களப்பிரர்
![]() களப்பிரர் ஆட்சிக்குட்பட்டவையாக கருதப்படும் நிலப்பரப்பு c. 400 C.E. |
|
| அரசுமொழி | தெரியவில்லை |
| தலைநகரம் | தெரியவில்லை |
| ஆட்சிமுறை | முடியாட்சி |
| முந்தைய அரசுகள் | சோழர், பாண்டியர், சேரர், சாதவாகனர் |
| பிந்தைய அரசுகள் | பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் |
களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] சான்றுகள்
களப்பிரர்களின் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான விரிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன. எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள்.அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன்(அச்சுத விக்கந்தக் களப்பாளன்). இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவையே.
[தொகு] ஆட்சிப் பகுதிகள்
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளளப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
[தொகு] இனக்குழுமம்
தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். வேறு சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில் குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன், கலிதேவன் போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது[1]. மேலும் இவர்கள் கோசர்கள் வழி வந்தவர் என்றும்[2], உழவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கருத்துகள் நிலவுகிறது.(கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பிரர் என்று மறுவியது)
[தொகு] மொழி
களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. "அவர்கள் வெளியிடுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாககப் பயன்படுத்தியிருக்கலாம்."[3]அதே வேளை இக் காலத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை. அதே வேளை அவர்கள் தமிழுக்கு ஆக்கம் அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை. சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.[4]
இக் காலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பெரும்பாலான கல்வெடுக்கள் தமிழ் மொழியில் இருப்பதால், அரச மொழியாக தமிழ் இருந்துருக்கலாம். எனினும் களப்பிரர்கள் ஆதரித்த பெளத்த சமய நூல்களும் பிற பல நூல்களும் பாலி மொழியிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன. [5]
[தொகு] சமயம்
களப்பிரர்கள் வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள்.[6] இதர வைதீக எதிர்ப்புச் சமயமாகிய சமண சமயமும் இக் காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருந்தது. எனினும் இவர்கள் வைதீக சமயங்களை எதிர்த்தார்களா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு.[7] வரலாற்றாளர் அலைசு ஜஸ்டினா தினகரன் அவர்கள் இந்து சைவர்கள், சமணர் அல்லது பௌத்த சமயத்தினராக இருக்கலாம் என்று கூறுகிறார்.
காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்.[8]
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] உசாத்துணைகள்
- The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters There, By M. Arunachalam, Published by University of Madras, 1979[9]
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2002
- ↑ பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
- ↑ ஆ. பதமாவதி. களப்பிரர்கள் கால மொழி, எழுத்து, கலை, சமயம். மணற்கோனி. ஏப்ரல் 2011. 107
- ↑ ஆ. பதமாவதி. களப்பிரர்கள் கால மொழி, எழுத்து, கலை, சமயம். மணற்கோனி. ஏப்ரல் 2011. 107
- ↑ ஆ. பதமாவதி. களப்பிரர்கள் கால மொழி, எழுத்து, கலை, சமயம். மணற்கோனி. ஏப்ரல் 2011. 107
- ↑ ஆ. பதமாவதி. களப்பிரர்கள் கால மொழி, எழுத்து, கலை, சமயம். மணற்கோனி. ஏப்ரல் 2011. 107
- ↑ P. 146 Kerala State gazetteer, Volume 2, Part 1 By Adoor K. K. Ramachandran Nair
- ↑ P. 150 and P. 152 The peacock, the national bird of India By P. Thankappan Nair
- ↑ Arunachalam, M. (1979). The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters There (Original from the University of California, Digitized Jul 30, 2008 ed.). University of Madras. pp. 168. http://books.google.com/books?id=dvq1AAAAIAAJ&source=gbs_ViewAPI&pgis=1.
