முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 272.

முக்கல் என்பது இவர் வாழ்ந்த ஊரின் பெயர். இவர் மாணவர்களுக்குப் பாடம் புகட்டும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தவர்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

இவரது பாடல் நெய்தல் திணையைச் சேர்ந்தது. தலைவன் திருமணம் செய்துகொள்ளாமல் தலைவியோடு மறைமுக உடலுறவு வைத்துக்கொண்டு காலம் கடத்துகிறான். தலைவி கவலைப்பட்டுச் சொல்லுகிறாள்.

நான் நோயில்லாமல் நலமாக இருக்கிறேன். ஆனால் ஊரார் என்னைப்பற்றிக் கண்டும் காணாத்துமாய்ப் பேசும் அம்பல் பேச்சு எனக்கு நோயாய் அமைந்துவிடுகிறது. அதனால் சிறுமைப்படுகிறேன். என்னவன் தன் ஊரில் வாழும் பறவைகளைப் பார்த்தாவது தெரிந்துகொள்ளக்கூடாதா? கடல்காக்கை கருவுற்றிருக்கும் தன் காமர் பேடைக்குச் சேற்றில் அயிரைமீனைத் தேடுகிறதே!

படிவ மகளிர் துறவுக்கோலம் பூண்ட மகளிர் அடும்புக் கொடியை மலரோடு கொய்து அழித்த குழியில் முட்டையிடுவதற்காகப் பெண் கடற்காக்கை அமர்ந்திருக்குமாம். ஆன் கடற்காக்கை அதற்கு அயிரைமீன் இரையைத் தேடிக் கொண்டுவந்து கொடுக்குமாம்.