வாரணாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாரணாசியின் கங்கைக் கரையில் ஒரு தோற்றம்

காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் ​பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை.

காசி என்பது ​சொர்க்கத்திற்குச் ​செல்லும் வழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் காசி ​என்ற ​புகழுடன் சிவத்தலங்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் ​தென்​கோடியில் உள்ள ​தென்காசி மற்றும் மதுரைக்கு அருகில் ​​வைகை ஆற்றின் கரையில் உள்ள திருப்பூவணக்காசி மற்றும் காவேரி ஆற்றின் கரையில் உள்ள பல சிவத்தலங்களும் அடங்கும்.

காசியின் புகழுக்குக் காரணம்[தொகு]

சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் ​கோபப்பார்​வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் ​தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் ​தெரிவித்தார்கள்.

கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.

கங்கா ஆர்த்தி[தொகு]

காசியில் கங்கைக்கரையில் தினமும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர்.

ஜிஸியா வரி[தொகு]

ஒளரங்கசீப், இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் ’ஜிஸியா’ என்ற வரி விதித்தான். ஒளரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக, கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டான். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. குமுதம் ஜோதிடம்; 11.1.2013 (ஆதாரம்: 1. Fight For the Indian Empire; Dr.Majumdhaar; 2.Ancient and Medieval History of India; Dr.Sathiyanatha Iyer.)

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாரணாசி&oldid=1774380" இருந்து மீள்விக்கப்பட்டது