வீர சைவம்
வீர சைவம் என்பது சைவ சமயப் பிரிவுகளில் ஒன்றாகும். இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.
வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.
வரலாறு [தொகு]
9 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை.
ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜன் அழித்தார். (காந்தளூர் சாலை கலமறுத்தருளி...காந்தளூர்ச்சாலை குமரிமாவட்டத்தில் இருந்த அதர்வவேத பாடசாலை) இந்த தாந்த்ரீக மதங்களில் பல ரகசியச்சடங்குகளாக ஆயின. பௌத்த ஞானத்தை உள்வாங்கின. ரசவாதத்துடன் கலந்தன. பின்னர் சித்தர் மரபாக உருவெடுத்தன.
வீரசைவம் ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவிச் செழித்தது. கர்நாடகத்தில் பசவண்னர் உருவாக்கிய சைவம் இன்று கர்நாடக வீரசைவமென சொல்லப்படுகிறது.
தமிழ் வீரசைவர்கள் ஆகம சைவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். நாயக்கர் காலகட்டத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆகவே ஆலயங்களைக் கைப்பற்ற போட்டிகள் நிகழ்ந்தன. குறிப்பாக சங்கரன் கோயில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது. வீரசைவர்களின் பூசாரிகள் பண்டாரங்கள் என்ற சாதியினர். இவர்களை வைராகிகள் அல்லது வைராவிகள் என்றும் சொல்வார்கள். வீரசைவ தாந்த்ரீக நெறிகள் சிலவற்றை இவர்கள் கையாள்வதனால் இப்பெயர். இவர்கள் மெல்ல மெல்ல இன்று அய்யர்களால் கோயில்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று சிறிதளவு எஞ்சும் செல்வாக்கு பழனியில் மட்டுமே உள்ளது.