வங்காள மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 232 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியதாகும்.
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கிழக்குப் பகுதியான வங்காள தேசமாகும். இந்த வங்காள தேசத்தினுள் தற்போதய பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த மொழியை 230 மில்லியன் மக்கள் பேசுவதுடன் இந்த மொழி உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும் (உலகில் ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்தில் உள்ளது). இது இந்தியாவில் இரண்டாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாகும்.
வங்காள மொழியானது நீண்டதும், பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. 1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது வங்காள மொழியின் தனித்துவத்தை நிலைநிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விழைவாக பெப்ரவாரி 21 ல் பல வங்காள தேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த தினம் தற்போது சர்வதேச தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

