திருப்பரமேச்சுர விண்ணகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருப்பரமேச்சுர விண்ணகரம்
திருப்பரமேச்சுர விண்ணகரம் (பௌர்ணமி அன்றைய தோற்றம்)
பெயர்
பெயர்:திருப்பரமேச்சுர விண்ணகரம்
அமைவிடம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வைகுந்தப் பெருமாள் (திருமால்)
தாயார்:வைகுந்தவல்லி தாயார்
தீர்த்தம்:ஐரம்மத தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
விமானம்:முகுந்த விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

திருப்பரமேச்சுர விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.[2][3]

வரலாறு[தொகு]

இத்தலத்தைப் பற்றிக் குறிப்பாக எந்தப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் புராண காலத்தில் இத்தலம் சர்ப்பச் சேத்திரம் என அழைக்கப்பட்டதாகவும், இறைவன் பரமபதநாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும் தல வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது.[2] ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (பொ.ஊ. 732–795) காலத்தில்தான் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.

பரமேஸ்வரவர்மன் இத்தலத்தின் இறைவனருளால் பிறந்ததாகவும் இதை நினைவுபடுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். பரமேஸ்வரவர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும், அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும், சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர். இதனால் தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் அரங்கநாதனாக சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் இறைவனை எழுந்தருளச் செய்தார்.[3]

மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச் சிதலமடைந்த பிறகு அவ்விடத்தில் சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும்.

இறைவன் இறைவி[தொகு]

பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி வைகுந்த வல்லி. இத்தலத்தின் தீர்த்தம் ஐரம்மத தீர்த்தம். விமானம் முகுந்த விமானம் என்ற வகையைச் சேர்ந்தது.

சிறப்புகள்[தொகு]

மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி இத்தலத்தின் கருவறையும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும். பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவல்களிலும், தான் போர் மேற் செல்வதற்கும், இப்பெருமாளையே வழிபட்டு வெற்றிமேல் வெற்றி கண்டான். இவன் பாண்டியனை வென்றதை திருமங்கையாழ்வார் தனது பாடலில்.

"தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
          திறல் வாட்டிய திண் சிலையோன்
     பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் - பர
          மேச்சுர விண்ணக ரமதுவே

என்று குறிப்பிடுகிறார்.

திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றுள்ளது. பிள்ளைப் பெருமாளையங்கார், மணவாள மாமுனி, இராமானுஜர் ஆகியோரும் இத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.

சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை சிறப்பு[தொகு]

பரமேசுவரவர்மனின் (இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மல்லன்) பிறப்பைச் சித்தரிக்கும் சிற்பங்கள், அவனுக்கு இறைவன் நீதிகளைப் போதித்த நிலையிலான சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் மேல் மாடியில் இரணியனை வதம் செய்யும் நரசிம்மன், நரகாசுரனை வதம் செய்யும் கிருஷ்ணன், வாலியை வதம் செய்யும் இராமவதாரம் போன்ற காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதை[தொகு]

இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தோண்டிக் காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான் என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக் கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக நம்பிக்கை. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின் நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு (ராஜ தர்பார்கள்) நடன சாலைகள் இருந்தன. அவைகள் இன்று சாதாரண மண்டபங்களாக விளங்குகின்றன.[2]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
  2. 2.0 2.1 2.2 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
  3. 3.0 3.1 Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, p. 142, Oxford University Press, New Delhi (Reprinted 2003), ISBN 0-19-560686-8)
  • 108 Sree Vaishnava Divya Desa Darisanam by Sree Ramaswamy