சித்தன்னவாசல்
சித்தன்னவாசல், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்ற ஊர் ஆகும். சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் மாறி சித்தன்னவாசல் என்று ஆனது.
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.
இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.
சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.
மலைகளில் செதுக்கப்பட்ட முனிவர்கள் சிற்பங்கள் போன்ற சிற்பங்களும், கோலம் போன்ற வட்ட வடிவ அமைப்பும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
சமணர்களின் குகைக் கோயில்கள் [தொகு]
இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.