விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் விக்கிப்பீடியா பயனர்களால் எழுதப்பட்ட நல்ல கட்டுரைகள் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றில் அனேகமானவை சிறப்புக் கட்டுரைத் தரத்தை எட்டக் கூடியவை. நீங்களும் பங்களித்து மேம்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு

முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்





முதற்பக்க கட்டுரைகள் 2012
சூன் 3, 2012
Muziri-Alexandriabusinesspact.jpg

முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை என்பது கிபி 2ஆம் நூற்றாண்டில் சங்ககாலச் சேரர்களின் துறைமுகப் பட்டினமான முசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியா வணிகர்களுக்கும் நடந்த வணிக ஒப்பந்தம் ஆகும். தற்போது வியன்னா நகர அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் கோப்பு எகிப்திய மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே நடந்த கடன் மாற்று விவரங்களை குறிப்பிடுகிறது. இதில் கங்கைச் சமவெளியிலுள்ள இலாமிச்சை, தந்தம், ஆடைகள் போன்றவற்றை 25 சதவீத சுங்க வரியுடன் விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய வரலாற்றில் திருப்புமுனையாய் அமைந்த இந்த உடன்படிக்கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு பண்டைய எகிப்து நாட்டு நைல் நதியை சுற்றியுள்ள 2400 ஏக்கர் பண்ணை நிலங்களை விலைக்கு வாங்கலாம். மேலும்


Eurozone.svg

ஐரோ வலயம் ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளியல், நாணவியல் ஒன்றியமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. 1998இல் பதினோரு உறுப்பு நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை 1999, சனவரி 1 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007 இலும் சைப்பிரசு, மால்டா 2008 இலும் சிலோவாக்கியா 2009 இலும் தேர்ச்சி பெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன. மேலும்...


மே 27, 2012
Gulf Fritillary Life Cycle.svg.png

உயிரியலில் வாழ்க்கை வட்டம் எனப்படுவது, இனத்தின் உறுப்பினர்கள், தமது விருத்தி நிலைகளில் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, தொடர்ந்து வரும் தலைமுறையின் அதே நிலையினை அடையும்வரை, அவற்றில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கும். வாழ்க்கை வட்டத்தில் ஒரு சந்ததியிலிருந்து, அடுத்த சந்ததி தோன்றுவது இனப்பெருக்கம் மூலமாக நடைபெறும். இந்த இனப்பெருக்க முறையானது கலவிமுறை இனப்பெருக்கமாகவோ அல்லது கலவியில்முறை இனப்பெருக்கமாகவோ அமையலாம். நோய்க்காரணிகள், நோய்க்காவிகள் போன்றவற்றின் வாழ்க்கை வட்டத்தை அறிந்து வைத்திருப்பதனால், அவற்றை இலகுவாக அழிக்கக் கூடிய வாழிடங்கள், அல்லது விருத்தி நிலைகளைத் தெரிந்து, அவற்றை அழிப்பதனால், நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறலாம். மேலும்...


சிலம்பம் - இருகைச் சுத்தல்

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல்(தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும்...


மே 20, 2012
Sphere wireframe 10deg 6r.svg

கோளம் அல்லது உருண்டை என்பது முப்பரிமாண வெளியில் அமைந்த ஒரு உருண்டையான வடிவவியல் பொருளாகும். இருபரிமாணத்தில் உள்ள வட்டத்தைப் போலவே கோளமும் அதன் மையத்தைப் பொறுத்து சமச்சீரானது. கோளத்தின் மேற்பரப்பின்மீது அமையும் அனைத்துப் புள்ளிகளும் கோளத்தின் மையத்திலிருந்து சமதூரத்தில் இருக்கும். இச்சமதூரம், கோளத்தின் ஆரம் எனப்படும். கோளத்தின் உள்ளே அமையும் மிகப் பெரிய நேர்கோட்டின் தூரம் கோளத்தின் விட்டம் எனப்படும், இது கோளத்தின் மையம் வழியாகச் செல்லும். மேலும் இது கோளத்தின் ஆரத்தைப்போல் இருமடங்காக இருக்கும். பூமி, உருண்டை என்ற பொருளுடைய கிரேக்க மொழிச் சொல்லான σφαῖραஸ்ஃபைரா என்பதிருந்து ஆங்கிலத்தில் ஸ்ஃபியர் எனக் கோளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. . மேலும்...


Dynamite-5.svg

டைனமைட்டு என்பது நைட்ரோகிளிசரின் என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள், மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் ஆற்றலுடன் தொடர்புடையது என பொருள்படும் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. . மேலும்...


மே 13, 2012
Petronas Panorama II.jpg

கோலாலம்பூர், மலேசியாவின் தலைநகரம் ஆகும். மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டுள்ளது. இது மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சிப் பகுதிகளில் ஒன்று. இந்நகரவாசிகள் கேலைட்சுகள் என பொதுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர். 243 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த நகரின் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். மலேசியாவின் நாடாளுமன்றமும் மலேசிய மன்னர் யங் டி-பெர்துவன் அகோங்கின் அரண்மனையான ஸ்தான நகராவும் இங்கு உள்ளன. 1990கள் முதல் இந்நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள், அரசியல் மாநாடுகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் ஆக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இருந்து வருகின்றன. மேலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும். . மேலும்...


Thomas Mann 1937.jpg

தாமசு மாண், 1929ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர் ஆவார். அவர் ஆக்கிய பல புதினங்களும் குறியீட்டு முறையிலும் முரணான முறையிலும் காப்பிய வகையில் உருவாக்கப்பட்டவை ஆகும். தாமசு மாண் செருமானிய, விவிலிய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும், செருமானிய அறிஞர்களாகிய யோஹான் வோல்ஃப்காங் ஃபோன் கேத்தே, பிரீட்ரிக் நீட்சே, ஆர்த்தர் ஷோப்பனாவர் போன்றோரின் சிந்தனைவழி தொடர்ந்தும், அவற்றை நவீனப்படுத்தி, ஐரோப்பிய, செருமானிய கலாச்சாரத்தைப் பகுப்பாய்வு செய்து விமர்சிக்கின்றார். அடோல்ஃப் ஹிட்லர் செருமனியில் பதவியைப் பிடித்தபோது, தாமசு மாண் செருமனியை விட்டு சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். 1939இல் இரண்டாம் உலகப் போர் வெடித்த கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். 1952ஆம் ஆண்டு அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினார். தாமசு மாண் "நாடுகடத்தப்படுநிலை இலக்கியம்" என்னும் எழுத்து வகைப் படைப்புக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். . மேலும்...


மே 6, 2012
Fort St. George, Chennai.jpg

சென்னை முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர பிரெஞ்சு படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவரி 1759 வரை, லல்லி தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு ஆண்டுப் போரின் போது நடந்த போராகும். பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். இந்தப் போரில் சென்னை நகரைப் பாதுகாக்க பிரித்தானியப் படையினர் 26,554 பீரங்கிக் குண்டுகளையும் 200,000 தோட்டாக்களையும் பயன்படுத்தினர். சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றத் தவறியமை பிரெஞ்சுப் படையின் இந்திய நுழைவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் பின்னாளில் நடைபெற்ற வந்தவாசிப் போருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும்...


1st Dalai Lama.jpg

தலாய் லாமா என்பது மஞ்சள் தொப்பி என்னும் திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா (குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும். தலாய் லாமாக்கள் ஆன்மிகத் தலைவர்கள் ஆவர். மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் அவலோகிதரின் அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஐந்தாவது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தைச் செலுத்தினார். அப்போது தொடங்கி தலாய் லாமாக்கள் ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை அவர்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். மேலும்...


ஏப்ரல் 29, 2012
ABO donation path.jpg

ஏபிஓ குருதி குழு முறைமை என்பது, மனிதரில் குருதி மாற்றீட்டில் பயன்படும் மிகவும் முக்கியமான குருதிக் குழு முறைமை ஆகும். குருதி வகை களில் வேறுபட்டுக் காணப்படும் குருதிச் சிவப்பணுவில் உள்ள பிறபொருளெதிரியாக்கிகள், குருதி தெளியத்தில் காணப்படும் பிறபொருளெதிரிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த குருதிக் குழு முறைமை இயங்குகின்றது. இதனுடன் தொடர்புடைய எதிர்-A பிறபொருளெதிரி (Anti-A Antibody) மற்றும் எதிர்-B பிறபொருளெதிரி பொதுவாக IgM (Immunoglobulin M) வகை பிறபொருளெதிரிகள் ஆகும். இந்த IgM வகை பிறபொருளெதிரிகள் வாழ்வின் தொடக்கக்காலத்தில், உணவு, பாக்டீரியா மற்றும் வைரசு போன்ற சூழல் காரணங்களால் உருவாகின்றன. ABO இரத்த வகைகள் மனிதக் குரங்கு, சிம்ப்பன்சி, பொனொபோ, கொரில்லா போன்ற சில விலங்குகளிலும் காணப்படுகின்றன. மேலும்...


Bill Clinton, Yitzhak Rabin, Yasser Arafat at the White House 1993-09-13.jpg

அரபு - இசுரேல் முரண்பாடு என்பது நடு கிழக்கில், அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான அரசியல் மோதல்களும் பொதுப் பகையுமாகும். இம்முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சையோனிய எழுச்சியும் அராபிய தேசியவாதமும் ஆகும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிப்பட்ட இம் முரண்பாடு, 1948இல் இசுரேல் ஒரு தனி நாடாக உருவானதும், முழு அரபு நாடுகள் கூட்டமைப்புக்குமாக விரிவடைந்தது. யூதர்களின் கருத்துப்படி, அவர்கள் குறிப்பிடும் நிலப்பரப்பானது வரலாற்றுத் தாயகமாகவும், அதே நேரத்தில் ஒன்றிணைந்த அராபிய இயக்கத்தின்படி அது வரலாற்று நோக்கில் பாலத்தீன அராபியர்களுக்கு உரியதென்றும், ஒன்றிணைந்த இசுலாமியவாதத்தின்படி அந்நிலப்பரப்பானது இசுலாமிய நிலமாகவும் நோக்கப்படுகிறது. மேலும்...


ஏப்ரல் 22, 2012
HMS Illustrious01.jpg

வானூர்தி தாங்கிக் கப்பல் என்பது வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறக்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக் கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன. இதனால், ஒரு கடற்படை தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு, வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியிலும் அப்பகுதியில் உள்ள வானூர்தித் தளங்களை நம்பி இராமல் வான் தாக்குதல்களை நடத்துவதற்கு வழி செய்கின்றன. மரக் கலங்களில் பலூன்களைக் காவிச்சென்றதில் இருந்து அணுவாற்றலில் இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடல் ஆளுமை பெற இன்றைய ஆழ்கடற் படைகளுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன. மேலும்...


Accused of Kakori Case 1925.jpg

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்பது பிரித்தானியரை வெளியேற்றி இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு புரட்சி அமைப்பு. 1924ல் துவக்கப்பட்ட இவ்வமைப்பு 1930கள் வரை வன்முறை, தீவிரவாத உத்திகளைக் கொண்டு பிரித்தானிய ஆட்சியினை எதிர்த்து வந்தது. பகத் சிங், சுக்தேவ் தபார், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். ராம் பிரசாத் பிசுமில் இதன் முன்னோடி அமைப்பான இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் முக்கிய உறுப்பினர். வெளியுலகிற்குத் தெரிந்த இதன் முதல் நடவடிக்கை 1925 இல் நடத்தப்பட்ட ககோரி தொடருந்துக் கொள்ளை ஆகும். ஆஷ்ஃப்க்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங், ராஜேந்திர லகிரி ஆகியோர் காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டனர். தில்லியில் மத்திய சட்டமன்றத்தின் மீது குண்டு வீசியது இந்த அமைப்பு நடத்திய அடுத்த முக்கிய நடவடிக்கை. 1931ல் பகத் சிங், சுக்தேவ். ராஜ்குரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர். மேலும்...


ஏப்ரல் 15, 2012
A farmer and his cows.jpg

வேளாண்மை என்பது உணவு, பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலம் அல்லது தரிசு நிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன. மேலும்...


Rose-Sanderson-Votes-for-Women.jpeg

பெண்கள் வாக்குரிமை என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும். சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும். நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். மேலும்...


ஏப்ரல் 8, 2012
Death Railway2.gif

சயாம் மரண இரயில்பாதை அல்லது சயாம் - பர்மா இரயில்வே என்பது இரண்டாம் உலகப்போரின் போது நிர்மாணிக்கப்பட்ட 415 கி.மீ தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தொடர் பாலம். இந்தத் தொடர் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் சப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த ஒரு ரயில்பாதை முயற்சியாக முடிந்தது. பல ஆசியத் தொழிலாளர்களும் போர்க்கைதிகளும் வலுக்கட்டாய வேலைகளுக்கு இப்பாதைக் கட்டுமானத்தில் உட்படுத்தப் பட்டதுடன் போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல் போன்றவற்றால் லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போயினர். நேதாஜியும் இந்த பாதையை பர்மிய எல்லையில் இருந்து இந்தியாவைப் பார்த்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய போது பயன்படுத்தினார். மேலும்...


Rosalindelsiefranklin.jpg

ரோசலிண்ட் பிராங்க்ளின் (1920-1958) இலண்டனைச் சேர்ந்த அறிவியலாளர். உயிரியற்பியல் அறிஞர், வேதியியலாளர், மூலக்கூற்று உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் எனப் பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர். பிராங்க்ளின் 1951-1953 ஆம் ஆண்டு வரை மரபணு ஆய்வில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார். வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதாரம் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன்படுத்தி அவர்களின் ஆய்வைத் தொடர்ந்தனர். இந்த ஆய்வுகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகியோருக்கு பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும்...


ஏப்ரல் 1, 2012
Peruvazhudhi.jpg

சங்ககாலத் தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியலுக்கு அடுத்து சங்ககாலத் தமிழக நாணயவியலின் பங்கு மிகுதியானது. குறிப்பாக, மூவேந்தர் வழங்கி வந்த முத்திரைக் காசுகளும், அவற்றை உருவாக்க பயன்படுத்திய வார்ப்புக் கூடுகளும் பெருவழுதி நாணயம் (படம்) என்ற பாண்டிய மன்னனின் காசுகளும் சங்ககாலத் தமிழக வரலாற்று நிறுவலில் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர் , குறுநில மன்னர்கள் ஆகியோரின் நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், வேற்று மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணிக்க முடிகிறது. மேலும்...


Federer 2009 Australian Open.jpg

ரோஜர் ஃபெடரர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற டென்னிசு வீரர். இவரின் 2009 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஆறாவது வெற்றி, மொத்தம் ஐந்து முறை தொடர்ந்து விம்பிள்டன் ஒற்றையர் முதல்வனாக வெற்றி பெற்ற பியான் போர்கின் அரிசெயலை முறியடித்து வரலாறு படைத்ததாகும். இதுவரை, ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 16 பெருவெற்றித் தொடர் பட்டங்களை வென்றுள்ளார். தவிர, ஆத்திரேலிய, பிரெஞ்சு, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஆகிய பெருவெற்றித்தொடர் பட்டங்களை வென்ற ஏழு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 22 முறை பெருவெற்றித்தொடர் இறுதிப் போட்டிகளில் ரோச்யர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை. அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை பெருவெற்றித்தொடர் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தகைய அரியசெயல்களால் பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேசுட்ரோ என்றும் அவர் புகழப்படுகிறார். மேலும்...


மார்ச் 25, 2012
AMI scheme.png

மாரடைப்பு இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும். மேலும்...


Karl Marx 001.jpg

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. இவர் செய்த புரட்சி நடவடிக்கைகளுக்காக 1845ல் பாரிசு நகரத்திலிருந்தும், 1849ல் கோல்ன் நகரிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். மேலும்...


மார்ச் 18, 2012
CircularCoordinates.svg

கணிதத்தில் வாள்முனை ஆள்கூற்று முறைமை என்பது ஒரு சமதளத்தில் அமைந்துள்ள எப்புள்ளியையும் முறையாகக் குறிப்பிடும் ஒரு முறைமை ஆகும். இம்முறையில் சமதளத்தில் உள்ள எந்தவொரு புள்ளியும் ஒரு நீளம், ஒரு கோணம் ஆகிய இரண்டு ஆள்கூறுகளால் குறிக்கப்பெறுகின்றது. இம்முறையில் நிலையான ஒரு தொடக்கப்புள்ளி உண்டு. சமதளத்தில் உள்ள எப்புள்ளியும் இந்தத் தொடக்கப்புள்ளியில் இருந்து எவ்வளவு தொலைவு உள்ளது என்று கூறும் நீளம் ஓர் ஆள்கூறு. அந்த நீளத்தை உடைய கோலை அல்லது வாளை, கிடை அச்சில் இருந்து இடஞ்சுழியாகச் சுழற்றி சமதளத்தில் உள்ள அப்புள்ளியை முனை தொடுமாறு இருந்தால் என்ன கோணம் உள்ளதோ, அது மற்றொரு ஆள்கூறு ஆகும். மேலும்...


Ananda Ranga Pillai.png

ஆனந்த ரங்கம் பிள்ளை, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 18ஆம் நூற்றாண்டுக் காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை' இந்தியாவின் பெப்பிசு' எனவும் ' நாட்குறிப்பு வேந்தர்' எனவும் போற்றுகின்றனர். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ சம்பவங்களைகளைப் பற்றியும் அறிய முடிகிறது. மேலும்...


மார்ச் 11, 2012
Sylvia plath.jpg

சில்வியா பிளாத் (1932-1963) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகிறார்; பாவமன்னிப்பு வெளிப்பாடு கவிதைப்பாணியை முன்னெடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. கொலொசஸ் மற்றும் பிற கவிதைகள், ஏரியல் ஆகியன இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள். தி பெல் ஜார் என்ற பகுதி-தன்வரலாற்றுப் புதினத்தை விக்டோரியா லூகாஸ் எனும் புனைப் பெயரில் எழுதினார். 1982இல் இவரது கலக்டெட் போயம்ஸ் கவிதைத் தொகுப்புக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இறப்புக்குப் பின்னர் புலிட்சர் பரிசு பெற்ற முதல் கவிஞர் பிளாத். மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த பிளாத் எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னர் கவிஞரான டெட் ஹியூக்சை மணந்தார். உளச்சோர்வினால் நெடுநாட்கள் பாதிக்கப்பட்டு தன் கணவரைப் பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு, தற்கொலை குறித்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. மேலும்...


Madras Prov South 1909.jpg

சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை. 1600 இல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசி ஓர் ஆங்கிலேய வர்த்தகர் குழுமத்துக்கு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் கூட்டுப் பங்கு நிறுவனத்தை உருவாக்க அனுமதி அளித்தார். இந்நிறுவனம் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் காலத்தில் இந்தியாவில் வர்த்தக நிலையங்களை அமைக்க முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியைப் பெற்றது. முதலில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் வர்த்தக நிலையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் சந்திரகிரி அரசரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கம்பனி நிருவாகி சர் பிரான்சிசு டே, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தருகே ஒரு வணிக நிலையத்தை நிறுவ நிலஉரிமை பெற்றார். மேலும்...


மார்ச் 4, 2012
Schrodingers cat.svg

சுரோடிங்கரின் பூனை என்பது ஆஸ்திரிய இயற்பியலாளரான எர்வின் சுரோடிங்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனை ஆகும். முரண்படுதோற்றம் கொண்ட இச் சோதனை 1935 இல் முன்வைக்கப்பட்டது. குவாண்டம் பொறிமுறை தொடர்பான கோப்பன்கேகன் விளக்கத்தை அன்றாடப் பொருள்கள் தொடர்பில் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இச் சோதனை எடுத்துக்காட்டுகிறது. இச் சோதனையில் இறந்திருக்கலாம் அல்லது இறவாமல் இருக்கலாம் என்னும் நிலையில் ஒரு பூனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடியானது மூடிய ஒரு குழல்குப்பியில் உள்ளது. இக் காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். மேலும்...


Pandya territories.png

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன், எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழதேசப் படையெடுப்பும் ஒரு முக்கியக்காரணம். மேலும்...


பெப்ரவரி 26, 2012
Charlotte Amalie.jpg

அமெரிக்கக் கன்னித் தீவுகள் கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுகள் கிமு 100 ஆம் ஆண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேற்றப்பட்டது. கிமு 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள். வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ். 1493 இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இவர் இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு "புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்" எனப் பெயரிட்டார். அடுத்துவந்த 300 ஆண்டுகளில் அப்போதைய ஐரோப்பிய வல்லரசுகள் இத்தீவுகளின் ஆட்சியை மாறிமாறிக் கொண்டிருந்தன. மேலும்...


David SM Maggiore.jpg

தாவீது அரசர் என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறித்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தவர். விவிலியத்தின் பல பகுதிகள் தாவீதின் இசைப் பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. தாவீது யாழ் மீட்டுவதில் வல்லவராய் திகழ்ந்தார். இவர், இஸ்ரயேலின் பல்வேறு இறைப்புகழ்ச்சி பாடல்களை இயற்றியுள்ளார். அர்மேனிய அரசன் ஒருவன் இஸ்ரயேல் அரசனை வெற்றிகொண்ட நிகழ்வை எடுத்துரைக்கும், கி.மு. 850-835 காலத்தைச் சார்ந்த அர்மேனிய நினைவுச் சின்னம் ஒன்றில், இஸ்ரயேலைக் குறிக்க "தாவீதின் இல்லம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.மு. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாவீதின் நகரில், தாவீது அரசர் வாழ்ந்த அரண்மனையின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும்...


பெப்ரவரி 19, 2012
Embryo, 8 cells.jpg

உயிர்காப்பு உடன்பிறப்பு என்பது சில மிகக் கடுமையான நோய்கள் கொண்ட ஒரு குழந்தையைக் காப்பதற்காகப் உடன்பிறப்பாகப் பிறக்கும் குழந்தை ஆகும். ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் தொடர்பான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. இம்மருத்துவத் தீர்வு முறைக்குத் தேவைப்படும் உயிரணுக்களோ அல்லது ஏற்ற உறுப்புக்களோ தக்க மரபியல் ஒவ்வுமை கொண்டுள்ள நோயற்ற ஒருவரிடம் இருந்து பெறுதல் வேண்டும், இந்தத் தீர்வின் தேவைக்காக இந்நோய் இல்லாத உடன்பிறப்பு ஒருவரே உதவ முடியும். உயிர்காப்பு உடன்பிறப்பு உருவாக்கம் புற உயிர்க்கருக்கட்டல் முறைமூலம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. முதலாவது உயிர்காப்பு உடன்பிறப்பு அணுமருத்துவம் 2000 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. மொல்லி நாசு எனும் பெண் குழந்தை 1994ல் ஃபன்கொனியின் இரத்தச்சோகையுடன் பிறந்தது. 2000 இல் மின்னியாபோலிசு பல்கலைக்கழக மருத்துவமனையில் உலகின் முதல் உயிர்காப்பு உடன்பிறப்புக் குழந்தையான ஆதாம் நாசு பிறந்தது. ஆதாம் நாசின் தொப்புள்கொடியில் இருந்து குருதிக் குருத்தணுக்கள் எடுக்கப்பட்டு மொல்லி நாசின் என்புமச்சைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. மேலும்...


MKathiresanchettiar.jpg

பண்டிதமணி மு. கதிரேசனார் (1881-1953) ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். வடமொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். சிறந்த சொற்பொழிவாளர். இரு பொருள் படப் பேசுவதில் வல்லவர். தமிழாய்வு செய்து தமிழ்த்தொண்டாற்றியவர். மகிபாலன் பட்டியில் பிறந்த கதிரேசனார் சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் துன்புற்றார். 11ம் வயதில் தந்தையுடன் பொருளீட்டுவதற்காக இலங்கை சென்றார். தந்தையின் திடீர் மரணம் காரணமாக மிகவும் நலிவுற்ற நிலையில் 14ம் வயதில் ஊர் திரும்பினார். ஊன்று கோலின்றி நடக்க முடியாத நிலைக்கு ஆளானார். தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்களை ஆசிரியர் இல்லாமலே ஆழ்ந்து கற்றார். தன் ஆருயிர் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் பாடம் கேட்டார். மதுரை 'வித்யா பானு' அச்சகத்தின் உரிமையாளரான மு. ரா. கந்தசாமிக் கவிராயரின் நட்பு கதிரேசனாருக்குக் கிடைத்தது. இதன் பயனாய் இவர் வித்யாபானு இதழுக்குப் பல அரிய தமிழ்க் கட்டுரைகள் எழுதினார். மேலும்...


பெப்ரவரி 12, 2012
Breastfeeding-icon-med.svg

தாய்ப்பாலூட்டல் என்பது பிறந்த குழந்தைக்கு நேரடியாக தாயின் முலையிலிருந்து பால் கொடுக்கப்படும் முறையாகும். குழந்தைகளில் காணப்படும் உறிஞ்சி உண்ணும் தொழிற்பாடு இந்த தாய்ப்பலூட்டலுக்கு உறுதுணையாக உள்ளது. பொதுவாக குழந்தைக்கான வேறு மேலதிக உணவுகளை வழங்காமல் தாய்ப்பாலூட்டல் முறையால் மட்டுமே கிட்டத்தட்ட 6 மாதங்கள் உணவூட்டல் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற போதுமானதாக இருக்கும். குழந்தைக்கு ஆபத்தான மருந்துகள் உட்கொள்ளும் தாய், எய்ட்சு நோயுள்ள தாய், காசநோய் உள்ள தாய் போன்றோர் தாய்ப்பாலூட்டாமல் இருப்பது நல்லது. துறைசார் வல்லுனர்கள் அனைவரும் தாய்ப்பாலூட்டல் மிகவும் நிச்சயமாக நலம் தருவதுதான் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு காலம் தாய்ப்பாலூட்டுவது சிறந்தது, பிறந்த குழந்தைக்கு செயற்கை முறை உணவூட்டல் எபப்டியான இடர்களைத் தரக் கூடியது போன்ற விடயங்களில் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன. மேலும்...


Africa-countries-horn.png

ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பமாகும். இதன் கடற்கரை அரபிக்கடல் மற்றும் ஏமன் குடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா ஆகியவை இப்பகுதியில் உள்ள நாடுகள் ஆகும். இப்பகுதி நிலநடுக் கோடுக்கும் கடக ரேகைக்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகள் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு அமைந்ததால் ஏற்பட்ட நில உயர்வு காரணமாக உருவானதாகும். இப்பகுதிக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்குமான வணிகத்தில் வடக்கு சோமாலியா சிறப்பு இடத்தை பிடித்திருந்தது. எகிப்தியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், மெசபடோமியர்கள் ஆகியோர் மதிப்பு மிக்க பொருளாக கருதும் சாம்பிராணி, குங்குமதூபம் மற்றும் மசாலா பொருட்களுக்களை வழங்குபவர்களாக சோமாலிய கடலோடிகளும் வணிகர்களும் திகழ்ந்தனர். இடைக்காலத்தில் இப்பகுதியின் வணிகத்தை பல்வேறு அரசுகள் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தின. இப்பகுதியை ஆண்ட அடல் சூல்தானகம் பல இனக்குழுக்கள் கொண்ட முசுலிம் அரசாக திகழ்ந்தது. இது புகழின் உச்சியில் இருந்த போது எத்தியோப்பியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் சோமாலியாவின் பெரும் பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன. மேலும்...


பெப்ரவரி 5, 2012
1Ahsan shah1.jpg

மதுரை சுல்தானகம் (மாபார் சுல்தானகம்) பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசு. ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையின் முதல் சுல்தான் ஆவார். பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இசுலாமியப் படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த ஒரே இசுலாமிய அரசு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268 – 1308) இறப்பிற்குப் பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. இசுலாமிய வரலாற்றாளர்கள் வீரபாண்டியன் அந்தப் போரில் டெல்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் கஃபூரின் துணையை நாடினார் என்று கூறுகின்றனர். இதனால் கஃபூரின் படைகள் 1310-11ல் மதுரையைக் கைப்பற்றி சூறையாடின. இதன் பின்னால், பாண்டிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து இடம்பெற்றது. மேலும் இருமுறை டெல்லி சுல்தானகப் படைகள் மதுரையைச் சூறையாடின. உலூக்கான் மதுரையை டெல்லி சுல்தானகத்துடன் இணைத்தார். பாண்டிய நாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தானகத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் (மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது. மேலும்...


Rasammah Phubalan.jpg

ராசம்மா பூபாலன், மலேசியப் பெண்ணுரிமைவாதி, சமூக சேவகி, கல்வியாளர். 1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையில் இணைந்து இரண்டாம் உலகப்போரின் பர்மா போரில் சேவை செய்தவர். இந்தியா-மியான்மார் எல்லையில் பிரித்தானியர்களின் விமானத் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர். நடுத்தர இலங்கைத் தமிழர் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர் ராசம்மா. 1955ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டமும் பெற்றார். மலேசிய ஆசிரியைகளுக்காக ஒரு தேசிய சங்கத்தை உருவாக்கி, அவர்களின் சம ஊதியத்துக்காக வரலாற்றுப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றவர். சாரணியர் இயக்கத்திலும் அவர் தலைமைப் பொறுப்புக்கள் வகித்து இருகிறார். உலகின் ஏராளமான நாடுகளில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து இருக்கிறார். ராசம்மா பூபாலன், தம்முடைய 85 வயதிலும், அரச மலேசிய போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். மேலும்...


சனவரி 29, 2012
Babri rearview.jpg

பாபர் மசூதி இடிப்பு என்பது 1992, டிசம்பர் 6 அன்று அயோத்தியின் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியைக் கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அதனை அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பு பல மாதங்களாக நடந்த இந்து முஸ்லிம் மதக்கலவரங்களுக்குக் காரணமாக அமைந்தது. இந்தக் கலவரங்களால் மொத்தம் 2,000 பேர் உயிரிழந்தனர். ‎அயோத்தி நகரம் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் இந்துக்களால் கருதப்படுகிறது. 1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்களில் ஒரு சாரர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் இசுலாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன. பாரதிய ஜனதா கட்சி 1989 தேர்தலின் போது அயோத்திச் சிக்கலை தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது. செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் தொடங்கினார். மேலும்...


Ganesaiyar.jpg

சி. கணேசையர் (1878-1958) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவசிரோன்மணி என்ற பட்டம் பெற்றவர். குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் விமரிசனங்களும் எழுதியவர். ஈழத்தின் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் இவர் இமயம்போல் போற்றப்படுகிறார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது. தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி வந்தார். தான்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். நயினாதீவின் சைவப்பாடசாலையில் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியப் பணியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார். மேலும்...


சனவரி 22, 2012
Bull running 2.JPG

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு. அலங்காநல்லூர், ஆவரங்காடு, தேனீமலை போன்ற ஊர்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை ஒட்டி இடம்பெறும் ஏறுதழுவல் புகழ்பெற்றது. சல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணைக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. ‎மேலும்...


Ymkodhainayaki.jpg

வை. மு. கோதைநாயகி (1901-1960) துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர். 115 புதினங்களை எழுதியவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். இதுவரை எழுதப்பட்டு, வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுள் இவர் சரியாக அடையாளம் காட்டப்படாதவர். கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. அவர் சொல்ல எழுதி உருவானதுதான் ‘இந்திரமோகனா’ என்ற அவரது முதல் புதினம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். கோதைநாயகியின் கதைகளை முதலில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது ‘மனோரஞ்சனி’ இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். பின்னர் கோதைநாயகி "ஜகன்மோகினி' என்ற இதழை விலைக்கு வாங்கி 1925 இல் அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். பல புதினங்கள் ஜகன்மோகினி மூலம்தான் அவர் எழுதினார். இந்து, முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை நாவல்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார். கோதைநாயகியின் புதினங்கள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவற்றில் சித்தி (1966) படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது. மேலும்...


சனவரி 15, 2012
SabarimalaRush2010.JPG

சபரிமலை என்பது கேரளாவின் மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியைக் கொன்றபிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ‎ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 41 நாட்கள் ‎கொண்ட விரதத்தை பக்தர்கள் ஏற்றுக் ‎கொள்வர். ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு ‎வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. ‎மேலும்...


Henry Nicholas Ridley.jpg

சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி (1885-1956) என்பவர் மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர். இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர். இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் 135 ஆண்டுகளாக இன்றும் இருக்கிறது. 1877 இல் அறிவியலில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆய்வுகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். மேலும்...


சனவரி 8, 2012
காட்சிக்குட்பட்ட பேரண்டம்.png

காட்சிக்குட்பட்ட பேரண்டம் என்பது பெருவெடிப்பு கோட்பாட்டில் மனிதர்களால் காணப்படக்கூடிய விண்மீன் பேரடைகளையும் அவை சார்ந்த பருப்பொருட்களையும் குறிக்கும். பொதுவாகப் பேரண்டம் என்றால் காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும் ஆற்றல், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி ஆகியவை அனைத்தும் உள்ளடங்கும். அண்டத்தின் எல்லையைப் பால்வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும். காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்தக் கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். இதன் கொள்ளளவு 3.5 × 1080 கனசதுர மீட்டர்கள். மேலும்...


AlexandertheGreatbyGeorgeSStuart.jpg

பேரரசன் அலெக்சாண்டர் (கிமு 356-323) கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் மன்னன். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான். தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான். இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். அலெக்சாண்டர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். பன்னிரண்டு ஆண்டு காலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான். மேலும்...


சனவரி 1, 2012
BrantaLeucopsisMigration.jpg

வலசை போதல் என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். "எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விளைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலஙகளில் மாற்றிக் கொள்கின்றன. அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தமது இருப்பிடத்தை அறிகின்றன. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்க கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. மேலும்..


SNadesapillai.jpg

சுப்பையா நடேசபிள்ளை (1895-1965) இலங்கையின் தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம் , மேலவை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். தஞ்சாவூரில் பிறந்த நடேசன் 19 வயதில் சட்டம் பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார். 1923 இல் இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். 1926 ஆம் ஆண்டில் சேர் பொன். இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார். அரசியலில் புகுந்து நாடாளுமன்றம் சென்றார். இவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டமையினால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசில் 1960 முதல் இறக்கும் வரை மேலவை உறுப்பினராக இருந்தார். ஆங்கிலப் பாடல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். "சகுந்தலை வெண்பா" என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். மேலும்...


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி