மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதுரை
தூங்கா நகரம்
—  மாநகரம்  —
பெரியார் பேருந்து நிலையம், மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை மாநகராட்சி, வைகை ஆறு, திருமலை நாயக்கர் மகால், மீனாட்சியம்மன் கோவில், மதுரை மாநகர்
மதுரை
இருப்பிடம்: மதுரை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°56′N 78°07′E / 9.93°N 78.12°E / 9.93; 78.12ஆள்கூறுகள்: 9°56′N 78°07′E / 9.93°N 78.12°E / 9.93; 78.12
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு L.சுப்ரமணியன் இ.ஆ.ப [3]
மேயர் வே. ராஜன் செல்லப்பா
மக்கள் தொகை

அடர்த்தி

10,16,885 (2011)

4,100/km2 (10,619/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

248 சதுர கிலோமீற்றர்கள் (96 sq mi)

101 மீற்றர்கள் (331 ft)


மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை

மதுரை (ஆங்கிலம்:Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும்[4], நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவது, மற்றும் இந்திய அளவில் 31வது பெரிய நகரம் ஆகும்.[5] வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று[6]. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கிமு.3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.[7].

மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 - கிமு 283) மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ்(350 கிமு - 290 கிமு) ஆகியோரின் குறிப்புகளில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக ராச்சியம் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.

நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ்பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து லட்சம் மக்களால் கண்டுகளிக்கப்படும் சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல் மற்றும் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் பெயர்பெற்ற நிகழ்வுகளாகும்.

தென்தமிழகத்தின் முக்கியத் தொழில்துறை மற்றும் கல்வி மையமாக மதுரை திகழ்கிறது. ரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன[8]. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு மற்றும் உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி,[9] மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன[10]. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்து இரண்டாவது மாநகராட்சி ஆகும். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையும் உள்ளது. இது இந்தியாவில் மாநிலத்தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில் பன்னாட்டு சேவைகள் வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தேர்வு செயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது[11].

மதுரை 147.99 km2 பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்தியா மக்கட்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட தகவலின் படி மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்[12].


பெயர்க்காரணம்[தொகு]

இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல் மற்றும் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை > மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி).[13][14][15] இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.[16] 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில் மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[16][17] கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது.[16] சிவனடியார்கள் மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.[16][18] தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.[19].

வரலாறு[தொகு]

வைகை வட கரையிலிருந்து மதுரையைச் சித்தரிக்கும் 18ஆம் நூற்றாண்டு ஓவியம்


கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன.[20] கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது.[16] இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர்.[21] மேலும் சாணக்கியர் எழுதிய [22] அர்த்தசாத்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.[16] தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது [23] மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார்[24]. ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (61 – c. 112 கிபி), தாலமி (c. 90 – c. கிபி 168) மற்றும் கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ(64/63 கிமு – c. 24 கிபி),[25] மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.[17]


சங்காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்ககாலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை கிபி 590 பாண்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.[26][27] ஆனால், 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த[28] மதுரையானது, 13 ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.[28] முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்(கிபி1268 – 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது.[28] பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் கி.பி.1378 இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[29] கிபி 1559 இல் விசய நகரப்பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர்.[29] பின் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736 இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும் வரை, மதுரையானது சந்தா சாகிப்(கிபி 1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம்(கிபி 1725 – 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.[16] பின் 1801 இல் ஆங்கிலேயரின் நேரடி ஆளுகையின் கீழ் வந்தது.

காந்தியும் மதுரையும்[தொகு]

மதுரையில் தான் காந்தியடிகள் அரையாடை கோலம் பூண்டார். 1921 செப்டம்பர் 26 ஆம் நாள் அரையாடை காந்தியை முதன் முதலாக மதுரை மக்கள் கண்டனர்

மக்கள்[தொகு]

பூ வியாபாரம் செய்யும் ஒரு மதுரைவாசி

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,23,093 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[30] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,041,038 மக்கள் மதுரை மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை விட 17.95% அதிகம் ஆகும். இவர்களில் 1,528,308 பேர் ஆண்கள், 1,512,730 பேர் பெண்கள் ஆவர்கள். மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகையில் 81.66% பேர் கல்வியறிவு பெற்றவர்களாவர். இதில் ஆண்களின் விகிதம் 86.55% ஆகவும் பெண்களின் விகிதம் 76.74% ஆகவும் இருக்கிறது,இதை தவிர்த்து மூன்றாம் பாலின மற்றும் பால் புதுமையர் எண்ணிக்கையும் மதுரையில் அதிகம் இவர்களின் ஆதரவுக்கு ஸ்ருஷ்டி செயல்படுகிறது.தமிழகத்தில், தலித் மக்கள் தொகையில் மதுரை மாவட்டம் 17வது இடத்தில் உள்ளது. ஆனால், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளில் முதலிடம் வகிக்கிறது.[31]

நகரமைப்பு[தொகு]


தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி சில தமிழ் மாதங்களின் பெயர்களில் அமையப்பெற்ற வீதிகள் நகரின் மையமாக உள்ளது.

நிர்வாகம்[தொகு]

மதுரை மாநகராட்சி அலுவலகம்

மதுரை 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சி நிர்வாகமாக ஆக்கப்பட்டது. 1971ல் மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டு தற்போது நகரின் நிர்வாகம் மதுரை மாநகராட்சியின் வசம் உள்ளது. மாநகராட்சியின் தலைவர் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர, மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 பேர் மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயராக ராஜன் செல்லப்பா மற்றும் துணைமேயராக கோபாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்கள். மதுரை மாநகராட்சி அலுவலகம் வைகை ஆற்றுக்கு வடக்கே அழகர் கோவில் சாலையில்தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது.

புவியியல் மற்றும் பருவநிலை[தொகு]

river with water flowing amidst weeds
வைகை ஆறு
தட்பவெப்பநிலை வரைபடம்
Madurai
பெ மா மே ஜூ ஜூ் செ டி
 
 
20
 
30
20
 
 
13.5
 
32
21
 
 
18
 
35
23
 
 
55
 
37
25
 
 
70
 
37
26
 
 
40
 
36
26
 
 
49.5
 
36
25
 
 
104
 
35
25
 
 
119
 
34
24
 
 
188
 
32
24
 
 
145
 
30
23
 
 
51
 
29
21
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)

இவ்வூரின் அமைவிடம்9°56′N 78°07′E / 9.93°N 78.12°E / 9.93; 78.12 ஆகும்.[32] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 136 மீட்டர் (446 அடி) உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை இரு சமபகுதிகளாகப் பிறிக்கிறது.[33] நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும் வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன.[34] மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.[34]

கலாச்சாரம்[தொகு]

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் மிகுதியான எண்ணிக்கையில் வசித்து வரும்போதிலும் நகரில் குறிப்பிடத்தக்க அளவில் சௌராஷ்டிர இன மக்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் தவிர வியாபார நிமித்தமாக பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த வட இந்திய மக்களும் நகரின் மத்தியில் வசித்து வருகின்றனர். இந்து மக்கள் நகரம் முழுவதும் உள்ளபோதும் இரயில்வே காலனி, மகபூபாளையம், ஞானவொளிவுபுரம் போன்ற பகுதிகளில் ஆங்கிலோ-இந்திய மக்களும் கிறித்தவர்களும் வசித்து வருகின்றனர். நகரின் மையப்பகுதிகளில் இசுலாமிய மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே நகரில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் நிலவுகின்றன. மத மற்றும் பண்பாட்டு நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டுச் சமுதாயமாக மதுரை நகரம் திகழ்கின்றது.

உணவு[தொகு]

தமிழகத்தின் பிற நகரங்களைப் போலவே மதுரை நகரிலும் முக்கிய உணவாக அரிசி சோறு உள்ளது. இவை தவிர இங்கு பிரியாணி, வெண்பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுப் பொருட்களும் வடை வகைகளும் நகர மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் ஆகும். இங்கு சில கடைகளில் கிடைக்கும் இட்லி வகைகளின் தனிப்பட்ட சுவையினால் ''மதுரை மல்லிகை இட்லி' என்ற புனைப்பெயருடன் அறியப்படுகிறது. "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.

கல்வி[தொகு]

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுள் சில மதுரையில் அமைந்துள்ளன. இரண்டு கல்லூரிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், சில கல்லூரிகள் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாவும் செயல்பட்டு வருகின்றன. மதுரையில் மதுரை பல்கலைக்கழகம் என்கிற பெயரில் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது இது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாக செயல்பட்டு வருகிறது. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியாக அரசு உதவி பெறும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி விளங்குகிறது. இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. சட்டம் தொடர்பான கல்வித் தேவைகளுக்கு மதுரை சட்டக்கல்லூரி உள்ளது. இந்நகரில் இருக்கும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ) ஆகிய முக்கியச் சாலைகளின் சந்திப்பில் மதுரை வீற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கியச் சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு. இவ்விமான நிலையத்திலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்கள் மட்டுமல்லாது, இலங்கையின் தலைநகர் கொழும்புவிற்கும் விமானச் சேவை உண்டு. தமிழகத்தின் தலைநகருடன் மதுரையை இணைக்கும் வகையில் பாண்டியன் அதிவிரைவுத் தொடர்வண்டி மற்றும் வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி ஆகிய விரைவுத் தொடருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. இவை தவிர இங்குள்ள தொடருந்து நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற நாட்டின் பிற முக்கிய நகரங்களையும், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்ற மாநிலத்தின் பிற பகுதிகளையும் இணைக்கும் தொடருந்துகள் மதுரை வழியாக இயக்கப்படுகின்றன.

சுற்றுலா[தொகு]

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் , கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், மதுரை, குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை, தெப்பக்குளம் எனச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன. மதுரைக்கு மிக அருகில் அழகர் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது. இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்டப் பயணிகளும் விரும்பி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில சுற்றுலா மையங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு, வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. திருமலை நாயக்கர் மகால் பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு ஒலி-ஒளி அமைப்புகளுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள்[தொகு]

மதுரைக்குப் அருகாமையில் உள்ள மாவட்டங்களான இராமநாதபுரம் மாவட்டத்தில் புண்ணிய தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோயில், ஆவுடையார்கோயில், திருப்பூவணம் பூவணநாதர் கோயில் போன்ற நூற்றாண்டுகள் கடந்த கோவில்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், திண்டுக்கல் மலைக்கோட்டை,செங்குறிச்சி மலைக்கேணி பாலமுருகன் கோவில், தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி, வைகை அணை மற்றும் இம்மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரள மாநில எல்லையில் உள்ள தேக்கடி, மூணாறு போன்றவையும் சில மணி நேரப் பயணத் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

தகவல் தொடர்பு[தொகு]

மதுரையில் பி.எஸ்.என்.எல், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ்.என்.எல், ஹட்ச், ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன. வானொலிகளில் பண்பலை அலைவரிசைகளான சூரியன் பண்பலை, ரேடியோ மிர்ச்சி, ஹலோ பண்பலை ஆகியனவும் அனைத்திந்திய வானொலியின் மதுரை நிலையம் நகரில் செயல்பட்டு வருகின்றன. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, மாலை மலர் ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளை கொண்டுள்ளன.

பிரச்சினைகள்[தொகு]

ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில் கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்[தொகு]

மதுரை நகரின் நெரிசலான சாலைகள்

மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள்.

வைகையாற்றில் கழிவுகள்[தொகு]

மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.

போக்குவரத்து பிரச்சினைகள்[தொகு]

நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.

சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்குமாயின் தற்போதைய போக்குவரத்துப் பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும்.

கொண்டாட்டங்கள்[தொகு]

வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா

மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்தத் திருவிழா சமயத்தில் திருக்கல்யாணம் என்று பரவலாக அறியப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்குதல் என அழைக்கப்படும் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழாவும் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் சில. சித்திரைத் திருவிழா தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்படும் ஒரு திருவிழா ஆகும். தெப்பத்திருவிழா தெப்பத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர விழாவாகும். இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கியத் திருவிழாக்கள்.

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. http://www.tn.gov.in/government/keycontact/197
 2. http://www.tn.gov.in/government/keycontact/18358
 3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
 4. "All towns and agglomerations in Tamil Nadu having more than 20,000 inhabitants.".
 5. Tamil Nādu (India): State, Major Cities, Towns & Agglomerations - Statistics & Maps on City Population
 6. "India heritage - Meenakshi temple, Madurai". இந்திய அரசின் இணையதளம்.
 7. "இறையனார் களவியல் உரை கூறும் முச்சங்கம் பற்றிய விவரங்கள்". தமிழ் இணைய பல்கலைக்கழகம். பார்த்த நாள் செப்டம்பர் 15, 2012.
 8. "An industry that can bolster the economy of Madurai.". இந்து பத்திரிகை.
 9. List of Colleges in Madurai.
 10. "மதுரை மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்". மதுரை நிர்வாக அதிகாரப்பூர்வ இணையதளம். பார்த்த நாள் செப்டம்பர் 15, 2012.
 11. "மாசில்லா மதுரை". தினமணி. பார்த்த நாள் திசம்பர் 30, 2014.
 12. "Cities having population 1 lakh and above" (PDF). The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 17 October 2011.
 13. திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83
 14. வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45
 15. வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72
 16. 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 16.6 Harman 1992, pp. 30–36.
 17. 17.0 17.1 Reynolds & Bardwell 1987, pp. 12–25.
 18. Prentiss 1999, p. 43.
 19. Mahadevan.
 20. Zvelebil 1992, p. 27.
 21. Quintanilla 2007, p. 2.
 22. Agarwal 2008, p. 17.
 23. (பரிபாடல் திரட்டு 1-3, 6 மதுரை).
 24. "மதுரையைக் குறிப்பிடும் சங்க இலக்கிய வரிகள்". பார்த்த நாள் செப்டம்பர் 15, 2012.
 25. Bandopadhyay 2010, pp. 93–96.
 26. Dalal 1997, p. 128.
 27. Kersenboom Story 1987, p. 16.
 28. 28.0 28.1 28.2 Salma Ahmed 2011, p. 26.
 29. 29.0 29.1 V. 1995, p. 115.
 30. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
 31. L. Srikrishna (26 ஆகத்து 2014). "Dark face of Madurai". த இந்து. பார்த்த நாள் 26 ஆகத்து 2014.
 32. "Madurai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
 33. Madurai Corporation – General information.
 34. 34.0 34.1 Imperial Gazetter of India, Volume 16 1908, p. 404.

படக் காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை&oldid=1811579" இருந்து மீள்விக்கப்பட்டது