மணிமேகலை (காப்பியம்)
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.[1]
பொருளடக்கம் |
[தொகு] கதை
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்.
[தொகு] கதாப்பாத்திரங்கள்
மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள். பிறகு தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தனது தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.
உதயகுமரன் - சோழ மன்னன், மனிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உதயகுமரன் கதாப்பாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவளது துறவியாக வேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கஞ்சணன் என்பவன் உதயகுமாரனைக் கொலை செய்துவிட்டான்.
சுதமதி - மணிமேகலையின் நம்பகமான தோழி. மணிமேகலையை மணிபல்லவத்தில் விட்டு, அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததை கூறினாள், கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரே தோழி சுதமதிதான். அக்காலக்கட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் சுதமதி. அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு.
[தொகு] மணிமேகலை காப்பியம் இயற்றப்பட்ட காலம்
- மலையாள மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. [2] மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
- சைவ, வைணவ இலக்கியங்களில் காலத்தால் முந்தியவை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியவை. இவற்றில் காலத்தால் முந்திய இலக்கியங்களைப் பாடிய அப்பரோ, முதலாழ்வார்களோ புகார் நகரம் பற்றிக் குறிப்பிடவில்லை. இரட்டைக் காப்பியங்கள் புகார் நகர நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. எனவே இவை ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தியவை.
- கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.[3] இந்தக் கயவாகு காலம் கி.பி. 171-193 [4]
- தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா [5] நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை. [6]
- எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
- மணிமேகலை காப்பியத்தில் வரும் அறவண அடிகள் என்னும் புத்த துறவி புத்தர் மீண்டும் கி.பி. 1073-ல் பிறப்பார் என முன்கூட்டியே கணிக்கிறார். இது நிகழ்ந்ததா என்பது ஒருபுறம் இருக்க இதனைக் காப்பியத்தின் காலம் எனல் பொருந்தாது.[7]
[தொகு] நூற்குறிப்புகள்
- ↑ மணிமேகலை - தமிழ் மூலபாடம்
- ↑ மலையாள மொழி
- ↑
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட (சிலப்பதிகாரம், வரந்தரு காதை 157-163) - ↑ கயவாகு
- ↑ 'ஏ' என்னும் அசை கொண்டு முடியாமல் 'என்' என்னும் அசை கொண்டு முடியும் ஆசிரியப்பா
- ↑ கி.பி. 6 ஆம் நூற்றாண்டினதாகக் கணிக்கப்படும் பெருங்கதை என்னும் நூலைத் தவிர வேறு எந்தக் காப்பியமும் ஆசிரியப்பாவால் அமையவில்லை.
- ↑ மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன. அது இயற்றப்பட்ட காலமாக ஆய்வாளர்கள் 3ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுவரை கூறிவருகின்றனர். ஆனால், அதன் காதை - 12, வரி- 72 முதல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
‘சக்கரவாளத்துத் தேவரெல்லாம்
தொக்கொருங்கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் வீழ்ந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து
விரிகதிர்ச் செல்வன் தோன்றினனென்ன
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்
பேரறிவாளன் தேன்றும் அதற்பிற்பாடு
பெரும் குளமருங்கிற் சுருங்கைச் சிறுவழி
இரும் பெரும் நீத்தம் புகுவதுபோல
அளவாச் சிறு செவி அளப்பரும் நல்லறம்
உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்இதில், இறந்து, துடித லோகத்திற்குச் சென்றிருந்த புத்தபெருமான் ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆண்டில் மீண்டும் பூமியில் அவதரித்து, நல்லறம் மீண்டும் நிலைநாட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மணிமேகலை காப்பியமானது பௌத்த காப்பியமாகையாலும், அதன் ஆசிரியனுக்கு வான சாஸ்த்திரம் நன்கு தெரிந்த நிலையிலும், ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆண்டானது, பௌத்த ஆண்டாகவே இருக்கமுடியும்.
பௌத்த ஆண்டு ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆனது, பொது சகாப்தம் (1616 - 543) 1073 ஆகும். புத்தபெருமான் பொது சகாப்தத்திற்கு 543ஆண்டுகள் முன்னர் இறந்ததென்பதே, தமிழ், இலங்கை மரபு.
ஆகவே பொது சகாப்தம் 1073ஆம் ஆண்டில், பௌத்தம் எங்கு நிலைகுலைந்திருந்து மீண்டும் உயிர் பெற்றிருந்தது என்பது முக்கிய கேள்வியாகிறது.
இங்குதான் இலங்கையின் பௌத்த வரலாறு முக்கியமாகிறது. இலங்கையில், 70 வருடங்கள் வரையான சோழ மேலாதிக்கத்தின்கீழ் பௌத்த சங்கமும், பௌத்தமும் நிலைகுலைந்து இருந்தன என்றும், தொடர்ச்சியான போரினைத் தொடர்ந்து, பொது சகாப்தம் 1070ஆம் ஆண்டில்தான் முதலாவது விஜபாகுவின் தலைமையின்கீழ் சோழர் மேலாதிக்கம் முழுமையாக முறியடிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதன் பின்னர் முதலாவது விஜயபாகு புத்தபெருமானின் தந்ததாது வைக்கப் பொலநறுவவில் கோயிலையும் கட்டி, பௌத்த சங்கத்தையும் புனரமைத்து, தன்னை 1073ஆம் ஆண்டில்தான் இலங்கையின் பௌத்த அரசானாக முடிசூடிக்கொண்டான் என்பதைப் பொலனறுவ தமிச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.
இந்தநிலையில், மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1073 இற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்கமுடியாது.
அது குறிப்பாக எந்த ஆண்டில் இயற்றப்பட்டிருக்க முடியும் என்பதை அறிய, புத்தபெருமான் பொது சகாப்தம் 543ஆம் ஆண்டில்தான் இறந்தார் என்பது என்ன அடிப்படையில் வரப்பட்டது என்பதை ஆராயந்தறியவேண்டும்.
இந்த ஆண்டானது இலங்கையின் மிக முக்கிய வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில்தான் வரப்பட்டிருக்கமுடியும். இந்தநிலையில், புத்த பெருமான் இறந்ததின் பின்னரான 1000, 2000 ஆண்டுகளில் இலங்கையில் மிக முக்கிய வரலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்தால், புத்தபெருமான் இறந்து 2000ஆண்டுகளின் பின்னர், அதாவது பொது சகாப்பதம் 1457ஆம் ஆண்டில்தான், யாழ்ப்பாண இராச்சியம் சப்புமல் குமாரயவினால் கைப்பற்றப்பட்டு, இலங்கை முழுவதும் ஆறாவது பராக்ரமபாகுவினால் ஒரு குடைக்கீழ் கொண்டுவரப்பட்டது என வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், புத்தபெருமான் இறந்த ஆண்டானது யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு முன்னராக வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1457ஆம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க முடியாது.