ஆசீவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகாகாசியப்பன், அசீவகர் ஒருவரைச் சந்தித்து பரிநிர்வாணம் பற்றி அறிந்து கொள்கிறார்.[1]

ஆசீவகம் (Ājīvika) என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கமும் ஆகும். இவர்கள் கி.மு. 500-250 காலப் பகுதியில் முதல் பெளத்தர்கள், ஜைனர்களோடு ஒத்த காலத்தில் இருந்தாக கருதப்படுகிறது. இந்த மெய்யியல் பெளத்தம், ஜைனம், சார்வகம் போன்றே வேதத்தை முழுமையாக புறக்கணித்த மெய்யியல் ஆகும்.

இந்த ஆசீவக மெய்யியல் பற்றிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் பௌத்தம், ஜைனம் போன்ற சமய அறிஞர்கள் எழுதிய இறைமறுப்பு நூல்களில் இருந்தும், பிற தொல்பொருளியல் நூல்களிலிருந்தும் ஆசிவக தத்துவங்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் உள்ளன.

பெயர்க்காரணம்[தொகு]

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு. ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்[2]

ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் சித்தர்கள் ஆவர்.

தவறான பெயர்க்காரணம்[தொகு]

தமிழ் மொழியில் 'சீவகம்' எனும் சொல்லிற்கு 'வாழ்தல்' என்று பொருள். ஆசீவகம்(ஆ+சீவகம்) எனும் சொல்லிற்கு 'இறத்தல்' என்றும் 'வாழ்தல்' என்றும் தவறான பெயர்க்காரணங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.[3]

வேறு பெயர்கள்[தொகு]

ஆசீவக நெறியைப் பின்பற்றுபவர்கள் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்கள். அப்பெயர்களாவன:

 1. ஆசீவகர்
 2. மற்கலியர்
 3. ஏகாந்த வாதி
 4. சித்தர் (அ) ஆசீவக சித்தர்
 5. அண்ணர் (அ) அண்ணல் - சித்தன்னவாசல்(அண்ணல் வாயில், சித்தர் அண்ணல் வாயில்), திருவண்ணாமலை(திரு அண்ணர் மலை), அண்ணமங்கலம்(அண்ணல் மங்கலம்), கருப்பண்ண சாமி(தன்னைவிட அறிவில் முதிர்ந்தோரையும் வயதில் முதிர்ந்தோரையும் அண்ணன் என்று அழைக்கும் வழக்கமும் இதனடியே தோன்றியதேயாகும்.).
 6. போதி சத்துவர்
 7. தீர்த்தங்கரர்(தீர்த்தம்+கரர்)
 8. தீர்த்தவிடங்கர்


ஆசீவக நெறியின் மெய்யியல் கோட்பாட்டின் படி, ஊழ்க மெய்யியலில்(யோகம்) உள்ள நிலைகளுள் இறுதி நிலையான ஐயநிலை(நல்வெள்ளை நிலை (அ) கழிவெண் பிறப்பு (அ) பரமசுக்க நிலை[2][4]) என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாகும். இந்த நிலையினை கைவரப் பெற்றவர்களே, வீடுபேறடைந்து, ஐயன்(சாத்தன்) என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார்(கோழிக்கொடியோன்[5], சாதவாகனன்[5], சாத்தனார், காரி, நல்வெள்ளையார்) என்றும் வழங்கப் பெற்று, இச்சிறப்புத் தகுதி நிலையினால் தமிழரால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் இருபுலவர்கள் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் பெயரில் உள்ளனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட ஐயா எனும் விளி குறிப்பதாயிற்று. இருபொருள்களின் மயக்குத் தோற்றநிலையினை ஐயம்(ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாகும்.[6]ஐயர் மற்றும் ஐயங்கார் ஆகிய சொற்களும் இதிலிருந்து தோன்றியவையாகும்.

மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை என்று குறிக்கும் வழக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை திருவள்ளுவர் தமது 771ஆம் குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளதன் மூலம் அறியலாம்.[6]

  என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
  முன்நின்று கல்நின் றவர்
              - படைச்செருக்கு(1), பொருட்பால், திருக்குறள், திருவள்ளுவர்
  
  என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ
  முன்நின்று கல் நின்றவர்
             எனப் பிரித்துப் படிக்கவும்.
  
  பொருள்: போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்;
  அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை ஈந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் போதி சத்துவர் முதலிய பெயர் பெற்றனர். போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர், மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையான ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் வினைதீர்த்தலும் செய்த காரணத்தினால் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த பிற சொற்களாலும்(தீர்த்தங்கரர்(தீர்த்தம்+கரர்)) வழங்கப் பெற்றனர்.[2][7]

ஆசீவக நெறியும் மோரியப்(மௌரிய) பேரரசும்[தொகு]

பிந்துசாரர்[தொகு]

தன் தந்தை சந்திரகுப்த மோரியர் போல இல்லாமல், பிந்துசாரர் ஆசீவக நெறி மேல் நாட்டம் கொண்டிருந்தார்.[8][9] பிந்துசாரரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்குப் பின்பு சந்திரகுப்த மோரியர், ஜைன நெறியைப் பின்பற்றித் துறவுபூண்டார். பிந்துசாரரின் மனைவிகளுள் ஒருவரான சம்பாவைச்(தற்போதைய பாகல்பூர் மாவட்டம்) சேர்ந்த ராணி சுபதாரங்கியும்(அக்கமகேசி) ஆசீவக நெறியைச் சேர்ந்த அந்தணர் ஆகும்.[10][9][11][12] பிந்துசாரரின் குருவான பிங்கலவட்சவரும்(ஜனசனர்) ஆசீவக நெறியை சேர்ந்த அந்தணர்.[8] பிந்துசாரர், அந்தணர் வசிக்கும் மடங்களுக்கு பல்வேறு நிலதானங்களை(பிராமணபட்டோ) செய்தார்.[13] கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஆசீவக நெறி பண்டைய தமிழகம் மட்டுமில்லாமல் பண்டைய இந்தியா முழுவதும் இருந்தாலும், பிந்துசாரின் ஆட்சியின் போது, வடஇந்தியாவில் ஆசீவக நெறி புகழின் உச்சியை அடைந்தது.

அசோகர்[தொகு]

பிந்துசாரருக்குப் பின் ஆட்சி பொறுப்பை ஏற்ற அவரது மகன் அசோகரின்(232 கி.மு. ஆர் 273 கி.மு.) காலத்தில் பல்வேறு ஆசீவக பாறைவெட்டுக் குகைகள், பிகார் மாநிலத்தின் ஜகானாபாத்(Jehanabad) மாவட்டத்தில் உள்ள பராபர்(Barabar) எனும் ஊரில் கட்டப்பட்டது.[14][11] கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனத்தின் படி, அசோகர் பௌத்த நெறியைப் பின்பற்றிய பின்பு கொல்லாமையை பின்பற்றவில்லை எனக்குறிப்பிடுகிறது.[15][16] பிற்காலத்தில் சிறிது சிறிதாக பௌத்த நெறியில் நாட்டம் கொண்ட அசோகர், புந்தரவர்தனம்(Pundravardhana) எனும் இடத்தில் பௌத்த நெறியைச் சேராத ஒருவர், புத்தரை நிர்கரந்தா ஜனதிபுத்திரரின்(மகாவீரர் என அடையாளம் கூறப்படுகிறது) காலில் வணங்குவதைப் போன்றதொரு ஓவியத்தை வரைந்ததைத் தொடர்ந்து, பௌத்தர் ஒருவர் அசோகரிடம் முறையிட்டார். இதனால் அசோகர், அவ்வோவியத்தை வரைந்தவரை கைது செய்ய ஆணைபிறப்பித்து பின்பு புந்தரவர்தனத்தில் இருந்த 18,000 ஆசீவகர்களைக் கொன்றார்.[17][15] சிறிது காலம் கழித்து, படலிபுத்திரத்தில்(Pataliputra) மற்றொரு நிர்கரந்தாவைப் பின்பற்றுபவர், இதேப்போன்றதொரு ஓவியம் வரைந்ததால், அசோகர் அவரையும் அவரது முழு குடும்பத்தையும் சேர்த்து வீட்டோடு எரித்தார்.[15] இதைத் தொடர்ந்து, நிர்கரந்தாவைப் பின்பற்றுபவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு ஒரு தினாரா(வெள்ளி நாணயம்) பரிசாக வழங்குவதாக அறிவித்தார். இதனால், சமண நெறியில் உள்ள ஆசீவக, ஜைன நெறிகள் வடஇந்தியாவில் அழிந்தது. இதன் விளைவாக, அசோகரது சொந்த தமையனையே ஒரு கும்பல் தவறாக நிர்கரந்தர் என நினைத்து கொன்றனர் என்றும் அசோகவதனம் குறிப்பிடுகிறது.[17][16]

பிற்காலத்தில், கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மோரியப் பேரரசின் கடைசி அரசனான பிரிகத்ரதா மோரியரின்(Brihadratha Maurya) படைத்தளபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கன் எனும் ஆரிய பார்ப்பனர் இனத்தைச் சேர்ந்தவர், பிரிகத்ரதாவைக் கொன்று சுங்கர் அரசை உருவாக்கினார்.[18][19] அவர், அசோகர் ஆசீவகத்தையும் ஜைனத்தையும் அழிக்கப் பயன்படுத்திய அதே முறையைக் கொண்டு பௌத்த நெறியை வடஇந்தியாவில் அழித்தார் என அசோகவதனம் குறிப்பிடுகிறது.[20][16]

ஆசீவக நெறி குறித்த குழப்பங்கள்[தொகு]

சமணம் மற்றும் ஜைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்[தொகு]

திவாகர முனிவரால் கிபி 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

   சாவகர் அருகர் சமணர் ஆகும்;
   ஆசீ வகரும் அத்தவத் தோரே
              - திவாகர நிகண்டு

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

   சாவகர் அருகர் சமணர் அமணர்
   ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே
              - ஐயர் வகை, பிங்கல நிகண்டு

இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,

 1. கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்
 2. கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்
 3. கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும்

பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது. இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம், சாவகம், ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனுமொரு தவறான கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.

இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவாக்கப்பட்ட குழப்பம்[தொகு]

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,

 1. கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு[21][22]
 2. பௌத்தர்களின் நெறி நூலான மஜ்ஹிமா நிகாயம்[23]
 3. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்[24]
 4. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய ஜைனக் காப்பியம் மணிமேகலை[25]
 5. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி
 6. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்

ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, கி.பி. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,

 1. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்
 2. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை

ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.[26]

ஆசீவக நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்[தொகு]

மற்கலி கோசாலரால் ஆசீவக நெறி தோற்றுவிக்கப்பட்டதென்றும், அவர் ஏற்கனவே பலகாலம் இருந்த நெறியைப் பின்பற்றினார் என இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்[தொகு]

வேறுபாடுகள்[தொகு]

வேறுபாடு[26][27][28][4][29][30] ஆசீவக நெறி ஜைன நெறி
நெறியின் பெயர்கள் ஆசீவகம், ஏகாந்த வாதம்(ஜைனர்கள் படி) அருகம், ஆருகதம், நிகண்ட வாதம், சாதி அமணம், ஜைனம்
நெறியைப் பின்பற்றுபவரின் வேறு பெயர்கள் ஆசீவகர், மற்கலியர், ஏகாந்த வாதி(ஜைனர்கள் படி), சித்தர் (அ) ஆசீவக சித்தர், அண்ணர் (அ) அண்ணல், தீர்த்தங்கரர், தீர்த்தவிடங்கர். ஜைனர், நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர், தீர்த்தங்கரர்.
விதிக் கொள்கை தமிழரின் நாடி சோதிடத்தில் உள்ளதைப் போல ஒருவருக்கு நடக்கும் நன்மை தீமை அனைத்தும் முன்னமே நிர்ணயிக்கப்பட்டது. ஒருவரால் விதியை மாற்ற முடியாது. துறவறத்தால் வீடுபேறடைதலை முன்னதாகவே பெறுதல் முடியும். அதாவது, துறவறத்தால் விதியை மாற்ற முடியும்.[சான்று தேவை]
கருமபலன் கொள்கை[31] ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதை மாற்ற முடியாது. ஆனால், துறவறத்தின் மூலம் புதிய கருமபலன் உருவாகுவதை மட்டுமே தடுக்க முடியும். அதுவும் விதிப்படிதான். ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை, அவர் துறவறத்தின் மூலம் நீக்க முடியும். மேலும், துறவறத்தின் மூலம் புதிய கருமபலன் உருவாகுவதையும் தடுக்க முடியும்.
வீடுபேறடைதல் கொள்கை உயிர்கள் வீடுபேறடைதல் முன்னமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. உயிர்கள் என்ன முயன்றாலும் வீடுபேறடைதல் என்பதை முன்னதாகவோ பின்னதாகவோ அடைய முடியாது. உயிர்கள் தாழாது முயன்றால் வீடுபேறடைதல் உறுதி.
துறவறக் கொள்கை துறவறம் முறையானதாகக்(Professional) கருதப்பட்டது. இல்லறத்திலும் வீடுபேறுண்டு. வீடுபேறு பெற துறவறம் மேற்கொள்ளப்பட்டது. துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவறம் கை கூடாது.
மறுபிறப்பு கொள்கை வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுக்கும். வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.
ஊழின் பொருள் மற்றும் வகை[7] ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் இயற்கை நிகழ்வு என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். நல் ஊழ் மற்றும் தீ ஊழ் என்ற பாகுபாடு இல்லை. ஊழ் என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு என்பது பொருள். நல் ஊழ் மற்றும் தீ ஊழ் உண்டு.

நிறுவியவர்கள்[தொகு]

 • மற்கலி கோசாலர் - நியதிக்கொள்கை
 • பூரணகாசியபர் - அகரியாவாதம்
 • பகுத கச்சானர் - அணுக்கொள்கை

நூல்கள்[தொகு]

மகாநிமித்தங்கள்[தொகு]

 • திவ்வியம் - தெய்வம் பற்றியன
 • ஒளத்பாதம் - அற்புதம் பற்றியன
 • ஆந்தரிக்சம் - வான் பற்றியன
 • பெளமம் - பூமி பற்றியன
 • அங்கம் - உடல் உறுப்புகள் பற்றியன
 • சுவாரம் - ஓசை பற்றியன
 • இலக்கணம் - இயல்புகள் பற்றியன
 • வியஞ்சனம் - குறிப்புக்கள் பற்றியன

மேற்கோள்கள்[தொகு]

 1. Marianne Yaldiz, Herbert Härtel, Along the Ancient Silk Routes: Central Asian Art from the West Berlin State Museums ; an Exhibition Lent by the Museum Für Indische Kunst, Staatliche Museen Preussischer Kulturbesitz, Berlin, Metropolitan Museum of Art, 1982 p. 78
 2. 2.0 2.1 2.2 ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள், ஆதி. சங்கரன்
 3. ஆசீவகம் என்பது தமிழ் சொல்லா?
 4. 4.0 4.1 http://texts.00.gs/History_and_Doctrines_of_the_Ajivikas,_1-IV.htm
 5. 5.0 5.1 தெய்வப்பெயர் தொகுதி, சேந்தன் திவாகரம்
 6. 6.0 6.1 ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும், ஆதி. சங்கரன்
 7. 7.0 7.1 ஆதித் தமிழர் மெய்யியல், ஆதி. சங்கரன்
 8. 8.0 8.1 Arthur Llewellyn Basham (1951). History and doctrines of the Ājīvikas: a vanished Indian religion. foreword by L. D. Barnett (1 ed.). London: Luzac. பக். 138, 146. http://books.google.com/books?id=5-cYAAAAIAAJ. பார்த்த நாள்: 8 April 2013. 
 9. 9.0 9.1 பிந்துசாரர் - ஆங்கில விக்கிபீடியா
 10. Anukul Chandra Banerjee (1999). Sanghasen Singh. ed. Buddhism in comparative light. Delhi: Indo-Pub. House. p. 24. ISBN 8186823042. http://books.google.com/books?id=4YAEAAAAYAAJ. பார்த்த நாள்: 8 ஏப்ரல் 2013. 
 11. 11.0 11.1 ஆசீவகம் - ஆங்கில விக்கிபீடியா
 12. அசோகவதனம் - ஆங்கில விக்கிபீடியா
 13. Beni Madhab Barua; Ishwar Nath Topa (1968). Asoka and his inscriptions. 1 (3rd ed.). Calcutta: New Age Publishers. p. 171. OCLC 610327889. http://books.google.com/books?id=cME5AQAAIAAJ. பார்த்த நாள்: 8 April 2013. 
 14. Entrance to one of the Barabar Hill caves British Library.
 15. 15.0 15.1 15.2 Beni Madhab Barua (5 May 2010). The Ajivikas. General Books. பக். 68–69. ISBN 978-1-152-74433-2. http://archive.org/details/ajivikas00barurich. பார்த்த நாள்: 30 October 2012. 
 16. 16.0 16.1 16.2 அசோகவதனம் - ஆங்கில விக்கிபீடியா
 17. 17.0 17.1 John S. Strong (1989). The Legend of King Aśoka: A Study and Translation of the Aśokāvadāna. Motilal Banarsidass Publ.. பக். 232. ISBN 978-81-208-0616-0. http://books.google.com/books?id=Kp9uaQTQ8h8C&pg=PA232. பார்த்த நாள்: 30 October 2012. 
 18. "Pusyamitra is said in the Puranas to have been the senānī or army-commander of the last Maurya emperor Brhadratha" The Yuga Purana, Mitchener, 2002.
 19. https://en.wikipedia.org/wiki/Pusyamitra_Sunga#Theories_of_origin
 20. https://en.wikipedia.org/wiki/Pusyamitra_Sunga#Accounts_of_persecution
 21. Glasenapp, Helmuth Von (1999), Jainism, Motilal Banarsidass, ISBN 978-81-208-1376-2, Page. 43
 22. https://en.wikipedia.org/wiki/History_of_Jainism#Royal_patronage
 23. https://en.wikipedia.org/wiki/Majjhima_Nikaya
 24. There was no Buddhist king anywhere in India who persecuted the Jains or the Ajivikas or any other sect. (The Ashokavadana, p.xxxviii)
 25. மணிமேகலை, 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை
 26. 26.0 26.1 பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி - பின்னிணைப்பு 4. ஆசிவக மதம்
 27. நீலகேசி - மூலமும் உரையும் - (பெருமழைப் புலவர் - சைவ சித்தாந்த கழகம்)
 28. நீலகேசி - சக்கரவர்த்தி நயினார்
 29. http://philtar.ucsm.ac.uk/encyclopedia/hindu/ascetic/ajiv.html
 30. தமிழர் சமயம் - திரு.க.நெடுஞ்செழியன்
 31. Long, Jeffery D (2009). Jainism. New York: I. B. Tauris. பக். 44. ISBN 978-1-84511-626-2. 
  Johannes Bronkhorst's claim is that, whereas the Jains teach that one can both stop the influx of new karma and rid oneself of old karma through ascetic practice, Gosāla taught that one could only stop the influx of new karma.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசீவகம்&oldid=1707769" இருந்து மீள்விக்கப்பட்டது