிள்ளாதே
1994 ராஜகுமாரன் 'வீச்சருவா' வீராசாமி
சிந்துநதிப் பூ
அதர்மம் பித்தளை
வரவு எட்டணா செலவு பத்தணா பீட்டர்
செவத்த பொண்ணு
வாட்ச்மேன் வடிவேலு
கில்லாடி மாப்பிள்ளை
ராஜபாண்டி
காதலன் வசந்த் (கலியப்பெருமாள்)
இளைஞர் அணி
மணிரத்னம்
பவித்ரா
கருத்தம்மா
பாண்டியனின் ராஜ்யத்தில்
அத்தமக ரத்தினமே
1995 நான் பெத்த மகனே
கிழக்கு மாலை
முத்து காளை பூச்சி
சின்னமணி
ஆணழகன் மருதமலை
உதவும் கரங்கள்
எல்லாமே என் ராசாதான் வடிவேலு
என் பொண்டாட்டி நல்லவ
பசும்பொன் சோலை
நந்தவன தேரு தீக்குச்சி
செல்லக்கண்ணு
சந்தைக்கு வந்த கிளி
ராஜாவின் பார்வையிலே அறிவழகன்
ராசய்யா கிளி
ஆசை
தாய்க்குலமே தாய்க்குலமே தமிழ்பித்தன்
சந்திரலேகா சுந்தரம்
முத்து வளையாபதி 50வது திரைப்படம்
நீலக்குயில் மம்படியான்
1996 லவ் பேர்ட்ஸ் ராஜா
வசந்த வாசல்
காலம் மாறிப்போச்சு சேகர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
செங்கோட்டை சிறப்புத் தோற்றம்
மைனர் மாப்பிள்ளை 'குப்பைத்தொட்டி' கோவிந்தசாமி
சுந்தரபுருஷன்
தமிழ்ச் செல்வன் மனுநீதிச் சோழன்
பிரியம்
காதல் தேசம் வில்சன்
நம்ம ஊரு ராசா
சுபாஷ்
மிஸ்டர் ரோமியோ வௌவால்
பாஞ்சாலங்குறிச்சி முருகன்
1997 சக்தி இருலாண்டி
பாரதி கண்ணம்மா வீரமுத்து
மாப்பிள்ளை கவுண்டர் முக்தா
விவசாயி மகன் தர்மன்
தினமும் என்னை கவனி
மை இந்தியா
ராசி
கங்கா கௌரி விச்சு
பொங்கலோ பொங்கல் வெள்ளைச்சாமி
பாசமுள்ள பாண்டியரே
காதலி
அடிமை சங்கிலி
அட்ராசக்கை அட்ராசக்கை
பெரிய மனுசன் செல்லப்பா
பொற்காலம்
ரட்சகன்
தடயம் நீதி
1998 சுந்தர பாண்டியன் பாவாடை
வேலை
காதலா காதலா 'செக்யூரிட்டி' சிங்காரம்
பொன்னு விளையிற பூமி
ஜாலி
ரத்னா 'கதை' கந்தசாமி
இனியவளே முருகன்
சந்திப்போமா
பூந்தோட்டம்
எல்லாமே என் பொண்டாட்டிதான்
புதுமைப்பித்தன் 'சூப்பர்' சுருளி
பொன்மானைத் தேடி
கண்ணாத்தாள் சு. பா. (சுப்பையா பாண்டியன்)
தலைமுறை தவுடு
சேரன் சோழன் பாண்டியன் பாண்டியன்
சிவப்பு நிலா
1999 ஹவுஸ்புல் 100வது திரைப்படம்
தொடரும் 'பியூன்' மணி
மாயா
என் சுவாசக் காற்றே
மோனிசா என் மோனலிசா
நிலவே முகம் காட்டு
ராஜஸ்தான்
கும்மிப்பாட்டு
ஆனந்த பூங்காற்றே
ஒருவன் ஆறுமுகம்
சங்கமம்
விரலுக்கேத்த வீக்கம் கபாலி
பூவெல்லாம் கேட்டுப்பார்
மனைவிக்கு மரியாதை
நேசம் புதுசு வேலு
பொம்பளைங்க சமாச்சாரம்
சூர்யோதயம்
கண்மணி உனக்காக
முதல்வன் பாலவேசம்
இரணியன் சின்னசாமி
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா திருப்பதி
உன்னருகே நான் இருந்தால்
பாட்டாளி வடிவேலு (வடிவுக்கரசி)
2000 காக்கைச் சிறகினிலே
ராஜ காளியம்மன் கோபால்
வல்லரசு சிறப்புத் தோற்றம்
கந்தா கடம்பா கதிர்வேலா வடிவேலன்
மகளிர்க்காக பூபதி [12]
என்னம்மா கண்ணு டெலக்ஸ் பாண்டியன்/ 'செட்டப்' செல்லப்பா
வெற்றிக் கொடி கட்டு சுடலை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
கூடி வாழ்ந்தால் கோடிநன்மை 'பாக்சர்' கிருஷ்ணன்
மாயி மொக்கைச்சாமி
சின்ன சின்னக் கண்ணிலே வேலன்
கண்ணுக்கு கண்ணாக வேலு
வண்ணத் தமிழ்ப்பாட்டு வேலு
மனுநீதி செவளை
நீ எந்தன் வானம் ஓட்டை உடசல்
2001 பிரண்ட்ஸ் நேசமணி
லூட்டி வெள்ளையப்பா
நாகேஷ்வரி
எங்களுக்கும் காலம் வரும் வெள்ளையன்
பிரியாத வரம் வேண்டும் சிறப்புத் தோற்றம்[13]
என் புருசன் குழந்தை மாதிரி அங்குசாமி
ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி மைனர் பாண்டியன்
அசத்தல் வேணுகோபால்
மிடில் கிளாஸ் மாதவன் குழந்தைவேலு
சொன்னால்தான் காதலா
தோஸ்த் பாம் பக்கிரி [14] சிறப்புத் தோற்றம்
நரசிம்மா லாலா
நினைக்காத நாளில்லை அ. உ. டவுன்மணிi சிறப்புத் தோற்றம்
மாயன்
மிட்டாமிராசு ரங்கசாமி
லவ் மேரேஜ்
மனதைத் திருடி விட்டாய் ஸ்டீவ் வாக் மார்க் வாக் மற்றும் அவர்களின் பெற்றோர்களாக 150வது திரைப்படம்
தவசி அழகு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
வடுகபட்டி மாப்பிள்ளை வடுகபட்டி நாட்டாமை வீரபாண்டி
2002 ஷக்கலக்கபேபி பாண்டியன்
கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை 'வெட்டி' வேரு
காமராசு வேலு
ஸ்ரீ பண்ணாரி அம்மன் கொழுக்கட்டை கோவிந்தன்
ராஜ்ஜியம் செங்கல்
தமிழ் மூர்த்தி
இதயமே குருசாமி
ராஜா சப்பை
குருவம்மா
ஸ்ரீ மாறுவேசம் மாரிமுத்து
கார்மேகம் கஞ்சா
சூப்பர் ஆன்டி
இவன்
நைனா ஆவுடையப்பன்
சுந்தரா டிராவல்ஸ் அழகப்பன் (அழகு, அழகா)
கிங்
என் மன வானில்
நம்ம வீட்டு கல்யாணம்
பகவதி வடிவேலு / வைஃபரேசன்
ஸ்டைல்
2003 வசீகரா கட்டபொம்மன்
அன்பு சுப்பையா
இளசு புதுசு ரவுசு சுவாமிநாதன்/முனுசாமி
அரசு பிச்சுமணி
புன்னகை பூவே ஆறுமுகம்
இனிது இனிது காதல் இனிது கருப்பு
ஈரநிலம் சோனை
திவான் வேலு
ஆளுக்கொரு ஆசை பழனி
வின்னர் கைப்புள்ள பரிந்துரை — சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
ஒற்றன் மாடசாமி
காதல் கிறுக்கன் கல்யாண சுந்தரம்
தத்தித் தாவுது மனசு வைகைவேல்
2004 எங்கள் அண்ணா மயில்சாமி (மயில்)
கோவில் 'புல்லட்' பாண்டி
கம்பீரம் பி. சி. ஊமைத்துரை
காதல் டாட் காம் பிச்சு
நீ மட்டும் யோகராசு
அருள் தங்கம்
ஜோர் திருப்பதி
மானஸ்தன் பச்சைக்கிளி
சவுண்ட் பார்ட்டி வேலு
ஒரு முறை சொல்லிவிடு அரிசந்திரன் [15]
மதுர பாண்டு 200வது திரைப்படம்
கிரி வீரபாகு
காதலே ஜெயம் மச்சைக்காளை
சத்திரபதி
ஏய் பழனி
ஜனனம்
ஜெய்சூர்யா சூசை
2005 ஆயுதம் தங்கபாண்டி
ஐயா காரசிங்கம் ஏ. சி
மண்ணின் மைந்தன் 'வாட்டர்' வடிவேலு
லண்டன் வெடிமுத்து
சந்திரமுகி முருகேசன் சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
சச்சின் அய்யா சாமி
கற்க கசடற ஒண்டிப்புலி
6'2 (திரைப்படம்) மிஸ்டர். ஒயிட்
இங்கிலீஷ்காரன் 'தீப்பொறி' திருமுகம்
காற்றுள்ள வரை 'வாட்ச்மேன்' வெங்கடேஷ்
பிப்ரவரி 14
தாஸ்
ஏபிசிடி
அந்த நாள் ஞாபகம்
சாணக்கியா சுப்ரமணி
மழை
குண்டக்க மண்டக்க செல்லப்பா
மஜா புலிப்பாண்டி
பம்பரக்கண்ணாலே கடலைமுத்து
ஆணை
ஆறு சுண்டி மோதிரம் (சுமோ)
வெற்றிவேல் சக்திவேல் தண்டபாணி
வீரண்ணா பழனிச்சாமி
2006 பாசக்கிளிகள் தாண்டவராயன்
தம்பி நடராஜன்
கோவை பிரதர்ஸ் ஏகாதசி
தலைநகரம் 'நாய்' சேகர்
குஸ்தி ஆண்டிப்பட்டி வேலு
இம்சை அரசன் 23ம் புலிகேசி புலிகேசி / உக்கிர புத்திரன் சிறந்த நகைச்சுவையாளருக்கான தமிழக அரசின் விருது
திமிரு 'வார்டன்' வல்லாரன்
குருச்சேத்திரம் நொண்டி புலி
எம் மகன் கருப்பட்டி
சில்லுனு ஒரு காதல் வெள்ளைச்சாமி
தலைமகன் எரிமலை
வாத்தியார் அய்யனார்
இரண்டு கிரிகாலன்
நெஞ்சில் ஜில் ஜில் வெள்ளம் (தமிழன்) / ஆங்கிலேயன்
2007 போக்கிரி 'குங் பூ' வாத்தியார் பாடி சோடா (சங்கி மங்கி மற்றும் மங்கி சங்கி)
முருகா 'கொரியர்' கோபு
மணிகண்டா மதயானை
கருப்பசாமி குத்தகைதாரர் 'படித்துறை' பாண்டி
வியாபாரி 'திகில்' பாண்டி
மாமதுரை தங்கவேலு
தொட்டால் பூ மலரும் கபாலீசுவரன் (கபாலி கான்) 250வது திரைப்படம்
ஆர்யா 'சினேக்' பாபு
சீனா தானா 001 சீனிச்சாமி
பிறந்த நாள்
மருதமலை 'என்கவுண்டர்' ஏகாம்பரம் விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
18 வயசுப் புயலே
பிறகு சமரசம்
தவம் கீரிப்புள்ள
வேல் குழந்தைசாமி (குரங்குசாமி)
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன் இந்திரன் / எமதர்மராஜா / நா. அழகப்பன்
தீக்குச்சி குறவன்
கண்ணும் கண்ணும் உடும்பன்
காத்தவராயன் 'கந்துவட்டி' கருப்பு சிறந்த நகைச்சுவையாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு 'மணியாட்டி சாமியார்' சொரிமுத்து அய்யனார்
குசேலன் 'சலூன் கடை' சண்முகம்
கி. மு மாடசாமி
பச்சை நிறமே
சேவல் 'தபால்' தங்கவேலு
எல்லாம் அவன் செயல் வண்டு முருகன்
2009 வில்லு மாடசாமி
லாடம் அவராகவே சிறப்புத் தோற்றம்
வெடிகுண்டு முருகேசன் 'அலார்ட்' ஆறுமுகம்
அழகர் மலை காத்தமுத்து
கந்தசாமி 'தேங்காய்கடை' தேனப்பன்
பேராண்மை சூசை
ஜெகன்மோகினி ஜெகன்மோகன்
ஆதவன் பானர்ஜி (பானர் குப்பன்) பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
பரிந்துரை - சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
2010 கச்சேரி ஆரம்பம் தீபாவளி
சுறா அம்பர்லா
தில்லாலங்கடி ஜாக்சன்
நகரம் 'ஸ்டைல்' பாண்டி
2011 இளைஞன் ஐசக்
காவலன் அமாவாசை
தூங்கா நகரம் அவராகவே சிறப்புத் தோற்றம்
மம்பட்டியான் 'சில்க்' சிங்காரம்
2012 மறுபடியும் ஒரு காதல் மருத்துவர் சிங்காரம்

2014

தெனாலிராமன் தெனாலிராமன் (சாதாரண மனிதன்)/
மாமன்னர் (விகட நகரத்தின் மன்னர்)
2015 எலி ஜாலி
2016 கத்தி சண்டை Dr. பூத்ரி
2017 மெர்சல் வடிவு
சிவலிங்கா பட்டுகுஞ்சம்
2022 நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் நாய் சேகர்
2023 மாமன்னன் எம்எல்ஏ மாமன்னன்

மற்ற மொழித் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2011 லக்கி சோக்கர்ஸ் மலையாளம் சிறப்புத் தோற்றம்

வரவிருக்கும் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2023 மாமன்னன்

பாடிய பாடல்கள்

வடிவேலு நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். இது இவர் இதுவரை பாடியுள்ள பாடல்களின் தொகுப்பாகும்.

எண் பாடல் திரைப்படம் இசையமைப்பாளர்
1 போடா போடா புண்ணாக்கு என் ராசாவின் மனசிலே இளையராஜா
2 எட்டனா இருந்தா எல்லாமே என் ராசாதான் இளையராஜா
3 அம்மணிக்கி அடங்கி ராஜாவின் பார்வையிலே இளையராஜா
4 பாலு பாலு நேபாலு தாய்க்குலமே தாய்க்குலமே தேவா
5 வாடி பொட்டபுள்ள வெளியே காலம் மாறிப் போச்சு தேவா
6 யானை யானை சக்தி ஆர். ஆனந்த்
7 ரயிலு ரயிலு பாரதி கண்ணம்மா தேவா
8 லக் லக் தடயம் தேவா
9 பொன்னுமணி பொன்னுமணி போராளே பூந்தோட்டம் இளையராஜா
10 அல்வா குடுக்கிறான் மனைவிக்கு மரியாதை சிற்பி
11 ஒத்திக்கடா மச்சான் நேசம் புதுசு பாப்பி
12 சந்தன மல்லிகையில் ராஜகாளியம்மன் எஸ். ஏ. ராஜ்குமார்
13 தெக்கத்தி மாப்பிள்ளை மகளிர்க்காக இந்தியன்
14 மதுரக்கார விவேக் லூட்டி தேவா
15 நாலு அடி யாரு என் புருசன் குழந்தை மாதிரி எஸ். ஏ. ராஜ்குமார்
16 மதனா மதிவதனா மாயன் தேவா
17 விக்கலு பகவதி தேவா
18 உன்னை நான் காதல் கிறுக்கன் தேவா
19 காதல் பண்ண கோவில் ஹாரிஸ் ஜயராஜ்
20 ஓரொன்னு ஒன்னு ஏய் ஸ்ரீகாந்த் தேவா
21 கட்டுனா அவள கட்டுவன்டா ஜெயசூர்யா தேவா
22 அலாவுதீன் அலாமா சாணக்கியா ஸ்ரீகாந்த் தேவா
23 வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டாய்யா குண்டக்க மண்டக்க பரத்வாஜ்
24 ஃப்ரீயாவிடு ஃப்ரீயாவிடு ஆறு தேவி ஸ்ரீ பிரசாத்
25 பம்பர் குலுக்கல் பிறந்த நாள் தேவா
26 ஆயிரம் சன்னல் வீடு வேல் யுவன் சங்கர் ராஜா
27 வந்தனம் வந்தனம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் சபேஷ் முரளி
28 மல்லிகா செராவத்
29 தாயாரம்மா சேவல் ஜி. வி. பிரகாஷ் குமார்
30 வாடா மாப்புள வில்லு தேவி ஸ்ரீ பிரசாத்
31 ரம்பப்பா ரம்பப்பா தெனாலிராமன் டி. இமான்

சான்றுகள்

  1. "Vadivelu – profile". Nilacharal.com. Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
  2. விக்கிபீடியாவில் என் தாய் குறித்து தவறான தகவல்! தயவுசெய்து அழித்துவிடுங்கள்! நடிகர் வடிவேல் உருக்கம் ஒன்இந்தியா 19, சனவரி, 2023
  3. நடிகர் வடிவேலு மனைவிக்கு வருவாய்த்துறையினர் நோட்டிஸ்? செய்தி, தினமணி 28 திசம்பர், 2012
  4. தி இந்து தமிழ் செய்தி, 9.12.2014-மதுரையில் நடிகர் வடிவேலு மகன் திருமணம்
  5. "கூரை வீட்டில் வசித்த பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு".தினமலர் (திசம்பர் 10, 2014)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
  7. http://www.hindu.com/fr/2008/01/25/stories/2008012550850100.html[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "சிம்புவை தொடர்ந்து வடிவேலு மீதான ரெட் கார்ட் தடையும் நீக்கப்பட்டது...". தினமலர் இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210828150138/http://www.dinamalarnellai.com/cinema/news/106257. பார்த்த நாள்: 28 August 2021. 
  9. "Tamil cinema Data Base of actors,actress,directors". Cinesouth.com. Archived from the original on 2007-08-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  10. Social Post. "Vadivelu Filmography, Vadivelu Movies, Vadivelu Films – entertainment.oneindia.in". Popcorn.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2012-08-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Vadivelu Movies, Vadivelu Filmography, Vadivelu Videos, Vadivelu Photos – Sangeethouse.com". Dishant.com. Archived from the original on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-16.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-18. பார்க்கப்பட்ட நாள் 2014-08-22.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-13. பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
  15. http://www.veoh.com/watch/v6837619bjdcCBbB?h1=Oru+Murai+Solli+Vidu+Movie+-+Vadivelu+Comedy

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவேலு_(நடிகர்)&oldid=4152761" இலிருந்து மீள்விக்கப்பட்டது