இந்தியக் குடியரசின் வரலாறு
இந்தியக் குடியரசின் வரலாறு (history of the Republic of India) சனவரி 26, 1950இல் துவங்குகிறது. ஆகத்து 15, 1947இல் இந்தியா விடுதலை பெற்று பிரித்தானிய பொதுநலவாயத்தின் ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கியது. 1950இல் குடியரசாக அறிவிக்கப்படும்வரை பிரித்தானியாவின் ஜார்ஜ் VI (ஆல்பர்ட் பிரெடிரிக் ஆர்தர் ஜார்ஜ்) மன்னராக விளங்கினார். அதேநேரம் முசுலிம் பெரும்பான்மையராக விளங்கிய பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தான் டொமினியன் என்று பிரிந்தன. இந்தப் பிரிவினையின்போது உலக வரலாற்றிலேயே முதல்முறையாக பத்து மில்லியன் (ஒரு கோடி) மக்கள் இடம் பெயர்ந்தனர்; மற்றும் பத்து இலட்சம் மக்கள் இறந்தனர்."[1] இந்தியத் தலைமை ஆளுனர்களாக மவுண்ட்பேட்டன் பிரபுவும் பின்னர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியும் பொறுப்பேற்றனர். சவகர்லால் நேரு முதல் பிரதராகவும் சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர். பதவி எதுவும் ஏற்காத மகாத்மா காந்தி வங்காளம் மற்றும் பீகாரின் கலவரப் பகுதிகளுக்குச் சென்று சமயச் சண்டைகளை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.
சனவரி 26, 1950 முதல் இந்தியா ஓர் புதிய அரசியலமைப்புடன் சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக மலர்ந்தது. [2] விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டதுடன் பல சிக்கல்களையும் வெற்றிகரமாக சந்தித்துள்ளது. தொழில்துறையிலும் வேளாண் துறையிலும் பல இடர்களை வென்று தன்னிறைவுநிலை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடாக விளங்குகிறது. சமயச்சார்பு வன்முறைகளும் சாதி வன்முறைகளும் சமூகப் பிரச்சினைகளாக வளர்ந்துள்ளன. நக்சலிசமும் தீவிரவாதமும் குறிப்பாக சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைப் போராட்டங்களும் நாட்டின் ஆளுமைக்கு எதிராக எழுந்துள்ளன. முடிவுறாத எல்லைப் பிணக்குகளால் சீனாவுடன் 1962இல் இந்தியச் சீனப்போரும் 1947, 1965, 1971, 1999 ஆண்டுகளில் பாக்கித்தானுடன் போர்களும் நிகழ்ந்தன.
இந்தியா ஓர் அணுவாயுத நாடாகும்; தனது முதல் அணுவாயுதச் சோதனையை 1974இலும்[3] தொடர்ந்து மேலும் ஐந்து சோதனைகளை 1998இலும் நடத்தியது.[3] 1950களிலிருந்து 1980கள் வரை இந்தியா சோசலிசம்|சோசலிசக் கொள்கைகளை கடைபிடித்து வந்தது. இந்த நெறிமுறையின் கூடுதலான கட்டுப்பாடுகள், பாதுகாப்புவாதம் ஆகியவை ஊழலுக்கும் மந்தமான வளர்ச்சிக்கும் வழிகோலியதாக கருதப்படுகிறது.[4] 1991ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருளியல் சீர்திருத்தங்கள்[5]இந்தியாவை உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக ஆக்கி உள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் வீச்சு கூடுதலாகியுள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Larres, Klaus. A companion to Europe since 1945. Wiley-Blackwell, 2009. ISBN 1405106123, 9781405106122.
- ↑ "CIA Factbook: India". CIA Factbook. பார்த்த நாள் 10 March 2007.
- ↑ 3.0 3.1 "India Profile". Nuclear Threat Initiative (NTI) (2003). பார்த்த நாள் 20 June 2007.
- ↑ Eugene M. Makar (2007). An American's Guide to Doing Business in India.
- ↑ Montek Singh Ahluwalia (2002) (MS Word). Economic Reforms in India since 1991: Has Gradualism Worked?. Journal of Economic Perspectives. http://planningcommission.nic.in/aboutus/speech/spemsa/msa008.doc. Retrieved 13 June 2007.
வெளி இணைப்புகள் [தொகு]
- [1] பிபிசியின் இந்தியா அறிமுகம்