சோழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1030-ல் சோழ மண்டலம்
சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்
இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன் கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன் பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விசயாலயச் சோழன் கி.பி. 848-871(?)
ஆதித்தச் சோழன் 871-907 CE
பராந்தகச் சோழன் I கி.பி. 907-950
கண்டராதித்தர் கி.பி. 949/50-957
அரிஞ்சயச் சோழன் கி.பி. 956-957
சுந்தர சோழன் கி.பி. 956-973
ஆதித்தக் கரிகாலன் கி.பி. 957-969
உத்தம சோழன் கி.பி. 970-985
இராசராசச் சோழன் I கி.பி. 985-1014
இராசேந்திரச் சோழன் கி.பி. 1012-1044
இராசாதிராசச் சோழன் கி.பி. 1018-1054
இராசேந்திரச் சோழன் II கி.பி. 1051-1063
வீரராசேந்திரச் சோழன் கி.பி. 1063-1070
அதிராசேந்திரச் சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்கச் சோழன் I கி.பி. 1070-1120
விக்கிரமச் சோழன் கி.பி. 1118-1135
குலோத்துங்கச் சோழன் II கி.பி. 1133-1150
இராசராசச் சோழன் II கி.பி. 1146-1163
இராசாதிராசச் சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்கச் சோழன் III கி.பி. 1178-1218
இராசராசச் சோழன் III கி.பி. 1216-1256
இராசேந்திரச் சோழன் III கி.பி. 1246-1279
சோழர் சமூகம்
சோழ அரசாங்கம் சோழ இராணுவம்
சோழர் கலை சோழர் இலக்கியம்
பூம்புகார் உறையூர்
கங்கைகொண்டச் சோழபுரம் தஞ்சாவூர்
தெலுங்குச் சோழர்கள்
edit

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

பொருளடக்கம்

[தொகு] தோற்றமும் வரலாறும்

சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குலங்கள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களை அண்டிய காலப் பகுதிகளைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ சாத்தியமாகவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற விபரங்கள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பனவும் ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

[தொகு] முற்காலச் சோழர்கள்

கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. கி.பி 120

சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இன்னொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான். இவனே முதலாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே, கரிகாலன், தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான். முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். கரிகாலனுடைய அம்பு சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று தகவல் தருகிறது. பாண்டிய மன்னர்களையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். முற்காலச் சோழர்களில் பிற்காலத்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில், நல்லுருத்திரன், கோச்செங்கண்ணன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

[தொகு] முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். வம்சம் சிதறிச் சிற்றரசர்களானார்கள். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி களப்பாளர் அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடம் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிம்மவிட்டுணு பல்லவன் களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது.

[தொகு] களப்பிரர்கள்

நாட்டில் பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த தெளிவற்ற ஒரு குலத்தைச் சார்ந்த களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடுத்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.

இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

[தொகு] வீழ்ச்சி

அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு (எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூறஇயலாது), களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணத்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.

[தொகு] தமிழ்நாட்டில் சோழர்கள்

இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்பற்றி அறிய முடியவில்லை, இக்காலத்தைச்சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவேரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்று முக்கியமுள்ள செய்திகளைத்தரவில்லை.

இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொள்வதை அறிகிறோம். இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர்கள் தங்களுக்கென்று ரேனாட்டுப் பகுதியில் இரண்டாம் புகலிடத்தைத்தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப்பாடுபட்டனர்.

[தொகு] பிற்காலச் சோழர்கள்

உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் மேல் நிலைக்கான போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. கி.பி 850 இல் விஜயாலயன் என்பவன் சோழ மன்னனானான். அவன் அக்கால அரசியல் சூழ்நிலைகளைத் திறமையாகக் கையாண்டு முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். எனினும் அவன் கி.பி 871 இல் இறந்தான். விஜயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். முதலாம் ஆதித்தன் என்று அழைக்கப்படும் இவன் தமிழ் நாட்டு அரசியல் சதுரங்கத்தில் திறமையாகச் செயற்பட்டு சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். இவன் ஆரம்பத்தில் பாண்டியர்களுக்கு எதிராகப் பல்லவர்களுக்கு உதவியாக இருந்தாலும், பல்லவர்களிடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியபோது, தலையிட்டுத் தனக்குச் சாதகமான அபராஜித பல்லவன் வெற்றிபெற உதவினான். இது தொடர்பாக நடைபெற்ற திருப்புறம்பியப் போர், தமிழ் நாட்டிலும், சோழநாட்டின் எதிர்காலத்திலும் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராஜிதனுக்கு எதிராக நிருபத்துங்க பல்லவனுக்கு ஆதரவு வழங்கிய பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். சோழர்கள் இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிற்காலத்தில் பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராஜித பல்லவனைக் கொன்று பல்லவர் நாட்டையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.

கி.பி 907 இல் அரசனான பராந்தக சோழனும், போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். எனினும் பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது தம்பியான கண்டராதித்தன், கி.பி 950 இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும், குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். இடையில் சிறிது காலம் ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான். சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்ததுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், இன்னும் அறியப்படாத சதி முயற்சியொன்றின் விளைவாகப் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது சுந்தர சோழனின் வெற்றிகளுக்கு உரிய பயனை அளிக்கவில்லை.

ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தர சோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான். சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை[1]. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

கி.பி 973 இல் சுந்தர சோழன் இறந்த பின்பு, கண்டராதித்தனின் மகனான உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

[தொகு] இராஜராஜ சோழன்

தஞ்சைப் பெரிய கோயிலின் விமானம்

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராஜராஜன் மன்னனானான். இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. இவற்றுக்காக இராஜராஜன் நடத்திய போர்கள் பல. பாண்டி நாட்டின் மீதும், சேர நாட்டின் மீதும் போர் தொடுத்து, பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனையும், சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத்தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து மைசூரை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றினான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராஜராஜன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.

[தொகு] இராஜேந்திர சோழன்

சோழப் பேரரசின் எல்லைகள். கி. பி 1014
இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1130

இராஜராஜனின் மறைவுக்குப்பின், 1012 ஆம் ஆண்டில், அவனது மகனான இராஜேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கெனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராஜேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் சோழநாடு மேலும் விரிவடைந்தது. ஏற்கெனவே பெற்றிருந்த வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அவன் போர்களில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாஸ்கர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.

வடக்கு எல்லையிலும், சாளுக்கியர்களை மீண்டும் அடக்கிவைக்கவேண்டி ஏற்பட்டது. அப்பகுதியில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் தோற்கடித்தது சோழர்படை. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராஜேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.

இக்காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது.

[தொகு] பின்வந்த சோழ மன்னர்

இராஜேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் முதலாம் இராதிராஜன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.

இவனைத் தொடர்ந்து, அவன் தம்பியான இராசேந்திரன் என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராஜேந்திரன் எனப்படுகின்றான். இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராஜேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராஜேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராஜேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராஜேந்திரன் இறந்து போனதால், சாளுக்கிய - சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விஜயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

[தொகு] முதலாம் குலோத்துங்கன்

குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120

முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாணிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.

[தொகு] சோழப் பேரரசின் வீழ்ச்சி

முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்தும் வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் புதிய அரசுகள் வலிமை பெறலாயின. தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.

1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராஜராஜன் காலத்தில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராஜராஜனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராஜேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராஜராஜனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.

அரசன் பெயர் ஆட்சியாண்டுகள் யாருடைய மகன் தலைநகரம்
விசயாலய சோழன் 848-871 அறியவில்லை தஞ்சாவூர்
ஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்
முதலாம் பராந்தக சோழன் 907-955 ஆதித்த சோழன் தஞ்சாவூர்
கண்டராதித்த சோழன் 950-957 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்
அரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்
இரண்டாம் பராந்தக சோழன் 957-970 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்
ஆதித்த கரிகாலன் 957-969 சுந்தர சோழன் காஞ்சிபுரம்
உத்தம சோழன் 973-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்
முதலாம் இராஜராஜ சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழன் தஞ்சாவூர்
முதலாம் ராஜேந்திர சோழன் 1012-1044 முதலாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் ராஜாதிராஜ சோழன் 1018-1054 முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் ராஜேந்திர சோழன் 1051-1063 முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் கங்கைகொண்ட சோழபுரம்
வீரராஜேந்திர சோழன் 1063-1070 இரண்டாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
அதிராஜேந்திர சோழன் 1067-1070 வீரராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் குலோத்துங்க சோழன் 1070-1120 முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பெயரன் கங்கைகொண்ட சோழபுரம்
விக்கிரம சோழன் 1118-1135 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133-1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் ராஜராஜ சோழன் 1146-1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1163-1178 இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178-1218 இரண்டாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராஜராஜ சோழன் 1216-1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246-1279 மூன்றாம் இராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்

[தொகு] சோழ நாடு

தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.

உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் திருநகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.

கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.

[தொகு] ஆட்சி

இடைக்காலச் சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. சோழர்களின் அரசு முடியாட்சியாகவே என்றும் இருந்து வந்தபோதிலும், சங்ககாலத்துச் சோழர்களுக்கும், பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர் முடியாட்சிக்கும் இடையே நிரம்ப வேறுபாடுகள் இருந்தன. இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள், அதிகாரத்திலும், ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். தலைநகரமும், பல்வேறு துணைத் தலைநகரங்களும் இருந்தன. சமயங்களில் துணைத் தலைநகரங்களிலும் அரசவை கூடியது. அரசன், உயர்நிலைத் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்தான். முறையீடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு வாய்மூலமாகக் கட்டளைகள் பிறப்பித்தல் அரசனுடைய நிர்வாகக் கடமையாக இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடைக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்ற விடயங்களில் ஆலோசனைகள் கூறுவதற்காக அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் போல சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின், நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.

[தொகு] அரசுரிமை

அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

[தொகு] உள்ளாட்சிப் பிரிவுகள்

பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன.

மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.

குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன.

[தொகு] சமூகநிலை

[தொகு] பெண்டிர்

சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச முடுபத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.[2]

[தொகு] உடன்கட்டை ஏறுதல்

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்த சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை.

பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் மூலம் கிடைப்பதால் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகயிருக்கிறது.[3]

[தொகு] ஆடல் மகளிர்

இந்திய சமூக வாழ்வில் என்றுமே ஆடல் மகளிர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே ஆடள் மகள் கவர்ச்சிக் கன்னியராகவே திகழ்ந்தாள். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். ஆடவர்களுடன் இன்முகத்துடன் பழகினாள். ஆனால், சிலருடன் மட்டும் நெருங்கிய நட்புக் கொண்டாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.

அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வுடையவர்களாயும் கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

[தொகு] சோழரும் சாதியமும்

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். [4]

பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள். [5]

[தொகு] அடிமைகள்

சோழர்கள் வேழத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு"[6] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

ரொமிலா தபார் (Romila Thapar) என்று முக்கிய வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்தை குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது வேற்றோராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். [7]

[தொகு] வெளிநாட்டு வணிகம்

ஜாவாவில், பிராம்பாணன் என்னும் இடத்திலுள்ள இந்துக்கோயில். திராவிடக் கட்டிடக்கலையின் செல்வாக்குத் தெளிவாகத் தெரிகிறது.

சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் விரிவான கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குக்கரைகள் இரண்டிலும் ஆதிக்கம் பெற்றிருந்த சோழர்கள், இந்த நடவடிக்கைகளில் முன்னணியில் திகழ்ந்தனர். சீனாவின் டாங் வம்சம் (Tang dynasty), சைலேந்திரர்களின் கீழிருந்த, மலாயத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு, பாக்தாத்தின், அப்பாசிட் கலீபகங்கள் (Abbasid Kalifat) என்பன இம்முயற்சிகளில் சோழர்களின் கூட்டாளிகளாக இருந்தன.

சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமாத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து அஞ்ஞூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்கிகளுக்குச் சான்றாக அமைகின்றது.

[தொகு] சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை. சிவனின் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம்.

சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தை தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.

பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டு பல நாடுகளிலும் தாக்கங்களை உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.

[தொகு] கலைகள்

சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விஜயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரிய அளவுள்ளவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதனால், இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திரன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் இராஜராஜன் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கி.பி 1200

சோழர் காலம், வெண்கலச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

[தொகு] கல்வி

சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். [8]

இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.[9]

[தொகு] மொழி

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது". [10]

[தொகு] இலக்கியம்

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும். ஆனால் சோழர்களால் தமிழ் உயர் கல்வி கூடங்களில் ஊக்கிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[11] சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஜைன, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.

மூன்றாம்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். ஜயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கலிங்கத்துப் போரை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலை இயற்றியுள்ளார்.

[தொகு] சமயம்

சோழர் இந்து சமயத்தை, சிறப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். முற்காலச் சோழராயினும், பிற்காலச் சோழராயினும், பௌத்த, சமண மதங்களின் செல்வாக்கால் கவரப்பட்டவர்கள் அல்லர். எனினும் அவர்கள் ஏனைய சமயத்தவர்கள் தொடர்பில் எம்மதமும் சம்மதம் என்ற போக்கையே கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைஷ்ணவர்பால், சிறப்பாக இராமானுஜர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராஜேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
  2. சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
  3. சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
  4. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக்கம் 19.
  5. "The picture which emerges suggests that the brahmans were in control of the powerful positions and that the non-brahmans were more or less working for them. The brahmans naturally emphasized caste-loyalties and caste-assemblies, since this would prevent a wider basis of unity developing amongst the non-brahmans. - Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books.
  6. [தாவுத்] (2006-05-11). "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு". தமிழியல்: திணையும் தளமும் நிலையும், டொராண்டோ: டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும். 2006-10-30 அன்று அணுகப்பட்டது..
  7. "Slavery was frequent, with men and women either selling themselves or else being sold by a third party. Many such persons were sold to the temple, particularly in cases of poverty or during a famine. But slaves were limited in number, since they were largely domestic slaves or attached to temples. The use of slave labour for large-scale production was not known." Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books.
  8. Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கங்கள் 212-213.
  9. Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கம் 213.
  10. மொழியும் அரசியலும் பொருளியலும் - குமரிமைந்தன்
  11. "Had Tamil been encouraged to a greater extent in the centres of higher education it would have assisted in producing a far more vigoruous intellectual tradition than was actually in existence in these centres." - Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கம் 213.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்