பாலப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலப் பேரர்சின் வரைபடம்
போதிசத்துவர், 11 ஆம் நூற்றாண்டு. பாலப் பேரரசு காலம்

பாலப் பேரரசு (Pala Empire), தற்கால பிகார், மேற்கு வங்காளம், நேபாளம் & வங்காளதேசம் பகுதிகளை கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கும், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய அரசைக் குறிக்கும். பால (வங்காள மொழி: পাল) என்னும் சொல் காப்பவர் என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு |பின்னொட்டாகக் காணப்படும்.

இப்பேரரசை நிறுவிய கோபாலன் என்பவனே வங்காளத்தின் முதலாவது சுதந்திர அரசனாவான். இவன் கி.பி 750 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தான். கி.பி 750 தொடக்கம் 770 வரை ஆட்சியில் இருந்த இவன் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினான். இவனுக்குப் பின்வந்த தர்மபாலன் (770-810), தேவபாலன் (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். சேன அரச மரபினரின் தாக்குதலைத் தொடர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் பாலப் பேரரசு நிலை குலைந்தது.

பாலர்கள், புத்த சமயத்தின் மஹாயான, தந்திரப் பிரிவுகளைப் பின்பற்றினர். இவர்கள் கன்னௌசி பகுதியைச் சேர்ந்த ககதவாலர்களுடன் திருமணத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் பல கோயில்களைக் கட்டியதுடன், நாளாந்தா, விக்கிரமசீலா முதலிய பல்கலைக் கழகங்களையும் ஆதரித்தனர். இவர்களுடைய மதமாற்றமே திபெத்தில் பௌத்தம் பரவுவதற்கு மூல காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது.

பாலர்களின் மூலம்[தொகு]

பெருமளவில் காணப்படும் பாலர் தொடர்பான பதிவுகள் எதிலும் அவர்கள் மூலம் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் காலத்தைச் சேர்ந்த கிரந்தங்கள், ஆணைகள், கல்வெட்டுக்கள் ஒன்றுமே பாலருடைய தோற்றம் பற்றி எவ்விதத் தகவலையும் தரவில்லை. மஞ்சுசிறீ மூலகல்பம் என்னும் நூல், கோபால ஒரு சூத்திரர் என்கிறது. பால சரிதம், பாலர்கள் தாழ்ந்தகுலச் சத்திரியர்கள் என்கிறது. திபேத்திய வரலாற்றாளரான தாரநாத லாமா தன்னுடைய, இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு குறித்து எழுதிய நூலிலும், கணராமா என்பவர் தன்னுடைய நூலான தர்ம மங்களவிலும் இதே கருத்தையே கூறியுள்ளனர். அராபிய நூல்களிலும் பாலர்கள் உயர்ந்த மரபில் வந்தவர்கள் அல்லவென்றே குறிப்பிடுகின்றன. முதலாம் கோபாலவின் மகனான தர்மபாலவின் காலிம்பூர்ச் சாசனம், கோபால வப்யாத்தா எனும் போர்வீரனின் மகன் என்றும், கல்வியில் சிறந்த தாயிதவிஷ்ணு என்பவனின் பேரன் என்றும் குறிப்பிடுகின்றது. சந்தியாகரநந்தி என்பவருடைய ராமசரிதம் ராமபாலன் என்னும் பாலப் பேரரசனை சத்திரியன் எனக்கூறும் அதே வேளை இன்னோரிடத்தில் அவன் சமுத்திர குலத்தைச் சேர்ந்தவன் என்கிறது. பாலர்களைச் சமுத்திரத்துடன் இணைத்ததற்கான காரணம் தெரியவில்லை.

முக்கியமான பாலப் பேரரசர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலப்_பேரரசு&oldid=3798653" இலிருந்து மீள்விக்கப்பட்டது