சிவன்
|
||||||||||||||||
சிவன் அல்லது சிவபெருமான் சைவர்களின் தலைவனாக வழிபடக்கூடிய கடவுள் வடிவம். புராணங்களில் வருகின்ற மூன்று சக்திவாய்ந்த மும்மூர்த்திகளுள் அழிக்கும் சக்தி கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.
தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது.. சேயோன் என்பதும் சிவன் என்பதும் சிவந்தவன் என்றே ஒரு பொருளினைத் தரக்கூடிய சொற்களாகும். குறிஞ்சி நிலத்துக்குறிய கொன்றை மலர் சிவனின் மாலையாகவும், வெண் காளை சிவவாகனமாகவும் அறியப்பெறுகிறது. [1]
நடனம், யோகம் என கலைகளில் சிறந்து விளங்குபவராகவும், கையிலை மலையினை வசிப்பிடமாக கொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். இவருக்கு சக்தி என்ற மனைவியிருக்கிறார். அவரே தாட்சாயிணியாகவும், பார்வதியாகவும் பூமியில் பிறந்து பின் சிவபெருமானை திருமணம் செய்துகொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இரு குழந்தைகள் உள்ளன.
முதல்வன் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது.
சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் (ஆணவம்,கன்மம்,மாயை) மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.
சிவம் [தொகு]
சிவப்பெயர் காரணம் [தொகு]
சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
சிவனின் குணங்கள் [தொகு]
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.
தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார். [2]
வழிபாடு [தொகு]
சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;
- காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
- நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
- மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
- அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
சிவனின் ஐந்து தொழில்கள் [தொகு]
சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.
நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு[3]:
- ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலை குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
- ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்
- இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்
- இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்
- தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.
சிவனின் ஐந்து முகங்கள் [தொகு]
- சத்யோ சோதம்
- வாமதேவம்
- அகோரம்
- தற்புருடம்
- ஈசானம் இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.
பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
ஐந்து வடிவங்களும், தொழில்களும், திசைகளும் [தொகு]
| பெயர் | தொழில் | திசை | வடிவம் | நிறம் |
|---|---|---|---|---|
| சத்யோ ஜாதம் | படைத்தல் | மேற்கு | நிலம் | பால் நிறம்.. |
| வாமதேவம் | காத்தல் | வடக்கு | நீர் | சிவப்பு நிறம் |
| அகோரம் | அழித்தல் | தெற்கு | நெருப்பு | அஞ்சன (கறுப்பு) நிறம் |
| தற்புருடம் | மறைத்தல் | கிழக்கு | காற்று | மஞ்சள் குங்கும நிறம் |
| ஈசானம் | அருளல் | வடகிழக்கு | ஆகாயம் | படிக நிறம். |
சிவனின் தோற்றம் [தொகு]
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.[6][7] சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்டது சிவன் இல்லை என்று சில ஆராய்ட்சியாளர்கள் கூறுகின்றனர் [8]
சிவனது தனித்துவ அடையாளங்கள் [தொகு]
சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
- நெற்றிக்கண் காணப்படல்.
- கழுத்து நீலநிறமாக காணப்படல்.
- சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
- நீண்ட சுருண்ட சடாமுடி
- தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
- உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
- புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
- கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
- கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
- நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
- இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
- சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்
சிவ வடிவங்கள் [தொகு]
அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது. [9]
அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடு சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்கள் வணங்குகிறார்கள். இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம். மகேசுவர மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.
நடராசர் [தொகு]
நடனக் கலையின் கடவுளாக நடராசர் அறியப்படுகிறார். நடராசர் என்பது சிவன் தாண்டவம் ஆடுகின்ற கோலமாகும். இத்திருக்கோலத்தினை சபேசன் என்றும், கூத்தன் என்றும் அழைக்கின்றார்கள். சபேசன் என்றால் சபையில் ஆடுகின்ற ஈசன் என்றும், கூத்தன் என்றால் கூத்து என்ற கலையில் ஈடுபடுகிற ஈசன் என்றும் பொருள்படும். ஆங்கிலத்தில் "the Lord of the Dance" என்றும் சிவன் புகழப்படுகிறார்.
அர்த்தநாரீஸ்வரர் [தொகு]
.
சிவனும் சக்தியும் இணைந்த திருவுருவத்தினை அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் காட்சிதருகின்றனர். தன் இதயம் இருக்கும் இடப்புறத்தினை உமையம்மைக்கு பகிர்ந்துள்ளார் சிவன் என்றும் கூறுவர்.
தட்சிணாமூர்த்தி [தொகு]
பிரம்மகுமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய நால்வருக்கும் ஞானத்தினை போதிக்க சிவபெருமான் எடுத்த உருவமே தட்சிணாமூர்த்தியாகும். இந்த திருவுருவத்தில் பதின் பாலகராக சிவபெருமான் காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கும்.
திரிபுராந்தகர் [தொகு]
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த திருவுருவத்திற்கு திரிபுராந்தகர் என்று பெயர்.
புகழ் பெற்ற சிவத்தலங்கள் [தொகு]
சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள், சத்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்), தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோயில் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பஞ்சபூத சிவத்தலங்கள் [தொகு]
நெருப்பு, நீர், காற்று, பூமி, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
| படிமம் | கோவில் பெயர் | குறிக்கும் பூதம் | லிங்கத்தின் பெயர் | இடம் |
| காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்[10] | நிலம் | பிருத்வி லிங்கம்[11] | காஞ்சிபுரம் | |
| அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை[12] [10] | நெருப்பு | அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்[13] | திருவண்ணாமலை | |
| ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்கா[10] | நீர் | அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம் | திருச்சி | |
| சிதம்பரம் நடராசர் கோயில்[10] | ஆகாயம் | ஆகாச லிங்கம்[14] | சிதம்பரம் | |
| காளத்தீசுவரர் சுவாமி கோயில், திருக்காளத்தி[10][15] | காற்று | வாயு லிங்கம் | திருக்காளத்தி |
சிவ விழாக்கள் [தொகு]
மகா சிவராத்திரி [தொகு]
மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்நாளில் பார்வதி தேவி, சிவபெருமானை எண்ணி வழிபட்டதாக சைவர்கள் நம்புகின்றார்கள்.
கார்த்திகை தீபம் [தொகு]
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
பிரதோசம் [தொகு]
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்த போது, ஆலகால விஷம் தோன்றியது. இதனால் சகல உயிர்களும் மரணிக்குமென பயம்கொண்டு சிவபெருமானின் வேண்டிக் கொண்டனர். அவர் ஆலகால விஷத்தை அருந்தி உலகை காப்பாற்றினார். எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.
சிவ விரதங்கள் [தொகு]
சிவபெருமானுக்காக சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.
- சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
- உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
- திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
- சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
- கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
- பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
- அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
- கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன் [தொகு]
கலிங்கத்துப்பரணி [தொகு]
- இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
- உமையமர்ந் துயர்மலை இருந்தனனாக (கலி. 38)
இமயமலையில் பிறந்த மூங்கில் வில்லை வளைத்தவன், ஈரத்தினை உடைய சடையை உடையவனாகிய இறைவன், இறைவியோடு கயிலை மலையில் இருந்ததனன் என்று இப்பாடல் கூறுகிறது.
புறநானூறு [தொகு]
- பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
- நீல மணிமிடற் றொருவன் போல
- மன்னுக பெரும நீயே ... (புறம். 91)
அதியமானிடமிருந்து நெல்லிக்கனியை பெற்ற ஔவையார், சிவபெருமானைப் போல நிலைபெற அதியமானை வாழ்த்துகிறார்.
புறப்பொருள் வெண்பாமாலை [தொகு]
- கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் கேட்கவாய்
- பண்ணவனைப் பாடிப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
- நெய்யொத்து நின்றானை நீலவிடற் றானையென்
- கையொத்து நேர்கூப் புக. (புறப்பொருள் வெண்பாமாலை கடவுள் வாழ்த்து)
பொருள்: எள்ளினில் எண்ணெய் எவ்வாறு ஒன்றாக உள்ளதோ அதைப்போன்று, விடத்தால் நீலம் பொருந்திய கழுத்தினை உடையவனை, என் இரு கண்களும் காணவும், காதிரண்டும் அவன் புகழ் கேட்கவும், வாய் அவன் மீது பல பண்களை (பாடல்களை) பாடவும் சொல்லெடுக்க, என் இரு கரங்களும் எடுத்து நேர்த்தியாய் கூப்பும்.
தேவாரம் [தொகு]
பன்னிரு திருமுறைகள் கொண்ட தேவாரம் பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்[17].
- முதல் திருமுறை (சம்பந்தர் அருளியது)
- இரண்டாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
- மூன்றாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
- நான்காம் திருமுறை (அப்பர் அருளியது)
- ஐந்தாம் திருமுறை (அப்பர் அருளியது)
- ஆறாம் திருமுறை (அப்பர் அருளியது)
- ஏழாம் திருமுறை (சுந்தரர் அருளியது)
- எட்டாம் திருமுறை (திருவாசகம், மாணிக்கவாசகர் அருளியது)
- ஒன்பதாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
- பத்தாம் திருமுறை (திருமூலர் அருளிய திருமந்திரம்)
- பதினொன்றாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
- பன்னிரண்டாம் திருமுறை (சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)
ஒன்பதாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் ஒன்பது பக்தர்களாவர்[18]:
பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் பன்னிருவராவர்[19]:
இதனை அருளியோர் பின்வருமாறு:
- திருஞானசம்பந்தர் (முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகள்)
- திருநாவுக்கரசர் அல்லது அப்பர் (நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் திருமுறைகள்)
- சுந்தரர் அல்லது சுந்தரமூர்த்தி நாயனார் (ஏழாம் திருமுறை)
- வாதவூரடிகள் (மாணிக்கவாசகர்) (திருவாசகம், எட்டாம் திருமுறை)
- திருமூலர் (திருமந்திரம், பத்தாம் திருமுறை)
- சேக்கிழார் (பெரியபுராணம், பன்னிரண்டாம் திருமுறை)
- அதிரா அடிகள்
- இளம்பெருமான் அடிகள்
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
- கண்டராதித்தர்
- கபிலதேவ நாயனார்
- கருவூர்த் தேவர்
- கல்லாடதேவ நாயனார்
- காரைக்காலம்மையார்
- சேதிராயர்
- சேந்தனார்
- சேரமான் பெருமான் நாயனார்
- திருமாளிகைத் தேவர்
- திருவாலவாயுடையார்
- திருவாலியமுதனார்
- நக்கீரர்
- நம்பியாண்டார் நம்பி
- பட்டினத்து அடிகள்
- பரணதேவ நாயனார்
- புருடோத்தம நம்பி
- பூந்துருத்தி நம்பிகாடநம்பி
- வேணாட்டடிகள்
மேலும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ தமிழர் சமயம் நூலில் பாவாணர்.
- ↑
- "பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
- உவமை யின்மை யொருவினை யின்மை
- குறைவி லறிவுடைமை கோத்திர மின்மையென்
- றிறைவ னிடத்தி லெண்குண மிவையே"
- பிங்கலம்(2 : 6). பவம் (வ.) = பிறப்பு.
- ↑ http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614103.htm
- ↑ http://tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=670
- ↑ http://www.tamilvu.org/slet/l5F31/l5F31pd1.jsp?bookid=128&sec=8&pno=2518
- ↑ http://www.harappa.com/script/parpola8.html
- ↑ http://www.archaeologyonline.net/artifacts/harappa-mohenjodaro.html
- ↑ http://www.sscnet.ucla.edu/southasia/History/Ancient/Indus2.html
- ↑ நீக்கமற நிறைந்த சிவன்
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 Knapp 2005, p. 121
- ↑ Tirtha: holy pilgrim centres of the Hindus : saptapuri & chaar dhaam, Subhadra Sen Gupta, p. 66
- ↑ Gupta 2006, p. 153
- ↑ Blabatsky 1981, p. 176
- ↑ M.K.V 2007, p. 37
- ↑ Bajwa 2007, p. 271
- ↑ "Shaivam.org".
- ↑ http://www.thevaaram.org/nayanmar.php
- ↑ http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=15
- ↑ http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=15
வெளி இணைப்புகள் [தொகு]
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "ஜோதிர்லிங்கக் கோயில்கள்" கட்டுரை.
- சைவ நெறி வலைப்பூ
- திருக்கயிலாய யாத்திரை
- மகா மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
- சிவ தோற்றத்தின் அடையாளங்கள்
- கோயில்கள் வரலாறு
- தமிழ்நாடு சிவன் கோவில்கள்
- தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்
|
||||||||||||||||||||||||||